அவர்கள் இங்கே தான் வர இருக்கிறார்கள் என்கிற சிந்தையில்லாமல் சர்வாவும் சகியும் முன்னாடி இருந்த படகில் ஏறி சென்று விட்டார்கள். அதனால் கரையில் இருந்த அலுவலர்களையும், அலுவலர்களது குடும்பங்களையும் கவனிக்க தவறினார்கள் இருவரும். அதில் தன் தந்தையும் தன் குடும்பமும் இருக்கிறது. முக்கியமாக கார்த்திக் இருக்கிறான் அவளது தங்கை இருக்கிறாள் என்பது மறந்து போனாள் சகி.
நால்வரும் ஒன்றாக அமர்ந்து போட்டிங் போக, ஆது குட்டியை சர்வாவும் இனி குட்டியை சகியும் வைத்துக் கொண்டு ஒரே குடும்பமாய் ஏரியை வளம் வர ஆரம்பித்தார்கள். சர்வா அவளை இரகசிய சீண்டல் செய்ய, எழுந்த கோவத்தை கட்டுப் படுத்திக் கொண்டு அவனை முறைக்க முடியாமல் ‘ஈஈஈ’ என்று பல்லைக் காட்டினாள்.
அவளது இந்த செயலை கண்டு பல்லைக் கடித்தான். “ஹேய் ரொம்ப பண்ணாதடி... என்கிட்டே ஏற்கனவே முத்தம் வாங்கினவ தானே.. ஏதோ வேண்டாத ஆள் கை மேல பட்ட மாதிரி ஓவரா பண்ற...? லுக் எனக்கு ஒண்ணும் உன்னை கொஞ்சனும்னு ஆசை எல்லாம் கிடையாது...” என்று அவன் பல்லைக் கடிக்க, விழிகளாலே அவனை எரித்தவள், அதன் பிறகு தன்னுடைய எந்த எதிர் பார்ப்பையும் அவனிடம் காட்டவில்லை. முக்கியமாக அவனது தொடுகையை சகித்துக் கொள்வது போல எந்த கிறுக்கு வேலையையும் அவள் செய்யவில்லை. அவள் அவளாக இருந்தாள்.
ஆனால் சர்வா அப்படியே அவளை விட்டுவிடவில்லை. முன்பை விட சற்று அழுத்தமாக அவளது இடையை பற்றினான். அழுத்தமான அவனது நீண்ட நாள் கழித்து தொட்ட முதல் தொடுகையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்துக் கொண்டு வந்தது சகிக்கு.
ஊட்டி குளிருக்கு மிக தோதாக அவனது சூடான கரம் அவளில் படிந்து இருக்க அந்த உணர்வு கொடுத்த தாக்கம் அவளை அடியோடு சாய்த்துப் போட்டது என்றாலும் முறையற்ற இந்த செயல்களில் சற்றே குறுகி தான் போனாள்.
அவளது உள்ளக் கொதிப்பை உணர்ந்தாலும் அவனுக்கு என்ன வேண்டுமோ அதை செய்துக் கொண்டான். ஒரு வழியாக போட்டிங் முடிய படகு கரையை தொட்டது.
கரைக்கு வந்து படியேறி மேலே வந்த பொழுது அங்கு ஒட்டு மொத்த குடும்பம் கைக்கட்டியபடி தன்னை பார்த்துக் கொண்டு இருந்ததை பார்த்தவளுக்கு அவமானத்தில் கூனி குறுகிப் போனாள்.
குற்றம் சாட்டிய மூவரின் விழிகளையும் சந்திக்க முடியாமல் வேதனையுடன் நின்றிருந்தவளிடம் கார்த்திக் வேகமாக வந்து பேச ஆரம்பிக்க,
“கைல குழந்தை இருக்கு... முதல்ல குழந்தையை கவனிக்கணும்...” என்று சொல்லி சர்வா இருவருக்கும் இடையில் நின்று தன் பின்னாள் சகியை மறைத்துக் கொள்வது போல செய்து கார்த்திக்கை தள்ளி வைக்க அவ்வளவு அத்திரம் வந்தது அவனுக்கு.
