Notifications
Clear all

அத்தியாயம் 47

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 961
Topic starter  

“ஆஹா... செய்யிறது எல்லாம் செஞ்சிட்டு என்னோட நல்லதுக்கா... என்னோட நல்லதுன்னா நான் யாரை ஆசை பட்டனோ, யாரை மனசார நேசிச்சனோ அவளோட என் வாழ்க்கையை அமைச்சி குடுத்து இருந்தா பரவாயில்லன்னு ஏதோ என் மேல பாசம் இருக்குன்னு நானும் நினைச்சி இருப்பேன். ஆனா நீங்க அப்படியா பண்ணீங்க...?”

“எங்க நான் சகியை கல்யாணம் செஞ்சுக்குவனோன்னு அவ லண்டன்ல இருக்கிற நேரமே அவ அப்பாவை எம்மாத்த ஆரம்பிச்சு, கடனுக்கு அவங்க சொத்தை வித்து தரேன்னு சொல்லி சொல்லியே அதுவும் அவரோட நண்பர்கள் மூலமாகவே சொத்தை எல்லாம் அடி மாட்டு விலைக்கு வாங்கி கொஞ்சமா பணத்தை குடுத்து அவர் இத்தனை வருடமா சேர்த்து வச்சிருந்த சொத்து எல்லாத்தையும் நேக்கா உங்க பேருக்கு மாத்தி ஏமாத்தி எழுதிக்கிட்டீங்க... சரி அது போகுதுன்னு பார்த்தா நீங்க ரெண்டு பேரும் அதோட மட்டுமா விட்டீங்க...?”

“எங்க சகி உங்க வீட்டுக்கு மருமகளா வந்துடுவாளோன்னு பயந்து அவளை உங்க அடியாள வளர்க்கப் பட்ட உங்க சொந்த மகனையே வச்சி கடத்துனீங்க... பிறகு இந்த பக்கம் சத்தமே இல்லாம ஒரு வருடத்துக்கு முன்னாடியே திவ்யா அப்பாக்கிட்ட எனக்கு சம்மந்தம் பேசி அவரையும் திவ்யாவையும் கல்யாண மண்டபத்துக்கு வர வச்சி, என் கெளரவத்தை குறி வைத்து பேசி, அத்தனை பேர் முன்னிலையிலும் சகியோட நடத்தையை தவறா சித்தரிச்சி திவ்யாவை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க” என்றான் நிதானமாக.

அவனது அறிக்கையில் சகி அதிர்ந்து தான் போனாள். “அப்போ எங்க பிசினெஸ் நட்டத்துல போகலையா?” என்று சகி கேட்க,

“இல்லை... அப்படி ஆன மாதிரி உன் மாமனார் காட்டி இருக்காரு உன் அப்பா நண்பர்களை வச்சே...” என்று அவன் சொல்ல தன் தந்தையின் தள்ளாட்டத்தை உணர்ந்து அவரிடம் விரைந்தாள் சகி.

“ஏற்கனவே கொஞ்சம் தெரியும் கண்ணம்மா... ஆனா இப்போ தான் எனக்கும் உண்மை தெரியும்...” என்றவர் சகியை தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

“அதோட மட்டும் இல்லாம ஒரு குடும்ப பெண்ணை எந்த அளவுக்கு அச்சிங்கப் படுத்தி அவ நடத்தையை கீழிரக்க முடியுமோ அந்த அளவுக்கு கீழ இரக்கி அவ வாழ்க்கையில விளையாடி இருக்கீங்க” என்று நெருப்பை கக்கினான் சர்வேஸ்வரன்.

“சரி தான் போடா... உன் நல்லதுக்கு பண்ணினோம்.. கடைசில எங்களுக்கு ரொம்ப நல்ல பேரை வாங்கி குடுக்குற.. போதும் நீயாச்சு உன் வாழ்க்கையாச்சு... எக்கேடோ கேட்டுப் போ...” என்று கவிதா அங்கிருந்து நழுவ பார்த்தார்.

நழுவும் மீனை விட்டு விடுமா என்ன மதி நிறைந்த கொக்கு... இவ்வளவு நாளும் ஒற்றைக் காலில் தவம் இருந்தது நழுவ விட தானா என்ன... பொறி வைத்து பிடித்தது போல தன் பெற்றவர்களையே தயவு தாட்சண்யம் இல்லாமல் பிடித்து வைத்திருக்கிறான் பசிக் கொண்ட அரிமாவாக....

அவ்வளவு எளிதில் விட்டுவிடுவானா என்ன இந்த சர்வேஸ்வரன்...

“ஓ... என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் இவ்வளவும் பண்ணி இருக்கீங்க இல்லையா?” என்று கேட்டான் உச்ச பட்ச்ச நக்கலாக.

