சகியை அழைக்க தான் சர்வா போன் செய்ய முன் அறைக்கு வந்தான். இவளே வந்து விடவும் அவளோடு அவனும் பின் தொடர்ந்தான் உள் அறைக்கு. போகும் வழியெங்கும் வாந்தி மயமாக இருக்க, அதை தாண்டி போய் குழந்தை பார்க்க, அவளோ வாந்தி எடுத்து சோர்வுடன் இருப்பதை பார்த்து அவளது வயிற்றை தடவிப் பார்த்தாள். அதோடு அவள் மிகவும் சோர்ந்து போய் இருப்பதை கண்டவளுக்கு மனம் பதை பதைத்துப் போனது.
வயிறு கல் போல இருக்க சட்டென்று அவன் புறம் திரும்பி, “பாப்பாக்கு வயிறு என்னவோ கல்லு மாதிரி இருக்கு. என்னனு பாத்தீங்களா?” அவனிடம் கேட்க,
“இல்ல எனக்கு ஒண்ணும் தெரியல. நீ சாப்பாடு ஊட்டுனதுக்கு பிறகு கொஞ்ச நேரத்திலேயே வாந்தி எடுத்துட்டா...” சொல்ல,
“சாப்பாடு நான் பாப்பாவுக்கு வெறும் பருப்பு சாதம் மட்டும் தானே கொடுத்தேன். வேற எதுவும் கொடுக்கலையே சார்...” என்று சொன்னவள்,
“எதற்கும் டாக்டர் கிட்ட போயிட்டு வரலாமா? அவங்க ஒரு முறை செக் பண்ணிட்டு சொன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்...” என்று அவனிடம் தவிப்பாக கேட்க, அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“சரி நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்.. நீ பிள்ளைகளை பாரு...” என்று அவன் ரெடியாக குளியல் அறைக்குள் சென்றான்.
அதற்குள் அந்த இடத்தை கிளீன் பண்ணுவதற்காக க்ளீனிங் ஆட்களிடம் சொன்னவள் அவனது உடைகளையும் அவர்களிடம் கொடுத்து கிளீன் பண்ண சொன்னவள் குழந்தையை மட்டும் யாரிடம் கொடுக்காமல் அவளே கிளீன் பண்ணினாள்.
குழந்தை மிக சோர்வுடன் இருந்தாலும் இந்த நேரம் வரை அவள் அழவில்லை. ஆனால் இவளை பார்த்த உடனே கொஞ்சம் கொஞ்சமாக அழ ஆரம்பிக்க.. அவளை அப்படியே தன் தோள் மீது போட்டு தட்டிக் கொடுத்தவள், அவளது காலடியில் வந்து நின்ற குட்டி பையனை பார்த்து பாவமாய் போனது. என்னையும் தூக்கு என்பது போல அவனது முகபாவம் இருக்க அவனையும் இன்னொரு கரத்தால் தூக்கிக்கொண்டாள் சகி.
தூக்கியவள் “பாப்பாவுக்கு உடம்பு சரியில்ல ஆது... பாப்பா வாமிட் பண்ணிட்டா. நான் அவளுக்கு ஆடை மாற்றி விடணும். கட்டில்ல என் கூட பக்கத்துல உட்கார்ந்துக் கோடா செல்லம்...” என்று அவனை அருகில் அமர்த்திக் கொண்டு இனி குட்டிக்கு உடை மாற்றிவிட்டாள்.
இருவரும் சிறு பிள்ளைகள் என்பதால் எப்பொழுதும் அவர்கள் செல்லும் இடத்துக்கு இரு மாற்று உடைகள் எடுத்து வைத்திருப்பார்கள். அதே போல சர்வாவுக்கு அலுவலகத்தில் எப்பொழுதும் மாற்று உடைகள் சில செட் இருக்கும். அதனால் இருவரும் மாற்றுடை அணிந்துக் கொண்டார்கள்.
உடை மாற்றிவிட்டு வெளியே வந்த சர்வா இரு பிள்ளைகளையும் தூக்க முடியாமல் தூக்கிக் வைத்துக்கொண்டு நிற்பதை பார்த்தவன் வேகமாய் சகியிடம் இருந்து மகனை தன் கைகளில் ஏந்தி கொண்டான்.
“நீ வா அப்பா உன்னை வச்சுக்குறேன்” என்று அவனை தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டவனிடம்,
“டாக்டர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கணுமா இல்ல நேரடியா பார்த்துடலாமா” என்று அவள் கேட்க,
“நோ நீட் ஆல்ரெடி இருக்காங்க. நம்ம போய் பாத்துக்கலாம்...” என்று சொன்னவன் மூவரையும் கூட்டிக்கொண்டு வேகமாக மருத்துவமனைக்கு விரைந்தான்.
