Notifications
Clear all

அத்தியாயம் 53

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

“அது எப்படி அப்படி விட முடியும். வாழ வேண்டிய உன்னை வச்சுக்கிட்டு நாங்க மட்டும் வாழ்ந்தா எப்படி சகி. அதெல்லாம் முடியாது... உனக்கு ஒரு நல்லது நடக்காம எங்களுக்கு எந்த நல்லதும் வேணாம்... ஆமாதானே மிரு..” என்று சகியின் பின்னால் நின்று இருந்த மிருவை பார்த்து கேட்டான்.

அவனது உரையில் இருந்த நியாயம் புரிய,

“ஆமாம் கா... நீ பார்க்காத நல்லதை நாங்க மட்டும் எப்படி பார்க்கிறது. முதல்ல உனக்கு கல்யாணம் அதுக்கு பிறகு தான் எங்களுக்கு கல்யாணம். அதுல எந்த மாற்றமும் இல்லை...” என்று அவள் முடிவாக கூறிவிட, சர்வாவின் பார்வை சகியிடம் வந்து சேர்ந்தது.

மனம் நிறைய அவளை பார்த்தவன், கிருஷ்ணனின் புறம் திரும்பினான். அது வரை சார் என்று அழைத்துக் கொண்டு இருந்தவன்,

“சகியை என்கிட்டயே குடுத்துடுறீங்களா மாமா... எனக்கு அவ வேணும்... அவ மட்டும் தான் வேணும்...” என்று அழுத்தம் திருத்தமாக கேட்டான். அவனது பேச்சில் அதிர்ந்து போனாள் சகி. சர்வாவை நிமிர்ந்து பார்த்தாள். அவனது முகத்தில் இருந்த தீவிரம் அவளை வாயடைக்க செய்ய எதுவும் பேசவில்லை அவள். அமைதியாக நின்றாள்.

சர்வா இப்படி கேட்கவும் சற்று தடுமாறிப் போனவர், “தம்பி...” என்று எதுவும் சொல்ல முடியாமல் தயங்கியவர்,

“எனக்கு உங்களை அப்போ இப்போன்னு இல்ல எப்பவும் உங்களை பிடிக்கும். எனக்கு உங்களை என் மாப்பிள்ளையா ஏத்துக்க எந்த தடங்களும் இல்லை. ஆனா சகி என்ன நினைக்கிறான்னு எனக்கு தெரியல... எது என்றாலும் பாப்பா விருப்பம் தான்... நீங்க அவக்கிட்ட பேசிட்டு சொல்லுங்க. நான் கல்யாணத்துக்கு நாள் பார்க்கிறேன்” என்றார் மகிழ்ச்சியாக. 

சர்வா சகியை பார்த்தான். அவனது பார்வையில் அவளின் தலை தானாக ஆடி சம்மதம் சொல்ல, அதன் பிறகு இரு திருமணத்தையும் ஒரே நேரத்தில் செய்ய ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.

ஊர் மெச்ச திருமணம் செய்தான் சர்வா. அப்பா அம்மா எங்க என்று கேட்டவர்களுக்கு, “இருவரும் காசி ராமேஸ்வரம்னு புனித யாத்திரை போய் இருக்காங்க. அதோட அமர்நாத் கோயிலுக்கும் போய்ட்டு வரதா சொல்லி கிளம்பிட்டாங்க...” என்று பொய் சொன்னான். இன்னும் சில நாட்கள் கழித்து, அமர்நாத் நிலசரிவில் சிக்கி உயிரிழந்து போனதாக சொல்லி கதையை முடித்து விடலாம் இந்த பொய்யை அவிழ்த்து விட்டான்.

“கார்த்திக் எப்படி... ? யார் இவர்?” என்று கேட்க,

“பாரின்ல இவ்வளவு நாளும் படிச்சுக்கிட்டு இருந்தான். இப்போ தான் இங்க இந்தியா வந்தான்...” என்று அவனையும் பாரின் ரிட்டர்ன் போலவே மாற்றி இருந்தான் சர்வா. அதை செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிப் போனது இவனுக்கு.

