இங்கே சகியை கூட்டிக்கொண்டு சர்வா அறைக்குள் வர, அவனை கோவமாக பார்த்த படியே குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
“போச்சுடா மேடம் மலை ஏறிட்டாங்க போல...” என்று சிரித்தவன் இரகசிய கதவு வழியாக சகி குளித்துக் கொண்டு இருந்த அறையில் நுழைந்தான் சர்வா. அதில் திகைத்துப் போனவள், அவனை வெளியேற்றப் பார்க்க அவளால் முடியாமல் போனது. பிறகு என்ன கெஞ்சலும் கொஞ்சலும் சமாதனப் படுத்தலுமாய் போனது.
வெளியே தலையை துவட்டியபடி வந்தவளிடம் ஒரு பேப்பரை கொடுத்தான். வாங்கிப் பார்த்தவளுக்கு காலடியில் நிலம் நழுவுவது போல இருந்தது.
“சர்வா என்ன இது...?” என்று அந்த காகிதத்தை திருப்பி படித்தபடி கேட்டாள். அவளின் முன்பு கரத்தை கட்டியபடி நின்றவன்,
“ஏன் அதுல போட்டு இருக்கிறது எதுவும் புரிலையா?” என்று நக்கல் பண்ணினான்.
“ப்ச்... எது எதுல விளையாடுறதுன்னு ஒரு அளவு இல்லையா சர்வா. ஏற்கனவே அப்பா சொத்து எல்லாத்தையும் அவர் கிட்ட திருப்பி குடுத்துடீங்க... அது மட்டும் இல்லாம கார்த்தியோட பங்குன்னு அவனுக்கு பாதி சொத்தை குடுத்துடீங்க... பிறகு திவ்யா பெற்றவர்கள் கிட்ட யும் அவங்க சொத்தை முழுசா ஒப்படைச்கிடீங்க... அது எல்லாம் சரி தான் ஆனா இப்போ என்னனா உங்க பேர்ல இருக்கிற சொத்து முழுசையும் என் பெயர்ல எழுதி வச்சு இருக்கீங்க... இதை கொஞ்சம் கூட உங்க கிட்ட இருந்து எதிர் பார்க்கல சர்வா... ஏன் இப்படி பண்ணீங்க...?” என்று அவனது கண்களை பார்த்து கோவமாக கேட்டாள்.
அவளது கோவத்தை இரசித்தவன்,
“ஏன்னா எனக்கு நீ மட்டும் போதும்னு அர்த்தம்...” என்றான் சர்வா நிதானமாக.
“அதையே நானும் சொல்லலாம் மிஸ்டர் சர்வா” என்றாள் கடுப்பாக...
“நீ எதை வேணா சொல்லுடி.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பட் எனக்கு நீ மட்டும் தான் வேணும்... உன் நிழல் மட்டும் தான் வேணும். என்னை மூச்சு முட்ட நேசிடி. என்னையும் நேசிக்க வை... உன் கூட காலம் முழுக்க வாழணும்டி...” என்றவன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு போனான்.
“பிறந்ததில் இருந்து காசு பணம்னே வாழ்ந்துட்டேன்டி... மடி சாய்ந்து தோள் சாய்ந்து வாழ எனக்குன்னு ஒரு தோள் கூட இருந்தது இல்லை. அதை நான் எதிர்பார்த்ததும் இல்லை. கடிவாளம் கட்டின குதிரையா போய்க்கிட்டு இருந்தேன்டி” என்று பெருமூச்சு விட்டவன்,
“நீ எப்போ என் வாழ்க்கைக்குள்ள வந்தியோ அப்பவே என்னை மனிதனா உனக்கும் சகல ஏக்கங்கள் உண்டு அப்படின்னு உணரவச்சடி...” என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“உன்னை நொடி நொடியா நேசிக்க ஆரம்பிச்சேன்னு சொல்ல முடியாதுடி. ஆனா உன் கூட ஒரு வாழ்க்கையை கற்பனை பண்ணி வாழ ஆரம்பிச்சுட்டேன். அது அத்தனையும் பொய்யா போனப்ப தான் நீ எனக்குள்ள ரொம்ப ஆழமா ஊடுருவி போய் இருக்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா என்னை நம்பி வந்தவளை ஏமாற்ற எனக்கு மனசு இல்லை...”
