சகியின் மடியில் விழுந்த பாரத்தை உணர்ந்தாலும் அவள் கண் திறக்கவே இல்லை...
“கோவமா என் மேல..” என்று கார்த்திக் கேட்டான். அவனது தலை முடியை கோதி விட்டுக் கொண்டே,
“கோவம்னு இல்ல கார்த்திக். ஆனா சர்வாவை இங்க நம்ம வீட்டுல பார்க்கும் போது மனசு அப்படியே பச்சை மரம் தீப்பட்டு எரிவது போல இருக்கு... அவர் இருக்கிற தகுதிக்கு அவரை நம்ம வீட்டுல வச்சி அழகு பார்க்கிறத பார்க்கும் பொழுது என்னவோ மனசை அப்படியே பிசையுது...” என்று சொன்னாள்.
அவளின் முகத்தை அண்ணாந்து பார்த்தவன்,
“அப்போ நான் அண்ணாவோட போகட்டுமா?” என்று கேட்டான்.
“ம்ம்... போ ஆனா மிருவையும் கையோட கூட்டிட்டு போ..” என்றாள்.
“ஹேய் என்னடி சொல்ற... புரிஞ்சி தான் பேசுறியா? அவ.. அவ அவளை போய் எப்படி நான் என்னோட லூசு மாதிரி பேசாதடி... அவ சின்ன பிள்ளை. அதோட அவ படிப்பு என்ன, குணம் என்ன, அவளை போய் என்னோட இணை கூட்டுற?” என்று பதறிப் போனான். அவனது பதற்றத்தை சட்டை செய்யாதவள்,
“நீ தான் அவ சின்ன பிள்ளைன்னு நினைக்கிற ஆனா அவ அப்படி உன்னை நினைக்கல கார்த்திக்..” என்று பெருமூச்சு விட்டவள், மிருவைன் மனதில் உள்ளதை புட்டு புட்டு வைக்க வாயடைத்துப் போனான்.
“சகி... நான் அவளை அப்படி பார்க்கல...” என்றான் குற்ற உணர்வுடன்..
“ப்ச்.. நான் உன்னை தவறா நினைக்கல கார்த்திக். உன்னை விட ஒருத்தனை என் தங்கைக்கு நான் தேடி சளிச்சி எடுத்தலும் கிடைக்க மாட்டான்...” என்று அவனது தலையை நிறுத்தாமல் கோதி விட்டவள்,
“அவ படிப்பு முடிஞ்சி போச்சு... அதனால சீக்கிரம் கல்யாணத்தை வச்சிடலாம். இனி வேலைக்கு போறது தான் பாக்கி. அது உங்க விருப்பம்... இதுல நான் தலையிட மாட்டேன். உங்க வாழ்க்கை எப்படி இருக்கணுமோ அப்படி அமைச்சிக் கோங்க...” என்றவளை நெகிழ்ந்து போய் பார்த்தான்.
“சகி...”
“உன்னை அவ மனசு முழுசும் நினைச்சி வச்சி இருக்காடா... உன் கிட்ட கேட்க எனக்கு தயக்கம் தான். ஆனா...” என்று உதட்டைக் கடித்தவள்,
“என்னோட சூழ்நிலை... ஒரு ஒரு வருடம் டைம் தரியா நான் அதுக்குள்ள எப்படியாவது அதுக்குள்ள அவளுக்குன்னு கொஞ்சம் நகை சேத்துடுறேன்...” என்றவளின் மடியில் இருந்து விருட்டென்று எழுந்தான் அடக்கப்பட்ட கோவத்துடன்.
அவனது கண்களில் தெரிந்த கனலில் “இல்ல கார்த்திக் நீ முன்ன மாதிரி இருந்தா நான் இதைஎல்லாம் சொல்லி இருக்க மாட்டேன். ஆனா இப்போ நீ சர்வாவோட தம்பி...” என்று அவள் சொல்ல, அவன் முறைப்பு கொஞ்சம் கூட குறையவில்லை.
