கார்த்தியை எந்த சமாதானமும் செய்ய முடியாமல் சகி தவிப்பதை கண்ட கிருஷ்ணனும் மிருவும் பாவமாய் பார்த்தார்கள் அவளை. கார்த்திக்கு கண் சாடை காட்டி ‘வேணாமே...!’ என்பது போல கெஞ்ச அவன் கொஞ்சம் கூட இறங்கி வரவே இல்லை. அவன் பிடித்த பிடியிலே இருந்தான்.
அவனது கோவம் நியாமானதாக பட்டதால், “இன்னும் ஒரு வருடத்தில் இந்த வேலையை விட்டுடுறேன் கார்த்திக். ப்ளீஸ் அதுவரை என்னை நம்பு...” என்று தன் திடத்தை விடுத்து அவனிடம் கெஞ்ச, அவளது கெஞ்சல் கார்த்தியின் இதயத்தில் வேலை பாய்ச்சியது.
அதை அவளிடமே கூறினான்.
“நீ இப்படி என்கிட்டே ஏதோ தப்பு பண்ணியது போல கெஞ்சிக்கிட்டு நிக்கிறதை பார்க்கும் பொழுது எனக்கு நெஞ்சுல வேலை பாய்ச்சியது போல இருக்கு சகி... உன்னை நான் கம்பீரமா தான் இதுவரை பார்த்து இருக்கிறேன். எதுக்காகவும் யாருக்காகவும் நீ தலைகுனிஞ்சி நின்னது இல்லை. நீ இப்படி எங்களுக்கு பெருமை தரும் விதமா நடந்துக்குற பாங்கில் பெருமை விட கர்வம் அதிகம் இருக்கும் தெரியுமா? ஆனா இன்னைக்கு அந்த கர்வம் எனக்கு இல்லை...” என்றான். அதில் உயிர் துடித்துப் போனவள்,
கண்கள் கலங்க,
“ப்ளீஸ் கார்த்திக்...” என்று கெஞ்சினாள்.
“இவ்வளவு சொல்லியும் நீ போற வழியில தான் போவேன்னு சொன்னா நான் என்ன பண்றது.. ஆல்ரைட் இனி இந்த கார்த்திக் உன்கிட்ட பேச மாட்டான்...” என்று சொன்னவன் விருட்டென்று அவ்விடத்தை விட்டு போய் விட்டான்.
அவன் பேச மாட்டேன் என்று சொன்ன சொல் நெஞ்சில் எழுந்த வேதனை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி உடல் முழுக்க வேதனையைக் கொடுத்தது. போகும் அவனையே கண்கள் கலங்க வேதனையுடன் பார்த்தவள் தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கி விட்டு தன் தந்தையை பார்த்து மௌன புன்னகையை சிந்தியவள் கலங்கிய கண்களை யாருக்கும் காட்டாமல் அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டாள்.
அவளிருக்கும் இடத்தில் இருக்க பிடிக்காமல் சென்றவனுக்கு மனம் முழுவதும் வேதனையின் சாயல் தென்பட மீண்டும் அவளை தேடி வந்தான் கார்த்திக். ஆனால் சகி கிளம்பி இருக்க போகும் அவளையே கார்த்தியின் கண்கள் வெறித்தது.
இரவு ஏழு மணிக்கு யாருமில்லாத நேரத்தில் அலுவலகமே விருச்சோடிப் போய் இருந்த பொழுதில் தன் முன் விழிகளில் ஏறிய சிவப்புடன், கட்டுக்கடங்காத கோவத்துடனும், நரம்புகள் முறுக்கேறி, ஆத்திரத்துடன் நின்றிருந்த கார்த்தியை கால் மேல் கால் போட்டு இருக்கையில் மிக சொகுசாக அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த சர்வாவின் இதழ்களில் ஏளன புன்னகை அப்பட்டமாய் தெரிந்தது.
அவனது தோற்றத்திலிருந்து ஏளனமும் ஏகத்தாளமும் கார்த்திகை இன்னுமே வெறியேற்றியது. பல்லிடுக்கில் வார்த்தை தெரித்தது...
