“இதுதான் உன்னுடைய முதல் தோல்வி இதுக்கு மேலயும் நீ என்கிட்ட வாலாட்டுன அப்படின்னா உனக்கு முழுக்க முழுக்க தோல்வி மட்டும்தான் காண்பிப்பேன்...” என்பது போல கார்த்திக் சர்வாவிடம் எச்சரிக்கை செய்தான்.
ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் சகியை தினமும் வீட்டுக்கு கூட்டிட்டு போக ஆரம்பித்தான் சர்வா. அதில் சகிக்கு சற்று பிடித்தமில்லை. அதோடு கார்த்திக் வேறு அவளை எச்சரித்தான். ஆனால் சர்வாவிடம் சகியின் மறுப்புகள் எல்லாம் அனல் பட்ட துளியாய் காணாமல் போய் விடுகையில் அவளால் மட்டும் என்ன செய்ய முடியும் பாவம்.
அதை அறிந்த கார்த்திக்கு கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது.. தன் ஒட்டுமொத்த கோபத்தையும் பிடித்து வைத்தவன் அன்று போல யாரும் இல்லாத நேரம் சர்வாவை சந்திக்க சென்றான்.
முன்பிருந்த கோவம் அவனது வார்த்தையில் இல்லை...
“நீங்க எவ்வளவு பெரிய இடம்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்க லெவலுக்கு சகியால வரவே முடியாது. அப்படி இருந்தும் ஏன் அவளை விட்டு விலக மாட்டேன்னு அடம் பண்றீங்க... இதனால சகியோட உணர்வுகள் எந்த அளவுக்கு பாதிக்க படும்னு கொஞ்சம் கூட யோசிச்சு பார்க்கவே மாட்டீங்களா? அவ ரொம்ப சாப்ட்... மெல்லிய உணர்வுகளால ஆனவ...” அவனையும் மீறி கார்த்தியின் குரல் நலிந்து போயிருக்க அதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டான் சர்வா.
அவனது புருவங்கள் நெறித்து ஒன்றோடு ஒன்று அவனை இன்னும் கூர்மையாக பார்த்தான் சர்வா. கார்த்தியின் கண்கள் லேசாக கலங்கி இருந்தது போல தோன்றியது சர்வாவுக்கு ஆனாலும் எதையும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டே இருந்தான்.
“ப்ளீஸ் சார் அவளை இனிமேட்டுக்காவது நிம்மதியா வாழ விடுங்க... போதும் நீங்க இதுவரை அவளை வச்சு விளையாடின விளையாட்டு... அவளுக்குன்னு ஒரு மனசு இருக்கு அந்த மனசுக்குள்ள சில விசயங்கள் இருக்கு... அதுல பல பகிர முடியாத நினைவுகளும் இருக்கு. அதை கெடுத்து அவளை முழுசா உடைச்சு போட்டுடாதீங்க.. அவளை அவளா இருக்க விடுங்க...” என்று நளிந்து போய் சொன்னவன்,
தன் குரலை இறுக்கமாக மாத்திக் கொண்டு, “இதுக்கு மேலயும் நீங்க அவக்கிட்ட வாலாட்டனும்னு நெனச்சா இந்த கார்த்தியோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்...” என்று தன் நெகிழ்வை கட்டுப்படுத்திக் கொண்டு திமிருடன் சொன்னவனை சர்வா எளனமாக பார்த்தான்.
“அப்படியா?” என்று நக்கல் பண்ணியவன், மேலும் “எங்க இன்னொரு முகம்... அதையும் கொஞ்சம் காட்டு நான் பாத்துக்குறேன்... நாதா முகம் இது மாதிரி மோசமா இருக்குமா? இல்ல அதாவது கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்குமான்னு” என்று சர்வா கிண்டல் பண்ணினான்.
