அப்படியே நாட்கள் சில சென்றது...! கார்த்திக் நன்றாக காரை ஓட்டி பழகினான். காலையில் சகியை ஏற்றிக்கொண்டு சர்வாவின் வீட்டுக்கு செல்வான் அங்கே அவன் தன் பிள்ளைகளுடன் கிளம்பி இருப்பான். அவர்களையும் ஏற்றிக்கொண்டு அலுவலகம் கொண்டு வந்து சேர்ப்பான்.
பல நேரம் சகி வேலை செய்வதை விட பிள்ளைகளை பார்த்துக் கொள்வது தான் அதிகமாக இருக்கும். பிள்ளைகளும் அவளிடம் நன்றாக ஒட்டிக் கொண்டது. ஒவ்வொரு ஞாயிறும் சகி சர்வாவின் வீட்டுக்கு அவளாகவே செல்ல ஆரம்பித்தாள். அதில் உள்நோக்கம் இருக்கிறதா என்று அவளுக்கு மட்டுமே தெரியும்.
அவள் போகும் நேரம் கவிதாவும் செல்வநாயகமும் நெருப்பில் நிற்பது போல இருப்பார்கள். அப்படி ஒரு ஞாயிறு அன்று காலையில் கிளம்பிக்கொண்டு இருந்தாள் சகி. அவளை கொண்டு போய் விட கார்த்திக்கும் கிளம்பிக் கொண்டு இருந்தான்.
இன்னும் இருவரும் சரிவர பேசிக்கொள்ளவில்லை. அதை அறிந்த கிருஷ்ணனும் மிருவும் இருவரையும் சமாதனம் செய்து வைக்க பார்த்தார்கள். ஆனால் இருவரும் அவர்களது பிடியிலே நிற்க அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
சகி தன் சம்பளத்தை சேர்த்து வைத்தாள். கார்த்தியும் தன் முதல் மாத சம்பளத்தை அவளிடம் கொடுக்க அவள் வாங்கவே இல்லை.
“முடியுமா முடியாதா?” என்று அவன் கர்ஜிக்க,
“என்னக்கு ஒண்ணும் உன் பணம் தேவையில்லை. என்னை மீறி போனல்ல இனி நீயாச்சு உன் பணமாச்சு...” என்றவள் விலகி நடக்க,
அருகே இருந்த சாப்பாட்டு பாத்திரத்தை அப்படியே தரையில் வீசி எறிந்தான் ஆத்திரத்தில். அதில் அவனது முழு கோவமும் வெளிப்பட்டு இருந்தது.
“என்னை மிருகமா மாத்தாத சகி. பிறகு ரொம்ப வேதனை பட்டு போவ...” என்றவன் அவளது கையில் தன் பணத்தை வைத்து விட்டு விருட்டென்று வெளியே போய் விட்டான். ஆனால் வீசி சென்ற உணவு பாத்திரம் தரை முழுவதும் சோற்றை வாரி இறைத்துவிட்டு இன்னும் சத்தமிட்டுக் கொண்டே பம்பரம் போல சுழண்டுக் கொண்டு இருந்தது.
அதுவும் வீறல் விட்டு போய் தரையில் மோதி மிக மோசமாக நசுங்கி போய் இருந்தது.
அவனது முழு கோவத்தையும் கண்டவளுக்கு அச்சத்தில் பேச்சே எழவில்லை. மூச்சே ஒரு கணம் நின்று போனது போல ஆனது..!
“அக்கா...!” என்று மிரு வந்து அவளை தொட்ட பிறகே உணர்வுக்கு வந்தவள் சட்டென்று மடிந்து அமர்ந்து விட்டாள்.
இவ்வளவு நாள் இருந்த கார்த்திக்கை அவளது உள்ளம் எண்ணி பார்த்தது. புலி பூனை குட்டி போல தன்னிடம் சுருண்டு இருந்ததே... அதன் வீரியத்தை எனக்காக சுருக்கி கொண்டு இருந்ததா இவ்வளவு நாளும். ஆனால் அடிப்படை ஆத்திரமும் கோவமும் இன்னும் அப்படியே தான் இருக்கிறதா? அவனால் மாற முடியாதா? எங்களை போல இயல்பு வாழ்க்கை வாழ முடியாதா?” என்று கலங்கிப் போனாள்.