“மிஸ்டர் சர்வா, நீங்க உங்க எல்லைக்குள்ள நிற்கிறது தான் எல்லாருக்குமே நல்லது. அப்படி இல்ல அப்படின்னா நீங்க உங்க வாழ்க்கையில ரொம்ப ரொம்ப மோசமான விளைவுகளை எதிர்பார்ப்பீங்க... இந்த கார்த்திகை பத்தி உங்களுக்கு தெரியாது...”
“தெரிஞ்சுக்க வச்சிடாதீங்க... ரொம்ப வருத்தப் படுவீங்க... உங்க மேல ஒரே ஒரு சதவீதம் மரியாதை இருக்கு. அதை நீங்களே கெடுத்துக்காதீங்க... எனக்கு என் சகி வேணும். அவளை நீங்க உங்க விருப்பபடி ஆட்டி வைக்கணும்னு நினைச்சீங்க உங்க பிள்ளைங்க தகப்பன் இல்லாம தான் வளருவாங்க...” என்று சர்வாவை எச்சரிக்கை செய்தான் கார்த்திக்.
அவனது எச்சரிக்கையைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாதவன் இன்னும் நன்றாக தோரணையாக சாய்ந்து அமர்ந்து கொண்டு விழிகளில் ஏறிய நக்களுடன் கார்த்திகை பார்த்தான்.
“நீ பேசுனது எல்லாம் சரி தான். ஆனா கடைசியா சொன்ன பாரு ஒரு வார்த்தை அந்த வார்த்தைக்கே உன்னை குழி தோண்டி புதைச்சி இருப்பேன்... நான் யாரு என்னோட லெவல் என்னன்னு தெரியாம என் கிட்ட ஆடி பார்க்கணும்னு நினைக்காதடா... நீ ஸ்கெட்ச் தான் போட்டு இருப்ப... ஆனா நான் அதுக்குள்ள உனக்கு சமாதியே கட்டிடுவேன்....” என்று தன் தோரணையில் கொஞ்சம் கூட மாற்றாமல் மிக தெனாவட்டாக சொன்னவனின் வார்த்தையில் மட்டும் அவ்வளவு வீரியம் இருந்தது.
அதை உணர்ந்த கார்த்திக்கு சற்றே நடுக்கம் தான் எழுந்தது. ஆனால் அந்த நடுக்கம் தன் சகியை எண்ணியவுடன் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட சர்வாவின் முன்பு நிமிர்ந்து நின்றான்.
அவனது ஒரு நிமிட பயத்தையும், அதோடு சேர்ந்த நிமிர்வையும் கணக்கிட்டவனுக்கு அவனை இன்னும் சீண்டி விட தோன்றியது.
“ஆமா ஏதோ நல்லது கெட்டதுன்னு சொன்னியே.. அதை இப்போ சொல்லு... யாரோட நல்லதுகுன்னு சொன்னா எனக்கும் கொஞ்சம் வசதியா இருக்கும்...” என்று அவன் கேலி பேச்சு பேச, பல்லைக்கடித்தான் கார்த்திக்.
மிஸ்டர் சர்வா என்பதெல்லாம் காணாமல் போய், “யோவ்.... ஏற்கனவே உன்னாலயும் ஒரு பரதேசினாலயும் சகி பட்டதெல்லாம் போதாதா? மறுபடியும் அவ வாழ்க்கையில விளையாடா நினைக்காத. அது நான் இருக்கிற வரையிலும் நடக்காது. என்னை மீறி போனால் தான் சகியோட வாழ்க்கையில நீ விளையாட முடியுமே தவிர நான் இருக்கிறவரை உன்னால அது முடியவே முடியாது...!” என்று சொன்னவனை கூர்ந்து பார்த்தான் சர்வா.
தான் விட்ட ஒரு சொல்லில் சர்வா தன் வேலையில் இன்னும் ஆழ்ந்து போவான் என்று தெரியாமல் கார்த்திக் வார்த்தையை விட்டான்.
