“கார்த்திக்...” என்று சகி அவனை அடக்க பார்க்க,
“உன்னால தான்டி எனக்கு இவ்வளவு பிரச்சனையும். அப்படியே என்னை அங்கயே விட்டுட்டு போய் இருக்கலாம்... உன்னை யாரு ரொம்ப பெருசா எனக்கு இரக்கம் காட்ட சொன்னா... இப்போ எனக்கு தான்டி குத்துது... உனக்கென்ன நீ ஜாலியா இருக்க... ஆனா ஒவ்வொரு நிமிசமும் என் பழைய வாழ்க்கையை நினைச்சி நினைச்சி என்னை நானே வெறுத்துக் கிட்டு இருக்கேன். அப்படி விட்டு இருந்தா இந்நேரம் குடிச்சே செத்து இருப்பேன். அப்படி இல்லையா பல கொலைகளை பண்ணி ஜெயிலுக்கு போயி இருப்பேன்.. அதை விட்டுட்டு மனுசனா மாத்துறேன், மண்ணாங்கட்டியா மாத்துறேன்னு மாத்திட்டு இப்போ கண்டவனும் என்னை பலிகாரனா தான் பார்க்கிறானுங்க... ஒருத்தனும் நான் திருந்தினதை நம்பவே மாட்டேனுங்குறாங்க... அதையே குத்தி குத்தி காட்டி என்னை வாழவிடாம பண்ணிக்கிட்டு இருக்காணுங்க...” என்று அவன் எரிந்து விழ, அதில் மொத்தமும் அவன் கொண்ட வேதனை மட்டும் தெரிய சகி மௌனமானாள்.
அவளது மௌனம் கூட அவனை வெறி ஏற்ற,
“எதுக்காகடி... என்னை உன் கூட கூட்டிட்டு வந்த...? இப்படி என்னை ஒவ்வொரு நிமிடமும் தவிக்க வைக்க தான் இல்ல...” என்று ஆத்திரமாக கேட்டான். அவனது சத்தத்தில் பிள்ளைகள் இருவரும் இன்னும் மிரண்டு போக,
“கார்த்திக் எதா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கலாம்... இங்க வேணாம்டா...” என்று அவள் கெஞ்ச,
அவளது கெஞ்சலை சுத்தமாக காதில் வாங்கிக் கொள்ளாதவன்,
“இதோ இவரு என்னை நம்பி இவ்வளவு பெரிய காரை குடுத்தாரு... ஆனா அதையும் முதல் நாளே ஓட்ட தெரியாம ஓட்டி உடைச்சிட்டேன். நானெல்லாம் எதுக்குமே லாயக்கு இல்லடி... நான் வாழ்றதே வேஸ்ட்... உன்னை சம்பாரிக்க வச்சி உன் உழைப்புல இவ்வளவு பெரிய உடம்பை வளர்த்துக்கிட்டு இருக்கேன்... மண்ணுக்கு பாரமா இருக்கேன். போடி... நான் வாழ்றதே வேஸ்ட்... என்னால எதையும் செய்ய முடியாது... செய்ய வராது. சரியான பீடை நானு” என்று அவன் தன்னை தானே கீழிறக்கி பேச கேட்டுக் கொண்டு இருந்த சகிக்கு முள் நிறைந்த கம்பியை கொண்டு அடித்தது போல இருந்தது.
“டேய் கார்த்திக் ஏன்டா இப்படி எல்லாம் பேசுற... உனக்கு ஏன்டா புத்தி இப்படி போகுது... நீ எங்களுக்கு வரம் டா... எங்களுக்கு காவல் தெய்வமா தானேடா இவ்வளவு நாளும் இருந்த... இப்போ உனக்கு என்ன ஆகிப்போச்சு... முதல் நாளே எல்லாம் கத்துக்க முடியாதுடா... கொஞ்சம் நேரம் எடுக்கும். பொறுமையா இரு கார்த்திக்” என்று சகி அவனை தேற்ற பார்க்க,
“ப்ச்... உங்க ட்ராமாவை பார்க்க எனக்கு கொஞ்சம் கூட சகிக்கல... வண்டியை எடுடா முதல்ல... அதை விட்டுட்டு கதை கதையா அளந்துக்கிட்டு இருக்கான்...” என்று சர்வா காதை குடைய, இருவரும் அவனை கொலை வெறியுடன் நோக்கினர்.
