செல்வநாயகம் தான் முன்னாடி நின்றிருந்த சகியை வெட்டும் பார்வை பார்த்தார்... அவரது பார்வையை கொஞ்சமும் சட்டை செய்யாமல்,
“இப்போ இருக்க சகி எல்லாம் தெரிந்தவள். உங்க சூதுவாது எல்லாமே எனக்கு தெரியும். எல்லாமே அத்துபடி. அதனால இந்த சகியை உங்களால கொஞ்சம் கூட அசைக்க முடியாது..” என்றாள் நிமிர்வாக.
அந்த நிமிர்வை பார்த்த செல்வ நாயகத்துக்கு பற்றி கொண்டு வந்தது. “என்கிட்டயே சேலஞ்சா” என்றார் நக்கலுடன்.
“அப்படியே வச்சுக்கோங்க... நீங்க இதை சேலஞ்சா எடுத்துக்கிட்டாலும் சரி, இல்ல வேற என்ன மாதிரி எடுத்துக்கிட்டாலும் சரி, எனக்கு அதை பத்தி எந்த கவலையும் இல்லை. இந்த முறை உங்க மருமக அது நான் மட்டும் தான். வேற யாராலயும் சர்வாவை நெருங்க கூட நான் விடமாட்டேன். உங்க மகன் கையால என் கழுத்துல தாலி கட்டி, எந்த வீட்டுக்கு என்னை மருமகளா வர விடாம செய்தீங்களோ அதே வீட்டுக்கு மருமகளா வரல என் பேரு சங்கரேஸ்வரி இல்ல. உங்க திட்டத்தை எல்லாம் உங்க மகனுக்கு முன்னாடி அம்பலப்படுத்த எனக்கு கொஞ்ச நேரம் கூட ஆகாது. ஆனா இந்த நீயா நானான்ற போட்டி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.” என்று சிரித்தவள், கொஞ்சம் இடைவெளி விட்டு,
“மாமனாரா இல்ல மாமனார மிஞ்சிய இந்த மருமகளான்னு நான் பாக்கணும்… பார்க்கலாமா மாமனாரே...” என்றாள் தைரியமாக ?
அவளது இந்த தைரியம் கண்டு உள்ளுக்குள் சற்றே நடு நடுங்கிப் போனாலும் வெளியே எதையும் காண்பித்துக் கொள்ளாமல் தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டவர் தன் கண்களில் இருந்த வெஞ்சினத்தை அவளிடம் அப்படியே காட்டினார்.
“குடிசையில வாழ்ற அதுவும் அன்றாடம் காட்சியா வாழ்ற உனக்கு மாடமாளிகை வேணுமோ...? ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட வக்கில்லாம என் கம்பெனிக்கே பிச்சை கேட்டு நிக்கிற உன்னை உடைத்து ஓரம் கட்ட எனக்கு ஒரு நிமிடம் போதாது. ஆனா நீ என்கிட்டையே ஆடி பார்க்கணும்னு ஆசை படுற...” என்று அவளது வறுமையை மிகவும் கேவலமாக பேசி அவளை ஏளனம செய்தார்.
அதற்கெல்லாம் சகி அஞ்சுபவள் கிடையாதே... வறுமை அவளுக்கு புதிது தான். ஆனாலும் அதிலே இந்த நான்கு வருடங்களையும் அதிலே கடந்து வந்தவளின் தன்னம்பிக்கையை அவ்வளவு எளிதாக சொற்களால் வெட்டி எரிந்து விட முடியுமா என்ன? அவரின் முன்பு தன் இரு கரங்களையும் கட்டி அவரை நேர்கொண்டு பார்த்தவள்,
“ஆமா நான் அன்றாடம் காய்ச்சி தான். ஒரு நேரம் சாப்பாட்டுக்கு வக்கில்லாதவ தான். ஆனா என்கிட்ட அப்படி என்ன இருக்குன்னு தெரியல... உங்க பணக்கார மகன் என்னயவே சுத்தி சுத்தி வர்றாப்லையே...! அந்த ஒரு தகுதி போதாதா உங்க மருமகளாக... ?” என்று ஏளனம் பேசியவருக்கு பதிலடி கொடுத்தாள்.