“ஆமாம் இதுல உனக்கு என்ன சந்தேகம்” என்றார் செல்வநாயகம். தன் சாயம் எப்பொழுதோ வெளுத்து போய் விட்டதை உணர்ந்தாலும் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தவரை வெறுப்புடன் பார்த்தான் சர்வா.

“ஓ...! அப்போ திவியை கொன்னது கூட என் வாழ்க்கைக்காக தான் இல்ல...?” என்று கண்களில் சினம் பெருக ஒட்டு மொத்த ஆத்திரத்துடன் கேட்டவனை கண்டு இருவருக்கும் மூச்சடைத்துப் போனது.

“அது... அவ பிரசவத்துல ஜன்னி வந்து செத்துப் போனா.. அவ செத்துப் போனதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை...” என்று இருவரும் சாதிக்க,

“அது உங்க வேலை இல்லையா? அப்போ திவியோட அப்பாவும் அம்மாவும் தான் பொய் சொன்னாங்களா என்ன?” என்று இவன் யோசனையாக தாடையை சொரிந்தான்.

“நாங்க எதுக்கு சர்வா பொய் சொல்ல போறோம்...” என்றவர்களை பார்த்து வெறுப்புடன் சிரித்தவன்,

“என்ன நடிப்புடா சாமி...” என்று பரிகாசம் செய்தவன்,

“அப்புறம் எப்படி அவங்க பத்து தலைமுறை சொத்து எல்லாம் உங்க ரெண்டு பேருடைய பேருக்கும் வந்தது.. இப்போ அவங்க பிச்சை எடுக்காதது தான் குறை. ஒரே ஒரு பெண்ணை நல்ல இடத்துல கட்டிக் குடுக்கணும்னு தானே ஆசை பட்டாங்க. அதை கூட முழுசா அனுபவிக்க முடியாம அவங்க பிள்ளையை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம கொன்னு புதைச்சுட்டீங்களே ச்சீ...” என்றவனுக்கு பேச்சு தடுமாறியது. கண்களில் தீபாக்கினி கொழுந்து விட்டு எரிந்தது... அதை விட அவன் மனம் எரிந்தது நம்பிக்கை துரோகத்தில்.

குறுகிய காலத்தில் வந்து தன் வாழ்க்கையில் நீங்காமல் இடம் பெற்றுவிட்ட திவியை எண்ணி மனம் நைந்துப் போனான். ‘உன்னை கவனிக்காம போயிட்டேன் திவி... என்னால தான் உன் உயிர் போச்சு. நான் மட்டும் உன் கூடவே இருந்து இருந்தா உனக்கு இந்த நிலையே வந்து இருக்காது ம்மா...’ என்று தினமும் கண்ணீர் சிந்துவான். அதை தவறுதலாக ஒரு நாள் சகி பார்த்து விட்டாள்.

சர்வாவின் இந்த குற்றச்சாட்டில் வெலவெலத்துப் போய்,

“அவ செத்தது ஜன்னியால தான். அவ மரணத்துல எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை சர்வா..” என்று இருவரும் அடித்துப் பேச,

“ஆனா அவ ரிப்போர்ல வயித்துல ஆழமா கிழிசல் இருக்குன்னு தான் வந்து இருந்தது. உதிரம் எல்லாம் வற்றி போய் ஒண்ணுமே இல்லாம வெறும் கூடா தான் போய் சேர்ந்து இருக்கா...” என்று அதற்கான ரிப்போர்ட்டை தன் பெற்றவர்களின் மீது வீசி எறிந்தான் பற்றி எறிந்த நெஞ்சுடன்.

அதில் அசையா சிலையாக இருவரும் நின்றார்கள்.

“ச்சீ உங்களை எல்லாம் என் பெத்தவங்கன்னு நினைச்சி பார்க்க கூட கூசுது... அப்படி என்ன பணவெறி.. செத்து போகும் போது ஒரு பிடி மண்ணை கூட எடுத்துக்கிட்டு போக முடியாது... அது தெரிஞ்சும் எப்படி இப்படி மாபெரும் பாதகாத்தை செய்து இருக்கீங்க.. அதுவும் எனக்கு தெரியாமலே என் வாழ்க்கையில எவ்வளவு ஆட்டம் ஆடி இருக்கீங்க... இன்னும் எவ்வளவு ஆட்டம் போட ப்ளான் பண்ணி வச்சு இருக்கீங்க... பாவம் மைதிலியும் அவ அம்மாவும்...”

“அவளை எனக்கு கல்யாணம் பேசி முடித்துவிட்டு அவங்க அம்மா பேர்ல இருக்குற சொத்தை எல்லாம் அடைய அவங்க அம்மாவை தீர்த்துக் கட்ட ப்ளான் போட்டு வச்சு இருக்கீங்கல்ல ரெண்டு பேரும்..” என்று கேட்டவனின் கேள்வியில் அனைவரும் உறைந்துப் போனார்கள். காசு பணத்துக்காக இன்னும் எவ்வளவு கொலை தான் செய்வார்கள் என்று மாய்ந்து போனார்கள்.