வயிற்றை அழுத்தி பார்த்த குழந்தைகள் நல மருத்துவர் “கீழே கிடந்ததை ஏதாவது வாயில வச்சு இருப்பாங்க. அதனால தான் இப்படி மத்தபடி குழந்தைக்கு ஒன்றுமில்லை... பயப்பட வேண்டியது இல்லை. சிரப் மட்டும் எழுதி குடுக்குறேன்... அதை மட்டும் இரண்டு நேரம் கொடுங்க... சரியாப் போயிடும்...” என்று சொல்லிவிட்டார். அதனால் மாலை பொழுது வரை அவளை தன் நெஞ்சோடு அரவணைத்து வைத்திருந்தவள் அலுவலக நேரம் முடியும் நேரம் வர, பிள்ளையை மனசே இல்லாமல் சர்வாவிடம் நீட்டினாள்.
ஆனால் இனி குட்டியோ அவளின் மாராப்பை பிடித்துக் கொண்டு போக மாட்டேன் என்று சொல்லி அடம் பிடிக்க, ஏற்கனவே உடம்பு சரியில்லாத பிள்ளை. இதில் அழ வைத்தால் எப்படி என்று சகி தடுமாற,
அவளது தடுமாற்றத்தை உணர்ந்தவன்,
“நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் நீ கிளம்பு” என்றான். ஆனால் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. பிள்ளை ஒரு பக்கம் பிடித்து இழுத்தது என்றாலும் மனசு வரவேயில்லை. அப்படியே விட்டுட்டு போக...
வீட்டுக்கு போன் செய்து பேசினாள். “இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம். வர தாமதமாகும்.” என்று சொல்லிவிட்டு பிள்ளையை கையில் வாங்கிக்கொண்டாள். அதன் பிறகு மேலும் மூன்று மணி நேரம் அவர்களுடனே இருந்தாள்.
சர்வா கூட இருந்த வேலைகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு பிள்ளைகளுடன் இருந்தான். அவனுக்கு அவனது பிள்ளைகள் தான் முதல். அதன் பிறகு தான் மற்றவை எல்லாம்.
வாந்தி எடுத்த காரணத்தால் இனி குட்டி துள்ளி விளையாடமால் சுணங்கி சுணங்கி சகி மடியிலே படுத்துக் கொள்ள பார்க்கவே பாவமாய் போனது.
பிள்ளைகளை பெறவில்லை என்றாலும் மனதால் அன்னையாகிப் போனாள் சகி. தட்டிக் கொடுத்து கதை சொல்லி அவளை தூங்க வைக்க அவளது கதையில் பிள்ளைகளும் கண்ணயர்ந்து போக சகியின் கரங்களோ இடைவிடாது பிள்ளைகளின் உடல்களையும் கேசத்தையும் வருடிக் கொடுத்துக் கொண்டே இருந்தது.
அதுவரை பிள்ளைகளிடம் மட்டுமே கவனத்தை வைத்து இருந்தவள் சற்றே தன் பார்வையை உயர்த்தி சர்வாவை பார்த்தாள்.
இரு ஆள் படுக்கும் கட்டில் என்றாலும் அதில் பிள்ளைகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்து இருக்க கொஞ்சமே கொஞ்சம் இடம் இருக்க கண்டு அதில் தன் முழு உடலையும் சுருக்கி படுத்து இருந்தான் சர்வா. அதிலும் ஒரு பக்க கையும் காலும் வெளியே நீண்டுக்கொண்டு இருந்தது.
அவனது முகம் எந்த துவேசமும் இல்லாமல் அமைதியாக இருந்ததை பார்த்தாள். பழையவற்றை எண்ணி பார்த்தவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது. எவ்வளவு களைப்பு இருந்தால் இந்த இடுக்குக்குள் அவன் படுத்து இருப்பான் என்று உணர்ந்தவளுக்கு மனம் கேட்கவில்லை.
பிள்ளைகளை வருடிக் கொடுத்த கரம் சற்று நீண்டு அவனது சிகையை வருடி விட ஆரம்பித்தது. அதில் சற்றே உடலை அசைத்தான். பட்டென்று கரத்தை எடுத்துக் கொண்டாள் சகி.
