“எனக்கு இன்னைக்கு இதுக்கு மேல வேலை செய்ய முடியாது... நான் போய் ஊட்டியை சுத்தி பார்க்க போறேன்” என்றவள் தன் கை பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
“நான் உன்னை போக சொல்லி சொல்லவே இல்லையே...” எகத்தாளம் செய்தான்.
“டூர் கூட்டிட்டு வந்து இப்படி வேலை வாங்குற முதலாளியை இங்க தான் பார்க்கிறேன். லீவ் நாள்ல கூட வேலை செய்ய சொல்லி டார்ச்சர் பண்றீங்கன்னு கேஸ் போடுவேன்” என்று கொஞ்சமும் சளைக்காமல் பதிலடி கொடுத்தவள் கிளம்பி போக போற வழியல் இருந்த கூடத்தில் விளையாடிக்கொண்டு இருந்த பிள்ளைகள் வேகமாய் ஓடி வந்து அவளது காலை கட்டிக் கொண்டது...
அதில் அவள் எடுத்த உறுதி எல்லாம் குலைந்துப் போக வேகமாய் தன் கை பையை தூக்கி அருகில் இருந்த சொகுசு இருக்கையில் எறிந்தவள், பிள்ளைகளை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தாள். காலையில் அப்படி அவர்களை விரட்டி அடிப்பது போல தூக்கி கேர்டேக்கர் கரத்தில் கொடுத்தது சகியின் மனதை பிசைந்துக் கொண்டே இருந்தது.
அதனால் தான் அவளால் அங்கு அமர்ந்து வேலை பார்க்கவே முடியவில்லை. பாசம் காட்டும் மழலைகளை எங்கனம் ஒதுக்கி வைத்து மரக்கட்டையாய் அவ்விடம் விட்டு நீங்கி இருக்க இயலும். அவளுக்கு நெஞ்சமே சற்று கலங்கி தான் போனது.
ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருவரின் நெற்றியிலும் முட்டி மூச்சு முட்ட முத்தங்களை இருவருக்கும் வாரி வழங்கியவளின் நெஞ்சில் சொல்லொண்ணாத உணர்வு நிறைய அவர்களை முத்தாடி தீர்த்தாள். துரத்தி விட்டும் காலையே சுற்றும் இந்த பச்சை பிள்ளைகளை கைக்கழுவி செல்ல மனம் வரவில்லை.
கைக்கு ஒரு பிள்ளையாய் இருவரையும் வைத்துக் கொண்டு இருவரிடமும் கதை பேசியபடி திரும்ப அங்கு அறையின் வாசலில் இரு கரங்களையும் கைக்கட்டிகொண்டு நிலை படியில் சாய்ந்தபடி அவளை பார்த்துக்கொண்டு இருந்தான் சர்வா.
அவனது பார்வையை உணர்ந்தவளுக்கு முகம் சற்றே கன்றிப் போனது. ஆனாலும் பிள்ளைகளை இறக்கி விடவே இல்லை. அதை பார்த்தவன் மிக நிதான நடையுடன் அவளை நெருங்கி வந்து,
“சுத்தி சிப்பாய்களின் ஆதிக்கமா இருக்கு... அதனால இந்த ராஜாவுக்கு ரொம்ப பயமா இருக்கு. ராணி மனசு வச்சா இந்த ராஜா மகுடம் தரிக்கலாம்.” என்றவன் கொஞ்சம் இடைவெளி விட்டு “வர்றியா?” என்று ஒற்றை வார்த்தையில் அவளை திகைக்க வைத்தான் சர்வேஸ்வரன்.
அதை கேட்டு ஒரு கணம் ஆடி தான் போனாள். ஆனாலும் தன் தடுமாற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல்,
“உங்க ஊறுகா பிசினெஸ்க்கு என்னை தொக்கு ஆக்காதீங்க சொல்லிட்டேன்...” என முறைத்தவள் பிள்ளைகளோடு ஐக்கியமாகி விட, அவளின் காதோரம் தன் மூச்சுக் காற்றுப் படுமளவு நெருங்கி,
“யாரோ ஊட்டியை சுற்றி பார்க்க போறதா சொன்னாங்க...? அது யாருன்னு தெரியுமா ச...கி...” என்று கேட்க, ஒரு கணம் விதிர் விதிர்த்துப் போனாள்.
காதில் அவனது மீசை முடி உரச எழுந்த குறுகுறுப்பில் சட்டென்று அவளது முதுகு தண்டில் மின்னல் வெட்டிச் செல்ல அதிர்ந்துப் போய் திரும்பி பார்த்தாள்.
அவளின் பார்வையை தன் விழி வீச்சால் கவ்வியவன், விரிந்த அவளது கண்களை ஆழநோக்கி,
“ராணியின் சேவை இந்த ராஜாவுக்கு ரொம்ப வேண்டியதாய் இருக்கு...” என்றவன் எப்பொழுதும் போல பைனல் டச் கொடுத்தான் “படுக்கையிலும்....” என்று சொல்லி.