“இதெல்லாம் எப்படி தான் போட்டுக்கிட்டு இருக்கீங்களோ...” என்று கோட் சூட்டை ஏதோ வெற்று கிரகவாசி போல முறைத்துப் பார்த்தான். இது மட்டும் இல்லை இன்னும் பல இருந்தது அவனை வெறுத்து ஓட வைக்க, ஆனால் சர்வாவுக்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டான். என்ன வாய் மட்டும் அவனுக்கு ஓயவே இல்லை..

புன்னகையுடன் நால்வரும் மணமேடையில் அமர்ந்து இருக்க, கிருஷ்ணன் அனைத்தையும் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள, அதிசயமாக இனி கார்த்தியின் மடியில் போய் அமர்ந்துக் கொண்டாள். ஆது சர்வாவின் மடியில் ஒய்யாரமாய் அமர்ந்துக் கொண்டு இது என்ன அது என்னை என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.

பிள்ளை பூச்சியாக நெளிந்துக் கொண்டு இருந்தவனை மடியில் இருத்தி வைப்பதே பெரும் பாடாக போனது சர்வாவுக்கு. அனைவரின் ஆசியோடு உரிய நேரத்தில் மாங்கல்ய தாரணம் முடிந்தது. மணமக்களின் முகத்தில் பூரண புன்னகை. அதோடு கிருஷ்ணனின் கண்களில் ஆனந்த கண்ணீர்.

பிள்ளைகளுக்கு சொல்லவே வேண்டாம். அம்மாவும் சித்தியும் இனி அவர்களுடன். குறிப்பாக சித்தப்பா... தாத்தா... எனவே கொள்ளை இன்பத்தில் அவர்கள் மிதந்தார்கள்.

போட்டோ சூட்.... இருவருக்கும் தனியாக ஏற்பாடு செய்து இருந்தான் சர்வா. அதனால் அங்கு தனி தனியாக அழகாக நடைபெற்றது. திருமணம் முடிந்து அனைவரும் சர்வாவின் வீட்டுக்கு வந்தர்கள். அதோடு சகியின் வீட்டை காலையில் தான் காலி செய்து அவர்களின் பொருட்களை எல்லாம் சர்வாவின் வீட்டில் அவரவர் அறையில் தனி தனியாக பிரித்து அடுக்கப்பட்டு இருந்தது.

கிருஷ்ணன் முதலில் சம்மதிக்க வில்லை. ஆனால் “தனியாக உங்களை விட முடியாது ப்பா... மாமா” என்று நால்வரும் சொல்லிவிட வேறு வழியில்லை அவருக்கு. இங்கே அவர்களோடே தங்க சம்மதித்தார்.

அன்றிரவு பிள்ளைகளை தன்னோடு வைத்துக்கொண்டு கதை சொல்லி தூங்க வைத்தவர் தானும் நிம்மதியாக தூங்கிப் போனார்.

கார்த்தியும் மிருவும் ஒரு வித புரிதலுடன் தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்க, சகி சர்வவை விடுத்து கீழே போர்வை விரித்து படுத்து விட்டாள். அதை எதிர்பார்கக்தவன் கோவத்துடன் அவளின் முதுகை வெறித்தான்.

“நான் உன் புருஷன்டி...” என்று அவன் கத்த, இவள் காதை குடைந்துக் கொண்டு “ப்ச்... தூக்கம் வருது... டிஸ்ட்ரப் பண்ணாதீங்க” என்று தூங்கப் போக,

“ஏய்.. திமிராடி...? என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?” என்று அவளின் அருகில் வந்து அமர்ந்து அவளை தூங்கவிடாமல் சண்டைக்கு வந்தான்.

“இந்த மாதிரி நேரத்துக்கு தகுந்த மாதிரி என்னால எல்லாம் மாற முடியாது. என்னை விடுங்க” என்றாள்.

“இல்ல என்னவோ இருக்கு. ஆனா நீ அதை மறைக்க பார்க்கிற? முதல்ல அது என்னன்னு சொல்லுடி..” என்று அவளை உசுப்பினான்.

“வேணாம் இன்னைக்கு ரொம்ப நல்ல நாள் இந்த நாள்ல பிரச்சனை வேணாம்...” என்றாள்.

“அது தான் உன் வாயில இருந்தே வந்திடுச்சே பிறகு என்ன சொல்லு...” என்று பல்லைக் கடித்தான்.

“எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க போறேன்” என்று படுத்து விட்டாள்.