அவன் கொடுத்த காசை கையில் பிடித்திருந்தவளுக்கு அதை பார்க்க பார்க்க அழுகையாக வந்தது. என்னை சிரமப் படுத்த கூடாது என்று தெரியாத வேலையை கற்றுக் கொண்டு அதுவும் யாரை வில்லனாக பார்க்கிறானோ அவனிடமே கைக் கட்டி வேலை பார்த்து சம்பாதித்த பணத்தைகொஞ்சம் கூட எடுத்துக் கொள்ளாமல் முழுமையாக கொண்டு வந்து கொடுத்து விட்டு வெறும் கையுடன் வெளியே சென்ற கார்த்தியை எண்ணி உள்ளம் மருகினாள்.
“ஏன் க்கா அவரு மேலே இவ்வளவு கோவம்? அவர் நல்லவர் தானே... பாவம் கா அவரு... நீ அவருக்கிட்ட சரியா பேசுறது இல்லன்னு ரொம்ப வேதனை படுறாரு” என்று அவள் கலங்க அவளை கூர்ந்து பார்த்தாள் சகி.
பின் சட்டென்று தன் தந்தையை பார்க்க அவர் கண்களை மூடி திறந்தார். நெஞ்சில் சொல்லொண்ணாத பாரம் விலகியது போல இருந்தது. சட்டென்று மத்தாப்பூ போல முகம் மலர ஆரம்பித்தது.
“சம்மதமா ப்பா?” என்று சகி பார்வையாலே கெஞ்ச அவர் சம்மதம் என்பது போல தலையை அசைத்தார். அதில் அவளின் மனம் இன்னும் பூரிப்படைய வேகமாய் தன்னோடு சேர்த்து தன் தங்கையை கட்டிக் கொண்டாள்.
‘ஆனால் உடனடியாக கார்த்தியிடம் பேச முடியாதே...! அவனுக்கு அவன் தான் வில்லன்...! அதுவும் மிருவை அவன் அப்படி கூட பார்த்து இருக்க மாட்டான். சின்ன பிள்ளை சின்ன பிள்ளை என்று கொண்டாடியவன் இப்பொழுது மனைவியாக பார் என்றால் அவ்வளவு தான் சொல்லும் என்னை உயிரோடு கட்டி தொங்க விட்டாலும் விடுவான்’ என்று எண்ணியவளுக்கு மனமெங்கும் மகிழ்ச்சியின் சாரல்...!
அந்த மகிழ்ச்சியில் அவள் உறைந்து போய் இருக்க மிரு பேசிய எதுவும் அவளது காதில் விழவில்லை. கிருஷ்ணன் அவளை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு போக, சர்வாவிடம் விடுமுறை சொன்ன சகி அடுப்படியில் ஒரு சின்ன விருந்தே தயார் செய்ய தொடங்கினாள்.
எவ்வளவு பெரிய மகிழ்ச்சியான விசயம்...! கார்த்திக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகிறது...! அவன் தேடிய சொந்தம் தன் தங்கையின் மூலமே கிடைக்க போகிறது...! என்று ஒரு கொண்டாட்டமாய் போனது சகிக்கு.
அந்த கொண்டாட்டத்தில் மிதந்தவளுக்கு வீட்டுக்குள் ஆட்கள் வந்தது கூட தெரியவில்லை. உற்சாகம் சற்று அதிகமாகவே இருந்தது அவளிடம்..
“கவிதை அரேங்கேறும் நேரம்...
மலர் கணைகள் பரிமாறும் தேகம்...
இனி நாளும் கல்யாண ராகம்...
இந்த நினைவு சங்கீதமாகும்....” என்று அவளுக்கு மிக பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டே சமைத்துக் கொண்டு இருந்தாள்... இதழ்களில் அப்படி ஒரு புன்னகை... பொங்கி பிரவாகம் எடுக்கும் காவிரி நீராய் அவளின் உள்ளமும் உவகையில் பொங்கிக் கொண்டு இருந்தது...!
“நீரில் நின்றாடும் போதும் சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்...
அது நீரில் நீ வந்த மாயம் இந்த நிலைமை எப்போது மாறும்...” என்றபடி தன் தந்தைக்கு சூப் கொடுக்க வெளியே வர, சமையல் அறையில் இரு கரங்களையும் கட்டியபடி நிலையில் சாய்ந்து அவளின் வழியை மறைத்த படி நின்ற சர்வைவை கண்டு மூச்சடைத்துப் போனது.