பல்லைக் கடித்து சர்வாவை முறைத்தான். அவனது முறைப்பை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மேற்கொண்டு பேச வர,
“சகி கையில குழந்தை இருக்கு கார்த்திக்... அதோட கொஞ்சம் விவரம் தெரியும் குழந்தையும் இருக்கான்... புரிஞ்சி நடந்துக்கணும்” என்று ஆதுவை சுட்டிக்காட்டிய கிருஷ்ணன், “இப்பொழுது எதுவும் பேச வேண்டாம்” என்று அவர் கார்த்தியை அமைதி படுத்த அவன் திமிறிக்கொண்டு இருந்தான். அவரது நிதானம் அவளுக்கு சற்று தெம்பைக் கொடுத்தது. புரிய வைத்துவிடலாம் என்று. ஆனால், கார்த்திகை பார்த்த பொழுது அவளது நிதானம் தொலைந்து போனது என்று தான் சொல்ல வேண்டும்.
அவனது கண்களில் தெரிந்த கோபம் கண்டு தன்னை தானே மிகவும் மோசமாக நிந்தித்துக் கொண்டாள். “இது தான் சர்வா இல்லையா?” என்று அவன் ஒற்றை வாக்கியத்தில் தன் ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் கொட்டி அவன் கேட்க,
“கார்த்திக் ப்ளீஸ்... நான் சொல்ல வரத ஒரு நிமிடம் கேளு..” என்று அவள் அவனை சமாதானப்படுத்த பார்க்க,
இந்த புறம் சர்வாவோ, “குழந்தை அழுகிறாள். என்னன்னு பாரு...” என்று தன் அதிகாரத்தை அவன் பிரயோகப்படுத்த கார்த்திக் வெளிப்படையாகவே சர்வாவை முறைத்தான்.
‘குழந்தையை கவனி’ என்று சர்வா தன் உரிமையை நிலைநாட்ட பார்க்க, அதுவும் குழந்தையை முன்னிறுத்தி அவன் நிலை நாட்டுவதைக் கண்டு கார்த்திக்கு ஆத்திரமாத்திரமாய் வந்தது.
“இப்போ இங்க என்னால எதுவும் பேச முடியாது. முதல்ல ஒழுங்கா குழந்தையை அவன் கிட்ட குடுத்துட்டு அறைக்கு வா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...” என்று சர்வாவை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கார்த்திக் தன் உரிமையை நிலை நாட்ட பார்க்க,
“சாரி மிஸ்டர் கார்த்திக். அவளுக்கு...” என்று அவளுக்கு என்பதில் கொஞ்சம் அதிகமாகவே அழுத்தம் கொடுத்து, “வேலை இருக்கு. இப்போதைக்கு அனுப்ப முடியாது...” என்று சர்வா திமிராக சொல்ல, அந்த திமிரை குறைத்து போட கார்த்திக் நினைத்தான். ‘அது உன்னால என்னைக்கும் முடியவே முடியாது கார்த்திக்...’ என்று சர்வா கண்களாலே அவனுக்கு உணர்த்தினான்.
இருவரின் எண்ணங்களையும் உணர்ந்த சகிக்கு பெரும் வேதனையாய் போனது. ஒரு பக்கம் கார்த்திக் இன்னொரு பக்கம் சர்வா. அவளால் யாரை தான் விட்டுக் கொடுக்க முடியும். யாரையும் விட்டுக் கொடுக்க முடியாது இருதலைக்கொல்லி எறும்பாய் அவள் தவிக்க, அவளது தவிப்பை பார்த்த கிருஷ்ணனுக்கு பாவமாய் போனது.
ஒரு பக்கம் தன் மகளுக்கு பார்த்து பார்த்து ஒரு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு மாப்பிள்ளை ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவன் சர்வா. அவனை மீண்டும் மாப்பிள்ளையாக பெறுவதற்கு தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணினார். விரலிடுக்கில் நழுவி போன சந்தர்ப்பம் மீண்டும் தனக்கு கிடைத்திருப்பதை எண்ணி அவர் ஒரு கணம் உள்ளம் மகிழ்ந்தார். ஆனால் இன்னொரு பக்கம் நாலு வருடமாக மகன் போல பழகிய கார்த்திக்.
அவர் யாருக்கென்று பார்ப்பார் ஒரு பக்கம் மாசுக் குறையில்லா மாப்பிள்ளை இன்னொரு பக்கம் குணத்தில் குறையில்லா மகன். அவரால் யாருக்கும் யாரையும் விட்டுக் கொடுக்க முடியாது. எனவே தன் மகள் என்ன முடிவெடுக்கிறாளோ அதற்கு தானும் கட்டுப்பட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவர் சகிக்கி முழு சுதந்திரம் கொடுத்தார்.






