“இந்தாங்க சாவி” என்று சர்வாவின் மேசையில் வைத்தான் கார்த்திக்.
“ஓட்டி பழகிட்டியா?” என்றான் அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டே.
“ம்ம்..” என்றான் சுரத்தே இல்லாமல். அதை கண்டவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. ‘அவளை பார்க்காட்டி உனக்கு தூக்கமே வராதாடா...’ என்று அவனது சட்டையை பிடித்து சண்டை போட வெறி வந்தது. அதை அடக்கியபடி,
“அப்போ ஈவினிங் போகலாம் தானே...” கேட்டான்.
“ம்... போகலாம் போகலாம்...” என்றவனுக்கு நினைவு முழுவதும் சகி தான் நிறைந்து இருந்தாள்.
அந்த நேரம் உள்ளிருந்து கலகலவென்று சகி சிரிக்கும் சத்தம் கேட்க தொங்கி போன முகம் சட்டென்று ஒளி பெற்றது போல பிரகாசித்தது...
வேகமாய் அந்த அறை நோக்கி போக,
சர்வா அவனை தடுத்தான்.!
“உனக்கு உள்ள போக பெர்மிஷன் இல்ல...” என்றான் திமிராய். அவனது திமிரை ஒரு கணம் உள்வாங்கியவன்,
“எனக்கு யாரோட அனுமதியும் தேவையில்லை... உள்ள இருக்கிறது என்னோட சகி” என்று அவனது கரத்தை தட்டி விட்டு உள்ளே போக, பத்திக் கொண்டு வந்தது சர்வாவுக்கு.
உள்ளே பிள்ளைகளுடன் அமர்ந்து சகி விளையாடிக் கொண்டு இருந்தாள். அவர்களை பார்த்த படியே இவன் உள்ளே வர அவனது அரவத்தில் பிள்ளைகள் இருவரும் சகியோடு ஒன்றிக்கொள்ள,
“நான் ஒண்ணும் பூச்சாண்டி இல்லை... என்னை பார்த்து எதுக்காக இப்படி பயப்படுறீங்க.. ?” என்று அவன் முறைத்தான்.
“பின்ன மூஞ்சி முழுக்க புதர்காட்டை வளர்த்து வச்சி இருந்தா பிள்ளைங்க பயப்படாம என்ன பண்ணும்...” என்றபடி சர்வா உள்ளே வந்தான்.
சர்வாவை திரும்பி பார்த்தவன் பிள்ளைகள் இருவரையும் முறைத்து பார்த்தான். அதில் பிள்ளைகள் இருவரும் இன்னும் மிரள...
“கார்த்திக்...” என்று அதட்டினாள் சகி.
“ஆமா நான் என்ன செஞ்சாலும் உனக்கு குத்தமா தான் படும்... முதல்ல நீ இப்படி ஆயா வேலை செய்யிறத விடு” என்றான் எரிச்சலாக.
“வார்த்தையை அளந்து பேசுடா... இல்ல உன்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்” எகிறினான் சர்வா.
“அப்படி தான்ய்யா பேசுவேன். நீ தானே சொன்ன ஆயா வேலை பார்க்குறதுக்கு தான் அவளை வச்சி இருக்குறதா? அதையே இப்ப நான் சொல்லவும் உனக்கு பொத்துக்கிட்டு வருதாக்கும்...” என்று கடுப்படித்தவன்,
“உன்னோட டியூட்டி டைம் முடிஞ்சு... நீ கிளம்பு” என்றான் சகியை பார்த்து.
“அதை சொல்ல நீ யாருடா... இங்க நான் எம்டியா? இல்ல நீ எம்டியா? கொஞ்சம் விட்டா தலைக்கு மேல ஏர்ற... திமிராடா?” என்று அவனை முறைத்தான் சர்வா.
“ஆமாய்யா அப்படியே தான்னு வச்சுக்க... அதுக்கு இப்போ என்ன? என்ன பண்ணுவ? உன்னால என்ன பண்ண முடியும்...?” என்று எகிறினான்.
“ஓ...! என் கிட்டயே சவாலா?” என்ற சர்வா கார்த்தியை ஏளனமாக பார்த்து விட்டு தன் பிள்ளைகளிடம் வந்தவன்,
“பேபிஸ் இன்னைக்கு சகியும் நம்ம கூட தான் வர போறா... சகியை கூட்டிட்டு காருக்கு போங்க...” என்று சொல்ல சகி கார்த்தியை முறைத்து பார்த்தாள்.
“வெளியில போற ஓணானை வேட்டியில விட்டுட்டு இருக்க கார்த்திக்” என்று கடுப்படித்தவள் வெளியே கிளம்ப, அதற்கு சர்வாவின் பிள்ளைகள் சிறிது கூட விடவில்லை. அப்பனை போலவே இதுகளும் உடும்பு பிடியில் நின்றன...