“உன் தகுதிக்கு வசதி அதிகமான பெண்கள் எல்லாம் வருவாங்க இல்லையா? அவங்களோட நாங்க இணை சேர முடியாது. அந்த அளவுக்கு சீர்வரிசை எல்லாம் செய்ய முடியாது. ஆனா பொன்னு வைக்கிற இடத்துல பூவையாவது வைக்கணும்ல...” என்று அவள் தயக்கத்துடன் சொல்லி முடிக்க,
“அப்போ என்னை இவ்வளவு கேவலமா தான் நினைச்சுகிட்டு இருக்கியா சகி” என்று பல்லைக் கடித்து கேட்டான். அதில் அவனது கோவம் அப்படியே தென்பட,
“கோவப்படாத கார்த்திக் இப்போ ஒண்ணும் தெரியாமல் போகலாம். ஆனா ஒரு அஞ்சு வருடம் கழித்து சலிப்பு வரும் பொழுது இந்த விசயம் எல்லாம் பெரிதா படும்... பெண்ணை பெத்துட்டோம் இல்லையா? ஒரு முறைக்கு நாலு முறை யோசிச்சு தான் ஒரு விசயத்துல இறங்கனும் கார்த்திக்...” என்றாள்.
“எல்லாம் சரி தான். ஆனா சகி அதை உன் கார்த்திக் செய்வான்னு நீ நினைக்கிற பாரு நிஜமா வலிக்குது...” என்றான் கண்கள் சிவந்து போய்...
“அது அப்படி இல்ல கார்த்திக்... சர்வாவுக்குன்னு ஒரு பேர் இருக்கு பிசினெஸ் சரக்கில்ல. நீ அவரோட தம்பின்னு தெரிஞ்சா போதும். உனக்காக பொண்ணுங்க லைன்ல நிப்பாட்டிடுவாங்க பெத்தவங்க...” என்று அவள் தடுமாறியபடி சொல்ல,
“எனக்கு யாரும் வேணாம் நீ போதும் சகி” என்றவன் அவளது மடியில் முகத்தை புதைத்துக் கொண்டான் சிறுபிள்ளையாய்.
அவனது முகத்தை நிமிர்த்தி தன் முகத்தை பார்க்க செய்தவள்,
“அது எப்படி முடியும் கார்த்திக்... உன்னை மட்டுமே உயிரா நினைச்சிக்கிட்டு இருக்குற என் தங்கச்சி எங்க போவா... நீ மட்டும் அவளை கல்யாணம் பண்ணிக்கலன்னு வை அவ்வளவு தான் உன்னை கொலை பண்ணவும் தயங்க மாட்டா...” என்று சிரித்தாள்.
“எது... கொலையா?” என்று அவன் அரண்டு புரண்டு எழ, அவனது பயத்தை கண்டு இன்னும் அவளுக்கு சிரிப்பு விரிந்தது.
“இல்லையா பின்ன அவ என்ன என்னை மாதிரி சாப்ட்டா... கொலையும் செய்வாள் பத்தினின்னு நீ கேள்வி பட்டது இல்ல..?” என்று கமுக்கமாக சிரித்தாள்.
“எது நீ சாப்ட்டா... அதை என் அண்ணன் கிட்ட கேட்ட தெரியும். நீ எவ்வளவு வைலன்ட்ன்னு” என்று அவன் அவளை வாரிவிட,
“கேட்டுப்பாரேன்... யார் வேணான்னு சொன்னா” என்று சிரித்தவள்,
“என் தங்கச்சிய கட்டிக்க உனக்கு சம்மதம் தானே கார்த்திக்..” என்று தவிப்புடன் கேட்டவளின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டவன்,
“என்னையே உயிரா நினைக்கிற ஒருத்தி கிடைக்கிறது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா சகி... எனக்கெல்லாம் ஒரு நல்ல வாழ்வு வருமான்னு கூட தெரியாம கத்தியோட சுத்திக்கிட்டு இருந்தேன். உன்னால நான் மனுசனா மாறினேன்... இப்போ உன் தங்கையால இந்த சமூகத்துல நான் குடும்பஸ்தனா வாழ ஒரு வாய்ப்பு கிடைச்சி இருக்கு... அவளோட சேர்ந்து நாலு பிள்ளைகளை பெத்துக்கிட்டு, அதுங்களோட மல்லுக் கட்டிக்கொண்டு உன் தங்கச்சியை எப்பவும் என் நெஞ்சில சுமந்துக்கிட்டு திரிய ஆசையா இருக்கு சகி...” என்றான் கனவுடன்.
“கண்டிப்பா நடக்கும் கார்த்திக்... அதுக்கு தான் நாங்களும் காத்துக்கிட்டு இருக்கோம்... இதை மட்டும் என் தங்கை கேட்டான்னா எவ்வளவு மகிழ்ச்சியா இருப்பா தெரியுமா?” என்று மனம் நிறைந்தவள், சற்றே தன் பார்வையை நிமிர்த்த அங்கே இரு கரங்களை வெற்று மார்பில் காட்டிக்கொண்டு இவர்கள் இருவரை தான் பார்த்துக் கொண்டு இருந்தான் சர்வா.