அதனால் தான் சர்வா அவனை ஆழ்ந்து பார்த்தான். அந்த பார்வையை கூட உணராமல் அவனது பார்வையை கொஞ்சம் கூட சலிக்காமல் எதிர் நோக்கியவன் நான் சகிக்காக எதையும் செய்வேன் என்கிற தோரணை கார்த்தியின் உடம்பில் நன்றாக தெரிய சர்வா அவனை இன்னும் கூர்ந்து பார்த்தான்.
உள்ளுக்குள் நக்கலாக சிரித்துக் கொண்டவன், வெளியே கடுமையுடன்,
“அப்படி தான்டா சகியோட வாழ்க்கையில விளையாடுவேன்... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ... நீ ஒரு பிள்ளை பூச்சி... உன்னை அடிச்சி போட்டா கேள்வி கேட்க கூட யாருமில்லாதவன். நீ என்னை எதிர்த்து பேசுறியா? போன முறை செய்ததை விட இந்த முறை சகியை இன்னும் அழ வைப்பேன். அதை நீ இருந்து பார்க்க வேணாம்...?” என்று நக்கலுடன் கேட்டான்.
சர்வாவின் போதாதா காலமோ என்னமோ அவன் பேசிய இந்த வாக்கியத்தை ஒரே சமயத்தில் இரு பக்கமும் இருந்த கதவின் வழியாக ஒரு பக்கம் சர்வாவின் தந்தை செல்வநாயகமும் இன்னொரு பக்கம் சகியும் கேட்டாள்.
கேட்டவளின் இதழ்களில் விரக்தி புன்னகை எழுந்தது... அதே சமயம் செல்வநாயகத்தின் முகத்தில் பரிபூரண புன்னகை எழுந்தது...
“என் மகன்...” என்று மீசையை முறுக்கிக் கொண்டார் அவர்.
“டேய் இந்த வாய் சவடால் எல்லாம் என்கிட்டே காட்டாத... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோடா. சகி முழுக்க முழுக்க இப்போ என்னோட கட்டுப்பாட்டில் தான் இருக்கா. என் வளையத்தை மீறி அவக்கிட்ட உன்னால நெருங்க முடியாது. அவ மறுபடியும் எனக்கு தான் சொந்தம். அதுவும் சில நாட்களுக்கு மட்டுமே...” என்றவன் இன்னும் கொஞ்சம் ஏளனமாக,
“சில நாட்களுக்குள்ள அவ சலிச்சு போயிட்டா வேணும்னா நான் அவளை உனக்கு விட்டு குடுக்கிறேன்... இவ்வளவு நெருங்கி கைக்கிட்டக்க வந்த பிறகு இன்னொரு முறை அவளை கைநழுவ விடமாட்டேன்...” என்று கார்த்தியை பார்த்து கண்ணடித்து சர்வா சொல்ல கேட்டுக்கொண்டு இருந்தவனுக்கு ஆத்திரத்தில் நரம்புகள் புடைக்க, அவனது சட்டையை கோர்த்து பிடித்து தன் உயரத்துக்கு எழுப்பியவனை பார்த்து தீ விழி விழித்தான்.
“என்னய்யா சொன்ன...? சலிச்சு போறவரை பக்கத்துல வச்சுக்குவியா? சகி யாரு எப்படி பட்டவன்னு தெரியுமாய்யா? ச்சீ உனக்காக போய் ....” என்று ஏதோ சொல்ல வந்தவன் அதை விடுத்து,
“உனக்கெல்லாம் அவ கிடைக்காம போனது நல்லதுக்கு தான். இல்லன்னா என் சகி உனக்கு பொண்டாட்டியாகி உன் காலடியில விழுந்து கிடந்து அவ படுற வேதனைக்கு அவ இப்படி இந்த மாதிரி தனியா இருக்கிறது எவ்வளவோ மேல்...” என்று ஆத்திரத்தில் கத்தியவன், சற்று நிதானித்து,
“என்னய்யா சொன்ன... கைக்கிட்டக்க வந்து அவளை அடையாம கை நழுவ விட மாட்டியா...?” என்று நக்கலுடன் கேட்டு சிரித்தவன்,
“உனக்கு இன்னும் அவளை பத்தி சரியா தெரியல... அவளை தவறா நெருங்க நினைச்சா கூட உன்னால நெருங்க முடியாது. ஏன்னா அவ அவ்வளவு பரிசுத்தம்...” என்றவனை இன்னும் ஏளனமாக பார்த்தான் சர்வா.
