தன்னிடத்துக்கு வந்தவளுக்கு இப்பொழுது வரையிலும் அவனின் மூச்சுக் காற்று தன் மீது படிந்து இருப்பது போலவே தோன்றியது... மூச்சை அடைத்துக் கொண்டு வருவது போல இருந்தது. சர்வாவின் தொடுகையில் மறந்து போன, கடந்து வந்த எல்லாமே மீண்டும் நினைவுக்கு வருவது போல இருந்தது.
நான்கு வருடங்களுக்கு முன்பு சகிக்கும் சர்வாவுக்கும் கல்யாணம் பேசி முடித்து, புடவை எடுக்கப் போகும் சமயத்தில் இவளை மட்டும் தனியாக அவனது பைக்கில் அழைத்துச் சென்றான். முதல் முறையாக வேற்று ஒரு ஆணின் அருகாமையில் அமர்ந்து செல்வது இதுதான் முதல் முறை சகிக்கு. லேசான தடுமாற்றம் இருந்தது அவளிடம்.
அதை உணர்ந்தவனுக்கு சற்று பெருமிதமாகத் தான் இருந்தது. ஏனெனில் கைப்படாத மலரின் மீது எல்லோருக்கும் ஒரு மோகம் இருக்கும் அல்லவா... அந்த மோகம் அவனிடமும் இருந்தது. தன் அருகில் அமரவே அவள் இவ்வளவு தடுமாறுகிறாள் எனில் அவளை சின்னதாக சீண்டிவிட்டால் என்ன மாதிரியாக உணர்வுகளை வெளிப்படுத்துவாள் என்று கற்பனை செய்து பார்க்க அவனது மீசை துடித்தது ஆசையில்.
கற்பனையில் செய்ய நினைத்ததை நேரடியாக செய்து பார்க்க சந்தர்ப்பமும் வாய்த்தது. எல்லோரும் புடவை எடுப்பதில் பிஸியாக இருக்க இவன் அவளுக்கு கண்சாடை காட்டி விட்டு ட்ரையல் ரூமுக்கு சென்றான். அவளுக்கு அது சுத்தமாக புரியவில்லை.
நீண்ட நேரமாக ட்ரையல் ரூமில் அவன் காத்திருந்த போதும் சகி வராமல் போக, ‘என்ன இவ கொஞ்சம் கூட மரியாதை இல்லாம இப்படி நடந்துக்குறா...? கூப்பிட்டு எவ்வளவு நேரம் ஆகுது... ஏன் வரமாட்டிக்கிறா கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு திமிரா இருக்கிறாளே...’ என்று அவனுக்கு அவள் மீது தவறான எண்ணம் முதல் சந்திப்பிலே மனதில் பதிந்து போனது.
அவனுக்கு அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. முழு கோபத்தையும் அவளிடம் காட்டுவதற்காக வெளியே வர அவள் கைகளை பிசைந்துக் கொண்டு நின்று இருந்தாள். அவளது தோற்றம் எதையோ உணர்த்த அவளிடம் நெருங்கி ‘என்ன?’ என்று கேட்க முடியாமல் சுற்றிலும் ஆட்கள் இருப்பதை பார்த்து அவளை நேரடியாக நெருங்கவும் முடியவில்லை. ஆனாலும் அவளது பார்வை அவனை விட்டு அகலவும் இல்லை. ஒரு முத்தத்துக்கு தன்னை ஏங்க விட்டவளை அப்படியே விட்டுவிட தான் மனம் எண்ணியது. ஆனாலும் அவனையும் மீறி அவனது கால்கள் அவளை நோக்கி சென்றது.
யாருடைய கவனத்தையும் கவராமல் குவித்து வைத்திருந்த புடவை குவியல்களை பார்த்தபடி அவளது காதோரம் சரிந்து நெருங்கி ‘என்ன ஆச்சு...? முகம் ஒரு மாதிரி இருக்கு? நான் வர சொல்லிட்டு போனேனே ஏன் வரல?’ என்று தன் ஆளுமையான குரலில் அவளிடம் கேட்க,
அவளும் அதே போல இரகசிய குரலில் “எங்க வர சொன்னிங்க? எனக்கு எதுவுமே தெரியலையே...” என்று அவள் தவிப்பாக உரைக்க, ஒரு கணம் புடவையை பார்த்துக்கொண்டு இருந்தவன் அவளை ஏறிட்டான்.
