“நான் அவ்வளவு சொல்லியும் நீ சர்வாக்கிட்ட வேலைக்கு போறன்னா அப்புறம் எனக்கு என்ன உரிமை இருக்கு உன் கிட்ட...” என்று கடுகாய் பொரிந்தவளை ஆத்திரத்துடன் நிமிர்ந்து பார்த்தான் கார்த்திக். அவனது வெட்டும் பார்வையில் உள்ளுக்குள் ஜெர்க் ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் திடமாக நின்று அவனை முறைத்து பார்த்தாள் சகி.
“அக்கா அவரை சாப்பிட விடு... அப்புறமா ரெண்டு பெரும் சண்டை போடுங்க. இல்ல ஏதாவது பண்ணுங்க... நாளைக்கு எனக்கு இண்டர்வியூ இருக்கு. மைண்ட ப்ரீயா வைக்கணும்” என்றாள் பெரிய மனுசியாக.
“அதானே ரெண்டு பெரும் எந்த சத்தமும் இல்லாம சாப்பிட்டு எழும்புங்க... அதை விட்டுட்டு சும்மா சும்மா ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லிக்கிட்டு இருக்காம இடத்தை காலி பண்ணிட்டு போய் தூங்குங்க...” என்றார் கிருஷ்ணன்.
“அப்பா அவன் என்ன பண்ணான்னு தெரிஞ்சும் உங்களால எப்படி இப்படி அமைதியா இருக்க முடியுது...? ஆனா என்னால முடியல ப்பா..” என்றாள் கண்கள் கலங்க.
“கார்த்திக் சொன்ன போது நீ அந்த வேலையை விட்டியா சகி. இல்ல நானும் தான் உன்னை கார்த்தி பேச்சை கேளுன்னு சொன்னனா இல்லையே...” என்று அழுத்தமாக கேள்வியை கேட்டார். அதில் அவள் தலையை குனிய,
“அதே தான் உனக்கும். அவனுக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ அவன் அதை பண்ணுவான். அதை நீ மறுத்து பேச கூடாது. இரண்டு பேர் பண்றதும் தவறுன்னு உங்களுக்கே எப்போ புரியுதோ அப்போ திருந்தி வாங்க... அது வரை இந்த சின்ன சின்ன பஞ்சாயத்துக்கு எல்லாம் எங்க தலையை உருட்டாதீங்க..” என்று கிருஷ்ணன் ஒரே போடாக போட்டு விட கப் சிப் என்று ஆகி போனார்கள் அனைவைரும்...
அடுத்த நாள் காலையில் சகி வேலைக்கு கிளம்ப, கார்த்திக் கொண்டு வந்து விடுறேன் என்று சொன்னான். ஆனால் அவளோ,
“என்னை கொண்டு வந்து விட்டுட்டு எப்போ உன் முதலாளிக்கு கார் ஓட்ட போவ...” என்று கடுப்படித்தவள் அவனை புறக்கணித்து விட்டு பேருந்தில் ஏறி போய்விட்டாள். அவளின் இந்த செயலில் பல்லைக் கடித்தவன், பின்னாடி திரும்பி
“என்னைக்கு அவ என் கிட்ட அடி வாங்க போறான்னு தெரியல ப்பா... ஆனா நல்லா வாங்குவான்னு மட்டும் தெரியுது...” என்றான் கிருஷ்ணனிடம்.
“நீயாச்சு அவளாச்சு... எதாவது பண்ணிக் கோங்க... சொன்னா ரெண்டு பேரும் சொல் பேச்சு கேட்கிற ஆட்களா நீங்க..” என்று கடித்து குதறாத குறையாக அவர் உள்ளே போய் விட பெருமூச்சு விட்டான் கார்த்திக்.
முதல் நாள் வேலை... கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது அவனுக்கு. எங்கு வேலை கேட்டாலும் கிடைக்காத அவனுக்கு அவனை நம்பி ஒரு வேலையை கொடுத்த சர்வாவின் மீது ஒரு மரியாதை வந்தது. ஆனால் அதற்காக எல்லாம் சகியை அவனிடம் விட்டுக் கொடுக்க மாட்டான். அதோடு அவளுக்காக சர்வாவை எதிர்த்து நிற்கவும் தயங்க மாட்டான்.
