Notifications
Clear all

அத்தியாயம் 12

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

ராயர் உள்ளே வந்த சமயம் இருவரும் மும்மரமாக பேசிக்கொண்டு இருப்பதை கண்டு திரை மறைவிலே நின்றான்.. ரவியின் பேச்சை கண்டு மனம் துணுக்குற்றது.. சரி ஆவது ஆகட்டும் என்று எண்ணியவன் அங்கேயே அசையாமல் இருந்தான்.. அதன் பின் இருவரும் தூங்குவதை கண்டு வெளியே வந்தவன் மருத்துவரை பார்க்க சென்றான்.

அவர் பயப்படும் படி எதுவும் இல்லை என்று சொல்லிவிட ஸ்வராவுக்கு போன் செய்து அவளை விசாரித்தவன் அவளின் அப்பாவிடம் செக்யுரிட்டியை டைட் பண்ணும்படி அறிவுறுத்திவிட்டு வெளி இருக்கையில் சரிந்தான்..

திகம்பரிக்கு போன் போட்டு அங்கு நிலவரம் எப்படி இருக்கு என்பதையும் கணித்துக்கொண்டான்.

கண்களை மூட முடியவில்லை.. அங்கிருந்த காவலர்கள் விழிப்புடன் இருக்க செழியனின் நினைவு வந்தது..

அவனுக்கு தகவலை சொல்லி தன் இடத்து சென்று சஞ்சயை கவனிக்குமாறு பணித்தவன் தலையை இருக்கையின் பின் புறம் சாய்த்து அப்படியே தொய்ந்து போனான்.

ரவிக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தாள் தன் நிலை.. கூடவே தில்லை மற்றும் மாமாவுக்கு என்ன பதில் சொல்வது. பெரிதாக அவர்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்கள் என்றாலும் மனது பதறி போகும் தானே.. எண்ணங்கள் எங்கெங்கோ சுழன்றுக்கொண்டு இருந்தது.. சமன் படவே இல்லை..

அப்படியே விழிகள் சிவக்க அமர்ந்து இருந்தான்.. ரவி கண்விழித்தான் மெல்ல..

நந்தனை வாஞ்சையுடன் பார்த்தான்.. நர்ஸ் வந்து மார்னிங் செக்கப் செய்துவிட்டு செல்ல நந்தா முழித்துக்கொண்டான்.. ராயரும் உள்ளே வந்தான்..

அவனது வட்டம் தெரியும் என்பதால் எப்படியும் ரவிக்கு இப்படி செய்தவனை கண்டு பிடித்துவிடுவான் என்பதாலும் நந்தன் அவனிடம் எதுவும் சொல்லவில்லை.. ஆனால் இப்படி காலங்காத்தால வந்து நிர்ப்பான் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை..

“என்னடா இப்படி வந்து நிக்கிற..” திகைப்புடனே கேட்டான் நந்தன்.

“ப்ச் நைட்டே வந்துட்டேன்.. அதை விடு கார்த்திக் கவி கல்யாணம் நெருங்குது எப்போ ஊருக்கு போறது..” என்றான் அசால்ட்டாய்..

“டேய் மாமா நான் முதுகுல கத்தி குத்து பட்டு இருக்கேன் இந்த சமயத்துல ஊருக்கு போகணும்னு சொல்றீயே என்னால எல்லாம் முடியாது டா..” என்று தட்டை திருப்பி போட்டான் ரவி...

அவனது போலியான அலறலை வலியுடன் உள்வாங்கி கொண்டவன், வெளியே “கத்தி குத்து தானே பட்ட எல்லாம் போகும் போது ரெஸ்ட் எடுத்துக்கலாம்.. வாடா..” என்ற ராயர் அவனை டிஷ்சார்ஜ் பண்ண ஏற்பாடு செய்ய கிளம்பிவிட்டான்..

நந்தன் புரிந்தும் தெளிவில்லாமல் ராயரை ஒரு பார்வை பார்க்க அவன் கண்ணை மூடி திறந்து ரவியை பார்த்தான்.. அதிலே அவனுக்கு எல்லாம் புரிய ராயருக்கு ஒத்துழைக்க சென்றான்..

ரவி கண்களை மூடி படுத்துக்கொண்டான்.. மூடிய கண்களில் ஸ்வரா வந்துவிட்டு செல்ல அவளை மீண்டும் ஒருமுறை காணவேண்டும் போல மனது துடித்தது...

