சர்வா ஊட்டியில் இருந்த தன் அலுவலக அறையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அதுவும் சகியை நினைக்க நினைக்க சர்வாவுக்கு அவ்வளவு கோபம் கோபமாக வந்தது. ஏனோ அவளை தான் இழந்து விட்டதாக முதல்முறையாக எண்ணியதாலோ என்னவோ அந்தக் கோபம் அவனுக்குள் மிக ஆழமாக வேரூன்றிப் போனது இடைப்பட்ட நாளில். தான் அவளுக்காக ஏங்கிக் கொண்டு இருக்கிறோமோ என்று உணர்ந்தவன் தன்னைத்தானே கடிந்து கொண்டாலும் அதை அவளிடம் காட்டாமல் மிக சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டான்.
ஆனால் அவளுக்கு தான் ஒரு பொருட்டாக கூட இல்லாமல் இத்தனை வருடங்களையும் கடந்து சென்று இருக்கிறாளே என்ற கோவம் அவனுக்குள் மிக அதிகம் இருந்தது.
அதை அவளிடமே காட்ட தன் சினத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டான். நீ எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்பட்டு கொள் எனக்கு உன்னுடைய கோபம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிற நிலையிலேயே அவள் இருந்தாள்.
அவளது அந்த நிமிர்வு அவனை வெகுவாக புரட்டிப் போட்டது என்றே சொல்லலாம். கல்யாணத்திற்கு முன்பு சில பல நிமிடங்கள் தொட்டு பேசி உறவாடி சென்று இருந்தாலும் அந்த தாக்கம் இன்னும் அவனுள் இருக்கத்தான் செய்தது.
ஏற்கனவே ஒரு மனைவி இருந்தும், அவளுடன் இரு பிள்ளைகளை பெற்றெடுத்திருந்தாலும், அவள் பாதியிலே தன்னை விட்டுச் சென்றிருந்தாலும், இன்னும் சகிக்கான ஒரு இடம் தன்னுள் அப்படியே இருப்பதை அவன் பரிபூரணமாக உணர்ந்தான். அந்த உண்மையை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிலேயே அவனது சினம் இன்னும் இன்னும் பெருகியது. அதனால் காரணமே இல்லாமல் அவளிடம் தன் கோபத்தை காட்டினான்.
தான் அன்றைக்கு பட்ட அவமானம் அவனுக்கு கண் முன்னாடி வந்து போனது என்றாலும் தன்னுடைய ஏமாற்றம் அதிகம் என்பதை உணர்ந்தவனுக்கு அவளை மீண்டும் அடையத் தோன்றியது. ஆனால் தான் இருக்கும் சூழல் அதற்கு ஒத்துப் போகாமல் இருக்க தன் ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டவன் அவளிடம் எரிந்து விழுந்தான். அதையெல்லாம் சிந்தித்து பார்த்தவனுக்கு இடைப்பட்ட நாளில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் கண் முன் வந்தது...
அப்போதிருந்த சகியின் நிலையும் இப்போது இருக்கும் அவளது நிலையையும் ஏனோ மனம் ஆராயத் துடித்தது. அவளைப் பற்றிய முழு தகவல்களையும் திரட்டினான். ஏன் திருமணத்தை விட்டு போனாள் என்பதையும் ஐந்து வருடங்களுக்கு முன்பான நிலையிலிருந்து தற்போதைய நிலை வரை எல்லா தகவல்களையும் திரட்டி கொண்டான்.
“சார் இதோ நீங்க கேட்ட டீடைல்ஸ்...” என்று அவனுடைய பியே கிரி கொண்டு வந்து கொடுக்க மணியை பார்த்தான். இரவு எட்டு மணி என்று காட்டியது. பிள்ளைகள் இருவரும் இன்று விரைவாக உறங்கி விட்டதை கேமராவில் பார்த்தவன் அலுவலகத்திலே இருந்து விட்டான். அலுவலகத்தில் இவர்கள் இருவரை தவிர வேறு யாருமில்லை. கூட இருந்த அவனையும் போக சொல்லியவன் தன் மேசையில் உள்ள கோப்புகளை மிக நிதானமாக அலசி ஆராய்ந்தான்.
