பிணைக்கைதியாக தன்னை பிடித்து வைத்து தன் உணர்வுகளுடன் விளையாடுபவனை எதிர்க வலு இருந்தும் கார்த்திக்காக பொறுமையாக நின்றிருந்தாள் சகி...
அவளின் இந்த இயல்பு சர்வாவின் முகத்தில் ஒரு வித உணர்வை வர வைத்தது. அதை அவளிடம் காட்டாமல் அவளது நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தவன்,
“கிளம்பு...” என்றான். அவனது வார்த்தையை உணராமல் தன் வேதனையில் சுருண்டு இருந்தாள். பெண்ணவளின் உணர்வுகள் புரிய, மெல்ல அவளது கன்னத்தில் தட்டினான். அதில் உயிர் பெற்றவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பார்த்தவளின் விழிகளில் நீர் நிறைந்து இருந்தது... அதை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தவன்,
“கார்த்தி கிட்ட பேசுனதை எல்லாம் கேட்ட இல்லையா...?” என்றான் நிதானமாக...
தலையை மட்டும் அசைத்தாள்... ஒரு கணம் கண்களை மூடி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவன்,
“நாளைக்கு வீட்டுக்கு வா...” என்றான்.
சர்வா இப்படி சொல்லவும் தூக்கிவாரிப் போட்டது... தெரிந்து தான் இவன் பேசுகிறானா...? வீட்டுக்கு வந்தால் என்ன ஆகும் என்று தெரிந்தும் கூப்பிட்டால் அவள் என்ன தான் செய்வாள்.
அதோடு கார்த்தியை வேறு எப்படி சமாளிக்கிறது என்று தெரியாமல் ஒரு பக்கம் தத்தளித்தாள். தனக்காக சர்வாவோடு முட்டி மோதி பேசியவனின் மீது எப்பொழுதும் போல வாஞ்சை பெருகியது...
இந்த சண்டைக்கே அவனை எப்படி சமாளிக்க போகிறாள் என்று தெரியவில்லை. இதில் சர்வாவின் வீட்டுக்கே போக நேர்ந்தால் அவ்வளவு தான்... அலகு குத்தி சாமி ஆடிடுவான்... என்று எண்ணினாள்.
“இல்ல சார்... நாளைக்கு என்னால எங்கும் வர முடியாது... வெளில போக வேண்டிய வேலை இருக்கு” என்று மறுத்தாள்.
“ஒவ்வொரு முறையும் உன்னை மிரட்டி பார்க்கணும்னு நினைக்காத... இன்னொன்னு ஒரு விசயத்தை என்னை அடிக்கடி சொல்ல வைக்காத... நான் என்ன சொல்றானோ அதை அப்படியே ஒபே பண்ணி செய்ய பழகு. அது தான் உனக்கும் உன்னை சார்ந்த எல்லோருக்கும் நல்லது...” என்றவன் அவளை கூர்ந்து பார்த்தான்.
“லுக் மிஸ்டர் சர்வா... என்னோட வேலை உங்க அலுவலகம் சார்ந்த வேலை பார்ப்பது மட்டும் தான்.. அதை விட்டுட்டு என்னை உங்க வீட்டு வேலைக்காரி ஆக்காதீங்க...” என்றாள் நிமிர்வுடன்.
அவளது நிமிர்வை சற்றே உள்வாங்கியவனுக்கு ஒரு பெருமூச்சு எழுந்தது... அதை தாண்டி அவனது முகத்திலும் கண்களிலும் ஒரு வித வலி எழுந்தது... கூடவே அவனையும் அறியாமல் அவனது கண்கள் அவளை ஏக்கமாக தழுவியது... அவனது கண்களில் வந்து போன இனம் புரியாத உணர்வை ஒரு கணம் படித்தவள் உள்ளுக்குள் ஆடி தான் போனாள்.
இது நாள் வரை தேள் கொடுக்கு போல சமயம் கிடைக்கும் போதெல்லாம் கொட்டிக் கொண்டு இருந்தவனின் விழிகளில் வந்து போன ஒரு வலியும் அதன் கூடவே ஒட்டி இருந்த ஏக்கமும் கண்டு நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி ஊடுருவி சென்றது...
தன்னிடம் என்ன யாசிக்கிறான்? எதை யாசிக்கிறான்? என்று தடுமாறியவளுக்கு அவனை அப்படி ஒரு உணர்வோடு பார்க்க முடியவில்லை.
