"பரவாயில்லை சின்ன குழந்தை தானே சார். நாங்க பார்த்துக்கிறோம். ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க ரெண்டு குழந்தை வச்சிட்டு எப்படி சமாளிப்பீங்க. ஒரு பிள்ளை எங்ககிட்டயே இருக்கட்டும். போகும்போது வாங்கிக்கோங்க…" என்று கார்த்தி சொல்ல,
'அத சொல்றதுக்கு நீ யாருடா வெண்ணெய்...' என்று வாய்க்குள் அவனை திட்டிக் கொண்டிருந்தான் சர்வா.
வேறு வழியில்லை என்று அமைதியாகி போனாலும் யாரும் அறியாமல் சகியை அவ்வப்பொழுது ஒரு சில பார்வை பார்த்தான். சகி தன் பின்னிய கூந்தலை முன்னால் இட்டு, காட்டன் புடவையில் அழகாக நேர்த்தியாக அதே சமயம் கம்பீரமாகவும் இருந்ததை அவனது கண்கள் ரசிக்கத்தான் செய்தது என்றாலும் எங்கு போனாலும் கார்த்திக்கோடு வருவதை கண்டு அவன் பல்லை கடித்தான்.
அவளது பர்ஸ்னலில் தான் தலையிடக்கூடாது என்று அவனுக்கு அவனே கட்டுப்பாடு வைத்துக் கொண்டாலும் ஏனோ அந்த கட்டுப்பாடு அவனுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. தன்னை மீறி அவளை ரசிக்கவும் செய்தது அவனது கண்கள்.
கார்த்திக் பின்னால் திரும்பி அவளை பார்க்க சட்டென்று சர்வா தன் பார்வையை மாற்றிக் கொண்டான். அதை கார்த்தியும் ஒரு கணம் உணர்ந்து கொண்டான். சகியை அவன் முறைத்துப் பார்க்க அவளோ இருவரும் ஏதாவது செய்து கொள்ளுங்கள் எதற்காக என்னை வைத்து உருட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். என்பதுபோல தன் கவனத்தை பயணத்திலும் பிள்ளையிடமும் மட்டுமே வைத்துக் கொண்டாள்.
ஒரு வழியாக படகு பயணம் இனிதாக நிறைவேறியது. ஆது சர்வாவிடம் போக மாட்டேன் என்ற அடம் பிடிக்க வேறு வழியில்லாமல் அவனை சமாதானம் செய்து தட்டிக் கொடுத்து அவனது கைகளில் கொடுத்தவள், விருட்டென்று அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றாள்.
கிருஷ்ணருக்கு மனம் எல்லாம் பாரமாய் போனது இருவரும் ஜோடியாக நின்று இருந்தால் கண்களே நிறைந்து போய்விடும். அந்த அளவுக்கு உருவ ஒற்றுமையும் இருந்தது. அதோடு மன ஒற்றுமையும் இருவருக்குமே இருந்தது. அதை இப்போது என்று அவர் உணரவில்லை திருமணம் நிச்சயமான பொழுதே இருவரின் மன ஒற்றுமையையும் அவர் நன்கு புரிந்து இருந்தார்.
எனவே தான் இந்த திருமணத்தில் அவர் மிகவும் உறுதியாக இருந்தது. அது கை கூடாமல் போக தன் மகள் ஒற்றையாய் இன்று வரையிலும் நிற்பதை கண்டு பெற்றவராய் அவருக்கு மிகவும் வேதனையாய் போனது.
சர்வாவை பார்த்து அவனிடம் எதுவும் பேசாமல் இருக்க முடியவில்லை அவருக்கு. ஆனால் நெருங்கி பேசவும் தயக்கமாக இருந்தது. கைகளை பிசைந்து கொண்டு அவர் ஒரு கணம் நிற்க அவர் தயக்கத்தை உணர்ந்தவனாய்,
"எப்படி இருக்கீங்க? உடம்பு எப்படி இருக்கு?" என்று அவன் கேட்டான். அவனது கேள்வியில் நகர்ந்து சென்றவர் அவனை நிமிர்ந்து பார்த்தார். அதைவிட பேரதிர்ச்சி அடைந்தாள் சகி.
வெருப்பவரின் பெயர் பட்டியலில் அவளது தந்தை தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்று அவன் சொல்லியது என்ன, இப்பொழுது அவரின் தயக்கத்தை பார்த்து அவனே பேசுவது என்ன என்று திகைத்துப் போய் பார்த்தாள்.