“யோவ் நீயெல்லாம் மனுசானாய்யா?” கார்த்திக் அவனை வெறித்து நோக்கினான்.
“நான் மனுசனான்னு எனக்கே சந்தேகம் தான். அதை இன்னொரு நாள் தீர்த்துக்கலாம்... இப்போ வண்டியை எடு” என்றவன் நகர்ந்து பின் பக்கம் வந்து அமர்ந்துக் கொண்டான்.
சகியின் தோளில் இறுக்கமாக கரத்தை போட்டு அழுந்திக் கொண்டான். அதில் சகி திகைத்துப் போய் அவனை பார்க்க சர்வா வெளியில் பார்வையை வைத்திருந்தான். அதனால் அவளால் அவனது முகத்தை பார்க்க முடியவில்லை.
ஒரு நாளும் சர்வாவிடம் இவ்வளவு இருக்க இருக்காது... வன்மையில் கூட ஒரு வித மென்மையை கொண்டு இருப்பான் அவன். அப்படி இருப்பவன் இன்று இவ்வளவு இருக்கமாய் தன்னை பிடித்து கொண்டு இருப்பதை திகைத்துப் போனாள்.
பிள்ளைகளை கூட அவன் வாங்கி சமாதனம் செய்யவில்லை. வெளியில் திரும்பிய படியே கார்த்திக்கு எப்படி எப்படி வண்டியை ஓட்ட வேண்டும் என்று தகவல்கள் சொல்லியபடியே வந்தான்.
“இல்ல சார்... எனக்கு பயமா இருக்கு... நீங்களே ஓட்டுங்களேன்” என்று அவன் பதட்டமாக கூற,
“இப்படி பல சூழ்நிலை வரும் கார்த்திக். அப்போ உன்னை நம்பி இருக்கிறவங்களை இப்படி தான் நடு தெருவில் விட்டுட்டு போவியா?” என்றான் நிதானமாக.
“சார்...”
“லுக் கார்த்திக்... வண்டி அடி பட்டு போறது எல்லாம் ரொம்ப சகஜம்... ஆனா நம்ம செயல்ல ஒரு உயிர் கூட போக கூடாது. அதை மட்டும் கவனத்துல வச்சிக்கிட்டு வண்டியை ஓட்டு... ஏன்னா போற உயிர் நம்மக்கு பெரிதில்லாம இருக்கலாம். ஆனா அவங்களோட குடும்பத்துக்கு அவங்க தான் ஆணிவேரா இருக்கலாம்.” என்று சொல்ல கார்த்திக்கு தன் பழைய செயல்களை நினைத்து அவமானமாய் இருந்தது.
“விழறது தவறு இல்ல... இன்னும் எழுந்திறிக்கமா அதே இடத்துல இருக்குறது தான் தவறு... முடிஞ்ச வரை தவறு நடக்காம பார்த்துக்க...” என்றான் தன் முகத்தை கொஞ்சம் கூட திருப்பாமல்.
சர்வாவிடம் இந்த மனிதாபிமானத்தை சுத்தமாக சகியும் கார்த்தியும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து திகைத்து போய் அவனை பார்த்தார்கள். அவன் கண்களை மூடி தூங்க ஆரம்பித்துவிட்டான்.
அவன் தூங்குகிறான் என்றால் கார்த்தியின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று தானே அர்த்தம்... அதை உணர்ந்தவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திகைத்துப் போய் பார்த்தார்கள்.