அது வேறு இது வேறு... என்று எண்ணிக் கொண்டான். நேற்றைக்கே வேலைக்கு செல்வதாக சொன்னவுடனே புது சட்டை கடைக்கு போய் எடுத்து வந்திருந்தாள் சகி... மேசை மீது எடுத்து வைத்திருந்தாள் அந்த துணியை. ‘கோவம்னாலும் இதுல எல்லாம் குறை இருக்காது...’ என்று அவளை மனதில் கொஞ்சிக் கொண்டு அணிந்து சர்வாவின் வீட்டுக்கு சென்றான்.
கேட்டிலே அவனை மறிக்கப் பட்டான். அதில் கடுப்பானவன் செக்யூரிட்டியை பார்த்து முறைத்தான்.
“டேய் நான் யாருன்னு தெரியுமா...? என்னையவே மறிக்கிரியா? அவ்வளவு தைரியமா உனக்கு?” என்று அவனது சட்டையை பிடிக்க,
மேலே இருந்து அதை பார்த்துக் கொண்டு இருந்த சர்வாவின் இதழ்களில் புன்னகை ஒன்று உதிர்ந்தது.
வீட்டுக்குள்ள வந்த உடனே ஆரம்பிச்சுட்டான்... என்று சிரித்தவன்,
“செக்யூரிட்டி...” என்று அழைக்க வேகமாய் இருவரும் மேலே பார்த்தார்கள். சர்வா அலுவலகத்துக்கு கிளம்பி தோரணையாக நின்றிருந்தான்.
“சார் இவன்...” என்று ஆரம்பித்தான் காவலாளி..
“லீவிட்... ஓபன் தி கேட்...” என்றான் அதிகாரமாய்.
“ஓகே சார்...” என்றவன் கதவை விரிய திறந்து விட்டு அவனை போக சொல்ல முதன் முதலாக சற்றே கர்வமாக தான் உணர்ந்தான் கார்த்திக்.
எதையோ சாதித்தது போல ஒரு உணர்வு. எங்கு போனாலும் ரவுடி பயல், ஜெயிலுக்கு போனவன், ஊருக்கு அடங்காதவன் என்கிற அடை மொழியோடு தூற்றும் பேச்சுகளை கேட்டு கேட்டு பழகி இருந்தவனுக்கு இந்த வரவேற்பு அவனது இறுகிய மனதை இளக்கியது...!
தோரணையாக வந்தவன் அங்கு நின்றிருந்த கார் வரிசையை பார்த்து சற்று மிரண்டு தான் போனான். வண்ண வண்ணமாக வரிசையாக நின்றிருந்த காரை பார்த்து வாயை பிளந்தான்.
“என்ன ட்ரைவர் சார் கிளம்பலாமா?” என்றான் தன் கைக் கடிகாரத்தை சரி செய்தபடி...
“ம்ம்ம் போகலாம் சார்... ஆனா இதுல எந்த காருன்னு தெரியலையே...” என்றான் கார்த்திக்.
சர்வா குறிப்பிட்டு ஒரு காரை காட்ட வேகமாய் அந்த காரை நெருங்கி கதவை திறந்து பார்த்தான். திறக்க முடியவில்லை.
“சாவி என் கையில இருக்கு” என்றான் சர்வா.
“ப்ச்...” அசடு வழிந்தவன் அவனிடம் கார் சாவிக்காக கையை நீட்டினான். அவனது கையில் அதை குடுக்காமல் மேலே தூக்கி போட்டு பிடித்தவன் மிக அழுத்தமாக
“உனக்கு கார் ஓட்ட தெரியுமா?” என்று கேட்டான். அவன் கேட்டதுக்கு பிறகு தான் தனக்கு கார் ஓட்டவே தெரியாது என்பதை உணர்ந்துக் கொண்டான்.
சட்டென்று அவனது முகம் கருகிவிட, அவனை ஒதுக்கி தள்ளிவிட்டு காரில் எறியவ சர்வா,
“கெட் இன்...” என்றான் அவனை பார்த்து... கார்த்திக் புரியாமல் அவனை பார்த்தான்.
“உள்ள ஏறு...” என்றான் பொறுமையாய்.
“மன்னிச்சுக் கோங்க சார் எனக்கு கார் ஓட்ட தெரியாது... நான் வேணா கத்துக்கிட்டு வந்திடட்டுமா? ஒரு ரெண்டு நாள் மூணு நாள் குடுத்தா கூட போதும்” என்றான் தவிப்புடன். எங்கே இந்த வேலையும் போயிடுச்சுன்னா சகிக்கு தான் பாரமாக போய் விடுவமோ என்று கலக்கம் கொண்டான்.