பின் கார்த்தியை உணர்ந்து தன் அதிர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல் பார்வையை தழைத்துக் கொண்டாள். அவளின் ஒருகன பார்வையை உணர்ந்தான் சர்வா.
"நான் நல்லா இருக்கேன் தம்பி. நீங்க எப்படி இருக்கீங்க?" என்று அவர் கேட்க "நல்லா இருக்கேன்" என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துவிட்டு அவ்விடத்தை விட்டுப் போக அவரால் அவனை விட்டு விலக முடியவில்லை.
தன் தங்கமான பொண்ணுக்கு பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த ஆண் மகன் அல்லவா. குணத்திலும் தங்கம் தான் சர்வா.
மனமார அவனை மதிப்பவனை இவனும் மதிப்பான். அது யாராக இருந்தாலும் சரி. ஏன் பத்து ரூபாய் தானமாக வாங்கும் ஏழை இயலாதவர்களாக இருந்தாலும் சரி. அவர்களை மதித்து ஒரு புன்னகையாவது வீசிவிட்டு செல்வான். ஆனால் அதுவே கூழைக் கும்புடு போட்டு பணத்துக்காக காலை பிடிக்க வரும் யாராக இருந்தாலும் முக்கியமாக அது தன்னை பெற்றவர்களாக இருந்தாலும் சரி தன்னை விட்டு நான்கடி தள்ளி நிற்க வைப்பான்.
அப்படி குணம் கொண்டவனை அவ்வளவு எளிதாக அவரால் கடந்துப் போக முடியவில்லை.
"தம்பி ஒரு நிமிடம்…" அவனை நிறுத்த 'சொல்லுங்க…' என்பது போல அவன் திரும்பி பார்த்தான். இரு கைகளிலும் எப்பொழுது வேண்டுமானாலும் நழுவி ஓடும் சிறு பிள்ளைகளை சுமந்து கொண்டு அவன் நின்ற தோற்றம் அவரது மனதை பிசைய,
"உங்க வைஃப் வரலையா தம்பி? ரெண்டு பிள்ளைகளை வச்சிட்டு ரொம்ப சிரமப் படுறீங்களே...!" என்று அவர் கேள்வியை தயக்கத்துடன் நிருத்த, அவரை தடுக்க முயன்றாள் சகி. ஆனால் அதற்குள் அவர் கேட்பதை கேட்டு விட்டார் அவனிடம்.
அவளது அலைப்புருதலை கவனித்தவன் அவளின் தந்தையின் புறம் திரும்பி மிக நிதானமாக,
"இரண்டாவது பிள்ளை பிரசவிக்கும் போது அவள் இறந்துவிட்டாள்…" என்று சொல்லிவிட்டு விடுவிடு என்று அவ்விடத்தை விட்டு கிளம்பி போய் விட்டான்.
அதைக் கேட்டவர்களுக்கு நெஞ்சில் பாரம் ஏறிக்கொண்டது. அதுவரை கார்த்தியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு லேசாக நகர்ந்த படி இருந்தவள் சர்வாவின் இந்த பதிலை கேட்டு ஒருகனம் தேங்கினாள்.
அவ்வளவு தான் அந்த ஒரு நொடி தேங்களில் கார்த்திக் என்ன என்பது போல பார்க்க அவள் எதுவும் சொல்லாமல் கால் வலிக்குது என்று மட்டும் சொல்லியவள் கலங்கிய தன் கண்களை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டு அன்றைய பொழுதை அப்படியே கடந்து சென்றாள்.
"யாருப்பா அது தெரிஞ்வங்களா…?" கார்த்தியும் மிருவும் கேட்க எச்சரிப்புடன் தன் தந்தையை பார்த்தாள்.
அவளது கண்களில் தெரிந்த எச்சரிக்கையை படித்தவர், "அதெல்லாம் ஒன்னும் இல்ல. என்னோட க்ளைண்ட். நான் பிசினஸ் பண்ணும் போது ஒரு மீட்டிங்ல அவரை பார்த்தேன். அதுக்கு பிறகு இன்னைக்கு தானே நான் வெளியில் வந்து இருக்கேன். அதனால தான் நலம் விசாரிச்சேன்" என்று முடித்து விட்டார். ஆனால் கார்த்தி அதை நம்பாத பார்வை பார்த்தான்.
'அதுக்கு மேல உன் இஷ்டம்…' என்பது போல கிருஷ்ணர் முன்னேறி போய்விட்டார்.
அவரது இந்த நடவடிக்கையை உற்று நோக்கியவனுக்கு முதல் விதை விழுந்தது யாரும் அறியாமல். அவன் வைத்த புள்ளியை நோக்கி முன்னேறினான் கார்த்திக்.