“அவள் மீது ஒரு வாளி தண்ணீரை கொண்டு வந்து அப்படியே கவிழ்த்தான். அதில் அதரி பதறி எழுந்து அமர்ந்தவள் அவனை கொலை வெறியுடன் பார்த்தாள். சொட்ட சொட்ட நீர் வடிந்துக் கொண்டு இருந்தது அவள் மீது.

“இப்போ நீ சொல்லல...இதுக்கு மேலயும் அனுபவிப்படி...” என்று பல்லைக் கடித்தவன் அவளை ஆத்திரமாக முறைத்துப் பார்த்தான்.

“எனக்கென்ன பயம்... நான் சொல்லுவேன். நான் சொன்னதுக்கு பிறகு இந்த மூஞ்சிய எங்க கொண்டு போய் வைக்கிறிங்கன்னு நானும் பார்க்கிறேன்” என்று கருவியவள்,

“அன்னைக்கு என்னவோ சொன்னீங்களே... நானும் கார்த்தியும் ஒண்ணா நிற்கும் பொழுது.. அந்த வார்த்தையை நல்லா யோசிச்சு பாருங்க... எப்படியாப்பட்ட வார்த்தையை பேசுனீங்கன்னு...” என்றாள் அவளும் ஆத்திரமாக.

“அன்னைக்கு நான் நிறைய பேசுனேன். பட்டிகுலரா என்ன பேசுனேன்னு எனக்கு ஞாபகம் இல்லை. அதனால நான் என்ன பேசுனேன்னு நீயே சொல்லிடு...” என்றான் ரொம்ப அசால்ட்டாக.

அவனது அந்த அசால்ட்டில் பத்திக் கொண்டு வந்தது சகிக்கு. ஆனாலும் அவன் பேசிய பேச்சை அப்படியே விட்டுவிட்டு அவனை ஏற்றுக் கொள்வது என்பது அவளால் இயலாதே... அதனால் அன்னைக்கு பேசியதை அவனுக்கு சொல்லிக் காட்டினாள். 

“அன்னைக்கு என்னை பார்த்து ‘இப்படி என் கண்ணு முன்னாடி நிற்க உனக்கு கூட அசிங்கமாவே இல்லயா...?’ அப்படின்னு கேட்டீங்க... அந்த ஒரு கேள்வி போதாதா நீங்க என்னை எந்த அளவுக்கு எடை போட்டு வச்சி இருக்கீங்கன்னு...” விழிகளில் இரத்த சிவப்பு ஏற கேட்டவளை கொன்னு போடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.

“அன்னைக்கு அந்த கேள்வியில் நான் எப்படி கூனி குறுகி போனேன்னு தெரியுமா?” என்று விம்ம,

“ஏன்டி நீயா ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு அதுக்கு என்னையும் கூட்டு சேர்க்கிற பாரு... அப்படியே ஒரு அறை விடணும் போல வருது...” என்று முறைத்தான்.

“ஹலோ ஏற்கனவே அன்னைக்கு அடிச்ச அடிக்கு இன்னும் நீங்க காம்ப்ரமைஸ் பண்ணல... நினைவு இருக்கட்டும். உங்களுக்கு மட்டும் கை இல்ல.. எனக்கும் கை இருக்கு. நான் அறைவேன்” என்றாள் நிமிர்வாக.

“இப்போ இவ்வளவு பேசுறியே... எங்கப்பன் உன்னை இப்படி ஒரு கேவலமான வேலை செய்ய சொல்லி இருக்காரே. அவரோட கன்னத்துல ஓங்கி ஒரு அரை விடாம அந்த ட்ராமால ஹைலைட் பெர்பாமன்ஸ் குடுத்து இருக்க. உன்னை இந்த கேள்வி இல்ல இதுக்கு மேலையும் கேவலமா பேசுவேன். அன்னைக்கு ஒரு அடியோட விட்டேன்னு நினைச்சி சந்தோசப் பட்டுக்க... இல்லன்னு வை அன்னைக்கு உன்னை என்ன பண்ணி இருப்பேன்னு எனக்கே தெரியாது. அந்த அளவுக்கு ஆத்திரம் உன் மேல இருந்தது. இப்பவும் இருக்கு. ஒழுங்கா போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்து படு... இல்லன்னு வை இருக்கிற ஆத்திரத்துல இன்னும் சேர்த்து நாலு அரை விடுவேன்” என்றவன் உப்பரிகைக்கு போய் விட்டான்.