அந்த கலக்கம் அவனது முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. ஒன்றும் சொல்லாமல் “உன்னை ஏறுன்னு சொன்னேன்” என்று பல்லைக் கடித்தான் சர்வா.
“சாரி சார்..” என்றபடி தயக்கத்துடன் அந்த பக்கம் வந்தவன் முன்னாடியா பின்னாடியா என்று அவன் தடுமாற, முன் பக்கம் கதவை திறந்து விட்டான் சர்வா...
அதில் சர்வாவை திகைத்து தான் பார்த்தான். சர்வாவா எனக்கு கதவை திறந்து விட்டது என்று அதிர்ந்து தான் போனான் கார்த்திக்.
அவனது திகைப்பையும் அதிர்வையும் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் காரை எடுத்தவன், மிக நேர்த்தியாக காரை ஓட்டினான் சர்வா. அவனது கரத்தில் கார் மிக நளினமாக ஓடியதை கண்டு பெருமூச்சு விட்டான். சற்று பொறாமையும் வந்தது சர்வாவை பார்த்து.
கண்ணெடுக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு வந்தான் கார்த்திக். உள்ளுக்குள் சர்வாவின் மீது இருந்த கோவம் எல்லாம் ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்தான் இப்போதைக்கு.
தனக்கு ஒவ்வொரு நிமிடமும் புது உணர்வை தருபவனை ஆழ்ந்து பார்த்தான். அவனது ஒவ்வொரு செயலிலும் இருக்கும் நேர்த்தி கார்த்தியை வெகுவாக ஈர்த்தது.
“இதுக்கு தான் நாலு எழுத்து படிச்சி இருக்கணும் போல... அப்படி படிச்சி இருந்தா இந்த நேர்த்தியும் லுக்கும் வரும் போல...” என்று எண்ணிக் கொண்டான்.
“இப்போ அவன் நம்மள வேலைக்கு வைச்சுக்குவனா இல்ல எல்லோருக்கும் முன்னாடி வச்சி அசிங்கப் படுத்துவானா?” என்று உள்ளுக்குள் தனியாக ஒரு கலக்கம் வந்து சேர்ந்தது. ஏனெனில் சர்வாவை அவனால் ஒரு இன்ஞ் கூட நம்ப முடியவில்லை.
அலுவலகம் வந்த சகிக்கு மனசே இல்லை. தன் கண் முன்னாடியே சர்வா கார்த்தியை எவ்வளவு புண் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு புண் படுத்தி இருக்கிறான். இப்பொழுது அலுவலகம் கூட்டிட்டு வந்து அவமானப்படுத்தினால் தாங்கவே முடியாதே...! மனதில் முழுக்க முழுக்க இருவரது நினைவுகள் மட்டுமே வளம் வந்துக் கொண்டு இருந்தது...
என்ன செய்தாலும் நினைவுகள் மொத்தமும் அந்த இருவருமே ஆக்கிரமிப்பு செய்து இருக்க அவளால் எதிலும் ஈடுபடவே முடியவில்லை. ஒரு மாதிரி மனதை போட்டு பிசைந்துக் கொண்டே இருந்தது.
அறையை சுத்தம் செய்யும் பணியாள் வந்து செய்துக் கொண்டு இருக்க, அவனின் மேசையில் இருக்க வேண்டிய பொருட்களை சரியாக எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள். அன்றைக்கு செய்ய வேண்டிய பணிகளுக்கான கோப்புகளை எடுத்து வைத்தவள் மனம் உந்த வேகமாய் குறுங்கண் வழியாக கீழே பார்த்தாள்.
சரியாக அந்த நேரம் சர்வாவின் கருப்பு நிற வண்டி வந்து நின்றது. ஓட்டுனர் இருக்கையில் இருந்து சர்வா கீழிறங்க சகியின் முகம் யோசனையில் சுருங்கியது. கார்த்திக் எங்கே...! அப்போ அவன் வரலையா? வேணும்னே அவமானப்படுத்த தான் அவனை வேலைக்கு எடுத்தாரா..? என்று நொடியில் பல யோசனைகளை செய்தது அவளது மனம்...
ஆனால் அந்த யோசனைகள் அனைத்தும் வீண் என்பது போல அந்த பக்கம் கதவை திறந்துக் கொண்டு கார்த்திக் இறங்கினான்...