அடுத்த நாள் காலையில் அலுவலகம் வந்த பொழுது இரு பிள்ளைகளும் அவளுக்காய் காத்துக் கொண்டு இருப்பதை பார்த்து திக்கென்று ஆனது சகிக்கு.
அலுவலகத்துக்கு பிள்ளைகளை கூட்டிட்டு கொண்டு வந்த சர்வாவை அவள் திகைத்துப் பார்க்க அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை. பிள்ளைகளை அந்த ரூமில் விளையாட விட்டவன் தன் கணினியில் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
இவள் உள்ளே நுழைந்து தன் சிஸ்டமில் உட்காரும்போது பிள்ளைகள் இருவரும் அவளை நோக்கி வந்துவிட எங்கிருந்து அவள் வேலை செய்வது. அவளது வேலை அப்படியே கிடப்பில் போட்டு விட இரு பிள்ளைகளும் அவளை தேடி வந்துவிட்டன.
ஒரு பிள்ளை அவளது மடியில் ஏறி ஜம்முன்று அமர்ந்து கொண்டது. இன்னொரு பிள்ளை அவளது காலை வந்து கட்டிக் கொள்ள தூக்கலாமா வேண்டாமா என்பது போல சர்வாவை தயக்கமாக அவள் பார்த்தாள். அவன் இவள் புறம் திரும்பவே இல்லை காலை வந்து கட்டிக் கொண்ட பிள்ளையை தூக்காமல் எப்படி இருப்பது என்று அந்த பிள்ளையை தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.
அதுவரை இந்த பக்கம் காணாமல் இருந்தவன் சகி பிள்ளைகள் இருவரையும் தூக்கி வைத்தவுடன் சர்வா மூவரையும் ஒரு பார்வை பார்த்தான், பின் தன் வேலைகளில் பிஸியாகி விட்டான். ‘நீ ஏன் வேலை செய்யவில்லை’ என்று சகியை பார்த்து சர்வா ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவளது புடவையை இழுப்பதும் அவளது கன்னத்தில் அடிப்பதும், செயினை பிடித்து பற்களால் கடிப்பதும், தலைமுடியை இழுப்பதும், மேஜையை அடிப்பதும், மேசையில் ஏறி அமர்வதும், சிஸ்டமை நோண்டுவதும் என்று பலவாறாக அவளை தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்க அவளால் அங்கும் எங்கும் சற்று கூட அசைய முடியவில்லை.
அவளை தேடி நாடி வந்த பிள்ளைகளை அவளால் ஒதுக்கவும் முடியவில்லை என்ன செய்வது என்று தடுமாற, "சார்…" என்று அவனை அழைத்தாள். சகியின் அந்த அழைப்பில் அவளை நிமிர்ந்து பார்த்தவன் என்ன என்பது போல ஒற்றைப் புருவத்தை தூக்கி கேட்க, பிள்ளைகளை அவள் கண் காண்பித்தாள்.
அவன் எப்பொழுதும் போல இரு தோள்களையும் குழுக்கிக் கொண்டு தன் வேலையை பார்க்க இவள் கோவத்தில் பல்லை கடித்தாள்.
'எப்ப பாத்தாலும் இப்படி ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டே ஏதாவது பண்றது. வேலை செய்யலைன்னா மட்டும் திட்ட வேண்டியது…' என்று தனக்குள் முணகிக் கொண்டவள் ஒரு சர்வன்டை வரச்செய்து பிள்ளைகளை அவர்களிடம் ஒப்படைக்க சர்வா அவளை ஒரு பார்வை பார்த்தான்.
அந்த பார்வையில் என்ன இருக்கிறது என்பதை உணர முடியாமல் அவள் தடுமாற, "பிள்ளைகள் இங்கேயே இருக்கட்டும் நீங்க போகலாம்…" என்று அவரை வெளியேற்றியவன் சகியை முறைத்துப் பார்த்தான். அவனது அந்த பார்வையில் 'ஏன் இந்த வாயை திறந்து சொன்னா என்னவாம். பிள்ளைகளை நீயே பார்த்துக்கோ அப்படின்னு சொன்னா மணி மகுடம் சரிஞ்சிடும் பாரு' முணகியவள் அதன்பிறகு சிஸ்டத்தை அனைத்துவிட்டு பிள்ளைகளுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள்.
இருவரும் எதையும் வாய் விட்டு பேசிக்கவில்லை. ஆனால் பிள்ளைகளை வைத்து இருவருக்குள்ளும் ஒரு நெகிழ்வு வந்தது.






