சர்வாவின் ஆழ்ந்த பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்து இருந்தாள் சகி. ஆனாலும் அவன் புறம் சற்று கூட திரும்பவில்லை. அதற்கு முக்கிய காரணம் தன் தந்தையும் கார்த்தியும் மட்டுமே. லவலேசமாக அவன் மீது தன் பார்வை பட்டால் கூட இல்லாத ஒன்றை இருப்பது போல அவர்களே கற்பனை பண்ணிக்கொண்டு மேற்கொண்டு எது வேண்டுமானாலும் செய்ய முற்படுவார்கள்.
முடிந்து போன ஒன்றை வைத்து அவர்கள் தடுமாறக்கூடும் என்று உணர்ந்தாள். எனவே தன் பார்வையை கூட அவன் புறம் திருப்பவே இல்லை சகி. கடலில் அலை அலையாக எழுந்து நுரை பொங்க படகில் மோதி விளையாடிக் கொண்டிருக்கும் அலையை மிக தீவிரமாக ரசித்துக் கொண்டு இருந்தாள்.
கிருஷ்ணனுக்கு பெரிய தடுமாற்றமாய் போனது. சமாளிக்க முடியாமல் அவர் திகைத்து இருந்த பொழுதே தன் தந்தையின் நிலையை உணர்ந்து அவரின் கரத்தை கெட்டியாக பற்றிக் கொண்டாள் சகி. இவ்வளவு இக்கட்டான சுழலில் கூட அவளை பார்த்துக் கொள்ளாமல் தன்னை தன் நிலையை, தன் தடுமாற்றத்தை முன் நிறுத்தி தனக்கு ஆதரவாக கரங்களை பற்றிக் கொண்டவளை திரும்பி பார்த்தார்.
லேசாக அவருக்கு கண்கள் கலங்கியதோ.... எப்படியாப்பட்டா பிள்ளை... இவளை பெற நான் என்ன தவம் புரிந்தேன்... என்று மனம் நெகிழ்ந்தவர் அவள் வாழாது போன வாழ்வை எண்ணி மனம் குமைந்துப் போனார்.
தனக்கே இன்னும் ஏமாற்றமாய் இருக்கிறது சர்வா கை நழுவி போனது. கணவனாக வரித்து விட்டவளுக்கு எவ்வளவு வேதனை இருக்கும்... என்று பெருமூச்சு விட்டவர் சகியை ஆழ்ந்து பார்த்தார். வேதனையின் சாயல் அந்த முகத்தில் தென்படுகிறதா என்று... ஆனால் அவளது முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் அவளது இயல்பில் இருப்பது போலவே அவருக்கு தோன்றியது.
அவள் அவள் இயல்பில் இருக்கிறாளா இல்லை எனக்காக நடிக்கிறாளா என்று கிருஷ்ணர் அவளை இன்னும் ஆழ்ந்து பார்த்தார். அவளும் அதை உணர்ந்தவள் போல அவரது கையை தட்டிக் கொடுத்தவள்.
"அப்பா போட் மூவ் ஆக போகுது... கெட்டியா பிடிங்க...” என்றவள், சர் என்று பாய அதில் நுரை வேகமாக ஓடி வந்து போட்டில் இடிக்க,
“இதை பாருங்களேன் எவ்வளவு அழகா இருக்குன்னு. எப்படி வேகமாக ஓடி வருது இல்ல.. இன்னும் கொஞ்சம் ஆழமா உள்ள போனா தானே மீன்லாம் இருக்கும்" என்று கேட்க அவருக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. பெருமூச்சு ஒன்றை விட்டார் தன் மகள் தன் கவனத்தை திசை திருப்பவே இந்த கேள்வி எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறாள் என்பது நன்கு புரிந்தது அவருக்கு.