என் மனதை கல்லாக்கிக் கொண்டு அவளுடன் வாழ ஆரம்பித்தேன். ஆனா மனசு ஒட்டவே இல்லடி...” என்று சொன்னவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
“ஒரு வேலை அவளோட மனசளவுல நெருங்கி இருந்தேன்னா ஒருவேளை அவளை சாக விட்டு இருந்து இருக்க மாட்டேனோ என்னவோ... திவி பிரசவம் அப்போ வெளியூர்ல இருந்தேன். பக்கத்துல இருந்து இருந்தா கண்டிப்பா என்னை மீறி எதுவும் நடக்க விட்டு இருக்க மாட்டேன். என்னால தேவையில்லாம ஒரு உயிர் போயிடுச்சு சகி...” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டு கலங்கிப் போனான்.
அவனது கலக்கத்தை சரி செய்ய வழியில்லாமல் அவனை தாங்கிக் கொண்டாள்.
“நீங்க இருந்தாலும் உங்க அப்பா விட்டு இருந்துக்க மாட்டாரு சர்வா. நிஜம் அது தான். அதனால நீங்க பீல் பண்ணாதீங்க..” என்று அவனை தேற்ற,
“அது வேணா உண்மை தான். ஆனா திவி போனதுக்கு பிறகு கூட ஒரு வருடம் எந்த ஏக்கத்தையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தான் வாழ்ந்து வந்தேன்டி... ஆனா உன்னை பார்த்தேன் பாரு... அதுக்கு பிறகு தான்டி என்னால என்னை கட்டுப் படுத்திக் கொள்ளவே முடியல...” என்று அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான்.
“உன்னை இப்பொழுதே என் கைக்குள்ள கொண்டு வந்துடனும்னு அவ்வளவு வேட்கை... ஆனா எனக்குள்ள இருந்த தேடல் உனக்குள்ள இல்லல்ல...” என்று அவளின் உதட்டை கடித்து வைத்தான். அதில் அவளுக்கு வலி உயிர் போனது...
தன்னை விட்டு அவனை விலக்கி விட்டவள் அவனை முறைத்து பார்த்தாள்.
“எனக்கும் உங்களை பிடிக்கும்.. உங்களை மட்டும் தான் பிடிக்கும். நீங்க வேற ஒரு கல்யாணம் பண்ணினாலும் எனக்கு உங்க மேல இருந்த காதல் குறையவே இல்லை...” என்று தன் மனதை திறந்தாள் சகி.
“எதுக்கு குறையணும்... நான் வச்ச நேசம் நிஜம் தானே... நீங்க எப்படி எனக்கு அறிமுகமானீங்களோ அப்படியே தான் இப்ப வரை இருக்கீங்க... உங்க குணத்துல ஒரு தூசி படிந்தது இல்லை.”
“வேணும்னா வேணும்.. வேணாம்னா வேணாம்... உங்களோட இந்த குணம் எப்பொழுதுமே எனக்கு பிடிக்கும். தேவையில்லாத சுமைகளை எப்பொழுதும் நீங்க சுமக்குறதே இல்லை.”
“அதோட நான் தானே உங்களை விட்டு போனேன். நீங்க என்னை விட்டு போகலையே...!” என்று சகி சர்வாவை பார்த்து சொல்ல அவன் வாயடைத்துப் போனான்.
தான் இவ்வளவு காலமும் இவளை மறந்து வேறொரு வாழ்க்கையில் பிணைந்து இருந்தை கூட சுட்டிக் காட்டாமல் தன்னை நேசிக்கும் பெண்ணவளை வாயடைத்துப் போய் பார்த்தான்.