நேற்று அவள் அளித்த முத்த சுவடு இன்னும் அவனுள் அழியாமல் இருக்க, அதே அழுத்தம் அதே அணைப்பு அதே வெப்பம் அதே ஈரம் இப்பவும் வேண்டும் போல இருக்க தன் மனதை அடக்க பாடு பட்டான். அது அவ்வளவு எளிது இல்லையே.. எண்ணியவனின் மனம் கசங்கி போனது..

“ஹப்பா எவ்வளவு அழுத்தமா முத்தம் குடுத்தா... நாம கூட அவக்கிட்ட ட்யுஷன் போகணும் போல... செம்ம ஸ்ட்ராங் டி...” முனகியவனின் இதழ்கள் வேறொரு இதழுடன் சிறை பட்டு போக திகைத்து கண் திறந்து பார்த்தான்..

அங்கே நேற்றையவிட இன்று அதிக அழுத்தத்துடனும் அவன் கேட்டது போல வெப்பம், ஈரம், என்று இறுக்கமான அணைப்புடன் முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தாள் ஸ்வரா..

அவளை கண்டவுடன் அவன் மனதில் இருந்த சோர்வு அனைத்தும் காணமல் போக அவனையும் அறியாமல் அவள் இடையில் கையிட்டு தன்னோடு நெருக்கியவன் அவளின் முத்தத்துக்கு இவன் பதில் கொடுக்க ஆரம்பித்தான்..

அதில் ஒரு கணம் திகைத்த ஸ்வரா பின் மன நிறைவுடன் அவனிடம் ஒன்றி போக ரவி குதுக்கலாமானான்..

எல்லாம் சிறிது நொடியே அதன் பின், தான் இருக்கும் நிலை புரிய வேகமாய் அவளை தன்னிடமிருந்து விளக்கினான்..

“ஏன் என்ன ஆச்சு...?” என்றாள் கேள்வியாய்...

“அடங்க மாட்டியாடி நீ...” என்றான் சற்றே தெளிந்த முகத்துடன்...

“நான் எதுக்கு அடங்கணும்... என்னால செய்ய முடியாததை  எல்லாம் என்னை செய்ய சொல்லாத.” என்றவளை முறைத்து பார்த்தான்.

“ப்ச் படுத்தாதடி” சலித்தான்...

“இப்போ என்னடா வேணும் உனக்கு...? ரொம்ப தான் பண்ணிக்கிட்டு இருக்க.. நானா வந்ததுனால உனக்கு ரொம்ப தான் இளக்காரம்...” என்றவளின் கண்கள் கலங்கி இருந்ததோ.. என்று எண்ணினான்..

“ஸ்வரா நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்...” தன்மையுடன் கேட்டான்.

“முதல்ல நான் சொல்றதை நீ கேளு... சீக்கிரமா குணமாகி வந்து என்னை கட்டிக்கோடா. உன்னை விட என்னை யாரும் இப்படி இந்த அளவுக்கு பார்த்துக்க மாட்டாங்க.. காதலிக்கவும் மாட்டாங்க.. எனக்கு உன் காதலும் சரி அன்பும் சரி முழுமையா வேணும்.. நேத்து நைட் எல்லாம் தூக்கமே வரல டா.. மைன்ட் பூரா நீ மட்டும் தான்.. உனக்கு என்ன ஆச்சுன்னு கூட தெரியாம அந்த நிமிடம் எல்லாம் நரக வேதனை தெரியுமா...? இப்போ இங்க வந்து உன்னை பாத்ததுக்கு பிறகு தான் என்னால மூச்சே விட முடியுது ரவி..”

“என்னால நீ இல்லாம வாழ முடியும்னு தோணலடா.. கிட்டத்தட்ட மூணு நாலு வருசமா உன் நினைப்புல தான் நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.. என் உணர்வுகளை புருஞ்சுக்கிட்டும் இப்படி விலகி போக சொல்றியே நியாயமாடா...?” சொல்லும் போதே அவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது...

இருந்தும் தன் அழுகையை வெளியே காண்பிக்காமல் “என் மனசு முழுசும் நீ மட்டும் தான் இருக்க.. நீ எதுக்கு என்னை விலகி போக சொல்றன்னு எனக்கு தெரியல.. ஆனா அந்த விஷயத்தை உன்னை மீறி தெருஞ்சுக்கிட்டா....” என்றபோதே அவன் பதறி போய் அவளை பார்த்து வேணாம் என்று தலை அசைத்தான்..