“யூ... ராஸ்கல் ” என்று கோவப்பட்டவள், அவனை அடிக்க கைகள் பரபரத்தது. ஆனால் இரு கரத்திலும் பிள்ளைகள் இருப்பதால் அவனை அடிக்க முடியாமல் அவள் தடுமாற,
அதை பார்த்து இரசித்தவன்,
“இதுக்கும் சேர்த்து கோவப்பட்டுக்கோ...” என்றவன் கிட்டத்தட்ட அவளை சுற்றி அணைத்தது போல அணைத்து தன் இரு பிள்ளைகளின் கண்களையும் இரு கையால் பொத்தி அவளின் இதழ்களை நோக்கி குனிந்தான். அவனது நோக்கம் புரிய அவள் தலையை ஆட்டி ஆட்டி விலகப் பார்க்க, மகளின் கண்களில் இருந்து கரத்தை எடுத்தவன் பட்டென்று அவளின் பிடரியை பற்றி தன் இதழ்களுக்கு நேராக அவளின் இதழ்களை கொண்டு வந்து மிக நிதானமாக அவளின் செவ்விதழ்களை வன்மையாக சிறை எடுத்தான்.
அதே கணம் தன் மகளின் கண்களையும் பொத்தினான்.
அவனது இந்த ஆளுமையான இதழ் பற்றுதலில் சித்தம் தொலைத்தவள் அதிர்ந்து போனாள்.
பேசுவான் திட்டுவான் என்று இருந்தவள் இன்று முதல் முறையாக தன்னை நெருங்கி தொட்டு பேசி முத்தம் கொடுத்து என்று அவன் எல்லை மீறக் கண்டு கண்கள் கலங்கியது.
இதழ் சுவையோடு உப்பு சுவையும் ஒருங்கே சுவைத்தவன், பெண்ணவளின் உதிர சுவையையும் விரும்பியே சுவைத்தான். அவன் பல் பட்டு காயமாகி போன பெண்ணவளின் சதை பற்றுடன் இருந்த இதழ்களை இன்னும் சுவை பார்த்தவன் ரசனையுடன் விடுவித்துக் கொண்டு, அவளின் காதோரம் இன்னும் சற்று சரிந்து,
“ஊட்டில இருந்து போகிற வரை இந்த மாதிரி குளிருக்கு ஏற்றார் போல அப்பப்போ கொஞ்சம் கவனி...” என்றவன் அவளின் கண்ணீரை பார்த்தான்.
கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டவளின் விழிகளில் கட்டுப்படுத்தப்பட்ட கோவம் இருப்பதை கண்டும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்,
“சீக்கிரம் என் தொடுகைக்கு பழகிடு ச...கி... அது தான் உனக்கும் எனக்கும் நல்லது...” என்றவன் வெளியே கிளம்பி விட்டான். அவன் செல்வதையே மனபாரத்துடன் பார்த்தவள் என்ன முயன்றும் அவனை மன்னிக்கவே முடியவில்லை.
‘தன் இயலாமையை பயன்படுத்தி தன்னை லாக் செய்வது என்ன நியாயம்’ உள்ளுக்குள் பெரும் பொருமல் எழுந்தது. அதை பிள்ளைகளிடம் காட்டிக் கொள்ளாமல் அவர்களோடு விளையாடியவளுக்கு நேரம் காலம் தெரியாமல் போனது.
தன்னிடத்துக்கு வந்தவளுக்கு இப்பொழுது வரையிலும் அவனின் மூச்சுக் காற்று தன் மீது படிந்து இருப்பது போலவே தோன்றியது... மூச்சை அடைத்துக் கொண்டு வருவது போல இருந்தது. சர்வாவின் தொடுகையில் மறந்து போன, கடந்து வந்த எல்லாமே மீண்டும் நினைவுக்கு வருவது போல இருந்தது.
நான்கு வருடங்களுக்கு முன்பு சகிக்கும் சர்வாவுக்கும் கல்யாணம் பேசி முடித்து, புடவை எடுக்கப் போகும் சமயத்தில் இவளை மட்டும் தனியாக அவனது பைக்கில் அழைத்துச் சென்றான். முதல் முறையாக வேற்று ஒரு ஆணின் அருகாமையில் அமர்ந்து செல்வது இதுதான் முதல் முறை சகிக்கு. லேசான தடுமாற்றம் இருந்தது அவளிடம்.
அதை உணர்ந்தவனுக்கு சற்று பெருமிதமாகத் தான் இருந்தது. ஏனெனில் கைப்படாத மலரின் மீது எல்லோருக்கும் ஒரு மோகம் இருக்கும் அல்லவா... அந்த மோகம் அவனிடமும் இருந்தது. தன் அருகில் அமரவே அவள் இவ்வளவு தடுமாறுகிறாள் எனில் அவளை சின்னதாக சீண்டிவிட்டால் என்ன மாதிரியாக உணர்வுகளை வெளிப்படுத்துவாள் என்று கற்பனை செய்து பார்க்க அவனது மீசை துடித்தது ஆசையில்.






