நேற்றைக்கு அந்த விளக்குகள் அணைந்து இருந்தது போல.. இன்றைக்கு விளக்கு வெளிச்சத்தில் மழை தண்ணீர் ஓடி வரும் அழகு தெளிவாக தெரிந்தது.
பார்த்த உடனே மிகவும் ஆச்சரியப் பட்டாள். “வாவ்..” மனம் திறந்தவள், அதற்கு கீழே இருந்த செடிகள் அந்த நீரை தலையாட்டி அசைத்து வரவேற்க, அப்படி கீழே இறங்கிய நீர் வாய்க்காலில் ஓடிவர, அதோடு வண்ண மீன்கள் அழகாக நீந்திக் கொண்டு இருந்தன..
“அமேசிங் பிளேஸ்” என்றவள் அங்கேயே அமர்ந்து விட்டாள். ஈரத்தின் சிலுசிலுப்பு அவ்விடத்தில் அதிகமாக இருந்தது. அதன் கூடவே மனதை இனிமையாக்கும் அமைதியும் நிரம்பி இருக்க, அவளை அந்த இடம் மிகவும் வசீகரித்தது, பண் படுத்தியது.
யாருடை குறுக்கீடும் இல்லாமல் தேனருவி மிக அமைதியாக அமர்ந்து இருந்தாள். அவளின் பார்வை மொத்தமும் அங்கும் இங்குமாய் நீரில் ஓடிக்கொண்டு இருக்கும் வண்ண மீன்களிடமே இருந்தது.
எந்த கவலையும் இல்லாமல் இந்த மீன் போல பிறந்து இருக்கலாம்.. பெருமூச்சு விட்டவளின் காதில் அழுத்தமான காலடி சத்தம் கேட்டது.
“ப்ச் சாப்பாடு போடுற நேரம் வந்திடுச்சா?” தனக்குள் கேள்விக் கேட்டுக் கொண்டே எழுந்து கூடத்துக்கு வந்தாள். அதற்குள் அண்ணன் தங்கை இருவரும் உணவு மேசையில் இருந்தார்கள்.
“நல்ல வேலைக்கு லேட் ஆகல” முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு இருவருக்கும் தட்டு வைத்து பாரிமார ஆரம்பித்தாள்.
இருவரும் பரிமாறுபவளை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை. உணவிலே மிக கவனமாக இருந்தார்கள். அதை தேனருவி சட்டை செய்யவும் இல்லை. நேற்றைக்குப் போலவே உண்டு விட்டு இன்றைக்கும் மலையமான் அவளின் முந்தனையை உருவி எடுத்து கையை துடைத்துக் கொண்டவன், அவளின் நெஞ்சுப் பகுதியில் குனிந்து தன் வாயை துடைத்துக் கொண்டு அவளை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போனான்.
அவளின் தங்கை கண் பார்க்கவே இந்த செயலும் அரங்கேறியது. இதோடு விட்டானே என்று எண்ணிக் கொண்டவள் சாப்பிட அமர,
“என்னை வழியனுப்பி வச்சுட்டு வந்து சாப்பிடு” என்றான்.
‘இது வேறையா?’ இருக்கையில் அமர்ந்தவள் எழுந்து வந்தாள்.
அவனும் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தவன், அவளின் இடையில் கையை போட்டு சற்று மறைவாக அருவியை இழுத்தான்.
திடுதிப்பென்று அவன் இழுக்கவும் திகைத்துப் பார்த்தாள். அவளின் இடையோடு இறுக்கமாக கைப்போட்டவனின் நெருக்கம் அவளை தகித்தது. இது வரை அவனின் கரம் அவளின் இடுப்பில் படர்ந்தது கிடையாது.
முதல் முறை அவனின் கைப்பட பெரிதும் திகைத்துப் போனாள். அதுவும் அவள் இடுப்பு தெரியாமல் கட்டி இருந்த புடவையை கீழே இறக்கி விட்டு வெற்று இடையில் அவன் கைப்பதிக்க அதிர்ந்துப் போனாள்.
மெல்லிய நடுக்கம் அவளின் தேகத்தில் தெரிய, “ரிலாக்ஸ்” என்றான். அவனா அவளை ஆற்றுப் படுத்துகிறான்.. அவனுக்கே அது தெரியவில்லை. பிறகு தேனருவி எங்கு புரிந்துக் கொள்ள..
“ஏன் இப்படி பண்றீங்க?” என்றவளின் கேள்வியை காதில் வாங்கிக் கொள்ளாமல்,
“கோ-ஆப்ரேட் பண்ணு” என்றவுடனே அவளின் தேகத்தில் ஏற்பட்ட நடுக்கம் மறைந்துப் போய் விரைத்துப் போனது. அதை அவன் உணர்ந்துக் கொண்டாலும் கண்டுக் கொள்ளாமல் தன்னோடு அவளை அணைத்துக் கொண்டான். முன் தேகம் இரண்டும் ஒட்டிக் கொள்ள அதை தாங்க முடியாமல் உள்ளுக்குள் வெந்துப் போனாள்.