அதற்காக அவன் போடும் நிபந்தனைகளுக்கு எல்லாம் தலை ஆட்ட முடியாதே...! அவன் மீது இருந்த பார்வையை விலக்கிக் கொண்டவள்,
“நான் கிளம்புறேன் சார்...!” என்றவள் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கிளம்பி விட்டாள். போனவளின் முதுகையே சிறிது நேரம் வெறித்தவன் அப்படியே இருக்கையின் பின் புறம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்...
நெஞ்சில் பலவித அலைப்புருதல் எழுந்து அவனை நிலைக் கொள்ளமால் தவிக்க விட்டது... எங்காவது சென்றால் தேவலாம் என்று தோன்றியது...
ஆனால் அவனது வருகைக்காக அவனது பிள்ளைகள் காத்துக் கொண்டு இருப்பார்களே எண்ணியவன் தன் சுய விருப்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அப்படியே அமர்ந்து விட்டான்...
தன் போனை எடுத்து அதில் தன் மனைவியாக சிரித்துக் கொண்டு இருந்தவளை வெறுமையான கண்களுடன் பார்த்தான்... அவனுக்கு அருகில் மிக மிக அழகாக கல்யாண பூரிப்புடன் கண்களில் கனவு மின்ன ஆசையுடன் இருந்தவளை பார்க்க பார்க்க மனம் கனத்துப் போனது...!
எவ்வளவு ஆசையாக தன்னை கரம் பிடித்தாள்.. என்று எண்ணியவனுக்கு இதயத்தில் ஏதோ ஒரு பாரம் வந்து ஒட்டியது...! கண்கள் மெல்ல மெல்ல சிவந்துப் போனது வேதனையில்...
அவள் இருந்த வரைக்கும் அவளின் அருமை தெரியாமல் கடமைக்கு என்று அவளுடன் இருந்த நாட்களை எண்ணி பார்த்தான்...!
ஆசையுடன் மாலை நேரம் மல்லிகை பூ வைத்து, மெல்லிய அலங்காரம் செய்துக் கொண்டு தனக்காக கிளம்பி வாசலில் நிற்பாள்.
எப்பொழுதுமே அலுவலகம் விட்டு தாமதமாக தான் வருவான் சர்வா.. காலையில் அவளை கிளம்பி நிற்க சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பியவன் வேலை பளுவில் தன் மனைவியை மறந்து போவான்.
வீட்டுக்கு திரும்பும் பொழுது கூட அவனுக்கு அவளுடைய நினைவு வராது... வீட்டு வாசல் படி ஏறும் பொழுது தான் வாசலில் தனக்காக காத்திருக்கும் மனைவியின் முகம் பார்த்த பிறகு தான் நினைவே வரும் இன்றைக்கு வெளியே போகலாம் என்று சொன்னதே...
ஒரு சாரி கூட கேட்க மாட்டான்...
“வேலையில மறந்துட்டேன் திவி... டையர்டா இருக்கு...” என்பான்.
“சரிங்க... பரவாயில்லை வேற ஒரு நாள் போனா போச்சு... வாங்க கைகால் அழுத்தி விடுறேன்... அதுக்கு முன்னாடி கொஞ்சம் சாப்பிடுங்க...” என்று உபசரிப்பாள் வாடா முகத்துடன்.
அப்பொழுது எல்லாம் அவளின் அருமை புரியாமல் போன தன் மடத்தனத்தை எண்ணி இப்பொழுது மருகினான்... வீசும் காற்றில் தன் மனைவியின் வாசனையை தேடினான்... அது கிட்டாமல் போக அவளின் நிழல் படத்தை தன் நெஞ்சோடு கட்டி பிடித்தவனின் விழிகளில் மெல்லிய நீர் படலம்...
எதையோ எடுக்க வந்த சகிக்கு சர்வாவின் கரங்களில் இருந்த அவனது மனைவியின் புகைப் படத்தை பார்த்து கண்கள் நிலைக் குத்திப் போனது... அதோடு அவனது கண்களில் தென்பட்ட மெல்லிய நீர் படலம் நெஞ்சை சுக்குநூறாய் உடைத்துப் போட வந்த அரவம் இல்லாமல் அப்படியே கிளம்பி வெளியே வந்துவிட்டாள்.
அடுத்த நாள் காலையில் வெளியே செல்ல கிளம்பிக்கொண்டு இருந்தவளை பார்த்தான் கார்த்திக்...
“எங்க போற...?”
“சர்வா வீட்டுக்கு...” என்றாள் கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக் கொண்டே...! அவளுக்காக பால் ஆற்றிக்கொண்டு இருந்த மிருவின் கரங்கள் செயலற்று அப்படியே நின்றது... செய்தி பார்த்துக் கொண்டு இருந்த கிருஷ்ணாவும் திரும்பி இருவரையும் பார்த்தார்.