அவனது ஏளனத்தை பார்த்த கார்த்திக் இப்பொழுது சத்தமாகவே சிரித்தான்.
“என் சகியை நெருங்க உனக்கு தகுதியே இல்லய்யா... அதனால தான் கல்யாணம் வரை வந்த பிறகும் உன்னால அவளை நெருங்க முடியல.. இந்த ஒண்ணு போதாதா அவ எவ்வளவு பரிசுத்தமானவன்னு...” என்றவனின் பேச்சில் சர்வாவின் முகம் கருத்துப் போனது.
ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தன் கெத்து சிறிதும் குறையாமல் அவனது பிடியில் இருந்த தன் சட்டையை நிதானமாக விடுவித்துக் கொண்டு இருக்கையில் சென்று அமர்ந்தவன்,
“என் சட்டையை பிடிச்சதுக்கு இப்பவே உன்னை இந்த உலகத்துல இல்லாம பண்ணி இருப்பேன்... ஆனா உன் கூட விளையாடி பார்க்க தோணுது. அதனால தான் நீ இப்போ இந்த நிமிடம் உயிரோட இருக்கிற...” என்று கண்களில் ஏறிய சிவப்புடன் சொன்னவன், சட்டென்று தன் கோவத்தை விடுத்து நக்கலுடன்,
“அப்படியா சொல்ற...?” என்று சிரித்தான். பின் “அதை இப்படியும் சொல்லலாம்டா...” என்றவன், “உன் சகிக்கு...” என்று அழுத்தி மிக மிக திருத்தமாக சொன்னவன்,
“ரொம்ப நல்ல நேரமா அது இருந்து இருக்கலாம்... ஆனா இப்போ உன் சகிக்கு கேடு காலம் ஆரம்பிச்சிடுச்சு... அதனால தான் மறுபடியும் என் கண்ணுல பட்டு இருக்கா... இல்லன்னா எங்களோட சந்திப்பு நடந்து இருக்காதே... அதோட அவ எனக்கு கீழ என் அலுவலகத்துலையே வேலைக்கு வந்து இருக்க மாட்டாடா...” என்று எள்ளி நகையாடினான்.
அவனது அந்த கொக்கரிப்பை பார்த்த கார்த்திக்கு இரத்தம் கொதிக்க, அவனை கன்னம் கன்னமாய் அறைய போக அவனது இரு கரத்தையும் தன் முரட்டு கரத்தால் உறுதியாக மடக்கிப் பிடித்தவன்,
“நீ சிறைக்கு போய் தான்டா முரடனா மாறி இருக்க... ஆனா நான் அப்படி இல்லை... என்னை எதிர்க்கிரவனை அது யாரா இருந்தாலும் விட்டு விளாசி தள்ளி தான் இந்த வலு வந்து இருக்கு... வெளியே தெரியாத அளவுக்கு உள்ளுக்குள் உன்னை விட நான் முரடன்... இந்த பிசினெஸ் மேனுக்குள்ள ஒரு பக்கா கிரிமினல் ஒளிஞ்சி இருக்கான். அவனை பார்க்க நினைக்காத...” என்று எச்சரித்தவன்,
“உன் சகி எனக்கு தான். அதுவும் எனக்கு சலிக்கிற வரை தான். அதுக்கு பிறகு குப்பையா வீசி எரியிறேன்... வந்து பொறுக்கிட்டுப் போடா...” என்று வெஞ்சினத்துடன் உரைத்தான் சர்வேஸ்வரன்.