“வாங்க ஆண்டி ப்ளீஸ்... எங்களை வீட்டுல விட்டதுக்கு பிறகு நீங்க போங்களேன்..” என்று ஆது அவளது காலை கட்டிக் கொள்ள, பிள்ளைகளை வருத்தப்பட வைக்க மனமில்லாமல் வேறு வழியின்றி காரில் ஏறி அமர்ந்தாள் இரு பிள்ளைகளையும் மடியில் வைத்துக் கொண்டு.
கார்த்திக் கோவத்துடன் காரை எடுக்க, பின்னால் ஏறி அமர்ந்த சர்வா,
“ட்ரைவருக்கு எவ்வளவு கோவம் இருந்தாலும் அதை காரில் காட்ட கூடாது. அவரை நம்பி தான் மொத்த பயணியும் இருக்கிறார்கள். அந்த அவர்களின் பாதுகாப்பு முழுக்க முழுக்க தான் மட்டும் தான் பொறுப்பு என்கிற எண்ணம் இருக்கணும். இது தான் ட்ரைவர் ஆவதற்கான முதல் தகுதி...” என்றான் சர்வா.
‘அவன் சொல்வதும் சரி தானே...!’ என்று தன் கோவத்தை அடக்கிக் கொண்டு சாலையில் கவனம் வைத்தான். அவனது கரத்தில் விலை உயர்ந்த கார் வழுக்கிக் கொண்டு போக அவனையும் அறியாமல் ஒரு திமிர் வந்து ஒட்டிக் கொண்டது.
அதை திமிர் என்று சொல்ல கூடாது. அதித நம்பிக்கை என்று சொன்னால் மிக சரியாக பொருந்தி போகும்...!
அதோடு சகிக்கு தான் வண்டி ஓட்டும் அழகை காட்ட வேண்டும் எண்ணியவன் அவளுக்கு காட்ட முடியாதே என்று வருந்தியவன், இப்பொழுது அவளும் அவர்களோடு வர தன் திறமையை அவளுக்கு முன் புறம் இருந்த கண்ணாடியின் வழியாக கண்களால் காட்டி எப்படி என்று கேட்டான் அவளிடம்.
அவளுக்கு முன்னாடி காரை திறன் பட ஓட்டுவதில் அவ்வளவு பெருமிதம் கார்த்திக்கு. அது அவனது முகத்திலே நன்கு தெரிந்தது.
“எப்படி ஓட்டுறேன்...!” என்று கேட்டான் பார்வையாலே... அதை ஓரகண்ணால் பார்த்துக் கொண்டு இருந்த சர்வாவுக்கு நெருப்பில் இருப்பது போல இருக்க பல்லைக் கடித்தவன்,
சட்டென்று சகியின் அருகில் நெருங்கி அமர்ந்தான். அமர்ந்ததோடு அவளின் தோளில் கையை போட்டு தன்னோடு நெருக்கிக் கொண்டான் அவளை. அதை கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டு இருந்த கார்த்திக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வர,
கார் வேகமாய் பறந்தது... அதில் பிள்ளைகள் சற்றே மிரண்டு அலற,
“கார்த்திக் கவனம்... பிள்ளைகள் இருக்காங்க” என்றாள் சகி சர்வாவின் கரத்தை எடுத்து விட்டபடி.
“அப்பன்னா ஒழுங்கா இருக்க சொல்லு” என்றான்.
“நீ வெறும் ட்ரைவர் மட்டும் தான்னு அப்பப்போ மறந்து போயிடுற தம்பி...” என்று நக்கல் பண்ணினான் சர்வா.
“யோவ் உனக்கு அவ்வளவு தான் மரியாதை சொல்லிட்டேன். முதல்ல சகி மேல இருந்து கையை எடு... அவக்கிட்ட இருந்து நகர்ந்து உட்காரு... இல்ல அப்படியே கொண்டு போய் மரத்துல மோதிடுவேன்” என்று மிரட்டினான்.
“முடிஞ்சா செஞ்சுக்கோடா... ரவுடி பயலே...” என்ற சர்வா இன்னும் சொகுசாக அமர்ந்துக் கொண்டு சகியின் மடியில் ஏறி உட்காராத குறையாக அமர்ந்து இருந்தான். இருவரின் அக்கபோரில் சகி தான் அல்லாடினாள்.
“ஐயோ ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருங்க... நீங்க ரெண்டு பேரும் பண்ற அலப்பறையில பிள்ளைங்க பயந்து போறாங்க...” என்றவள் பிள்ளைகளை இறுக அணைத்துக் கொண்டாள் தன்னோடு சேர்த்து.
