சர்வாவின் தந்தை கார்த்தியிடம் காசை கொடுத்து விட்டு
“இனி இவ வேணாம். இவளை விட்டுட்டு... நான் நினைச்ச காரியம் நல்ல படியா முடிஞ்சிடுச்சு...” என்று சிரித்தார்.
“சார்...” என்று அவன் புரியாமல் பார்க்க,
“என் மகனுக்கு நான் நினைச்ச பொண்ணோட கல்யாணம் முடிஞ்சிடுச்சு. சோ இனி இவளை விட்டுட்டு” என்று சொன்னார்.
அதைக்கேட்டு “கடவுளே...!” என்று உடம்பும் மனதும் அதிர வெறித்தாள் அவரை.
“எதுக்கு சார் இந்த கல்யாணத்தை நிறுத்துனீங்க? அப்படி என்ன ஆச்சு...? எல்லாம் பேசி தானே நடந்தது?” என்று கேட்டவனை உருத்து விழித்தவர், குறுங்கண்ணோரம் எட்டி பார்த்து ஒரு ஏளன சிரிப்பை உதிர்த்தவர்,
“காசு பணம் துட்டு மணி மணி...” என்று அவர் சொல்ல, உள்ளிருந்தவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. வெளியே நின்று கேட்டுக் கொண்டு இருந்தவனுக்கும் ஒன்றும் புரியவில்லை.
“புரியல சார்...” என்று சொன்னான்.
“ஒரு பிச்சைக்காரிய என் வீட்டு மருமகளா ஆக்க தான் இவ்வளவு நாள் காத்து இருந்தனா?” என்று கேட்டு சிரித்தவர்,
“என் மகன் இவ மேல ஓவரா ஆசை வச்சி பொங்கினான். அவன் கிட்ட என்னோட எதிர்ப்பை காண்பிச்சா நீயாச்சு.. உன் சொத்து ஆச்சுன்னு வெளியே போயிடுவான். அதுக்கா இவ்வளவு சொத்தையும் வளைச்சி போட்டு கொடி கட்டி பறந்துக்கிட்டு இருக்கேன்...” என்றவர்,
“அது தான் அவனுக்கு உடன் படுற மாதிரி உடன் பட்டு கல்யாண நேரத்துல இந்த பிச்சைக்காரியை உன்னை வச்சு கடத்தி நான் பார்த்து வச்ச பணக்கார சம்மந்தத்தை அன்னைக்கு வர சொல்லி, என் மகனோட கல்யாணத்தை நடத்திட்டேன்” என்றார் கர்வமாக.
“சின்ன சாரு எப்படி ஒத்துக்கிட்டாரு சார்...?”
“முதல்ல ஒத்துக்கல ஆனா மணமேடை வரை வந்துட்டு கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு சொல்லி அவனை கட்டி போட்ட மாதிரி கல்யாணத்தை முடிச்சேன்...” என்று சிரித்தார்.
அந்த சிரிப்பிலும் அவர் சொன்ன தகவலிலும் நெஞ்சை வந்து அடைக்க அப்படியே சுவரில் சாய்ந்துவிட்டாள். விரக்தி புன்னகை எழுந்தது...
அவர் போன பிறகு கதவை திறந்துக் கொண்டு கார்த்திக் உள்ளே வந்தான்.
ரவுடிகளுக்கு உண்டான கரடு முரடான தோற்றம்... நாகரீகம் அற்ற மனிதனாய் அவளின் கண்களுக்கு தெரிந்தான்.
“ஓ...! எழுந்துட்டியா?” என்றபடியே அவளின் முன்னாடி ஒரு பார்சலை போட்டான்.
என்ன அது என்று அவள் பார்க்க, பார்க்கும் பொழுதே அது சாப்பாடு பொட்டலம் என்பதை அறிந்தாள். மேசையில் கட்டுக் கட்டாய் இருந்த பணத்தின் மீது இப்பொழுது செல்வநாயகம் கொடுத்த பணத்தையும் போட்டவன் இன்னொரு பொட்டலத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.
ஒரு கணம் அவனை ஆழ்ந்து பார்த்தாள். அவளது பார்வையை உணர்ந்தவன்,
“சாப்பிட்டா உன்னை உடனே விட்டுடுவேன்... இல்லன்னா இன்னைக்கு இரவு முழுவதும் இங்க தான் இருக்கணும்...” என்று மிரட்டினான்.
தன் மேல் ஒரு கீறல் கூட இல்லை. உடை சற்று கூட நலுங்கவில்லை. காலையில் எப்படி இருந்தாளோ அதே போல தான் இப்பொழுது வரையிலும் இருந்தாள். அதை உணர்ந்துக் கொண்டவளுக்கு மனம் சற்றே ஆறுதல் அடைந்தது.