அவனது விழிகளில் தெரிந்த ஜோலிப்பை பார்த்து எதிரில் இருப்பவர்கள் சற்றே நடுங்கி தான் போவார்கள். அந்த அளவுக்கு அவனது கண்களின் ஜொலிப்பு இருந்தது. ஒவ்வொரு ஏடாக அவன் பிரித்து படிக்கும் பொழுது உண்டான உணர்வுகளில் தன்னை அடக்கிக் கொண்டு முழுவதுமாக எல்லாவற்றையும் படித்து முடித்தான். என்ன நிலையில் தான் இருக்கிறோம் என்று புரியவில்லை.
தான் எதை நோக்கி இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்றும் எதுவும் புரியவில்லை அன்றைக்கு. எதற்காக இந்த காரியம் ஏற்கனவே எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கும் போது இது ஏன் தேவையில்லாத ஆராய்ச்சி என்று அவனது மனமே அவனை கேள்வி கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு எந்த பதிலும் கூறாதவன் நான்கு வருடங்களுக்கு பிறகு முதன்முதலாக தன் வீட்டில் சகி காலடி எடுத்து வைத்த போது தன் அம்மா சகியை நடத்திய விதம் மனதுக்குள் வந்து போனது.
அதோடு அவள் வந்த செய்தியை கேட்டு அடித்து பிடித்துக் கொண்டு வந்த தன் தந்தையின் நிலையையும் உணர்ந்தவனுக்கு எங்கோ முடிச்சு இருப்பது போல உணர்ந்தான். இதழ்களில் மெல்லிய புன்னகையும் பரவியது.
முதல் முதலாக சகி சர்வாவின் வீட்டுக்கு வந்த அன்று அடித்து பிடித்துக் கொண்டு வியர்வையில் நனைந்த படி வந்த தன் தந்தையை கண்கள் இடுங்க பார்த்தான்.
ஆனால் அவனிடம் எந்த விசாரணையும் செய்யாமல் தன் மனைவியின் முகத்தை பார்த்தவர் கவிதாவுக்கு கண்களை காட்டி தனியே அழைத்து சென்று என்ன என்பது போல அவர்களுக்குள் குசுகுசுவென்று பேசிய பின் ஒன்றும் தெரியாதவராய் சர்வாவிடம் வந்து
“என்ன சர்வா ஆச்சு? அம்மா என்னவோ சொல்றா? கண்டவங்களும் வீட்டுக்கு வந்துட்டு போறதெல்லாம் நல்லாவா இருக்கு. இங்க என்ன தான் நடக்குது. நான் உன் அப்பா என்பதை மறந்துட்டியா...? இல்ல அன்றைக்கு அந்த கல்யாண மண்டபத்தில் அத்தனை பேர் முன்னிலையிலும் அவ...” என்று அவர் சொல்ல தன் தந்தையை கூர்ந்து ஒரு பார்வை பார்த்தான்.
அதில் சற்றே தடுமாறி போய் சட்டென்று மாற்றிகொண்டார். “அந்த பொண்ணு நம்மளை அவமனப்படுத்திட்டு போச்சே... எப்படி நீ மறந்த... நீ ஆண்பிள்ளை தானே... உன்னை அவமானப் படுத்திட்டு போனவளையே நடு வீட்டுக்குள்ள வரை வர்ற அளவுக்கு விட்டு வச்சு இருக்கியே சர்வா...? சேம் ஆன் யூ...” என்று அவர் நிதானமாக சொல்வது போல இருந்தாலும் அதில் ஒரு படபடப்பு இருப்பதை உணர்ந்துக் கொண்டவன்,
“அவங்க...” என்பதில் மிக அழுத்தம் கொடுத்தவன்,
“ஜஸ்ட் என்னோட எம்ப்ளாயி. சோ நீங்க அவங்களை ஒரு எம்ப்லாயியா மட்டும் பார்த்தா போதும்” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன்,
“நான் ஆண்மகன் தான்னு நிரூபிக்க இதோ என்னோட இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். சோ அந்த சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்... அதே போல அவமானம் உங்களுக்கு இல்லை... எனக்கு மட்டும் தான் அவமானம்... சோ அவளை எப்படி பழிவாங்க வேண்டுமோ அப்படி வாங்குவேன். எனக்கு நீங்க டியூசன் எடுக்க வேணாம்...” என நறுக்கென்று பதில் சொன்னான்.