அவனது பார்வையில் அவள் தடுமாறிப் போக, கார்த்திக்கை உசுப்பி விட்டாள்.
அவனோ அவளது மடியை விட்டு நகராமல் வெட்ட வெளியில் இருந்த நிலாவை இரசித்துக் கொண்டு இருந்தான்.
அவனது காதோரம் சற்றே சரிந்து,
“உன் அண்ணன் நிக்கிறாரு கார்த்திக்...” என்று சொல்லவும் அடித்து பிடித்துக் கொண்டு அவளது மடியில் இருந்து எழுந்தவன் திரும்பி பார்த்தான். சர்வா இருவரையும் கூர்ந்து பார்த்துக் கொண்டு இருக்க,
“இவரு எப்போ வந்தாரு சகி..” என்று அவளது காதை கடித்தான்.
“எனக்கு மட்டும் என்னடா தெரியும்...” என்றவள், எழுந்துக் கொள்ள பார்க்க, கையை உட்காரு என்று சைகை செய்தான் சர்வா. அதனால் பழையபடி அமர்ந்துக் கொண்டாள். ஆனால் கார்த்திக் அவளது மடியில் படுக்காமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு இருந்தான்.
சகியின் மடியில் இருந்து எழுந்ததால் அவளின் காலடியில் அமர்ந்து இருக்க, சர்வா சகியின் அருகில் இருக்கும் இடத்தில் வந்து காலை நீட்டி போட்டு அமர்ந்தான்.
அவனது வருகை மனதில் பல உணர்வுகளை விதைக்க ஒன்றும் பேசாமல் சகி அமைதியாக அமர்ந்து இருந்தாள். அவளின் காலை உரசியபடி வந்து அமர்ந்தவன், எதுவும் பேச தோன்றாமல் சுவரில் சாய்ந்துக் கொண்டான் கண்களை மூடி. அவனது முகத்தில் படிந்த உணர்வுகளை இருவரும் சத்தமில்லாமல் அவதனிக்க அவனது ஏக்கம் புரிந்ததோ என்னவோ கார்த்திக்கு...
சட்டென்று சர்வேஸ்வரன் மடியில் படுத்துக் கொண்டான் கார்த்திக். அதில் சர்வாவின் கண்கள் கலங்கி விட அவனது கரத்தை பிடித்துக் கொண்டாள் சகி. அவளும் சொல்லி பார்த்து விட்டாள் கார்த்திக்கை சர்வாவின் வீட்டுக்கு போக சொல்லி.
ஆனால் எனக்கு அந்த வீடு ஒட்டல சகி என்று அவன் முரண்டு பண்ண சர்வாவுக்கு தான் நெஞ்சில் வலி எழுந்தது. கார்த்திக்கு தேவையான நேரம் கொடுக்க வேண்டும் என்று மனம் சொன்னாலும் அவன் தன்னை விட்டு நீங்குவது கண்டு மனம் ஒடிந்துப் போனான்.
ஏனோ கார்த்திக்கை அவனால் வேறு ஒருவனாக பார்க்கவே முடியவில்லை. சகிக்காக தன்னுடன் வந்து சண்டை போட்ட பொழுதே சர்வாவுக்கு தெரியும். இவன் தன் தம்பி என்று. ஆனால் அவனது விலகலில் மனம் நொந்துப் போனான்.
கார்த்திக்கு அந்த வீடு தானே பிரச்சனையே தவிர சர்வா கிடையாது. சகிக்காக பேச போய் தன்னை ஒரு நிலையில் கொண்டு வந்தவன் சர்வா தானே... அதோடு தனக்காகவும் சேர்த்து தன் அண்ணன் யோசித்து செயல் பட்டதில் நெக்குருகி போய் தான் இருந்தான். ஆனால் அதை எப்படி அவனிடம் காட்டுவது என்று தெரியாமல் அவன் தடுமாறிக்கொண்டு இருந்தான்.
அந்த தடுமாற்றமே இருவருக்கும் இடையே ஒரு இடைவெளி கொடுத்து இருந்தது. அந்த இடைவெளியை போக்க தான் சர்வாவை இன்று சகி அவளது வீட்டில் தங்க வைத்தது. அதோடு அவனின் முகத்தில் தென்பட்ட தனிமை... அங்கு போய் அது இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது என்று நன்கு உணர்ந்தவள், அவனின் மன நிலையை முன்னிறுத்தியே சர்வாவை தன் தகப்பனின் மூலம் இங்கு தங்க சொன்னாள்.