அதை கேட்டு கோவம் கட்டுக் கடங்காமல் வர,
“யோவ் உனக்கு இப்ப இருக்க கார்த்திக் தானே தெரியும் நாலு வருடத்துக்கு முன்னாடி இருந்த கார்த்தி உனக்கு தெரியாது. அவனோட முகமே வேற...” என்று அவன் தோரணையாக சொல்ல, அந்த தோரணையை சர்வா உள்ளுக்குள் ரசித்தாலும் ஒரு பெருமூச்சுடன்,
“நீ என்ன பண்ணாலும் சரி. சகி எனக்கு மட்டும்தான்” என்று அவன் அந்த வார்த்தையிலே பிடிவாதமாக இருக்க,
“அப்போ பழைய கார்த்தியை நீ பார்க்க வேண்டியது இருக்கும். பழைய கார்த்திக் இப்படி கிடையாதுய்யா ஜெயிலுக்கு போனவன். ஒரு நேரம் சாப்பாட்டுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்ந்தவன். அவன் ரொம்ப ரொம்ப கரடு முரடானவன். அவனை எதிர் நோக்க உன் பணத்தால கூட முடியாதுய்யா...” என்று தீர்க்கமாக சொன்னவன் மேலும்,
“அதனால தான் சொல்றேன் முன்னெச்சரிக்கையா சகியை விட்டு விலகி போயிடு. இல்ல அப்படின்னா நீயும் சரி உன் குடும்பமும் சரி சிக்கி சின்னாபின்னமா போயிடுவீங்க” என்று எச்சரிகை செய்தவன் வெளியே போக, அவனை சொடக்கிட்டு சர்வா அழைத்தான். என்ன என்பது போல அவன் திரும்பி பார்க்க,
“இந்த மாதிரி பல கார்த்திக்க நான் விலை கொடுத்து நிமிசத்துல வாங்கிடுவேன். சோ பி கேர்ஃபுல். என் தொழிலுக்காக நான் எவ்வளவோ அடிமட்ட வேலையாட்களை வைத்து வேலை வாங்கி இருக்கேன். சில பண முதலைகள் இருக்கிற இடம் தெரியாம அடிச்சு இருக்கேன். இந்த மலை கிட்ட மோதி நீ சாய்ந்திராத கார்த்திக். உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை போய் வாழு. அதை விட்டுட்டு சகிக்கும் எனக்கும் நடுவுல வரணும்னு நினைகாத... நீ இந்த நிலத்துல வாழ்ந்த சுவடே இல்லாம அழிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன். சர்வா சகல வல்லமை பொருந்திய சர்வேஸ்வரன். அதை என்னைக்கும் மறந்துடாதடா. சர்வேஸ்வரனுக்குள்ள அடங்கினது தான் கார்த்திக்கேயன் புரியுதா…?" என்று சர்வா சொன்னான் மிக அழுத்தமாய்.
அதை கேட்ட கார்த்திக் பல்லைக் கடித்தான்.
“நீயும் ஒண்ணை மறந்துடாதய்யா... அந்த சர்வேஸ்வரனுக்கே வேதத்தை ஓதியது கார்த்திகேயன் தான் என்பதையும் நீயும் மறந்துடாத” என்றான் கார்த்திக்.
“பலே பலே கில்லாடி தான் கார்த்திக் நீ. ஆனா சர்வேஷ்வரன் இல்லை என்றால் கார்த்திக்கேயனும் இல்லை என்பதை நீயும் புரிஞ்சுக்கோ. சர்வாவுக்கும் சகிக்கும் இடையில் யார் வந்தாலும் சம்ஹாரம் தான் என்றதையும் புரிந்துகொள்” என்றவன் அவனை ஒரு விரல் அசைத்து அவுட் என்று அவமானப் படுத்தினான்.
அந்த அவமானம் கார்த்திகை மிக மோசமாக தாக்க கதவை அடித்து உடைப்பது போல திறந்து வெளியே சென்று விட்டான். அவன் சென்ற பின்பு சர்வாவுக்கு முகம் கொள்ளா புன்னகை எழுந்தது. அவனது கண் முன் சில காட்சிகள் விரிய இதழோறும் ஒரு குறுநகையும் எழுந்தது.
சகியை எக்காரணம் கொண்டும் யாரிடமும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற உறுதி அவனிடம் மிக வலுவாக இருந்தது. அதையெல்லாம் எண்ணிப் பார்த்தவன் மிக சொகுசாக அதுவும் சகியின் மடியில் தலை வைத்து கார்த்திக் படுத்து இருப்பதை பார்த்த சர்வாவுக்கு என்னவோ போல் ஆனது. முகம் இருண்டு தான் போனது.