அவனது உணர்வை புரிந்துக்கொண்டவள், “நீ வேணான்னு சொன்னதுக்கு பிறகு நான் அதுக்குறிய காரணத்தை தேடல.. தேடவும் மாட்டேன்... ஆனா..” என்றவளை ஆழ்ந்து பார்த்தன்.. அவளோ அவனை விட ஆழ்ந்து பார்த்து,

“என்னைக்கா இருந்தாலும் நான் உன் நினைப்புல தான் இருப்பேன்... உன்னை மீறி என்னால என்னைக்கும் யோசிக்கவே முடியாது... இதை மட்டும் நினைவு வச்சுக்கோ...” என்றவளின் கண்கள் வெளிப்படையாகவே கலங்கி இருக்க சட்டென்று அவளை இழுத்து அணைத்துக்கொண்டவன்,

“நான் உனக்கு வேணாண்டி.. ப்ளீஸ்...” என்றான் அவ்வளவு கம்பீரமானவளின் கண்ணீரை கண்டு அவனுக்கு என்னவோ போல் ஆனது..

அவனது கைகளை எடுத்து விட்டுட்டு, “நீ என்ன சமாதனம் செய்தாலும் எனக்கு நீ தான் வேணும் ரவி..” என்றவள் அவனை இன்னும் நெருங்கி தன் உள்ளத்து காதலை கண்ணீருடன் அவனது இதழில் சொன்னவள், அவனை திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

அவள் செல்வதை கண்டு அவனது மனதில் இன்னும் பாரம் ஏறி அமர்ந்தது.. வெளியே சொல்ல முடியா வலி இதயம் முழுவதும் பரவி சுருக் சுருக்கென்று குத்தி எடுக்க அதை தன் கண்களை மூடி தாங்கிக்கொண்டான்.. அதில் எழுந்த உணர்வை அடக்க முடியாமல் அவனது முடிவு இன்னும் உறுதியானது..

கேண்டீன் சென்ற நந்தாவுக்கு கால் வர எடுத்தான்..

“ஆபிஸ் வரலையா...?” ஆழ்ந்த அமைதியில் ஒலித்தது ரியாவின் குரல்... எடுத்தவுடன் அவளது பேச்சு கடுப்பை கிளப்ப,

“ஏற்கனவே ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கேன் நீ வேற தனியா சாவடிக்காத...” என்று கத்திவிட்டு வைத்து விட நொறுங்கி போனாள் ரியா... எல்லாம் ஒரு நொடி தான் அதன் பின் எந்த ஹாஸ்பிட்டல் என்று கேட்க அவனுக்கே போன் செய்தாள்.

அவனும் வேண்டா வெறுப்புடன் சொல்ல சிறிது நேரத்திலே அங்கு வந்து சேர்ந்தாள்.

“உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க நந்தா.. ரொம்ப தான் பேசுறீங்க.. நீங்க பேசுற எல்லாத்தையும் நான் கேட்டுக்குவேன்னு நினைப்பா... நான் ஏன் உங்களை சாவடிக்க போறேன்.. என் ரெஜிக்னேசன் லெட்டரை கொடுக்க தான் உங்களை அழைத்தேன்.. மத்த படி வேற எதுக்கும் நோட் மை பாயின்ட் வேற எதுக்கும் உங்களை கூப்பிடல...” என்றவள் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் முகத்தில் தன் லெட்டரை தூக்கி போட்டாள்..

அதை எதிர் பார்க்காத நந்தன் சட்டென்று அவளது கன்னத்திலே அறைந்துவிட்டான்.. அவனது அடியை தாளாமல் சுருண்டு விழுந்தவள் அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.. அவளது கண்களில் தெரிந்த பரிதவிப்பில் கண்களை இறுக மூடி திறந்தவன்,

“வெளிய போடி...” என்றான் தன் செயலால் தன்னையே தண்டித்துக் கொள்பவனாய்..

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ரவியும் ராயரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள். ஆனால் அடி வாங்கிய பின்பும் ராயறால் சும்மா இருக்க முடியவில்லை..