அதன் பிறகு இரண்டு பேரும் எதுவும் பேசவில்லை. ஆனால் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே தான் வந்தார்கள். கவ்னாம் முழுவதும் கார்த்திக் சாலையில் வைத்து நிதானமாக வண்டியை ஓட்ட எதிரில் ஒரு இரு சக்கர வண்டி நிதானமில்லாமல் வர
“சார்...” என்று அலறிவிட்டான் கார்த்திக். சர்வாவும் அதை கவனித்துக் கொண்டு தான் வந்தான்.
“ஏய் பயப்படாதடா... பிள்ளைங்க மிரண்டுருவாங்க...” என்றவன் பின்னிருந்து வேகமாய் முன்பக்கம் வந்தவன் இமைக்கும் நொடியில் எதிராளிக்கு வர இருக்கும் விபத்தை தன் காருக்கு வாங்கிக்கொண்டான்.
இதை கொஞ்சமும் எதிர் பார்க்காத கார்த்திக்,
“சார் காரு...” என்று அதிர,
“காரை விட அந்த ஆளுடைய உயிர் முக்கியம் கார்த்திக்...” என்றவன் தெரிந்தே தன் காரை எதிரில் இருந்த மரத்தில் மோதினான். மோதிய உடனே உயிரை காக்கும் பலூன் காற்றை ஊதி இவருடைய உயிரையும் அதிக அளவு சேதாரமும் இல்லாமல் காப்பாற்றியது. அந்த பெருத்த சத்தத்தில் பிள்ளைகள் இருவரும் கத்தி கதற, இருவரையும் தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டவள்,
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல கண்ணுங்களா... சும்மா இந்த மாமா இப்போ தானே புதுசா வண்டி ஓட்ட கத்துக்கிட்டு இருக்காரு.. அதனால இப்படி ஒரு சூழ்நிலை வந்தா எப்படி சமாளிக்கிறதுன்னு உங்க அப்பா சொல்லி குடுத்துக் கிட்டு இருக்காரு... வேற ஒண்ணுமில்லை... நீங்க இப்படி என் கிட்ட பதுங்கிக் கோங்க... ஒண்ணும் பயமில்ல” என்று அவர்களை வெளியே பார்க்க விடாமல் இருவரையும் தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
பிள்ளைகளின் கதறலை கேட்டு மனம் நொந்த கார்த்திக்,
“சாரி சார்...” என்றான் கலங்கிய கண்களுடன். இவ்வளவு நேரம் இந்த கான்பிடன் இப்போ இல்லாமல் தளர்ந்து போனவனை கூர்ந்து நோக்கினான் சர்வா.
“எனக்கு எதுவுமே வராது சார்... நான் எதுக்குமே லாயக்கு இல்ல... வெட்டி ஜம்பம் தான்... நானெல்லாம் இருக்க வேண்டிய இடமே வேறு... ஏதோ சகியால எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சி இருக்கு... அவளால தான் இதோ இந்த காரும்...” என்று அவன் தன் வேதனையை விழுங்கிக்கொண்டு பேச,
“கார்த்திக்...” என்று சகி அவனை அடக்க பார்க்க,
“உன்னால தான்டி எனக்கு இவ்வளவு பிரச்சனையும். அப்படியே என்னை அங்கயே விட்டுட்டு போய் இருக்கலாம்... உன்னை யாரு ரொம்ப பெருசா எனக்கு இரக்கம் காட்ட சொன்னா... இப்போ எனக்கு தான்டி குத்துது... உனக்கென்ன நீ ஜாலியா இருக்க... ஆனா ஒவ்வொரு நிமிசமும் என் பழைய வாழ்க்கையை நினைச்சி நினைச்சி என்னை நானே வெறுத்துக் கிட்டு இருக்கேன். அப்படி விட்டு இருந்தா இந்நேரம் குடிச்சே செத்து இருப்பேன். அப்படி இல்லையா பல கொலைகளை பண்ணி ஜெயிலுக்கு போயி இருப்பேன்.. அதை விட்டுட்டு மனுசனா மாத்துறேன், மண்ணாங்கட்டியா மாத்துறேன்னு மாத்திட்டு இப்போ கண்டவனும் என்னை பலிகாரனா தான் பார்க்கிறானுங்க... ஒருத்தனும் நான் திருந்தினதை நம்பவே மாட்டேனுங்குறாங்க... அதையே குத்தி குத்தி காட்டி என்னை வாழவிடாம பண்ணிக்கிட்டு இருக்காணுங்க...” என்று அவன் எரிந்து விழ, அதில் மொத்தமும் அவன் கொண்ட வேதனை மட்டும் தெரிய சகி மௌனமானாள்.