“முகத்தை எதுக்கு இவ்வளவு போர்ஸ் பண்ற மாதிரி வச்சு இருக்க.. இயல்பா வை” கட்டளையாக சொன்னான்.
“நீங்க என்னை போர்ஸ் தானே பண்றீங்க?” சொல்லாமல் இருக்க முடியவில்லை. சொல்லி விட்டாள்.
அதன் விளைவு அவளின் இடையை முரட்டுத் தனமாய் கசக்கி எடுத்து விட்டான். அவன் பிடித்த இடம் அப்பட்டமாய் கன்றிப்போனது. வலி உயிர் போனது.
மெதுவாய் அப்ரோச் செய்ய வேண்டிய அனைத்தையும் தன் வன்மையால் கையாண்டு பெண்ணவளின் மனதுக்குள் சிம்மாசனம் போட்டு அமரவேண்டியவன் பெரும் அருவெறுப்பையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறான்.
“இப்போ முகத்தை நார்மலா வைப்பியா?” கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் மின்னியது. ஆனால் அழவில்லை.
அவளின் அந்த கண்கள் அவனை என்னவோ செய்தது.
“நான் முழுமையா ஒத்துழைக்கிறேன். அதுக்கு பதிலா அப்பா வீட்டுக்கு விருந்துக்கு போயிட்டு வரலாமா?” கேட்டாள்.
அதில் அவனது மனம் இறுகிவிட, “என்னடி பேரம் பேசுறியா?” பல்லைக் கடித்தான்.
“இது பேரம் இல்ல.. உங்க தங்கைக்காக நான் செய்யிறது போல எனக்காக நீங்க செய்யணும்” என்றாள்.
“என்னடி அதிகாரம் பண்றியா?”
“இல்ல இந்த ஒரு முறை மட்டும் இந்த உதவி பண்ணீங்கன்னா அப்பா அப்புறம் பெரிதா தொந்தரவு பண்ண மாட்டாரு.. இல்லன்னா என்னை பார்க்க இங்க வருவாரு. அதை தடுக்க தான்” என்றவள்,
“அதோட இங்க வந்தா தேவையில்லாத பிரச்சனை வரும்.. அதை தடுக்க தான் நாம ஒரு நேரம் போயிட்டு வந்துட்டோம்னா பிறகு கவலை இல்லை. இல்லன்னா அப்பா எந்த நேரம் வேணாலும் வருவாரு” என்றாள்.
“யோசிச்சுட்டு சொல்றே” என்றவன் நிமிர்ந்து இருந்த அவளின் முகத்தை பற்றி தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்தவன், தானும் குனிந்து அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.
அதில் பெண்ணவளுக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. தங்களின் அந்தரங்கத்தை காட்சி படுத்தும் கணவனிடம் அவளால் ஒன்றவே முடியவில்லை. இடையில் ஊரும் அவனது கையின் மீது தன் கையை வைத்து அடக்கிக் கொண்டவள் எக்கி அவனுக்கு ஒத்துழைப்பு குடுப்பது போல பாவனை காட்டினாள்.
அந்த காட்சியை பார்த்துக் கொண்டு இருந்த இளவரசிக்குள் என்ன நிகழ்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. தன்ன நெஞ்சை பிடித்துக் கொண்டவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.
காதுக்குள் யாரோ விடாமல் கத்தும் சத்தம் தொடர்ந்துக் கேட்டுக் கொண்டே இருக்க இரு கையாளும் காதை இறுக்கமாக மூடிக் கொண்டு அப்படியே கூனி குறுகி மூன்றாக மடிந்து அமர்ந்து விட்டாள்.
அதை மலையமானும் பார்க்கவில்லை, தேனருவியும் பார்க்கவில்லை. ஒப்புக்காக கொடுத்த முத்தம் மலையமானை வெகுவாக ஈர்த்தது. சுழலில் சிக்கிய பொருள்களை எப்படி ஈர்த்து தன்னுள் வைத்துக் கொள்ளுமோ அது போல தேனருவியின் இதழ் தரும் போதை அவனை அத்தனை ஈர்த்தது.
ஆனால் அதை ஒதுக்கி வைத்து விட்டு அவளிடம் முரட்டுத் தனமாக நடந்துக் கொண்டான். அவாந்து முரட்டு தனத்தில் பெண்ணின் மெல்லிய உணர்வுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மடியத் தொடங்கியது.
மேலும் இரண்டு நிமிடங்கள் அவளுடன் ஒட்டி இருந்தவன் பின் உதட்டு சுளிப்புடன் விலகிக் கொண்டான்.
