“ஆதி என்ன சொல்றான்?” துளசிநாதன் கேட்டார் தளர்ந்து போய் வந்த மகனிடம்.
“என்ன சொல்லுவான்.. வேலையாட்களை போட சொல்லி சொன்னான். இங்க இருக்குறவரை அவளுக்கு எந்த குறையும் வரக்கூடாதாம்..”
“அதை சொல்லலன்னா தான் ஆச்சரியம்” முணகியவர் அடுத்த நேரத்துக்கே வேலையாட்களை பணியில் அமர்த்தி விட்டார்.
அலுவலக வேலை சிறிது நேரம் பார்த்த ஆதிக்கு நெஞ்சை கசக்கி பிழியும் உணர்வு.. ப்ரெட் சாப்பிட்டு விட்டு மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரையை போட மறந்து விட்டான்.
அதில் அவனுக்கு நெஞ்சை அடைக்கும் உணர்வு எழ ஆரம்பித்து விட்டது. தட்டு தடுமாறி அலுவலக அறையில் வைத்து இருந்த இருந்த ஒரு செட் மாத்திரையை அள்ளி வாயில் போட்டு தண்ணீர் குடித்தான்.
ஆதன் பிறகே அந்த வலி சற்றே மட்டுப் பட்டது. ஆனால் முழுமையாக அவனுக்கு வலி சரியாகவில்லை. அலுவலக பைல்களை மூடி வைத்து விட்டு எதிரே தெரிந்த கணினியை வெறித்துப் பார்த்தான்.
அடந்த கணினியின் முகப்பு படத்தில் அழகாக சிரித்துக் கொண்டு இருந்த பெண்ணவளை தன்னை மறந்து பார்க்க தொடங்கினான். அவனின் உலகம் அந்த பெண்னவளுக்குள் தொலைந்துப் போக ஆரம்பித்தது.. இனி அவனை யாராலும் கலைக்க முடியாது.
டைனிங் டேபிளில் இரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த மகரியாள், “ப்பா மத்தியம் லஞ்சுக்கு பிரியாணி ரெடி பண்ண சொல்லுங்க... வாயெல்லாம் செத்துப் போனது போல இருக்கு” என்றவள்,
“ஆமா நீங்க ரெண்டு பேரும் ஏன் சாப்பிடாம அப்படியே இருக்கீங்க.. அன்னம்மா கைப் பக்குவத்துல கோழி சும்மா பஞ்சு மாதிரி வெந்து இருக்கு தெரியுமா?” என்றவள் ஒரு துண்டை எடுத்து சாப்பிட, கேசவ்க்கு கண்களில் கண்ணீர் நிரம்பி விடுமோ என்று பயந்துப் போனான்.
அவனின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்ட துளசி நாதன்,
“நானும் அதை தான் சொல்றேன் ம்மா இவனுக்கு என்னவோ இன்னைக்கு அன்னம்மா கைல சாப்பிட பிடிக்கலையாம்” என்று நிலைமையை சமாளித்தார்.
“ஓ.. அப்போ அண்ணியாரை ரெடி பண்ணிட்டன்னு சொல்லுடா.. ஆமா எனக்கு எப்போ பன்னியை சாரி அண்ணியை காட்ட போற?” வம்பிழுத்தாள் கேசவை.
“உனக்கு காட்டாமலா.. ஆனா அந்த கல் நெஞ்சுக்காரி தான் யாருன்னு தெரிய மாட்டிக்கிது.. எங்க இருக்கான்னும் தெரிய மாட்டிக்கிது..” தன் கண்ணீரை கட்டுக்குள் கொண்டு வந்து அவளிடம் இயல்பாக பேசுவது போல பேசினான்.
“அப்போ உனக்கும் நான் தான் பொண்ணு பார்க்கன்னுமா?” பெரியவளாய் அவள் அலுத்துக்கொண்டாள்.
“அதுல உனக்கு என்ன வாயாடி சிரமம்..”
“பின்ன எனக்கு தான் சிரமம். நான் எந்த பொண்ணை கட்டினாலும் வேணும்னே ரெண்டு தடியன்களும் இல்லாத குறை எல்லாம் சொல்லி வந்த பொண்ணுங்களை விரட்டி அடிச்சு இருக்கீங்களே அது போதாதா. நான் தெரு தெருவா சுத்தி வேகாத வெயில்ல அலைஞ்சி பொண்ணு பார்ப்பேனாம். நீங்க நோகாம அவளுங்களை விரட்டி விட்டுட்டு அது நொல்லை இது நொல்லைன்னுட்டு இருப்பீங்க.. வந்த பொண்ணுங்க எல்லாம் நான் வெளில போகும் பொழுது ரவுண்ட் கட்டி முறைக்கும்ங்க.. அது போதாதா என் சிரமத்துக்கு” என்றவள் உண்டு முடித்து விட்டு,
“சரி நான் வெளில போயிட்டு வரேன்” என்றாள்.
“அதெல்லாம் நீ ஆதிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு போ.. இப்ப நாங்க கிளம்புறோம்” என்று அப்பாவும் மகனும் கிளம்பி விட,
“எத அவர் கிட்டையா?” கேட்டவள் “இதுக்கு நான் வெளில போகாமலே இருப்பேன்” நொடித்துக் கொண்டவள்,
“எல்லோரும் ரொம்ப தான் பண்றீங்க.. எப்போ என்கிட்ட எல்லோரும் வாங்குவீங்களோ தெரியல.. ஆனா கண்டிப்பா உங்க மூணு பேருக்கும் இருக்கு ஒரு நாள்” அவனின் அறைக்குள் அடைந்துக் கொண்டாள் மகரியாள்.