இந்த சம்பவத்துக்கு காரணகர்த்தா முழுதும் செல்வநாயகம் தான் என்று அறிந்தவளுக்கு மனதில் கசப்பு எழுந்தது. முகம் கசங்கிப் போனது. தன் தந்தையும் தங்கையும் என்ன ஆகி இருப்பார்கள் என்று எண்ணியவளுக்கு வேதனை உயிர் போனது.
கிருஷ்ணன் ஆசை ஆசையாக ஏற்பாடு செய்தார் இந்த திருமணத்தை. ஆனால் அது இப்படி பாதியில் பியித்துக் கொண்டு போகும் என்று எண்ணியிருக்க மாட்டார் என்று எண்ணியவளுக்கு சர்வாவின் நினைவு வந்தது...
கண்ணோரம் நீர் கசிந்தது. அதை எதிரில் இருந்தவனுக்கு காட்டாமல் சுவரின் புறம் திரும்பிக் கொண்டாள்.
“பணக்காரங்கள என்னைக்கும் நம்ப கூடாது...” என்றான் வாய் நிறைய சாப்பாட்டை அடக்கிக்கொண்டு... சகி எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தாள்.
“நான் போகணும்...” என்றாள் பிசிரலான குரலில்.
“அவனுக்காக வருந்துறது வேஸ்ட்... வேற ஒரு நல்ல மாப்பிளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” என்றான் விடாமல்.
சகிக்கு எரிச்சலாய் வந்தது. அவன் புறம் திரும்பி வேகமாய் பேச வர,
“இன்னைக்கு ஒரு நேரம் மட்டும் என்னோட சேர்ந்து சாப்பிடுவியா?” என்று கேட்டான். மேசை முழுவதும் பண கட்டுகள். ஆனால் அதை பற்றிய சிரத்தை கொஞ்சமும் இல்லாமல் தன்னிடம் அவனுடன் அமர்ந்து சாப்பிட சொல்லுபவனை கூர்ந்து பார்த்தாள்.
அந்த நேரத்தை எப்படி உணர்ந்தாள் என்றே தெரிவில்லை. இது நேரம் வரை தன்னை எதுவும் செய்யாதவன் இனிமேலும் எதுவும் செய்ய மாட்டான் என்று தோன்ற, கரத்தை கழுவி விட்டு அவன் எதிரில் வந்து அமர்ந்தாள்.
“பயமா இல்லையா?” அவனே கேட்டான். சாப்பாட்டில் மருந்து வைத்து அவளை எதுவும் செய்யலாம். வாய்ப்புகள் இருக்கே... அதனால் அவளிடம் கேட்டான்.
“இல்ல...” என்றவள் பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள். அவளின் அந்த நேர நம்பிக்கையை உணர்ந்த கார்த்திக் உள்ளுக்குள் சற்றே நெகிழ்ந்தான்.
“உனக்கு அவனை ரொம்ப பிடிக்குமா?” என்று லொட லொட வென்று அவன் கேள்விக் கேட்டுக்கிட்டு இருக்க... அவள் பதிலே பேசவில்லை. அடைத்துக் கொண்டு வந்தது... தொண்டையை தாண்டி ஒரு பருக்கை கூட கீழே செல்லவில்லை.
அப்பாவும் தங்கையும் என்ன நிலைக்கு ஆளாகி இருப்பார்கள் என்று எண்ணியவளுக்கு துக்கம் வந்து நெஞ்சை அடைத்தது. தன் வேதனையை எதிரில் இருப்பவனுக்கு காட்டாமல் தண்ணீரை குடித்து அடைத்த தொண்டையை சரி செய்து எதிரில் இருப்பவனின் கெஞ்சலுக்கு அவளது மனம் இசைந்து உண்ண தொடங்கினாள்..
அவன் மேலும் மேலும் கேள்வி கேட்டுக் கொண்டே சாப்பிட,
“உன்னை பார்த்தா ரவுடி மாதிரியே தெரியல...” என்றாள் அமைதியாக.
ஒரு கணம் அவனது கரம் அந்தரத்தில் நின்றது. பின் சுதாரித்து “நான் உன்னை கேள்வி கேட்டேன்...” என்றான் திமிராய்.
அதை சிறிதும் காதில் வாங்காதவள், “ரொம்ப தனிமையா பீல் பண்றியோ...?” மேலும் கேட்டாள்.
“ஏய்..!” என்று அவன் அவளை முறைக்க,
“இந்த வேலையை விட்டுட்டு என் வீட்டுக்கு வர்றியா?” என்றாள் சகி.. ஏன் கேட்டாள் என்று அவளுக்குமே தெரியவில்லை. பழகிய உடனே ஏனோ அவன் மீது ஒரு மெல்லிய உணர்வு எழுந்தது. அதுவும் என்னோடு ஒரு நேரம் மட்டும் சேர்ந்து சாப்பிடு என்று அவன் கேட்ட கேள்வியாக இருக்கலாம்.
தான் இருக்கும் நிலையை மீறி அவனிடம் கேட்டு விட்டாள். அவளது கேள்வியில் இவன் தான் எப்படி உணர்ந்தான் என்றே சொல்ல முடியாத அளவுக்கு பீலாகி போனான்.