இவள் தான் தடுமாறிப் போனாள்.
“ரொம்ப தவிக்க விடுறனோ” நக்கலாகவே கேட்டான். தேனருவி எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் அவளின் முகத்தில் படிந்த அவமானத்தை படித்தப் பிறகே வேலைக்கு கிளம்பினான்.
அவன் போன பிறகு தன் அறைக்குள் நுழைந்து கதவை அழுந்த தாழிட்டுக் கொண்டவளுக்கு இந்த நிமிடமே மரணித்து விடலாம் போல தோன்றியது. அத்தனை அவமானமாக இருந்தது மலையமான் பேசும் பேச்சில். தேகத்தை தொடக்கூட அவனுக்கு ஒத்துழைப்பு கூடுத்து விடலாம் போல. ஆனால் தொட்டு முடித்த பிறகு அவன் பேசும் பேச்சில் தான் அத்தனை நஞ்சு தடவி இருந்தது.
இதற்கு எல்லாம் ஒரு விடிவுகாலமே இல்லையா கடவுளே என்று உள்ளுக்குள்ளே புழுங்கிப் போனாள். நெஞ்சை கொஞ்சம் கொஞ்சமாக அவனது வார்த்தைகள் அரித்துக் கொண்டு இருந்தது. ஒரு நாள் முழுமையாக அவளை செல்லரித்து விடும் தெரிந்துக் கொள்ளாமல் போனான் மலையமான்..
அன்றிரவு வந்த மலையமான் எப்பொழுதும் போல இரவு உணவை தேனருவி பரிமாற சாப்பிட்டவன் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டு தன் கடமையை செய்து விட்டு போனான். இவள் பொம்மையாக நின்றாள்.
அடுத்த நாள் காலையில் அவனது முகத்தை பார்த்து நின்றாள்.
“கிளம்பு ஒரு நேரம் விட்டுட்டு வானது கூப்பிட்டுக்குறேன்” என்றான்.
மகிழ்ச்சியாக கிளம்பியவள் போகிற வழியில் வண்டியை நிறுத்தி தன் கையில் இருக்கும் பணத்தை வைத்து வீட்டுக்கு தின்பண்டகளை வாங்கிக் கொண்டாள்.
அவளின் முகத்தில் இதுவரை இல்லாத புன்னகை இருப்பதை ஏளனமாக பார்த்துக் கொண்டான். அவனது பார்வையை எல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை அவள்.
தன் வீட்டு ஆட்களை பார்க்கப் போகிறேன் என்று மகிழ்ச்சி அவளின் முகத்தில் அப்பட்டமாய் தென்பட்டது. அதே மகிழ்ச்சியுடன் வீட்டு வாசலில் வந்து இறங்கினாள்.
“வாங்க” என்று அவனை அவள் வரவேற்க,
“உன் ஒட்டு போட்ட வீட்டுல வந்து என்னை தாங்க சொல்றியா? என்னை வரவேற்க அப்படி என்ன உன் வீட்டுல வசதி இருக்கு?” நக்கலாக கேட்டவனை அதிர்ந்த உள்ளத்துடன் பார்த்தாள்.
“மணி இப்போ பத்து. சரியா பதினோரு மணிக்கு ட்ரைவர் வருவான். வந்திடு” என்று விட்டு அவன் போய் விட்டான்.
கண்கள் முணுக்கென்று கலங்கிப் போனது. அதற்குள் கார் சத்தம் கேட்டு அப்பாவும் தங்கைகளும் ஓடிவர, சட்டென்று தன் கண்ணீரை இழுத்துக் கொண்டவள், புன்னகை முகமாக அவர்களிடம் திரும்பினாள்.
தங்கையின் கையில் இருந்த ஆராத்தி தட்டை பார்த்தவளுக்கு தந்தையின் ஆசை புரிந்துப் போனது. ஆனால் அவன் வராத வரைக்கும் நல்லது என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவள்,
“அப்பா அவருக்கு முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருக்காம். அதுக்கு போய் ஆகணும்னு கிளம்பிட்டாரு.. சாரிப்பா” என்று தந்தையின் கையை பிடித்துக் கொண்டாள்.
“அதனால என்னம்மா இருக்கு.. நீ வந்ததே எனக்கு சந்தோசம் தான்” என்று புன்னகை செய்தவர் அவளுக்கு ஆராத்தி எடுக்க சொல்ல,
“நீங்க எடுங்கப்பா..” என்று சொல்லி தங்கைகளை தன்னுடன் நிற்க வைத்துக் கொண்டாள்.
“அப்போ நானு” என்று வந்த தம்பியையும் தங்களுடன் நிற்க வைத்துக் கொண்டாள்.