போகும் அவளை பெருமூச்சு விட்டு பார்த்தவர்கள் தங்களின் வேலையை பார்க்க கிளம்பி விட்டார்கள். இங்கே இருவரும் தனி தனி அறையில் அடைந்துக் கிடக்க பெண்ணவளுக்கு தான் அது முடியாமல் போனது.
ஆதியின் முன் போய் நின்றாள்.
சட்டென்று கணினியை அவளுக்கு காட்டாமல் திருப்பியவன்,
“என்ன?” என்றான்.
“போர் அடிக்கிது”
“அதுக்கு?”
“செஸ் விளையாடலாமா?” கேட்டாள் பாவமாய். அதுவரை அவனுள் அமிழ்ந்து இருந்த வேதனை மேகங்கள் எங்கோ ஓடிப்போய் ஒளிந்துக் கொள்ள,
“சரி.. ஆனா ஒரு கண்டிஷன்” என்றான்.
“என்ன?”
“ஷால் போடக்கூடாது” என்றான்.
“ஓகே.. ஆனா அதுக்கு நீங்க என்னை வின் பண்ணனும். வின் பண்ணா நீங்க சொன்னதை நான் கேட்கிறேன். இல்லன்னா நான் கேட்க மாட்டேன்..” என்றாள் மிடுக்காய்.
“ஓ...!” என்று அவளை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவன்,
“சரி.. டீலுக்கு நான் ஓகே.. என்னை செயிச்சுட்டு உன் ஷாலை வாங்கிக்க..” என்றவன் பட்டென்று அவள் தோளில் இருந்த ஷாலை உருவினான்.
“ஹாங்..” என்று பதட்டப் பட்டுப் போனவள், பின் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்
“நானும் டீலுக்கு ஓகே.. பட் நான் ஜெயிச்சுட்டா நீங்க ஷாலை குடுத்துடணும்” என்றாள்.
“அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. போய் போர்ட் எடுத்துட்டு வா” என்று சோபாவில் போய் அமர்ந்துக் கொண்டான். அவளிடம் இருந்து உருவிய ஷாலை தன் கழுத்தில் போட்டு சுத்திக் கொண்டவன் தன் மூக்கு அருகில் எடுத்துப் போய் அதை ஆழமாக சுவாசித்தான்.
அதில் அவளின் வாசம் அப்பட்டமாய் வீச இன்னும் ஆழமாக அவளின் சுவாசத்தை நெஞ்சு முழுவதும் நிரப்பிக் கொண்டான் ஆதி. அவனின் கண்கள் ஏகத்துக்கும் சிவந்துப் போனது.
கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டவனின் உணர்வுகள் எல்லாம் ஏகத்துக்கும் கொதித்துப் போனது. தொண்டையில் பல உணர்வு ஒன்றாய் தேங்கி நிற்க, மூக்கில் இருந்து உதிரம் கசிய தொடங்கியது அவனுக்கு.
போர்ட் எடுத்துக் கொண்டு வந்தவள் இந்த காட்சியை பார்த்து பதறிப் போனவள்,
“ஆதி.. ஆதி.. என்ன ஆச்சு உங்களுக்கு..” போர்டை கீழே போட்டு விட்டு அவனிடம் ஓடி வந்தவள் அவன் கையில் இருந்த தன் ஷாலிலே அவனது உதிரத்தை துடைத்து விட, அவளின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டவன் அவளை பார்த்தான்.
அவனது பார்வையின் பொருள் அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.
“என்ன ஆதி” கேட்டவள், “மாத்திரை போட்டீங்களா?” பரிதவித்துப் போனாள். ஏன் அவனுக்காக பரிதவிக்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.
“ம்ம்” என்று மட்டும் சொன்னவன் அவள் கையில் இருந்து தன் கையை எடுத்துக் கொண்டு, அவளை விட்டு விலகி போக, அதை ஒரு கணம் பார்த்தவளால் தாங்க முடியாமல் போனது.. வேகமாய் அவனின் பின்னோடு போனவள் ஆத்திரமாக கண்கள் சிவக்க,
“ஏன்டா என்னை விட்டு விலகி போயிட்டே இருக்க? உனக்கு ஏன் என்னை பிடிக்காம போகுது.. சொல்லு சொல்லு அயன்” என்றவள் அப்படியே மயங்கி அவனின் முதுகிலே விழுந்து விட்டாள்.
அவளின் கேள்வியின் தன்னையே வெறுத்துப் போனவன் தன் முதுகில் மயங்கி விழுந்தவளை பட்டென்று பின்னால் கை விட்டு பிடித்துக் கொண்டவன் நெஞ்சில் எழுந்த வலியுடன் அவளை படுக்க வைத்து விட்டு அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்தவனின் நெஞ்சில் அத்தனை அழுத்தம் கூடியது.
மீண்டும் மாத்திரை போட்டால் தான் சரியாக வரும். ஆனால் அவளை விட்டு நீங்க மனம் வராமல் வலியோடு அவளை பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதித்யன்.