“நந்தா பொம்பளை பிள்ளைய அடிக்காதடா...” என்றவன் ரியாவுக்கு கை கொடுத்து எழுப்பி விட,

“வேணாண்ணா எனக்காக அவருக்கிட்ட பேசாதீங்க... பிறகு உங்களையும் வெறுத்து விடுவார்.” என்று சொன்னவளின் வார்த்தையில் நொருங்கியவன், வேகமாய் அவளை பற்றி இழுத்து வந்து வாசலுக்கு வெளியே தள்ளினான்..

ஆனால் அதற்குள் ராயர் வந்து ரியாவை பற்றிக்கொண்டவன்,

“நந்தா ஏண்டா இப்படி மிருகமா மாறிட்ட... சத்தியமா நீ தானோன்னு எனக்கு சந்தேகமா இருக்குடா...” நிஜமாவே நந்தனை இப்படி ஒரு சூழலில் பொருத்தி வைத்து அவனால் பார்க்க முடியவில்லை...

திகம்பரிக்காக அவன் போட்ட சண்டையையும் அதன் பின் அவளுக்காக தன்னிடம் வந்து இறங்கி பேசியதையும் மட்டும் கண்டு இருந்தவனின் இந்த பரிமாணம் ராயாரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..

“நந்தா...” என்று மீண்டும் அழைத்தான்... அவனது வார்த்தையில் நந்தன் அவனை நிமிர்ந்து பார்த்தான்... கண்கள் முழுக்க சிவந்து போய் ஏதோ சுமக்க முடியாத சுமையை சுமந்துக்கொண்டு இருப்பவனை போல இருக்க ராயருக்கு என்னவோ போல் ஆனது..

“மச்சான்...” என்றான் சட்டென்று..

“மாப்பிள்ள அவளை இங்க இருந்து போக சொல்லுடா ப்ளீஸ்...” அவனது வார்த்தயில் இருந்த கெஞ்சலை கண்டு துடித்து போனார்கள் மூவரும்..

ராயர் வேகமாய் நந்தனிடம் விரைந்து வந்து தன் தோளோடு அணைத்தவன்,

“ரியா நீ அப்புறமா வர்றியா...? ப்ளீஸ் மச்சான் ரொம்ப டிஸ்டப்டா இருக்கான்...” என்று அவளிடம் சொல்ல அவள் அடிபட்ட பார்வையை ராயரின் மீது வீச, நந்தன் தான் துடித்து போனான்.. பின் ஒரளவு தன்னை சமாளித்துக்கொண்டு ராயரிடம்,

“அவளை கொண்டு போய் விட்டுட்டு வாடா..” என்றவன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.. அவனை புரிந்துக்கொள்ள முடியாமல் எல்லோரும் குழம்பி போய் நின்றார்கள். ரியா மறுக்க மறுக்க ராயர் அவளை கொண்டு போய் நந்தாவின் அலுவலகத்தில் விட்டுவிட்டு,

“கொஞ்சம் பொறுமையா இரு ரியா. எல்லாம் சரியா போகும். அதுவரை இந்த வேலையை விட்டுடாத..” என்று அவளுக்கு அறிவுரை சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு வந்து நந்தனை தேட அவனது முகத்தில் சொல்லோன்னாத வலி இருந்ததை கண்டு தவித்து போனான் ராயர்.

“என்னடா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க...? என்ன தான் ஆச்சு...?” என்று கேட்க,

“தலைவிதி மாப்பிள்ளை அதை விடு...” என்றவன் தன் முகத்தை அழுத்தி துடைத்து விட்டு இயல்புக்கு திரும்பிவிட்டது போல புன்னகைக்க ராயருக்கு புரிந்தும் புரியாதது போல இருந்தது.. அவனை வற்புறுத்தி கேக்கவும் மனம் வரவில்லை.. சீக்கிரம் எல்லாத்துக்கும் முடிவு வரணும்.. என்று எண்ணிக்கொண்டான் ராயர்..

ரவிக்கோ பெரும் வேதனையாய் போனது இருவரின் நிலையையும் கண்டு.. நந்தனுடைய கோவத்தையும் அதற்கு ரியாவின் நிலையையும் அதை உணர்ந்த பின்பு நந்தாவின் ஆற்றாமையை கண்டு இவன் தான் மனதுக்குள் புலம்பிக்கொண்டு இருந்தான்.

‘ம்ஹும் எல்லா காதலர்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனையை வந்துக்கொண்டே தான் இருக்கும் போல’ என்று எண்ணினான் ரவி...

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top