“நீங்க என்னோட இருந்தது சில மணி துளிகள் தான். ஆனா எனக்கே எனக்காக அப்பா அறிமுகம் செய்து வைத்த ஆண் மகனை நான் எங்கனம் மறக்க இயலும்... என்னோட உயிர்ல ஒன்றா கலந்துட்டீங்க சர்வா... உங்களை தாண்டி போய் என்னால எதையும் யோசிக்க முடியாது. இவ்வளவு காலமும் நான் வாழ் உங்க நினைவுகள் மட்டும் போதுமானதாய் இருந்தது. இனி வருகிற காலத்துக்கும் எனக்கு அது மட்டுமே போதும்...” என்றாள்.
அதை கேட்டு வருத்தமாக புன்னகைத்தவன்,
“உனக்கு வேணா நான் கனவா கற்பனையா இருந்தா போதும் சகி... ஆனா எனக்கு நீ உயிரும் உணர்வுமா வேணும்... என் காலை நேரம் உன் மடியில உதிக்கணும். என் இரவு பொழுது உன் மார்பில் முடியணும்... இடை பட்ட நேரங்களில் நான் உன்னை சுமக்கணும்..”
“உன் கூட நான் நிறைய நிறைய வாழணும்... உன்னை பெரிய பிசினெஸ் விமனா மாத்தி என் ரோலிங் சேர்ல உன்னை உட்கார வச்சி அழகு பார்க்கணும். நீ போடும் சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டு என் நிறுவனங்கள் எல்லாம் இருக்கணும்.. ஆது, இனி குட்டியோட நம்ம குழந்தையும் சேர்ந்து வளரணும்... பிள்ளைகள் பொறுப்பை எல்லாம் உன் அப்பாக்கிட்டையும் கார்த்திக்கிட்டயும் கொடுக்கணும். உன்னை மாதிரியே வளர்த்துக் குடுக்கணும்னு ஆசை...” என்றவனை இப்பொழுது இவள் வாயடைத்து போய் பார்த்தாள்.
“என்னடி பார்க்கிற... எனக்கு எல்லா விதத்துலையும் நீ பொருத்தமா இருப்பன்னு தான் உன்னை அப்ரோச் பண்ணினேன். ஆனா என் தகப்பன் என் கண்களை மறைத்து என் முதுகுக்கு பின்னாடி இவ்வளவு வேலை செய்து இருப்பதை பார்த்து மனது வெறுத்துப் போச்சுடி...” என்றவனின் கரங்களை ஆதரவாக பற்றிக் கொண்டாள்.
வலி நிறைந்த பார்வையை அவள் மீது வீசினான் சர்வா...
“போனதை பற்றி ஏன் பேசி உங்களை நீங்களே நோகடிச்சுக்குறீங்க... விட்டு தள்ளுங்க சர்வா...” என்றவளை தீரா வலியுடன் பார்த்தான் சர்வா..
“உனக்கு கூட என் உணர்வுகள் புரியல இல்ல...” என்றவனின் ஆதங்கமும் கோவமும் நன்கு புரிந்து தான் இருந்தது. ஆனால் போனவற்றையே பேசி பேசி ரணப்படுத்திக்கணுமா என்று இயலாமையுடன் பார்த்தவளை கண்டு இன்னும் முறைத்தான்.
“நீ தான் என் மனைவியா வர போறன்னு நான் மணக்கோலத்துல சபையில ஆசையா காத்துக்கிட்டு இருந்தேன்டி... ஆனா அங்க நீ இல்லாம வேற யாரோ இருந்ததை பார்த்து என் கனவுகள் எல்லாம் ஒரு நொடியிலே கருகிப் போச்சுடி...” என்று கண்கள் சிவக்க அவன் சொல்ல வேகமாய் அவனை இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டாள்.
அவனது வேதனை அவளுக்கும் இருந்தது தானே... தனக்காவது அவனை முழுமையாக நேசிக்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால் சர்வாவுக்கு அந்த சுதந்திரம் கூட இல்லையே... அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் வாழ வேண்டிய கட்டாயம் இருந்ததே...