“பட்டது எல்லாம் மறந்து போச்சா? கொஞ்சம் கூட அவமானமாவே இல்லையா? உனக்கு இருக்கோ இல்லையோ... எனக்கு இருக்கு... நீ எங்கயும் போக கூடாது.. போக நான் அனுமதிக்க மாட்டேன்...” என்றான் உடும்பாய். அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“எனக்கு உன்னை மீறி போகணும்னு ஆசை இல்லை கார்த்திக். ஆனா நான் போகணும்... நான் உனக்கு வாக்கு கொடுத்த மாதிரி இரண்டே வருடம் என்னை என் போக்குல விடு... சர்வாவை பற்றி எதையும் யோசிக்காத... அவ்வளவு தான் சொல்வேன். இன்னொன்னு என் மேல முழுதா நம்பிக்கை வை... உன்னோட சகியா நான் திரும்பி வருவேன்...!” என்றாள் மிக நிதானமாக..
“நான் இவ்வளவு தூரம் சொல்றேன்.. ஆனா நீ கேட்காம உன் விருப்பத்துக்கு தான் பண்ற இல்ல...” என்று கோவப்பட்டவன்,
ஆத்திரத்தில், “நான் நேத்திக்கு உன் சர்வாவை வந்து பார்த்தேன். அவன் என்னல்லாம் பேசினான் தெரியுமா? அதை கேட்டு நான் எப்படி துடிச்சி போனேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்... அவனோட குணம் நேத்திக்கு முழுசா வேலைய வந்திடுச்சு...” கத்த, மிக நிதானமாக அவனை பார்த்தவள்,
“தெரியும்” என்றாள் எந்த சலனமும் இல்லாமல். ஒரு கணம் கண்களை சுருக்கி அவளை பார்த்தவன்,
“தெரிஞ்சி இருந்தும் நீ இன்னைக்கு அவனை பார்க்க கிளம்பி இருக்கான்னா எனக்கு புரியல... அப்போ அவன் சொன்னதுக்கு எல்லாம் நீயும் மறைமுகமா ஒத்துக்குறியா?” ஆற்றமாயுடன் கேட்டவனை இழுத்து கட்டிலில் அமரவைத்து, அவனின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவள்,
“உன் சகியா உங்கிட்டவே வருவேன்னு சேர்த்து சொன்னனே... மறந்துட்டியா?” என்றாள்.
“ஆனா அவன் உன்னை விடுவான்னு நினைக்கிறியா? அவன் சரியான போர்ஜரி... அவனை நம்பாத... பணக்காரங்க நிமிடத்துக்கு ஒரு முறை நிறம் மாறுவாங்க... அந்த பாடத்தை நீ ஏற்கனவே கத்து இருக்க... அதை அவ்வளவு சீக்கிரமாவா மறந்து போன..” என்று எச்சரித்தான்.
அவனது கரத்தை எடுத்து தன் கரங்களுக்குள் அடக்கிகொண்டவள், அவனை நிமிர்வுடன் எதிர்க்கொண்டு
“நான் எதையும் அவ்வளவு சீக்கிரமா மறக்க மாட்டேன் கார்த்திக். ஆனா இப்போ நான் போகணும். எனக்குன்னு சில பர்ஸனல் இருக்கு... அதை செய்ய நீ அனுமதிக்கணும்” என்றாள்.
“நான் இவ்வளவு தூரம் சொல்லியும் உனக்குன்னு இருக்கிற பர்ஸனல்ல அவனை கொண்டு வந்து சேர்க்கிற பத்தியா இதை உன் கிட்ட இருந்து நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல...” என்று ஆத்திரத்துடன் சொன்னவன், அவளது கரத்திலிருந்து தன் கரத்தை உதறி விடுவித்துக் கொண்டவன்,
“இனி நீ என்ன செஞ்சாலும் எனக்கு அதை பத்தி எதுவும் கவலை இல்லை... உன்னை நினைச்சி நான் ஏன் கவலை படணும்... உனக்காக... உனக்காக மட்டும் இவ்வளவு நாள் நானா இல்லாம உனக்காக மாறினேன் இல்ல... என்னை சொல்லணும்...” என்று கோவத்தில் கர்ஜித்தவன்,
“என்னை விட உனக்கு அவன் ரொம்ப முக்கியமா போயிட்டான் இல்ல... ஏன்னா எனக்கு முன்னாடியே அவன் உன் வாழ்க்கைக்குள்ள வந்துட்டான். அதனால அவன திரும்பி பார்த்தவுடன் உன் பழைய நினைவுகள் எல்லாம் கிளறி இருக்கும்...” என்று இன்னும் சில வார்த்தைகளை சிந்த வந்தவன் அவளின் முகத்தில் இருந்த வேதனையை பார்த்து அத்தோடு அந்த பேச்சை நிறுத்திக் கொண்டவன்,
அவளை உக்கிரமாக பார்த்து, “இனி இந்த கார்த்திக் உன் விசயத்துல தலையிட மாட்டான்... உனக்கு என்ன தோணுதோ அதை செய்துக்கோ... அதே போல நீ என் விசயத்துல தலையிடக் கூடாது...” என்றவன் விறுவிறுவென்று அவ்விடத்தை விட்டு போக பார்க்க அவனது முன்னாடி வந்து நின்றவள், அவனது கரத்தை எடுத்து தன் தலையில் வைத்து,
“நீ என்ன வேலை வேணாலும் செய்... ஆனா பழைய வேலைக்கு நீ மறுபடியும் போக கூடாது... இது என் மேல சத்தியம்...” என்றாள்.