“அதில்ல சர்வா...” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க,
“இது என்னோட விசயம்... இதை நான் பார்த்துக்குறேன்... எனக்கு அவமானத்தை தேடி கொடுத்துட்டு யாராலையும் நிம்மதியா இருந்திட முடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். எனக்கு பதில் சொல்லியே ஆகணும்... சோ ஸ்டே அவே...” என்றவன் தன் பிள்ளைகளிடம் ஐக்கியம் ஆகிவிட்டான்.
தாத்தா, பாட்டி, அம்மா என்று எந்த ஒரு உறவும் அந்த இரு பிள்ளைகளையும் அரவணைக்க தவறி இருக்க ஒட்டு மொத்தமாய் அவர்களை தாங்கிக் கொண்டான் சர்வா...
“உங்களுக்கு நான் மட்டும் போதும் டா என் செல்லக் குட்டிங்களா...” என்று அவர்களை உச்சி முகர்ந்து தலையில் வைத்துக் கொண்டாடினான்.
கவிதாவிடமும் செல்வனாயகனிடமும் ‘நீங்கள் ஏன் என் பிள்ளைகளை தூக்கி கொஞ்சவில்லை’ என்று கேட்க மாட்டான். ஆதுக் குட்டி தவழும் நாளில் அவர்களை நோக்கி சென்று கால்களை கட்டிக்கொள்ள அவனை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் தன்னை விட்டு பிரித்து எடுத்த கவிதா வேலையாட்களை சத்தம் போட்டார்.
“இவனை பார்த்துக்க தான் உங்களை எல்லாம் வேலைக்கு வச்சி இருக்கிறேன். இப்படி வேலை நேரத்துல கொஞ்சம் கூட கவனமே இல்லாமல் இப்படியா இருப்பீங்க. இன்னொரு முறை இவன் என்கிட்டே வர கூடாது... வந்தா நடக்குறதே வேறையா இருக்கும்” என்று சத்தம் போடுவதை பார்த்து விட்டான் சர்வா. அதோடு இவர்களை பார்த்தாலே முகம் சுழித்துக் கொண்டு ஒதுங்கி போவதை கவனித்து விட்டு பெற்றவர்களின் பக்கம் கூட பிள்ளைகளை விட மாட்டான்.
தான் பெற்ற பிள்ளையையே ஒழுங்காக வளர்க்காமல் ஊர் சுற்றி வந்த பெற்றவர்கள் தன் பேரப்பிள்ளைகளையா வளர்க்க போகிறார்கள் என்று ஏளனமாக சிரித்துக் கொண்டான்.
சர்வாவின் தந்தை சர்வாவிடம் வீட்டில் இந்த விசாரணையை முடித்துக் கொண்டவர் அடுத்த நாள் கம்பெனிக்கு வந்தார்.
செல்வநாயகம் இப்படி நிறுவனத்துக்கு வருவது மிக இயல்பு தான் என்றாலும் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வருவார். ஏற்கனவே இந்த மாதத்தின் ரவுண்ட்சை முடிந்திருந்தார். அதனால் இன்று வர வேண்டிய அவசியம் எதுவும் இல்லை அவருக்கு.
ஆனால் இப்படி இவர் வந்திருக்கிறார் என்றால் ஏதாவது காரியம் இல்லாமல் இருக்காது என்று எல்லோருக்கும் தெரியும். சகி கால் வலியோடு அன்றைக்கு வேலைக்கு வந்து இருந்தாள். அவளை அதிகம் நடக்காதவாறு சர்வ பார்த்துக்கொண்டான் என்றாலும் அவனுக்கு வேண்டிய வேலைகளை அவளிடம் பாரபட்சம் பார்க்காமல் வாங்கிக் கொண்டான்.