ஆனால் கண்களை திறக்காமலே வெளியே நீட்டி இருந்த கரத்தால் அவளது கரத்தை தேடி பிடித்து மீண்டும் தலையில் வைத்துக் கொண்டு தூங்கினான். அவன் அது தெரிந்து பண்ணினான இல்லை தூக்கத்தில் செய்தானா என்று தெரியவில்லை.
தன் வருடல் அவனுக்கு வேண்டும் என்பது புரிய அவனது சிகையை வருடிக் கொடுத்தாள். மெல்லே மெல்ல அவளது நெஞ்சம் இலக ஆரம்பிக்க அது ஆபத்து என்று உணர்ந்து பிள்ளைகள் இருவரையும் சுவரோரம் ஒருவருக்கு ஒருவர் பக்கத்தில் படுக்க வைத்தவள் சர்வாவை கொஞ்சம் சிரமப்பட்டு அவர்களின் அருகில் நீட்டி நிமிர்த்தி படுக்க வைத்துவிட்டு கலங்கிய கண்களை துடைக்க கூட இல்லாமல் வெளியே ஓட பார்க்க அவளின் முந்தானை இழுபட்டது.
பதறிப்போய் பார்க்க சர்வாவின் அடியில் அவளது முந்தானை மாட்டி இருக்க கண்டு ஆசுவாசம் அடைந்தவள் அவனை நெருங்கி தன் முந்தானையை விலக்கிக் கொண்டு போக பார்க்க சர்வாவின் நிச்சலமான முகம் அவளை கலங்கடிக்க வேகமாய் அவனது நெற்றியில் தன் ஈர இதழ்களை ஒரு நொடி புதைத்தவள் அடுத்த நொடி அவ்விடம் நீடிக்காமல் ஓடிப் போய் விட்டாள் விழிகளில் வழிந்த கண்ணீருடன்.
வெகு நேரம் கழித்து கண் விழித்து பார்த்தான் சர்வா. மூவரையும் சரியாக படுக்க வைத்து இருந்தவளின் நடமாட்டம் அந்த அறையில் இல்லாமல் போக மணியை பார்த்தான்.
இரவு இரண்டு மணி ஆகி இருந்தது. அவளுக்கு போன் செய்தான். முதல்முறை அவளுக்கு தனிப்பட்ட முறையில் அழைத்திருந்தான். முதல் அழைப்பிலே எடுத்துவிட்டாள்.
“என்ன அச்சு? பாப்பாவுக்கு ஒண்ணும் இல்லையே... நல்லா இருக்கா தானே...?” என்று அவள் எடுத்த எடுப்பிலே பதட்டமாக, அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல்,
“வீட்டுல இருக்கியா?” என்று கேட்டான். அவள் புருவம் சுருக்கி ஒரு கணம் திகைத்தாள். பின்
“ஆமாம்... பாப்பாவுக்கு நல்லா இருக்கு தானே...?” என்று மீண்டும் தன் கேள்வியை வலியுறுத்த,
“நல்லா இருக்கா...” என்று வைத்துவிட்டான். வேறு எதுவும் பேசவில்லை. அவளுடைய பாதுகாப்பை நடு இரவு என்று கூட பாராமல் உறுதி செய்துக் கொண்டதை பற்றி சர்வா எதையும் யோசிக்கவில்லை.
ஆனால் சகியின் படபடப்பு கண் முன் வந்து போனது.
அவனது பிள்ளைகளுக்காக அவள் துடித்த துடிப்பை பார்த்த கண்டு அவனது கண்களில் ஒரு மின்னல் வெட்டிப் போனது. ஆனால் அதே அவ்விடத்தில் தான் என்று இருந்தால் அவளது இந்த பதைபதைப்பு காணாமல் போகிறதே ஏன்... என்கிற கோவம் வந்தது. அவனது மனம் எதை நோக்கி செல்கிறது என்று அறிந்தவனுக்கு தன் மீதே கோவம் வந்தது.
தன்னை மடைமாற்றம் செய்துக் கொண்டு இருப்பவளின் எண்ண ஆதிக்கமே அதிகமாக இருந்தது. அதை சர்வா உணர்ந்தே இருந்தான் என்பது தான் இங்கு வியப்பு.. ஆனால் இதை பற்றி எதையும் உணராதவளாய் அவள் அவள் போக்கில் இருந்தாள்.
மறுநாள் வீட்டில் மிக இயல்பாக இருந்தாள். கார்த்தியிடம் வம்பிழுத்துக் கொண்டு கோயிலுக்கு சென்று வந்தாள். வந்தவள் சமையல் அறையில் தான் ராஜியத்தை தொடங்க அவளுக்கு உதவியாய் மிரு வந்தாள்.