அதில் அவளை முறைத்துப் பார்த்தவன், தன் கரத்தை உருவிக் கொண்டவன்,
“முடியாது போடி...” என்றுவிட்டு அவன் வெளியே போய்விட சகியின் முகத்தில் லேசான புன்னகை மிளிர்ந்தது.
அவளுக்கு அவனை பற்றி நன்கு தெரியுமே...! அவளை தாண்டி அவன் போக மாட்டான் என்று... அந்த நம்பிக்கையை கார்த்திக் எப்பொழுதோ அவளின் நெஞ்சில் பத்தித்து இருந்தான். இவ்வளவு நாள் தடுமாறி போகதவனா இப்பொழுது தடுமாறி போக போகிறான்...! என்று எண்ணியவள் திரும்ப அவளது அப்பா கிருஷ்ணன்
“என்னம்மா இதெல்லாம்... உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன தான் நடக்குது.. எனக்கு ஒண்ணும் புரியல... அவன் வேற என்னமோ சொல்லிட்டு போறான். நீ என்னன்னா அந்த தம்பி வீட்டுக்கு போறேன்னு சொல்ற...” என்று அவர் சற்றே தயங்கி கேட்க,
“நீங்க என்கிட்டே என்ன கேள்வி வேணாலும் கேட்கலாம் ப்பா.. அதுக்கு எல்லா உரிமையும் இருக்கு...” என்றவள் சில விசயங்களை மட்டும் அடிக் கோடிட்டு சொல்லியவள்,
“என் மேல உங்களுக்காவது நம்பிக்கை இருக்கா ப்பா...?” என்று கேட்டவளை முழு நமபிக்கையுடன் பார்த்தவர்,
“உன் மேல நான் என்னைக்குடா சந்தேகம் பட்டு இருக்கேன். நீ என் சாமிடா.. உன்னால யாருக்கு தீங்கு செய்ய முடியாது. அப்படிப்பட்டவ ஒரு விசயத்துல இறங்குறன்னா கண்டிப்பா அதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கும். அதுவும் சர்வா வீட்டுக்கு நீயே போறான்னா கண்டிப்பா ஏதோ ஒரு விஷயம் இருக்கும்...” என்றவரை மேச்சுதலுடன் பார்த்தவள்,
“உங்க அனுபவத்துக்கு முன்னாடி நானெல்லாம் வெறும் தூசி தான் ப்பா...” என்று ஒரு சல்யூட் போட்டவள்,
“என்னை அவ்வளவு எளிதா நினைச்சவங்களுக்கு ஒரு பாடத்தை கத்து தர போறேன்...” என்றாள்.
“பாப்பா...” என்றார் அதிர்ந்து.
“உங்க பாப்பா இப்போ சங்கறேஸ்வரியா மாற வேண்டிய தருணம் ப்பா...” என்றவள் அங்கு அதிர்ந்து நின்ற மயூவை பார்த்து,
“நீ இதையெல்லாம் போட்டு குழப்பிக்காதடா... அக்கா எல்லாத்தையும் பார்த்துக்குறேன். உன்னோட கவனம் முழுசும் படிப்புல தான் இருக்கணும்... சரியா?” என்றவள் சர்வாவின் வீட்டுக்கு கிளம்பினாள்.
போகும் அவளையே கவலை தேய்ந்த முகத்துடன் பார்த்தார்கள் இருவரும்... ஆனால் அந்த கவலை சிறிதும் இன்றி உள்ளத்தில் வஞ்சனையோடு சர்வேஷ்வரின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள் சங்கரேஸ்வரி.