சர்வாவின் அறைக்குள் இருவரும் வேலை பார்த்துக் கொண்டு இருக்க கதவை அனுமதிக்காக தட்டி விட்டு உள்ளே நுழைந்தார் செல்வநாயகம். அவர் வருவார் என்று கணித்தவனுக்கு இதழோரம் மெல்ல ஒரு குறுநகை எழுந்தது. அதை யாரும் அறியும் தன் இதழ்களுக்குள் புதைத்துக் கொண்டவன்,
“வாங்கப்பா...” என்று அவரை நிதானமாகவே வரவேற்றான். அவனது வரவேற்பில் எதையும் காட்டிக் கொள்ளாமல் உணர்வு துடைத்த முகத்துடன் தலையசைத்தவர் அவனது அறையிலேயே இன்னொரு மேஜை போட்டு அவனது கண் எதிரிலே சகியை அமர்த்திருப்பதை கண்டு ஒரு கணம் தூக்கி வாரி போட்டது செல்வநாயகத்திற்கு.
அவரது இந்த உணர்வை அவதானித்தவன் மீசைக்குள் தன் சிரிப்பை மறைத்துக் கொண்டான். தன் மகனின் கண்ணுக்கு தன் உணர்வுகளை காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும் முயற்சி செய்தவர், அவனை பார்த்து ஒரு புன்னகை சிந்தினார்.
பின் சகியை பார்த்து ஒரு பார்வையை வீசினார். “எப்படிம்மா இருக்கிற?” அவளிடம் கேட்க, அதை உணர்ந்து,
“குட் மார்னிங் சார்... அண்ட் ஃபைன்...” என்பதோடு நிறுத்திக் கொண்டாள். அவளது அந்த கண்ணியம் அவருக்கு பிடிக்கவில்லை. ‘இதுபோல எத்தனையோ பேரை நான் கடந்து வந்திருக்கிறேன்...’ என்று அவர் ஏளனமாக எண்ணிக் கொண்டு அவளைப் பார்த்து அதே ஏளன சிரிப்பை சிந்தினார். அதை கண்டு கொண்டாலும் அவள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
‘நீ என்னுடைய முதலாளி நான் உன்னிடம் சம்பளம் வாங்கும் தொழிலாளி. உனக்கும் எனக்கும் அது மட்டுமே தொடர்பு. அதை மீறி உன்னிடம் பேச்சு வைத்துக் கொள்ள எனக்கு எந்த அவசியமும் இல்லை...’ என்பது போல அவள் கம்பீரமாக நிமிர்வுடன் நின்றாள்.
அந்த நிமிர்வை கண்டவருக்கு ஏனோ அவள் மீது அளவுக் கடந்த வஞ்சனை எழுந்தது. அந்த வஞ்சனை எண்ணத்தை அவளிடமே தன் கண்களில் காட்டினார் செல்வநாயகம். அதை ஒரு கணம் உள்வாங்கிக் கொண்டாலும் அவரை விட மிக மிக ஏளனமாக அவரைப் பார்த்து வைத்தாள்.
இருவரின் பார்வைகளையும் அவதனித்த சர்வாவுக்கு ஒரு புன்னகை எழுந்தது. சற்று மர்மமாகவே இருந்தது இருவரிடமும் இருந்த பார்வை பரிமாற்றங்களை பார்த்த சர்வவுக்கு. இருந்தாலும் அதை எதையும் காட்டிக் கொள்ளாமல் அவன் இயல்பாக இருப்பது போல நாற்காலியில் கால் மேல் கால் போட்டு மிக நிதானமாக அமர்ந்திருந்தான். ஆனால் உள்ளுக்குள் அவனது நிதானம் மிக மிக மோசமாய் கெட்டுப் போயிருந்தது.
தன் மகனுக்காக ஏற்பாடு செய்திருந்த திருமணத்தை விட்டு ஓடி போன பெண்ணவளை நீண்ட நாள் கழித்து பார்த்தால் அளவுக்கதிகமாக கோபம் இருக்கும் தான். அது அப்படியே வெளிப்படுமே தவிர ஒரு பூசல் கூட இருக்காது. தன் தாயிடம் இருந்த அதிகப்படியான கோவம் கூட இவரிடம் இருக்கவில்லை என்பதை நன்கு குறித்து வைத்துக் கொண்டான்.