“இது தானா இல்லை இன்னும் இருக்கா?” என்று அனைவரும் இந்த இருவரையும் தான் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அந்த பார்வையில் கொஞ்சம் கூட கூனி குறுக்காமல் அப்படியே விடைத்துக் கொண்டு இருந்தார்கள் செல்வனாயகனும் கவிதாவும்.

“பெத்த பிள்ளை நல்லா இருக்கணும்னு எவ்வளவோ தியாகம் பண்ற பெத்தவங்களை தான் பார்த்து இருக்கேன். ஆனா முதல் முதலா பெத்த பிள்ளையை வைத்து கல்யாண சந்தை நடத்துறதை இங்க தான் பார்க்கிறேன்... வெறும் கல்யாண சந்தை நடத்துனா பரவாயில்லை. ஆனா எவ்வளவு கொடுரம் எவ்வளவு வன்மம்... எவ்வளவு கொலை, பழிச்சொல்... நினைச்சி பார்க்கும் பொழுதே மூச்சு முட்டுது... ச்சீ நீங்கல்லாம் மனுசனுங்க தான்...? உங்க பிறப்பை வெளியே சொல்லாதீங்க... நாலு கால் விலங்குகள் கூட மூஞ்சியில துப்பிட்டு போகும்...” என்று வெறுப்பை உமிழ்ந்தான்.

“இனி என் வாழ்நாள்ளையே உங்களை நான் பார்க்கவே கூடாது... வெளியே போங்க...” என்றவன் சர்வா எழுந்து போய் கதவை திறந்து விட்டான்.

வெளியே காவல்துறை தயாராக வந்து இருக்கக் கண்டு இருவருக்கும் பேரச்சம் எழுந்தது.

தப்பிக்க வழியில்லாமல் பொறி வைத்து பிடித்த தங்களின் மகன் மீது கொடிய வன்மம் எழுந்தது...

“டேய்... எங்களை யாருன்னு நினைச்ச... நாங்க நினைச்சா உன்னையே உண்டு இல்லன்னு பண்ணிடுவோம்.. ஒழுங்கா எங்களை விட்டுடு... இல்லன்னா நீயும் சரி உன் பிள்ளைகளும் சரி இருக்கிற இடம் தெரியாத மாதிரி பண்ணிடுவோம்..” என்று கேவலமாக மிரட்டினார்கள்.

“ஏய்... ச்சீ வாயை மூடு... நீங்க எது செய்யவும் தயங்க மாட்டீங்கன்னு தான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஊருக்கு வந்த உடனே ஒரு டாக்குமென்ட்ல சைன் வேணும்னு வெத்து காகிதத்துல சைன் வாங்குனேன்... அதோட இன்னைக்கு காலையில ரெஜிஸ்டர் ஆபிஸ்ல உங்க சொத்து முழுதும் என் பெயருக்கு மாறிடுச்சு... அதை என் மாமனாரு தான் செய்தாரு. அதனால தான் அவரு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு...” என்று கிருஷ்ணனை சுட்டிக் காட்டினான் சர்வேஸ்வரன்.

அதோடு, “இந்த சொத்து இருக்கிறதுனால தானே இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தீங்க... அதுவே இல்லாம பண்ணிட்டா பல்லை பிடுங்கின பாம்பா அலைய வேண்டியது வரும் இல்லையா? அது தான்... மொத்தமா பியூச புடுங்கிட்டேன்” என்றான் வெடித்த எரிமலை குழம்பாய்...

சர்வா இப்படி ஒட்டு மொத்தமாக தங்களை மொட்டை அடிப்பான் என்று எதிர் பார்க்காதவர்கள் அதிக அழுத்த மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தார்கள்... அதில் கைகால் பறிக்கப்பட்டு எவ்வளவு வேதனை கொண்டு இருப்பார்களோ அதை விட அதிக வேதனை கொண்டார்கள் இருவரும்.

தன் தங்கை வாழ்க்கையை பரித்த போது வலிக்காத இதயம், தன் வயிற்றில் பிறந்த பிள்ளையை அனாதையாக தெருவில் விட்ட போது வலிக்காத இதயம், தன் மருமகளாய் வீட்டுக்கு வந்தவளை பிரசவலி தீரும் முன்பே குத்தி கொன்ற பொழுது வலிக்காத இதயம், தங்களின் மகனே பொது மனித தர்மத்தை கையிலெடுத்த போது வலிக்காத இதயம், சொத்து சுகத்தை பறிக்கும் பொழுது மட்டும் உச்ச வேதனையில் துடித்தது...! ஏதோ இருவரின் உயிரும் அந்த சொத்தில் இருப்பது போல அந்த துடி துடித்துப் போனார்கள்.

 

 

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top