“சார்...” என்று கார்த்திக் அவனை உசுப்ப,
“வீடு வந்தவுடன் என்னை எழுப்பி விடு..” என்றான் வேறு எதுவும் பேசாமல். அதில் இன்னும் திகைத்துப் போனான் கார்த்திக். சகிக்கு மனம் சற்றே லேசாக மாற, கண்களின் ஓரம் ஏனோ காரணமே இன்றி கண்ணீர் சுரந்தது.
சர்வா கொடுத்த வேலையில் இப்பொழுது தான் கார்த்திக்கு வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை வந்தது... கார் விபத்தில் சிக்கவும் கண்டபடிக்கு பேசுவான் என்று எதிர் பார்த்தாள். கூடவே கார்த்திக் கொண்ட நம்பிக்கையை உடைத்து எரிந்து விடுவானோ என்று ஒரு பதைபதைப்பு இருந்தது...
ஆனால் சர்வா எதையும் சொல்லாமல் கார்த்தியின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு என்பது போல கண்களை மூடிக்கொண்டு பயணம் செய்ததை எண்ணி அவன் மீது அளவிட முடியாத அளவுக்கு காதல் பிறந்தது...!
உள்ளம் கரைந்தது பாகு போல... சட்டென்று அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள். முதன்முறையாக தன் மனதினை தன் செயல் மூலம் வெளிக்காட்டினாள். அவளை தன் தோளில் இன்னும் ஆழமாக புதைத்துக் கொண்டான் சர்வா.
அந்த காட்சியை கண்ட கார்த்திக்கு மனதில் ஒரு பாரம் வந்து ஒட்டியது. தன் பார்வையை சாலையில் பதித்தான். பிறகு முழுக்க முழுக்க அங்கே எந்த சத்தமும் இல்லை. பிள்ளைகள் கூட தூங்கி விட்டன...
அவர்கள் தூங்குவதை பார்த்த கார்த்திக்,
“முதல்ல சாரி இறக்கி விட்டுட்டு அப்படியே நம்ம வண்டியல வந்துடலாம் சகி” என்றான் கார்த்திக்.
“ஓகே கார்த்திக்” என்றாள்.
கவனமாக காரை ஓட்டி சர்வாவின் வீட்டில் வந்து நிறுத்தினான். சகி சர்வாவை உசுப்பிவிட, அதில் மெல்ல கண் விழித்தான். சும்மா படுத்து இருந்தவன் ஒரு கட்டத்தில் அப்படியே தூங்கி போய் இருந்தான். சகியின் உசுப்பலில் கண் விழித்தான். கண்கள் செக்க சிவேலன் சிவந்து போய் இருந்தது.
“வீடு வந்திடுச்சு சார்...” என்றான் கார்த்திக்.
“ம்ம்ம்...” என்றவன் ஆதுவை கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான். அவனை பின் தொடர்ந்து சகி இனி குட்டியை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அந்த காட்சியை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் செல்வநாயகமும் கவிதாவும்.
“தெரு நாய் எல்லாம் வீட்டுக்குள் வந்து உரிமையா அங்கும் இங்கும் போயிக்கிட்டு இருக்கு... இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.” என்று கவிதா சொல்ல சகியின் பின்னால் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்த கார்த்தியின் காதிலும் விழ கண்களாலே கவிதாவை எரித்தான் அவன்.
ஆனால் அவர் எதற்கும் அசராமல் சக்கியையும் கார்த்தியையும் முறைத்து பார்த்தார். சர்வா ஆதுவரை தூங்க வைக்க அவனோடு பின் வந்தவள் அவனின் அருகில் இனியை தூங்க வைத்து விட்டு நகர, அவளின் கரத்தை பிடித்து இழுத்தான். அதில் திகைத்துப் போய் அவனை பார்க்க,
அவளது பார்வையை சிறிதும் கண்டு கொள்ளாமல், தன்னோடு சேர்த்து அனைத்தவனுக்கு அவளின் ஸ்பரிசம் வேண்டும் போல இருக்க வேகமாய் அவளை விலக்கி தன் சட்டையை அவிழ்த்தவன்,
தன் வெற்று உடம்பில் அவளை இறுக்கி அணைத்தான். அவளின் ஸ்பரிசம் இப்பொழுது முழுமையாக கிடைத்தது போல உணர்ந்தான். அவளின் இடையில் சற்றே இறுக்கமாக அழுத்தி பிடித்தவன் தன் உணர்வுகளை வன்மையாக அவளது இதழ்களில் காட்ட உயிர் துடித்துப் போனாள். அந்த நேரம் “சார்...” என்று கார்த்தியின் குரல் கேட்க,
சகி பதட்டத்துடன் விலக பார்த்தாள். அவள் விலக ஆரம்பிக்கவும் கோவம் வந்தவன் அவளை இன்னும் இறுக்கி நெருக்கி பிடித்து தன் வேதனையை அவளுக்கு கடத்தி விட்டே விலகினான்.