அதோடு நேற்றைக்கு அந்த குதி குதித்தவர் இன்று வெறுமென நலம் விசாரிப்புடன் நிறுத்திக் கொண்டவரை கூர்ந்து கவனித்தான்.
அதுவும் அவர் கொண்ட வெஞ்சினமும் ஏளனமும் வெளிப்படக் கூடாது என்று மிக சிறப்பாக நடித்துக் கொண்டு இருந்ததை குறித்துக் கொண்டான். அதை சகியின் விவரங்கள் அடங்கிய கோப்பையை வசித்த பிறகு எழுந்த சற்றே யோசித்தான். யோசித்துப் பார்த்தவனுக்கு தனது சிந்தனை மிக சரியான பாதையில் தான் பயணிக்கிறது என்று தோள் தட்டிக் கொண்டான்.
அதன் பிறகு தான் சர்வா ஊட்டி உல்லாச பயணத்துக்கு ஏற்பாடு செய்தான். அதை தொடர்ந்து சகியை சில பல அலுவலக காரணங்களை காட்டி தன்னுடனே வைத்துக் கொண்டான். அவன் திட்டத்தின் படி பிள்ளைகளும் அவளுடன் நன்கு ஒட்டிக் கொண்டது. சகியும் பிள்ளைகளிடம் பினைந்துக் கொண்டாள்.
அதே போல இருவரது நெருக்கத்தையும் அதிகப்படுத்த வேண்டும் என்கிற அவனது திட்டமும் வெற்றி அடைந்தது. எல்லாமே திட்டம் தான். சகியை நெருங்கி அவளை தன் வலையில் வீழ்த்த எண்ணினான். அவளும் வீழ்ந்தாள். விழ வைத்தான் சர்வா. அதை எல்லாம் ஒரு வெஞ்சினத்துடன் எண்ணிப் பார்த்தவன் இன்னும் தன் வெறியாட்டத்தை ஆட ஒத்திகை பார்த்துக் கொண்டான்.
இதெல்லாம் பத்தாது... இன்னும் நிறைய நிறைய இருக்கு என்று அவனது மனம் தன் பெற்றவர்களையும் சகியையும் எண்ணி தீரா பகையான வெஞ்சினத்தை கொண்டான்.
ஊட்டி உல்லாச பயணம் சிறப்பாக நிறைவு பெற அனைவரும் அவரவர் வீடு திரும்பினார்கள்.
எப்பொழுதும் போல அலுவலகம் கிளம்பிய சகியை முறைத்துப் பார்த்தான் கார்த்திக். அவனது கோவம் நியாயமானது என்றாலும் அவனிடம் சொல்லி புரியவைக்க இயலாத தன் கையறு நிலையை எண்ணி வேதனைக் கொண்டவள்,
“கார்த்திக் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல... ஆனா உன் கண் முன்னாடி நடக்கிறது அத்தனையும் உண்மை.. உன்னை வேதனை படுத்த என்னால முடியாது. ஆனா உன்னை மீறி சில விசயங்கள் நான் செய்து தான் ஆகணும். நீ என் மேல கொண்ட நம்பிக்கையை நான் எப்பொழுதும் நழுவ விட மாட்டேன்...” என்று சொன்னவளை கூர்ந்து பார்த்தான்.
இதையெல்லாம் இன்னொரு இருக்கையில் அமர்ந்து கேட்டுக்கொண்டு இருந்த கிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் தன் மகள் மீது கொண்ட நம்பிக்கையால் அவர் அமைதியாக இருந்தார். ‘தன் மகள் வழிமாறி போக எண்ணினாள் எப்பொழுதோ போய் இருக்கலாமே... இப்பொழுது தான் போகணும் என்கிற அவசியம் இல்லையே... அதனால் கண்டிப்பாக இதற்கு பின்னால் ஏதோ இருக்கிறது’ என்று அவரின் உள்மனம் சொல்லியது.
அதை நம்பியவர் தன் மகளை நோகடிக்கும் வண்ணம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அதுவும் சர்வாவுடன் தானியாக போட்டிங் போய் விட்டு வந்த பின்பும் எந்த கேள்வியும் கேட்கவில்லை.