“இங்க நான் தானே கோவமா இருக்கணும்.. இவரு கோவப்பட்டுக்கிட்டு இருக்காரு... என்னடா நடக்குது இங்க...” முணுமுணுத்துக் கொண்டே வேறு சேலை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

ஈர தலையில் துண்டை கட்டிக் கொண்டு வந்தவளிடம் சூடான பானத்தை நீட்டினான் சர்வா. வாங்கிக்கொண்டவள்,

“இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை...” என்று முணகியவள், உப்பரிகையில் போட்டு இருந்த இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டாள். அப்பொழுது தான் அவ்விடத்தை பார்த்தாள். முன்பு ஒரு குடும்பமே அமர இருக்கை போடப்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது அவள் அமர்ந்து இருக்கும் ஒற்றை இருக்கை மட்டுமே இருந்தது.

அவளையும் அறியாமல் அவளது இதழ்களில் ஒரு புன்னகை வந்தது. அவளது புன்னகையை கூர்ந்து பார்த்துக் கொண்டே வந்து கைப்பிடி ஓரம் நின்றான். நிலவின் ஒளி சற்று தன்மையாக ஒளிர, அதில் அவளது முகத்தை பார்த்தான் சர்வா.

முன்பிருந்த அந்த கோவம் அவளது முகத்தில் தென்படவில்லை. அதை அறிந்தவனுக்கு அவளை சீண்டிவிட வேண்டும் போல தோன்றியது...

“தொலைவில் அன்று பார்த்த கனமா...

அருகில் இன்று நேரும் ரணமா...

கொள்ளாமல் நெஞ்சைக் கொள்வதென்ன கூறாய்...

வாய்விட்டு அதை கூறாயோ...”

என்று பாடலிலே அவளை வம்பிழுத்தான்.. அதில் சட்டென்று கோவம் ஏற்பட, எழுந்து செல்ல போனாள்.

“சொல்லாமல் என்னை விட்டு நீயும் போனால் ..

என்னாவேன் என்று பாராயோ...!”

என்று அவன் மீண்டும் பாடல் வரிகளிலே அவளை கட்டி இழுத்து நிறுத்த சென்றவளின் பாதம் அப்படியே வேரூன்றி போனது.

திரும்பி அவனை பார்த்தாள்... அவளது கண்களில் மீதூறி இருந்த காதலை பார்த்தவனுக்கு அவனுடைய ஆர்ப்பாட்டமெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் ஓய்ந்து போனது...

அவனது கண்களை பார்த்துக் கொண்டே மிக தீவிரத்துடன்,

“என்றும் பிரிந்திடா வண்ணம்

உந்தன் கையை இருக்கியே கோர்க்க தா...

பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்

நிரப்ப உன் நெஞ்சம் தா...

தனிமையில் உன்னை நான்

நீங்காத உரிமை வேண்டும் தா...” என்று பாடியவளின் வார்த்தையில் நெஞ்சம் ஒரு துள்ளு துள்ளி வெளியே வந்து விழுந்தது சர்வாவுக்கு..

ஒருவரின் ஒருவர் காதல் நேர்கோட்டில் சந்திக்க ஆரம்பித்தது... அவள் கொண்ட காதலின் வீரியம் அவன் உணர ஆரம்பிக்க அவன் கொண்ட காதலின் வீரியத்தை அவளும் உணர ஆரம்பித்தார்கள்.

காலடி நெருங்கவில்லை. நின்ற இடத்தில் நின்ற படியே ஒருவரின் பார்வையை மற்றவரின் பார்வை கவ்விக் கொண்டு இதுவரை பகிராத காதல் பக்கங்களை பகிர ஆரம்பித்தது...

ஒட்டு மொத்த நேசத்தையும் சுமந்து சர்வா பார்க்க, தீராத பெரும் காதலை கொண்டு சகி அவனை பார்த்தாள். கண்களில் காதல் கரைபுரண்டு ஓட அதில் இரு மனமும் சிக்கி தவித்தது...

மூச்சு முட்டும் அளவுக்கு இருவரின் நேசமும் ஆழமாக இருக்க, அதை எதிர்கொண்டவர்களின் நெஞ்சம் தடதடத்து தான் போனது.