அவனிடம் யாரும் ஏன் கூட பழகும் சில பசங்க கூட கேட்டது இல்லை. முதன் முதலில் ஒரு பெண் பிள்ளை அதுவும் கடத்திக் கொண்டு வந்த பெண் பிள்ளை கேட்கிறது என்றால் அவன் எப்படி உணர்ந்தான் என்பது அவன் மட்டும் அறிவான்.
அவள் சொன்ன கேள்வியில் இன்னும் அதிர்ந்து அவளை பார்த்தான். “எனக்கு கொஞ்சமே கொஞ்சம் சைக்கலாஜி தெரியும்” என்று சொன்னவள், அவனை ஆழ்ந்து பார்த்து,
“உனக்காக யாரும் இல்லன்னு இந்த தொழில்ல இறங்கி இருக்க... ஆனா உன்னோட நோக்கம் யாரையும் காய படுத்துறது இல்லை. ஆனா நீ கடத்தின ஆட்கள் உன் கூட ஒரு நாளாவதோ இல்ல சில மணி நேரங்களாவதோ தாங்குவாங்கன்னு யோசித்து தான் இந்த வேலைக்கே வந்து இருக்க..? இல்லையா?” என்று அவள் அவனை பற்றி புட்டு புட்டு வைக்க அவனது கண்கள் வியப்பில் விரிந்தது.
“நான் ஜெயிலுக்கு போய் இருக்கேன்” என்றான் உள்ளடங்கிய குரலில். அதில் நான் உன்கூட வர தகுதி இல்லாதவன் என்ற பொருள் பொதிந்து இருந்தது... அதை உணர்ந்தவள் பெருமூச்சு விட்டவள்,
“சாப்பிட்டுட்டு என்னோட வா...” என்றவள் அவனை கையோடு கூட்டிக்கொண்டு போய் அவன் வைத்திருந்த காசை ஒரு எளிய முதியவர் மற்றும் அனாதை ஆசிரமத்துக்கு நன்கொடையாக அவனது கரத்திலே கொடுத்து கொடுக்க செய்தவள் அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாள்.
கார்த்தியோடு உள்ளே வந்தவளை ஒன்றும் சொல்லாமல் கிருஷ்ணன் வரவேற்றார். அதன் பிறகு கார்த்திக் அந்த குடும்பத்தோடு ஒன்றிணைந்து விட்டான்.
அதோடு தான் பழகிய அத்தனை கெட்ட பழக்கங்களை எல்லாம் அடியோடு விடுத்து சகி காட்டிய ஒழுக்கமான வழியில் வாழ ஆரம்பித்தான். ஆனால் அவனை அப்படி வாழ விடமாட்டோம் என்று சமூகம் அவனை துரத்தி துரத்தி அடித்தது வேலை கேட்டு செல்லும் இடமெல்லாம்...
வேலை கொடுக்காதவர்களை எல்லாம் அடித்து வெளுக்க மனமும் கரமும் பரபரத்தது... ஆனால் சகியின் முகம் முன் வந்து நிற்க அவனால் யாரையும் அடிக்க முடியவில்லை. முட்டுக்கட்டை போடும் அவளின் நினைவு கூட தன்னை ஒழுக்க நெறியில் நெறிப்படுத்த முயல தன்னை தானே திருத்திக் கொள்ள முயன்றான். ஆனாலும் ஆடிய கரமும் பாடிய வாயையும் நித்த முடியவில்லை.
அதில் வெறுத்துப் போனவன் சகிக்கு அடுப்படியில் வெங்காயம் வெட்ட ஆரம்பித்தான்.
கெட்ட பேச்சு பேசிய வாயை போனில் தரவிறக்கிய திருவாசகத்தை கேட்க வைத்தாள். முதலில் ஒன்றும் புரியாமல் முழித்தான். சகி ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் சொல்லி அவனது மனதில் பதிவேற்றினாள். ஒரு மாதத்தில் தானாக ஓடிய பாடலுடன் அவனது உதடுகளும் முணுமுணுக்க ஆரம்பித்தது...
பாட்டு மட்டும் அன்றி முழுமையாக அவனிடம் ஒரு நெறி வந்து சேர்ந்தது. அவன் ஆசை பட்ட குடும்ப அமைப்பு அவனுக்கு கிடைத்தது... காலை சுற்றி ஓடும் மிரு, புத்தி சொல்லும் தந்தையாக கிருஷ்ணன், தோளுக்கு தோளாக சகி, எதையும் மனம் விட்டு பேசி கொள்ளும் சுதந்திரம், முக்கியமாக அவன் வெறுத்த தனிமை அவனிடம் இல்லாமல் யாராவது அவனுடன் இருந்துக் கொண்டே இருந்தார்கள்... ஆனால் அவ்வப்பொழுது அவனிடம் ஒரு மூர்கம் வெளிப்பட்டு கொண்டு தான் இருந்தது.