“அதுதான் எனக்கும் புரியல... அப்படி என்ன உன்கிட்ட இருக்குன்னு என் மகன் உன் பின்னாடி வரான்னு” என்று சிரித்தவர் தன் மகனின் நேற்றைய பேச்சை நினைவு கூர்ந்தார். அதில் இன்னும் அவருக்கு தலைகனம் ஏற வாய்விட்டே சிரித்தார். அவரது சிரிப்பு எதற்கு என்று தெரிந்தாலும் நேற்று அவளும் அவனது பேச்சைக் கேட்டுக் கொண்டு தானே இருந்தாள். ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிமிர் உடனே இருந்தாள்.
“நாலு வருசத்துக்கு முன்னாடி உன்னை வச்சு கொஞ்சம் கனவு கண்டுட்டான் இல்லையா, அதனால அந்த கனவை நினைவாக்குறதுக்கு மட்டும் தான் உன்னை யூஸ் பண்ண போறான். அவனுக்கு நீ வெறும் யூஸ் அண்ட் த்ரோ பொருள் தான். அதை என் மகன் உனக்கு கண்டிப்பா புரிய வைப்பான்” என்று அவர் நக்கல் பண்ண அந்த நக்கலில் ஒரு கணம் உள்ளுக்குள் சுருண்டு போனாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளாமல்,
“அதையும் தான் பார்க்கலாமே நான் யூஸ் அண்ட் த்ரோவா இல்ல அவரோட மனசுல என்றைக்கு வாழ்ற காதலியான்னு” என்று பதில் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மேலிருந்து சர்வா இவர்களை பார்த்து கையாட்டினான். குறிப்பாக சகியை பார்த்து மட்டும் தான் கையாட்டினான். அதில் இருவரும் தங்களது முகத்தை சரி செய்து கொண்டு அவனைப் பார்த்து சிரித்தார்கள்.
சர்வா அவளைப் பார்த்து ‘மேலே வா’ என்று கை ஆட்டினான். அவனுக்கு தலை அசைத்தவள் செல்வநாயகத்தை ஏளனமாக பார்த்தபடி மேலே சென்றாள். அவளது ஏளனம் அவரை வெகுவாக உசுப்பி விட்டு இருக்க பற்றிக்கொண்டு வந்தது.
அதை பார்த்துக் கொண்டே வந்த கவிதா, “என்னங்க இதெல்லாம் இந்த வீட்ல என்னதான் நடந்துகிட்டு இருக்கு? எனக்கு ஒன்னும் புரியல... அந்த பக்கம் என்னடான்னா மைதிலி எப்போ சர்வாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்க அப்படின்னு நச்சு பண்ணிக்கிட்டு இருக்குறா... இந்த பக்கம் என்னடான்னா இவ அங்க கடிச்சி இங்க கடிச்சு இப்ப நம்ம வீட்டுக்குள்ளேயே அதுவும் சர்வாவோட அறைக்குள்ளையே நுழைஞ்சுட்டா... ஆனா நீங்க இதெல்லாம் பார்த்தும் இன்னும் அமைதியாக இருக்கிறது எதுக்குன்னு எனக்கு ஒன்னும் புரியல” என்று அவர் கோவப்பட்டார்.
“கவி நீ எதைப் பத்தியும் யோசிக்காத. சர்வா என்னோட வளர்ப்பு அவன் தவறாக போக மாட்டான். சகிய கொஞ்சம் நல்லபடியா அந்த கிருஷ்ணன் வளர்த்துட்டான் இல்லையா? அதனால அவ காசுக்கு எல்லாம் அடி பணிய மாட்டா... சோ பாசத்தைக் கட்டி அவள அனுபவிக்க பார்க்கிறான் சர்வா. அதுக்காக தான் இந்த கோல்மால் எல்லாம் நடந்துகிட்டு இருக்கு. நீ அத பத்தி எதுவும் யோசிக்காதே. சகியை ஓரம் கட்டுற வேலையை சர்வாவே பார்த்துக்குவான். நாம சர்வாவுக்கும் மைதிலிக்கும் நடக்க போற கல்யாணத்துக்கு அவங்க வீட்ல போய் பேசிட்டு வருவோம் கிளம்பு...” என்றார் கவியை சமாதனம் செய்யும் நோக்குடன்.
ஆனாலும் உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்தது. சர்வாவை முழுதாக நம்பவும் முடியாது என்று எண்ணியவருக்கு சர்வாவின் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என்று தோன்றியது. அதை உடனடியாக செயல்படுத்தவும் எண்ணினார்.
மேலே வந்த சகியை ஆழ்ந்து பார்த்தான் சர்வா...
“நேத்திக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டு போன, இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா வந்து நிக்கிற? என்ன அதிசயம்...?” என்று நக்கலுடன் கேட்டான் சர்வா.
அவனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாது அவனது அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த பிள்ளைகளை பார்த்தாள். பிள்ளைகள் இருவரும் எழுந்து அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து அவர்களின் அருகில் சென்றாள். அப்போது தான் அவளை இன்னும் கூர்ந்து பார்த்தான் சர்வா... அவளது தோற்றத்தில் எப்பொழுதும் இருக்கும் ஒரு நிமிர்வு அதைத் தாண்டி பெரிதாக எதுவும் இருக்காது. ஆனால் இன்று மெனக்கெட்டு சிறிது ஒப்பனை செய்து கொண்டு வந்திருக்கிறாள் என்பது பார்த்த உடனே பளிச்சென்று புரிந்தது.
அவனது இதழ்களில் ஒரு புன்னகை மலர்ந்தது. அதை ஓரம் கட்டி விட்டு அவனும் அறைக்குள் நுழைந்தான். அங்கே பிள்ளைகள் அவளை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்ச ஆரம்பித்ததை பார்த்தவன் அவர்களோடு தானும் சேர்ந்து கொண்டான். அவள் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருக்க அவளது காதோரம் நெருங்கி,
“இந்த ஒப்பனையும் அலங்காரமும் எனக்காக தானே...” என்று அவளின் காதோரம் தன் மூச்சுக்காற்றுப் பட்டு கூசும் அளவுக்கு நெருங்கி நின்று கேட்டவனை பின்னால் திரும்பிப் பார்த்தாள் சகி. அதோடு அவனது கரங்கள் மிகவும் சுதந்திரமாக அவளது இடுப்பில் ஊர்ந்து செல்ல அதற்கும் அனுமதி கொடுத்தவள் தன் கண்களில் சிவப்பேர அவனைப் பார்த்தாள்.
இருவரும் மிக மிக நெருங்கி இருந்தார்கள். இவருடைய உணர்வுகளும் ஒரு கோட்டில் சங்கமிப்பது போல இருக்க அதை வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த செல்வநாயகத்துக்கு கவிதாவுக்கும் பற்றி கொண்டு வந்தது. அதை தடுக்க முடியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க
“இதெல்லாம் என்னால பார்க்க முடியல... முதல்ல அவளை வீட்டை விட்டு அடிச்சு தொரத்துங்க... நான் எது நடக்க கூடாதுன்னு இவ்வளவு நாள் நினைச்சு திட்டம் போட்டு வச்சானோ அது எல்லாமே நாசமா போயிடும் போல... இந்த சனியனை என்னால பார்க்கவே முடியல. இவ என்னோட மருமகளா ச்சீ...” என்று முகம் சுளித்தார் கவிதா.
“கவி உன்னோட கோவம் புரியுது... ஆனா கொஞ்சம் பொறுமையாக இரு. நான் உன்கிட்ட எத்தனை முறை சொல்றது கொஞ்சம் யோசிக்க டைம் கொடுன்னு...” சற்றே கோவம் காட்டியவர் அவர்களது இருவரையும் வன்ம ஏறிய கண்களுடன் பார்த்தார். பிறகு சத்தம் செய்யாமல் அங்கிருந்து போக, அது வரை அமைதியாக இருந்த சகி அவர்கள் போகவும் அவனை விட்டு விலகி,
“நான் பிள்ளைகளுக்காக தான் வந்தேன். மத்தபடி நீங்க கேட்டதுக்காக எல்லாம் நான் வரல...” என்றாள்.
அதை கேட்டு நக்கலாக சிரித்தவன், விலகியவளை நெருங்காமல் “பிள்ளைகளுக்காக வர்றதுக்கு எதுக்கு இவ்வளவு மேக்கப்?” என்று அவனது இதழ்கள் நக்கல் செய்ய, தன்னையே குற்றிக் கொண்டாள். ஆனாலும் அவனது கேள்வி பாதிக்காத வண்ணம் அவனை நோக்கியவள்,
“எனக்கு இன்னைக்கு மேக்கப் போடணும்னு தோணுனது. அதனால போட்டுக்கிட்டேன்... அதோட இது என்னோட விருப்பம். உங்கள மயக்க ஒண்ணும் நான் இதை போடல... அதுவும் முக்கியமா நீங்க என்ன பாக்கணும்னு நான் இந்த மேக்கப் போட்டுக்கல” என்று அவனுக்கு பதிலடி கொடுத்தவள் பிள்ளைகளுடன் அமர்ந்து விட்டாள்.