அது புரியாமல் கார்த்தி, "நீ என்னடி லூசு மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்குற? ஏன் உனக்கு தெரியாதா?" என்று அவன் முறைக்க,
"தெரியும்டா… அதை அப்பாக்கிட்ட ஷேர் பண்ணும் பொழுது இன்னும் மகிழ்ச்சியா இருக்கு டா அதற்காக தான்" என்று அவள் சிரிப்புடன் சொல்ல, அந்த நேரம் சர்வாவின் மடியில் இருந்த ஆது வேகமாய் சகியிடம் ஓடிவந்தது அவன் தடுக்க நினைக்கும் முன்பே வேகமாய் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டான்.
அதை அவளுமே எதிர்பார்க்கவில்லை. சட்டென்று அவள் திகைத்து சர்வாவை நோக்க அவனோ இரு தோள்களையும் மிக அலட்சியமாக உயர்த்தி என்னவோ பண்ணு என்பது போல அவனது செயல் இருக்க எங்கே விழுந்து விடுவானோ என்று பதறி அவனை தன் மடியில் இருத்திக் கொண்டாள் சகி.
கிருஷ்ணனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் சகியையும் அவளது மடியில் இருந்த பிள்ளையையும் மாறி மாறி பார்த்தார். படகு எடுக்கப்பட்டு நகர ஆரம்பித்தது. அதில் தள்ளாட்டம் ஏற்பட அவரவர் அருகில் இருந்த தாங்கியை நன்றாக பிடித்துக் கொண்டார்கள். சகி பிள்ளையை ஒரு கையிலும் தாங்கியை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டவள் சர்வாவின் புறம் திரும்பவே இல்லை.
ஆனால் கிருஷ்ணனுக்கு அப்படி இல்லை மூவரையும் மாறி மாறி பார்த்தார். அதுவும் தன் மகளையும் அவளின் மடியில் இருந்த பிள்ளையையும் மாறி மாறி பார்த்தார். 'இருவருக்கும் திருமணம் முடிந்து இருந்தால் இந்நேரம் இவனைப் போலவே ஒரு பிள்ளை என் மகளுக்கும் இருந்திருக்கும் அல்லவா? அப்போது எனக்கும் பேரன் பிறந்திருப்பான் இல்லையா? என் மீசையை பிடித்து விளையாண்டும் இருப்பான்..' என்று அவர் ஒரு கணம் யோசித்து இருவரையும் அதேபோல பார்க்க ஏனோ அவருக்கு கண்கள் கலங்கியது.
சர்வாவுக்கும் சகிக்கும் திருமணம் நடைபெற்று இருந்தால் இந்நேரம் இப்படியான ஒரு வாழ்க்கை என் மகளுக்கு நேர்ந்திருக்காது என்பது நன்கு புரிய அவரது உள்ளம் வேதனை கொண்டது. வீட்டுக்குள்ளே இருந்தால் மனம் இன்னும் சங்கடமாகும் என்றுதான் நால்வரும் வெளியே வந்திருந்தார்கள்.
ஆனால் வெளியே வந்த கிருஷ்ணனின் மனம் இன்னும் நொந்துப்போனது தான் மிச்சம். சர்வவின் வருகை இவ்விடத்தில் இல்லை என்றால் நால்வருக்குமே பொழுது இனிமையாகவே சென்றிருக்கும். சர்வாவின் வருகையில் தன் தந்தை மிகவும் நொடிந்து போய் இருப்பது உணர்ந்தவளுக்கு கண்கள் கலங்கியது. அதுவும் ஆதுவின் வருகைக்குப் பிறகு அவரது நிலை இன்னும் மோசமாக இருப்பது நன்கு புரிய அவளால் எதையும் செய்ய முடியாமல் போனது.
எது செய்தாலும் கார்த்திக்கு தெரிந்து விடும். எனவே எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் மடியில் வந்து அமர்ந்த ஆதுவை மட்டுமே அவளது உள்ளம் நினைத்தது. வேகமாய் உரிமையாய் அவளது மடியில் வந்து அமர்ந்த பிள்ளையை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.