அவன் விலகவும் தன்னை சரி செய்துக் கொண்டவளுக்கு சற்றே நேரம் கொடுத்தான் சர்வா. அதன் பிறகு
“உள்ள வா...” என்று கார்த்தியை அழைத்தான். கார்த்திக் கார் சாவியை நீட்டினான்.
“தேவையில்ல இனி காரை நீயே வச்சுக்கோ. அதோட என் பிஏவுக்கு எப்பொழுதும் கார் ஏற்பாடு உண்டு. சகி மேலே இருந்த கோவத்துல ந்த பெசிலிட்டிய நான் இவளுக்கு குடுக்கல. சோ அதை இப்போ இருந்து ப்ரோவைட் பண்றேன்... காலையில சகியை கூட்டிக்கோ அப்படியே என்னையும் பிக்கப் பண்ணிக்கோ” என்றான்.
“எனக்கு எந்த சலுகையும் தேவையில்ல” என்றாள் ஆத்திரத்துடன். ஏனெனில் சலுகையை முன்னால் கொடுத்து பின்னால் ஏதாவது கேட்கும் வகை தானே இந்த ஆண்கள் என்று கோவம் வந்தது.
“இந்த சலுகையை கொடுத்து தான் உன்கிட்ட எனக்கு வேண்டியதை வாங்கிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. எனக்கு வேணும்னா எப்போ வேணாலும் உன்னை என் படுக்கைக்கு தூக்கிட்டு வர வலு இருக்கு” என்றான் எகத்தாளமாக.
“மிஸ்டர்...” என்று அவள் கத்த, கார்த்திக்கு பத்திக் கொண்டு வந்தது.
“யோவ்...” என்று அவன் அலற,
“சொன்னேன். ஆனா ரெண்டு பெரும் கத்தி எனக்கு இப்போ மூட வரச்சிடாதீங்க” என்றான் நக்கலாக. அவனை ஒன்றும் செய்ய முடியாமல் கார்த்திக் பல்லை கடிக்க,
“சீக்கிரம் வந்துடனும்” என்று கார்த்தியை முறைத்து பார்த்தான் சர்வா. அதில் கோவம் வர அவனை நோக்கி போனான். போனவனை இழுத்து நிறுத்திய சகி அவனை தர தரவென்று இழுத்துக் கொண்டு போனாள்.
இருவரும் வருவதை பார்த்து கவிதா இன்னும் கேவலமாக பேச அந்த பேச்சை காதில் கேட்ட கார்த்திக் அருகே இருந்த பூ சாடியை எடுத்து கவிதாவின் காலருகே போட்டு உடைத்தவன்,
“இன்னொரு முறை என் சகியை ஏதாவது சொன்ன உன்னை அவ்வளவு தான்...” என்று மிரட்டிவிட்டு போக செல்வனாயகத்துக்கு புருவம் யோசனையில் நெரித்தது.
“எவ்வளவு திமிர் இருந்தா என் வீட்டுக்குள்ளயே புகுந்து என் போண்டாட்டியையே மிரட்டிட்டு போவான்... இத இப்படியே விட்டா சரி வராதே...” என்று கணக்கு போட்டவர் தன் கணக்கை செயல் படுத்த ஆரம்பித்தார்.