உயிரை உருக்கும் நேசத்தை இரு நெஞ்சமும் பகிர அதன் பாரத்தை தாங்க முடியாமல் நான்கு விழிகளும் கலங்கி தவித்தது... தொடவில்லை, பக்கம் நெருங்கிவில்லை, ஆனால் காதல் அவர்களுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

மூச்சு முட்டி போகும் வண்ணம் இருவரது நேசமும் ஒன்று சங்கமிக்க சர்வா நின்று இருந்த இடத்தில் இருந்த அலங்கார கைப்பிடியை இறுக்கிப் பிடித்தான். சகி இருக்கையின் விளிம்பை இறுக்கிப் பிடித்தாள்.

தேக்கி வைத்த காதல் காவிரியாய் பெருகி ஓடியது...! யாருக்கும் தெரியாமல் நேசத்தை வளர்த்து, யார் கண்ணும் படாமல் இதுவரை பதுக்கி வைத்து, மிக ரகசியமாய் அடி மனதின் ஆழத்தில் போட்டு புதைத்து வைத்திருந்த மாசில்லா நேசத்தை, இனி நிறைவேறவே வேறாத இந்த நேசம் கிளை பரப்பி மிக ஆழமாக வேரூன்றி மன பெட்டகத்தில் விருட்சமாய் வளர்ந்து நின்று கைவசப்படாமல் போன ஆயிரங்காலத்து நேசம் இன்று உடையவரின் கைவசப்படும் நிலையில் இருக்க அங்கு வாய் வார்த்தை தான் வேணுமா...? வெறும் கண் பார்வை போதுமே... கண் பார்வையை விடவா வாய் மொழிகள் உள்ளத்து பெருங் காதலை காட்டிவிடும்...

பார்த்த பார்வை பார்த்தபடியே, அசையா நிலை... காற்று வந்து இவர்கள் சிலையாக இருந்ததை பார்த்து கலைக்க முற்பட, ம்ஹும்... அவர்களை அசைக்கவே முடியவில்லை... வெறும் உடையை மட்டும் தான் அதால் தொட்டு கலைத்து செல்ல முடிந்தது...

கருவிழிகளில் மெல்லிய நீர் படலம்... அதை தாங்க முடியாமல் சர்வா தன் ஒற்றை கரத்தை நீட்டினான் அவள் புறம். சகி மாட்டேன் எனபது போல வர மறுக்க, பெருமூச்சு வந்தது அவனுக்கு.

பெரும் காதலே இங்கு இவர்களின் இணைவுக்கு தடையாகிப் போனது...! ஏனோ இந்த காதலே போதும் என்பது போல இருந்தது அவர்களின் நிலை..

அந்த நேரம் மெல்லிய சாரல் தூவ சர்வா அந்த சாரலில் நனைந்த படி இருக்க, அவனின் அருகில் போய் அந்த சாரலில் அவளுக்கும் நனைய ஆசையாக இருக்க, மெல்ல அடி எடுத்து வைத்து அவனது அருகில் வந்து நின்றாள்.

அவனை நனைத்த துளிகள் அவளையும் நனைக்க உடல் மொத்தமும் சிலிர்த்தது... கண்களை மூடி அந்த நிலையில் இருவரும் நிற்க தூரத்தில் மின்னல் வெட்டி போனது. அதன் வெளிச்சம் இருவரின் மீதும் விழ ஒருவரின் உருவத்தை ஒருவர் விழி அகலாமல் பார்த்தார்கள்... முன்பிருந்த விலகல் இருவருக்கும் இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் இருவரின் முகமும் நெருங்கி வந்தது.

அந்த சமயம் ஒரு பேரிடி இடிக்க அந்த சத்தத்தில் இருவரும் கலைந்து நின்றாகள். சட்டென்று சகியின் முகம் சிவக்க அதை இரசனையுடன் பார்த்தான்.

“தூக்கம் வருது... நான் உள்ள போறேன்” என்று அவள் போக, போனவளின் முந்தானையை பிடித்து இழுத்தான் சர்வா. அதில் அடி வயிற்றில் சில்லென்ற உணர்வு பிறக்க கண்கள் சிவக்க மெல்ல திரும்பி அவனை பார்த்தாள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top