அந்த உணர்வு வந்து தாக்க தன் பிள்ளைகள் அழ அழ அங்கிருந்து கூட்டிக்கொண்டு சென்றுவிட்டான்.
அந்த காட்சியை பார்த்த அனைவருக்கும் மன வேதனையாகிப் போனது.
“இதுக்கு எதுக்கு இங்க விடணும்... பிள்ளைங்க அழுவுது... இன்னும் கொஞ்ச நேரம் விட்டுட்டு போனா தான் என்னவாம்” என்று கார்த்தியே பொறுமினான். அந்த அளவுக்கு பிள்ளைகளுடன் ஒன்றி போய் விட்டான் அவன்.
வலுக்காட்டாயமகா கூட்டிக்கொண்டு போன சர்வாவுக்கு மனம் எதுக்கோ ஏங்க ஆரம்பித்தது...! தன் போனில் இருந்த மனைவியின் புகைப் படத்தை எடுத்து பார்த்தான். கண்கள் எல்லாம் கலங்கி போனது. எதுக்காக இப்படி நடந்துக்குறேன்னு எனக்கே புரியல... என்று வேதனைக் கொண்டவன் பிள்ளைகளோடு பீச்சுக்கு சென்றான்.
அங்கு பிள்ளைகளுடன் ஆட்டம் போட அவனால் முடியவில்லை. என்னவோ ஒரு தேடல்... அந்த தேடல் எங்கு முடியும் என்று அறிந்தவனுக்கு தன் தேடலை கண்டே கோவமானான்.
செல்லா இடத்தில் வைக்கும் எதிர்பார்ப்புக் கூட வீண் என்று அறிந்தவனுக்கு தன்னை தானே அமைதி படுத்த முடியவில்லை..! கோவம் கோவமாய் வந்தது. தன் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் தோல்வியில் நிலைக்க ஆத்திரம் வந்தது.
கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பிள்ளைகளை கரையில் விட்டுட்டு அவன் பாட்டுக்கு நான்கடி எடுத்து வைத்து விட்டான். அதன் பிறகே பிள்ளைகளுடன் வந்து இருக்கிறேன் என்று உணர்வு வர வேகமாய் ஓடி வந்து அமர்ந்துக் கொண்டான் பிள்ளைகளிடம்.
அந்த நேரம் கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்க அது அவனை மிகவும் சோதனை செய்ய கடுப்புடன் திரும்பினான். அவன் பார்த்த இடத்தில் சகி கார்த்தியோடு சேர்ந்து சிரித்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் கவலையற்ற சிரிப்பு அவனை வதைக்க அவளின் முகத்தில் இருக்கும் சிரிப்பை இப்பொழுதே பறிக்க மனம் ஆவேசம் கொண்டது.
அதற்கு தோதாக அவனின் பிள்ளைகள் சகியை அங்கு பார்க்கவும் எழுந்து ஓடி விட்டன.. காலை வந்து கட்டிக் கொண்ட பிள்ளைகளை அங்கு எதிர்பார்க்கதவள் வாரி எடுத்துக் கொண்டாள் இருவரையும்.
ஆது குட்டி கார்த்தியிடம் தாவ, இனியும் மிருவிடம் தாவ இருவரையும் தனியாக விட்டுவிட்டு கிருஷ்ணனை கூட்டிக்கொண்டு சாப்பிட வாங்கி வருகிறேன் என்று சொல்லி கிளம்பிவிட்டாள்.
கிருஷ்ணனுக்கு கால் வலிக்க ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார்.
“சரி நான் மட்டும் போய் வாங்கிட்டு வரேன். நீங்க இங்கயே இருங்க” என்று சொல்லிவிட்டு கடையை நோக்கி அவள் போக, சரியான சந்தர்ப்பம் பார்த்து அவளை அலேக்காக தள்ளிக்கொண்டு ஒரு படகின் அடியில் நிறுத்தினான் சர்வா...