"என்னிடம் வா நான் உன்னை வச்சுக்கிறேன்…" என்று கார்த்திக் அவனைக் கூப்பிட, "வத மாடத்தேன் போ. உன் கூட டூ" என்று முதல்முறையாக பார்ப்பவனிடம் அவன் டூ விட அதில் வாய்விட்டு சிரித்தான் கார்த்திக். அவனது சிரிப்பில் உள்ளம் நெகிழ்ந்தாள்.
"நீ அவன் கிட்ட போ அவன் பை நிறைய சாக்லேட் வெச்சி இருக்கான். உனக்கு நிறைய சாக்லேட் தருவான். நீ போய் அவன் மடியில உட்கார்ந்துக்குறியா?" என்று சகி கேட்க,
"மாத்தேன் போ" என்றவன் கார்த்தியை பார்த்து முறைத்துக் கொண்டே, "நான் உன்கிட்ட வத மாட்டேன்.." என்று சொல்லி சகியின் மடியில் உரிமையாக இன்னும் அமர்ந்து ஒட்டிக்கொண்டவன், அவளது மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு கடலைப் பார்க்க பயந்தவனாய் அவளோடு மிகவும் ஒட்டிக் கொண்டான். அதில் நெகழ்ந்தவள் தன்னோடு அவனை இறுக்கிக் கொண்டவள் கார்த்திக்கிடம் "ஒரு சாக்லேட் கொடு" என்று கேட்டவள் அதை வாங்கி பிள்ளையிடம் கொடுக்க அப்போது மட்டும் உடனடியாக வாங்கிக் கொண்டான். அதே போல இன்னொன்றை வாங்கி சர்வா மடியில் இருந்த இனியிடம் கொடுத்தாள்.
அதை எந்த பிகும் இன்றி வாங்கிக் கொண்டு தன் விலைமதிப்பில்லா புன்னகையை இவளுக்கு பரிசாக கொடுத்தாள் அந்த குட்டி பெண்..
குழந்தைகளிடம் சகி நெருக்கமாக இருப்பதை பார்த்து கார்த்திக் புருவத்தை சுறுக்க அவனது பார்வையில் தன்னை சுதாரித்துக் கொண்டவள் சர்வாவின் புறம் திரும்பவே இல்லை. சர்வாவும் யாரையும் கண்டு கொள்ளவில்லை. தன் மடியில் இருந்த பிள்ளையிடம் மட்டும்,
"அங்க பாரு நீர் காக்கா, கொக்கு, படகு, தண்ணி…" என எல்லாவற்றையும் சுட்டி காட்டிக் கொண்டு அந்த குட்டி பிள்ளையிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
சிறிது நேரம் கழித்து ஆதுவை "என்னிடம் வாடா" என்று கூப்பிட "வதமாட்டேன் போ…" என்று அவனுக்கு பெப்பெப்பே காட்டிவிட்டு இவளுடனே அமர்ந்து கொண்டான். அதில் சர்வ பல்லைக்கடித்தான்.
"அவங்களுக்கு தொந்தரவா இருக்கும் வாடா.." என்று அழைக்க,
"அடேயப்பா ரொம்ப தான் கருணை.. இந்த கருணை மத்த நேரம் மட்டும் எங்க போச்சாம். இப்ப மட்டும் கருணையாம் கருணை.. இவர் கருணையில் 2 அடி அடிக்க…" என்று சகி வாய்க்குள்ளே முணகிக் கொண்டாள்.
சகி முணகுவது காதில் கேட்கவில்லை என்றாலும் அவள் இதுதான் புலம்பி இருப்பாள் என்று எண்ணியவனுக்கு இதழ்களில் ஒரு குறும் புன்னகை எழ தான் செய்தது. ஆனால் அதை யாரும் அறியாமல் தன்னிதழ்களுக் குள்ளே புதைத்துக் கொண்டான்.