மனதை கல்லாக்கிக் கொண்டு அந்த பெண்ணுடன் ஒவ்வொரு நொடியும் வாழும் வாழ்க்கை அவனை எவ்வளவு துயரப்படுத்தி இருக்கும்... மனதை நொடியில் மாற்றிக் கொள்ளும் வரம் அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்க்கவில்லையே... எண்ணியவளின் கண்களில் நீர் ஜொலித்தது...
சர்வாவின் முகத்தோடு முகத்தை சேர்த்து தன் கண்ணீரால் அவன் பட்ட வேதனையை துடைத்து எறிவது போல அவனின் கோவம் நிறைந்த முகத்தில் தன் விழி நீரை சிந்தி அபிசேகம் செய்தவளை இன்னும் இறுக்கிக் கொண்டவன் அவளின் நெஞ்சில் தன் முகத்தை மிக அழுத்தமாக புதைத்துக் கொண்டான்.
மனம் முழுக்க சகி இருக்க, அவளை விடுத்து வந்த பெண்ணுடன் வாழ முடியாமல் அவன் தடுமாறி நின்ற நிலை அவன் மட்டுமே அறிவான். உள்ளுக்குள் அவ்வளவு போராட்டம். கனவாய் கற்பனையாய் வடித்த வாழ்க்கை கண் முன்னே கைநழுவி போனதை கொஞ்சம் கூட அவனால் ஏற்க முடியாமல் வந்த ஆத்திரத்தையும் கோவத்தையும் அவமானத்தையும் முகத்தில் கொஞ்சமும் காட்டிக் கொள்ளமால் சிரித்த முகமாய் தன்னை மணபந்தலில் உட்கார வைத்த தன் தந்தையின் மீது இன்னுமே அவனுக்கு அடக்க முடியாத கோவமும் வெஞ்சினமும் எழுந்தது.
அவனின் வேதனை அப்பட்டமாய் அவளுக்கும் புரிந்தது. ஆனால் நடந்து முடிந்ததை எண்ணி ஆத்திரம் கொள்வது மடமை தானே... பெருமூச்சு விட்டவள்,
“வருகிற காலங்களை நம் வசமாகிக் கொள்வோம் சர்வா. அந்த வாழ்க்கையில் நமக்கு பிடித்தது போல அமைத்துக் கொள்ளலாம். உங்களையும் சரி என்னையும் சரி இனி பிரிக்க கூடிய காரணிகள் எதுவும் இல்லை. தடை தாண்டி வந்தாயிற்று. இனி மனம் போல வாழலாமே...!” என்று அவனது தலையை கோதிவிட அவளது கரத்தை எடுத்து தன் கன்னத்தோடு வைத்துக் கொண்டவன்,
“கார்த்திக்குக்காவது நீ இருந்த, உன் குடும்பம் இருந்தது.. ஆனா எனக்காக யாருமே இல்லடி... என் பிள்ளைகளை தவிர, வந்தவ கூட பாதியில விட்டுட்டு போயிட்டா... என் பிள்ளைகள் மட்டும் இல்லன்னா நான் என்னைக்கோ மனசு ஒடைஞ்சி போய் இருந்து இருப்பேன்...”
“ஆனா அவங்க முகத்தை பார்த்து தான் என்னோட எல்லா வலியையும் நான் தீர்த்துக் கிட்டேன். ஆனா மறுபடியும் உன்னை பார்த்த பிறகு என் இழப்புகள் எல்லாமே வரிசை கட்டி வந்து நின்னது...”
“அதுக்கு காரணமே நீ தான்டி.. நீ மட்டும் தான். நீ மட்டும் வரமா போய் இருந்தா நான் நிம்மதியா இருந்து இருப்பேன்... ஆனா இந்த அளவு மகிழ்ச்சியா இருந்து இருப்பனா எனக்கு தெரியாதுடி... உன்னை எப்படி என்னால விட முடியும்... நீ என்னோட உயிர் மூச்சு... உன்னால மட்டும் தான் நான் நானா இருக்கிறேன்...”