தன் வீட்டில் அதுவும் அடுப்படி வரை வருவான் என்று எண்ணிக் கூட பார்க்க வில்லை அவள். திகைத்துப் போய் பாடல் பாடிய வாய் கப்பென்று மூடிக் கொண்டது. அவளின் அதிர்வை இரசித்துக் கொண்டே,
“என் இளமை மழை மேகமனால் உன் இதயம் குளிர்வாடை காணும்...
கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்...” என்று சர்வா முடித்து வைக்க விதிர் விதிர்துப் போனாள் சகி. பாடலின் பொருள் சொல்லவே வேண்டாம். சட்டென்று அவளின் முகம் அந்திவானமாய் சிவந்துப் போனது...!
என்ன இது...! என்று அவளின் பெண் மனம் பலமாய் அடித்துக் கொள்ள அவனை ஏறிட முடியாமல் பெரும் அவஸ்த்தையாகிப் போனது... தன்னை துளைத்து பார்க்கும் அவனது பார்வையை ஏறிட முடியாமல் அவள் தடுமாற, அவளின் இந்த பாவனை சர்வாவை வெகுவாக கவர்ந்தது.
இதுவரை தன்னிடம் காட்ட மறுக்கும் வெட்க பாவனை யல்லவா? எப்பொழுதும் முறைத்துக் கொண்டு திரிபவளின் நாணம் சுமந்த முகம் அவனை வெகுவாக ஈர்த்தது... அருகில் இருந்தவளை ஒற்றை கரம் கொண்டு அவளை இழுத்து அணைக்க பார்த்தான். அதில் சட்டென்று சுயம் உணர்ந்து வேகமாய் அடுப்படியின் உள்ளே பின்னால் அடி எடுத்து வைத்து அவனை விட்டு நகர, சர்வா விடாமல் முன்னேற பெண்ணவளின் முகத்தில் கலவரம் மூண்டது.
கூடத்தில் தான் அனைவரும் இருக்கிறார்கள்... இப்ப போய் இப்படி...? என்று அவள் திணறிப்போய்,
“என்ன இது?” என்று முணக,
அவளின் முணகளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவளை நெருங்கி நின்றவன் ஒற்றை கரத்தால் அவளை வளைத்து இழுத்து அப்பட்டமாய் சிவந்து போய் இருந்த அவளின் கன்னத்தை மேலிருந்து கீழாக கோடு போட்டு வருடி விட அந்த சின்ன தொடுகையில் அவளின் மொத்த தேகமும் ஒருங்கே சிலிர்த்து எழுந்தது...!
தள்ளிவிட அவளின் கரங்கள் பரபரத்தது. ஆனால் அதை செய்ய விடாமல் அவள் கொண்ட உணர்வுகள் அவளை ஆட்டிப் படைக்க உடல் இன்னும் நெகிழ்ந்தது சர்வாவின் பிடியில்.
அன்று வீட்டில் என்பதால் நிதானமாக தலைக்கு குளித்து துண்டை கூட அவிழ்க்காமல் சமையல் அறையில் மத்திய சமையலை சமைத்துக் கொண்டு இருந்தாள். மெல்லிய சிகப்பு வண்ண புடவை. அவளின் அழகை இன்னும் அழகாக காட்டியது. கைகளில் கண்ணாடி வளையல், கண்களில் கரு மை... அளவான வட்ட பொட்டு, காதில் எப்பொழுதும் ஆடும் ஜிமிக்கி, சின்னஞ்சிறிய மூக்குத்தி... போதாதற்கு அங்கும் இங்கும் முத்து முத்தாய் வியர்வை பூத்து பெண்ணவள் நிற்க இதை விடவா அவனுக்கு புது போதை வேண்டும்...
இந்த வசீகரம் போதுமே மன்னவனை மயக்க... அவளின் தோற்றத்தில் முழுமையாக மோகனம் கொண்டவன் தன் இதழ்களால் அவளின் வியர்வையை துடைக்க அடிவயிற்றில் பெரும் பிரளையமே உண்டானது சகிக்கு...
தட்பமாய் இருந்த சர்வாவின் விரல்கள் பெண்ணவளின் மேனியில் ஊர்வலம் போக அப்படியே உறைந்துப் போனாள். அவனை தடுக்க நினைத்த கரங்கள் செயல்படாமல் அப்படியே இருக்க உள்ளம் நொந்துப் போனாள்.