“ட்ரையல் ரூம் தெரியாதா உனக்கு? அங்கதான் உன்னை வர சொன்னேன்...” என்று அவன் பல்லை கடித்து கூற,
“சாரி நீங்க சொன்னது எனக்கு புரியல... அதனால தான்...” என்று சகி தயக்கத்துடன் உரைக்க, அவளது அந்த இன்னசென்ட் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன தான் வெளிநாட்டில் மேற்படிப்பு படித்து ஒரு நிர்வாக திறமை தனக்குள்ளே வைத்து இருந்தாலும் அவளிடம் இருக்கும் இந்த இன்னசென்ட்டை இரசித்தான். அவளை சீண்டி பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இன்னும் வலுப்பெற,
“சரி வா...” என்று கரத்தில் ஒரு புடவையை எடுத்துக் கொண்டு தன் மாமனாரிடம் மட்டும் சென்று அனுமதி வாங்கி விட்டு ட்ரையல் ரூமுக்கு சகியை அழைத்துக் கொண்டு சென்றான். அங்கு சென்றவுடன் அவள் மீது பாயத்தான் அவனுக்கு தோன்றியது. ஆனால் அவளை அவ்வளவு சுலபமாக நெருங்க முடியவில்லை. இரு கரங்களையும் கட்டிக்கொண்டு “என்ன?” என்பது போல அவள் கூர்மையான ஒரு பார்வை பார்க்க, ஒரு கணம் அவளது இந்த நிமிர்வு கூட பிடித்துப் போனது.
தன்னுடைய வருங்கால கணவன் என்கிற நிலையில் கூட அவளது கம்பீரமும் நிமிர்வும் குழையவே இல்லை. குழையாத அவளது தேகத்தில் ஒரு இளக்கம் கூட இல்லாமல் போனதை உணர்ந்தான். அதோடு இந்த எதிர்நோக்குதல் அவனை இன்னுமே அடித்து சாய்த்தது.
முதல் முறை பைக்கில் ஏறிய தருணத்தில் இருந்த நெகிழ்வு இப்பொழுது அவளிடம் இல்லாததை கண்டு புருவம் சுருக்கினான். அதை அவளிடம் கேட்கவும் செய்தான்.
“என்ன ஆச்சு பைக்ல ஏறும் போது இருந்த ஒரு நெகிழ்வு உன்கிட்ட இப்போ இல்லையே...?” என்று கேட்க,
“அப்போது இருந்த நீங்களும் இப்போது இருக்க நீங்களும் ஒன்றா?” என்று அவள் திருப்பி கேள்வி கேட்டாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
அதை புரிந்து கொண்டவன் “அப்போ வீடுன்னா ஓகேவா...?” ஒரே வார்த்தையில் அவன் திருப்பி கேள்வி கேட்க, சம்மதம் என்பது போல அவளது தலை அசைந்தது. அப்போது கூட அவளிடம் இருக்கும் நேர்மை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நேர்மை கொடுத்த நிமிர்வு அவனை அடியோடு புரட்டிப் போட்டது. மனைவிக்குரிய குணங்கள் அவளிடம் இருந்தது என்றாலும் ஒரு ஆளுமை பண்பும் அவளிடம் சேர்ந்தே இருப்பதை உணர்ந்தவனுக்கு தனக்கு மிகச் சரியான பெண்ணை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று அவனுக்குள் ஒரு இறுமாப்பு இருந்தது...
“உன்னுடைய நிமிர்வும் கம்பீரமும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. பட் அது எல்லாம் தோளில் செய்யிற இடத்துல மட்டும் தான். நம்முடைய பர்ஸ்ணலில் உன்னுடைய நெகிழ்வும் என்னுடைய அத்துமீறலும் தான் இருக்கணும். அப்போ தான் வாழ்க்கையில இன்னும் சுவாரஸ்யம் கூடும்” என்று கண் சிமிட்ட ஒரு கணம் அவளது வதனம் சிவந்து தான் போனது. அதை அவன் ரசித்துப் பார்த்தான்.
தன்னை அவன் இரசிக்கிறான் என்பதே ஒருவித குறுகுறுப்பை கூட்டியது. என்றாலும் முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து,
“ஏன் நான் அத்து மீறுனா நீங்க தாங்க மாட்டீங்களா?” அவனது கண்களை நேராக பார்த்து கேட்டாள். விழிகளும் செம்மை பூசி இருந்ததை கண்டவனுக்கு இதழ்களில் மெல்லிய மலர்ச்சி எழுந்தது. அதை மீசையில் ஒளித்துக் கொண்டவன் அவளது காதோரம் சரிந்து,
“ஆல்வேஸ் வெல்கம்... அதுக்கு சேம்பிள் இப்பவே காண்பிச்சாலும் எனக்கு ஒகே தான்...” என்று மிக மிக இரகசிய குரலில் அவளது காது மடலை உரசியபடி சொன்னவனின் நெருக்கத்திலும் வார்த்தையிலும் செஞ்சாந்து பூசியது போல ஆனவள் வேகமாய் அவனை தன்னிடமிருந்து தள்ளிவிட்டு கதவை திறந்து வெளியே போக பார்த்தவளை சுண்டி இழுத்தவன்,
“நோ வே... இப்பவே எனக்கு டெமோ காட்டிட்டு தான் போகணும்... இல்லன்னா இங்கவே உன்னை... ....” என்று அவளின் காதோரம் இன்னும் சற்று இரகசிய குரலில் தன் அடிமன ஆசையெல்லாம் உரைத்தான். அதில் இன்னும் அவள் குப்பென்று சிவந்துப் போக அவனது பிடியில் இருந்து நழுவ பார்க்க அதற்கு அவன் விடவே இல்லை.