“மூச்சு முட்டுதுடி உன் மேல வச்ச காதல். ஆனா அது உன்கிட்ட இல்லன்னு நினைக்கும் பொழுது அப்படியே அந்த மூச்சு நின்னு போயிடுது...” என்றவனை வேதனை போங்க பார்த்த சகி, அவனை இழுத்து தன்னை அவனுக்கு கொடுத்து அவனது இதழ்களை வலிக்க வலிக்க கொய்துக் கொண்டாள்.
“எனக்கும் அந்த வலி இருந்தது சர்வா... உங்களுக்காவது ஒரு வடிகால் இருந்தது பிள்ளைகள் வழியா... ஆனா எனக்கு அப்படி எதுவும் கிடையாது...! நான் அழுதா என்னை சுற்றி இருக்கிற என் உறவுகள் நொந்து போயிடுவாங்க...”
“அவங்களுக்காக நான் நடிக்க ஆரம்பிச்சேன். ஆனா என் தலையணைக்கு மட்டும் தான் தெரியும் என்னுடைய கண்ணீர். நெஞ்சு முழுக்க உங்க மேல நேசம் வச்சி இருந்தும் அதை துளி கூட காட்ட முடியாத கையறு நிலை எனக்கு... அந்த வேதனை உங்களுக்கு புரியுமா சர்வா... கொடுமை தெரியுமா?” என்றவளை இறுக்கி அணைத்தவன்,
ஒருத்தருக்கு ஒருத்தர் வலியை மறைத்துக் கொண்டு வாழ்ந்த காலங்களை பகிர்ந்துக் கொண்டு மனதில் உள்ள கசடுகளை எல்லாம் கொட்டி முடித்து விட்டு நிர்மலாக அமர்ந்து இருந்தார்கள்.
வெளியே போட்ட ஒற்றை இருக்கையில் சர்வா அமர்ந்துக் கொண்டு அவனின் மடியில் தன்னவளை வைத்துக் கொண்டு கதை பேசி முடித்தார்கள்.
“சரி இப்போ வாசகம் அந்த ஆபரை ஏத்துக்கடி...” அவளின் இடையை பற்றியபடி சொன்னான் சர்வேஸ்வரன். அவனது மீசையை பிடித்து விளையாடிபடி,
“நீ நான் எதுவும் நமக்குள்ள வேணாம் சர்வா.. எல்லாமே நாமளா இருப்போமே...” என்று சொன்னாள்.
“ஹேய்... ஏன்டி...?”
“ப்ச்... சகியும் சர்வாவும் வேற வேற இல்ல சர்வா... இந்த சர்வேஸ்வரன் குள்ள தான் இந்த சங்கரேஸ்வரியும் அடக்கம். அப்படி இருக்கும் பொழுது இந்த நீ நான் ன்ற எதுவும் நமக்குள்ள வேணாம் சர்வா. எப்பொழுதுமே நாமளா மட்டும் இருப்போம்...” என்றாள் காதலுடன்.
அவளது காதலை முழுமையாக அனுபவித்தவன்,
“காலங்கள் தாண்டி காத்திருப்பேன்...
காதலை ஏந்தி காத்திருப்பேன் கனவுகளாய் காத்திருப்பேன் கரைந்திடும் முன் உன்னை காண்பேன்
கணம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள் கரையின் நுனியில் நான் காத்திருப்பேன்...” என்று காதலை சுமந்த வரிகள் எங்கோ காற்றில் கேட்டது...
அப்படியே அவளை கைகளில் ஏந்தியவன் அறைக்குள் நுழைந்தான். காதலனுக்கு பகையே பெண்ணவளின் சேலை தானே...! போகும் வழியிலே அதை உருவி போட்டு இருந்தான் சர்வா...!
அவனின் அதிரடியிலும் ஆளுமையிலும் அங்கு பெண்ணவளின் சிணுங்கள் ஒலியும், சிரிப்பொலியும், கொலுசொலியும் மட்டுமே கேட்டது...!