அதன் பிறகு தான் கார்த்திக்கு கார் ஓட்ட தெரியாது என்கிற உண்மையே சகி உணர்ந்தாள். அதில் முகம் பிரகாசித்தவள் இந்த ஒரு சாக்கை வைத்தே கார்த்தியை இங்க இருந்து போக வைத்து விடலாம்..! என் கார்த்திக் யாருக்கு முன்னிலையிலும் அவமானப் பட மாட்டான்... என்று நிம்மதி கொண்டாள்.
ஆனால் அவளது நிம்மதிக்கு எப்பொழுதுமே ஆயுள் குறைவு என்று அவளுக்கு தெரியாதே...!
சர்வாவின் கைப்பை லேப்டாப்.. என்று சகல பொருட்களையும் எடுத்துக்கொண்டு அவனுக்கு பின்னாடி கார்த்தியும் அறைக்குள் நுழைந்தான்.
சகி தன்னுடைய இடத்தில் அமர்ந்து வேலை செய்துக்கொண்டு இருக்க இருவரின் கண்களிலும் கோவம் இருந்தது. உதட்டை சுழித்து சகி எழுந்தவள் சர்வாவுக்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.
கார்த்தியும் அவளை பார்த்து நன்றாக முறைத்து விட்டு மேசை மீது சர்வாவின் பொருட்களை வைத்தான். அதில் நேர்த்தி இல்லாததை கண்டு சர்வா திட்டுவானோ என்று சற்றே பயந்து வேகமாக அந்த மேசைக்கு வந்தவள்,
கார்த்திக் எடுத்து வைத்த பொருட்களை மிக நேர்த்தியாக அடுக்கி வைத்தாள். அதை கூர்ந்து கவனித்த கார்த்திக்...
“ஓ...! இப்படி தான் எடுத்து வைக்கணுமா?” என்று கவனித்துக் கொண்டான். அதை இருவருமே ஒரு சேர கேட்டார்கள்.
அதன் பிறகு சர்வா தன் இருக்கையில் அமர்ந்து வேலையை ஆரம்பிக்க அவனின் முன்பு வந்து நின்றாள் சகி...
என்ன என்பது போல பார்த்தான் அவளை.
“கார்த்திக்கு கார் ஓட்ட தெரியாது...! அதனால நீங்க அவனை வேலைய விட்டு நிறுத்தணும்...” என்றாள். அதை கேட்ட கார்த்திக் பொங்கிய கோவத்தோடு அவளை பார்த்தான்.
அதை சிறிதும் சட்டை செய்யாமல் சர்வாவிடம் கோரிக்கை வைத்தாள்.
“நான் முடியாதுன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ?” என்றான் அலட்சியமாய்.
“லுக் மிஸ்டர் சர்வா... வேலையே தெரியாத ஒரு ஆளை வேலைக்கு எடுக்கிறது மிகப்பெரிய முட்டாள் தனம்.. இவ்வளவு பெரிய பிசினஸ் மேன்னா இருந்துக்கிட்டு அப்படி ஒரு முட்டாள் தனமாக செய்ய மாட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்றாள் மறைமுகமாக அவனை மட்டம் தட்டி.
“ஆஹாங்...” என்று ஹாரங் கொட்டியவனை முறைத்துப் பார்த்தாள்.
“நீங்க நடக்குறது எதுவும் நடக்காது மிஸ்டர் சர்வா... நான் இருக்கிற வரை கார்த்தியை பழிவாங்க நான் விட மாட்டேன். அது உங்களால முடியவும் முடியாது...!” என்றாள் ஆற்றாமையுடன்.
“என் சட்டை மேல கை வச்சவன அவ்வளவு ஈசியா விட்டுடுவேன்னு நீ எப்படிடி நினைச்ச?” என்று ஆத்திரத்துடன் அவளை முறைத்தவன், கார்த்தியின் புறம் திரும்பி
“உனக்கு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் டைம்.. என்னோட பழைய ட்ரைவர் கிட்ட ட்ரைனிங் போற... அப்படி இல்லன்னா உனக்கு இங்க வேலை இல்லை..” என்றான் சீற்றமாய்.
“நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை சர்வா... கார்த்திக் பாவம் அவனுக்கு எதுவும் தெரியாது. என் மேல உள்ள பாசத்துல அவன் உங்ககிட்டே அப்படி நடந்துக்கிட்டானே தவிர உங்களை எந்த விதத்திலும் பகையா நினைக்கல...” என்று சகி கார்த்திக்காக பேச,
அவனோ, “சரிங்க சார்... எனக்கு ஒரு நாள் போதும்.. நான் நல்லா கத்துக்குறேன்” என்றான் உறுதியாக.