“உன்னோட அத்துமீறலை பார்க்க எனக்கு ஆசையா இருக்குடி...” என்று சர்வா மீசையை முறுக்க அவள் இன்னும் சிவந்துப் போனாள்.
அவளது வதன சிகப்பை இரசித்துக் கொண்டே, “என் பிசினெஸ்க்கு ஹெல்ப்பா இருப்பன்னு தான் உன்னை சூஸ் பண்ணினேன். ஆனா உன்னோட வாழப் போற வாழ்க்கை ரொம்பவும் சுவாரஸ்யமா தான் வச்சிருக்க போறன்னு இந்த ஒரு சந்தர்ப்பத்துலையே புருஞ்சுக்கிட்டேன்டி...” என்றான் மனதார.
“ஹலோ மிஸ்டர் சர்வா... உங்க பிசினெஸ்க்கு நான் கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவேன் தான். பட்...” என்று அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தாள்.
“பட்...” என்று சர்வா அவளை பார்த்தான்.
“வாழப்போறது ஒரே ஒரு வாழ்க்கை...” என்று சகி அவனை இன்னும் கூர்ந்து பார்த்தாள்.
“சோ..”
“சோ... எனக்கு வாழ்க்கை போரடிக்காம இருக்க அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா ரொமான்ஸ் வேணும்” என்றாள். அதை சொல்லுகையில் அவளது முகத்தில் சிவப்பை மீறி ஒரு எதிர்பார்ப்பு இருந்ததை உணர்ந்தவன், அவன் கொண்ட பிசினெஸ் மேன் மறைந்து, உல்லாசம் பிறக்க,
“எனக்கு ரொமான்ஸ் வராது... நீ ட்ரைனிங் குடு... நான் கத்துக்குறேன்” என்று அவளை சீண்டி விட்டான். அதை கேட்டு சகி சர்வாவை முறைத்தாள்.
இப்படி சில பல விசயங்கள் அவர்களுக்குள் நிகழ்ந்து இருக்கிறது... தான் தேர்ந்தெடுத்த பெண் என்கிற கர்வம் எப்பொழுதுமே சர்வாவிடம் இருந்தது.
ஆம் சர்வாவே வலை வீசி தேடி தேடி தேர்ந்தெடுத்த பெண் தான் சகி. அவனே நேரடியாக சென்று கிருஷ்ணனிடம் பெண் கேட்டிருந்தான். சகியை கண்டதும் காதல் எல்லாம் தோன்றவில்லை. அவளது குணங்களும், வாழ்க்கை முறையும், நாகரீகப் பண்பும், இக்கட்டான சூழலில் முடிவெடுக்கும் தலைமை பண்பும் மட்டுமே அவனை ஈர்த்தது. அதோடு அவளது கல்வி படிப்பு அவனுக்கு மேலும் ஒரு ப்ளஸ் பாயின்ட்டாக போனது.
பக்கா பிசினஸ்மேன்... தொழிலில் எதை செய்தால் லாபம் வரும் என்று கணக்கிட்டு எப்படி தொழில் முனைவனோ அதே போல தன் துணையையையும் தேர்ந்தெடுத்தான்.
அந்த மாதிரி தான் சகியை அவன் முதலில் தேர்ந்தெடுத்தது. அவளை வைத்து சில பல திட்டங்களும் வைத்திருந்தான். இன்னும் அவனது நிர்வாகத்தை விரிவு படுத்த வேண்டும் என்றும், அந்த நிர்வாகத்திற்கு மிக மிக உதவியாக சகி இருப்பாள் என்றும் கூடவே ஒரு குடும்ப பொறுப்பை எடுத்து நடத்த அவளுக்கு திறமை இருக்கிறது என்பதையும் நன்கு உணர்ந்திருந்தான் சர்வா.
எனவே அவனது முதல் தேர்வு சகிதான். ஆனால் அதை நிறைவேற்ற முடியாமல் யாரோ ஒரு பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்ததை அவனால் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் கற்பனை செய்து வைத்த வாழ்க்கை அது அல்ல என்று அந்த பெண்ணோடு வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவனது மனதில் தோன்றாமல் இல்லை.
ஆனால் அந்த பெண்ணிடம் சகியின் குணங்களைத் தேடவும் இல்லை. அந்த பெண் எப்படி இருந்தாலும் அப்படியே அவன் ஏற்றுக் கொள்ள பழகிக் கொண்டான் என்றாலும் அடி நெஞ்சில் ஒரு ஏமாற்றம் இருந்து கொண்டு தான் இருந்தது சர்வாவிடம். அந்த ஏமாற்றம் தன் மனைவி இறந்த பிறகும் கூட வெளிப்படவில்லை.
ஆனால் கைநழுவி போன பொருளை மீண்டும் என்றைக்கு பார்த்தானோ அன்றிலிருந்து அவனது ஏமாற்றம் மிகப் பெரிதாகவே அவனுக்கு தோன்றியது. அந்த ஏமாற்றம் பெரிய அளவில் உருக்கொண்டு சகியை சுழன்று அடிக்கிறது என்பதுதான் மிகவும் சரி.






