அத்தியாயம் 8

 
Admin
(@ramya-devi)
Member Admin

கவிதாவின் இந்த சுடு சொல்லைக் கேட்டு சகிக்கு பக்கென்று போனது...

தாயிடம் இருந்து பிள்ளையை வலுக்கட்டாயமாக பிரித்தால் அது எப்படி தாயின் மாராப்பை பிடித்து இழுக்குமோ அது போல அவன் அவ்வளவு இறுக்கமாக பற்றி இருந்தான் அவளின் மாராப்பை..

அவனது பிடியில் இருந்து சகியை விலக்கவே முடியவில்லை அவரால்... அவரும் இன்னும் வேகமாக அழுத்தி பேரனை இழுக்க பார்க்க, அதை பார்த்த சகிக்கு பக்கென்று இருந்தது.

“ப்ளீஸ் அவன் தான் புரியாம செய்யிறான்னா நீங்க அவனோட சரிக்கு சமமா மல்லுக்கு நிக்கிறீங்களே...! அவனை ப்ரீயா விடுங்க. அவன் கிட்ட நான் பேசுறேன்...” என்றவளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் தன் பேரனை இழுப்பதிலே மும்மரமாக இருக்க, அவர் பிடித்த பிடியில் வலி எடுத்து குழந்தை இன்னும் அழ ஆரம்பித்தான்.

அதோடு... “போதி... போதி... கியவி.... நீ நேனாம் போதி...” என்று கண்ணீரோடு அவரை இரு கால்களால் எட்டி வேறு உதைக்க செய்தான்.

அவனது உதையில் வயிற்றில் சுரீர் என்று வலி எடுத்தது கவிதாவுக்கு. அதுவரை அவனது உடம்பை பற்றி இருந்தவர், அவனது கால்களை அசைக்க முடியா வண்ணம் இரு கால்களையும் இறுக பற்றிக்கொண்டார்.

அதில் இன்னும் பிள்ளை வீல்... என்று அலற... அவனது அலறலைக் கண்டவளுக்கு பாவமாய் போனது. இவ்வளவு முரட்டு தனம் அந்த சின்ன பாலகனிடம் வேண்டுமா என்று தான் தோன்றியது...

அதையெல்லாம் பார்த்துக் கொண்டு கீழே வந்த சர்வாவை சகி ஒரு முறை முறைக்க, புருவத்தை நெரித்து அவளை கூர்ந்து பார்த்தான். என்ன என்பது போல அவன் ஒற்றை புருவத்தை ஏற்றி அவளை பார்க்க,

“இவருக்கு காது கேட்குமா கேட்காதன்னு தெரியல... சின்ன பிள்ளையை சூடு வைப்பேன்னு மிரட்டுறாங்க... அதை கூட உணராம எனக்கென்னன்னு நின்னுக்கிட்டு இருக்காரு...” என்று வாயசைத்தவள் அவனை இன்னும் முறைக்க...

அவளது பார்வைக்கான அர்த்தம் அவன் உணர்ந்தாலும் தன் தாயின் சொல்லை அவன் செவிமடுத்து இருந்தாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.

அவன் பிள்ளை படும் பாட்டை கொஞ்சம் கூட சலனமில்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தவனின் மீது கட்டுக் கடங்காமல் கோவம் வந்தது. அதை உணர்ந்தும் எதையும் சொல்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்து விழிகளாலே அவனை எரித்தாள். அதுவரை எதுவும் பேச கூடாது என்று எண்ணியவள் கவிதாவின் செயல்களில் அவளுக்கு இன்னும் கோவம் வர,

“எதுக்கு இவ்வளவு போர்ஷா அவனை இழுக்குறீங்க... உங்க பேரனை நான் ஒண்ணும் செய்திட மாட்டேன். கொஞ்சம் பொறுமையா இருங்க... நானே அவனை உங்கக்கிட்ட தர்றேன்...” என்றவளை வெறுப்புடன் பார்த்தவர்,

“நீ யாருடி என் பேரனை என்கிட்டே குடுக்குறதுக்கு. முதல்ல நீ இந்த வீட்டை விட்டு வெளியே போ... உன்னை பார்க்க பார்க்க எனக்கு பத்திக்கிட்டு வருது..” என்று என்று வெறுப்புடன் சொன்னவரை மிக நிதானமாக ஏரிட்டவள்,

“லுக் மிச்செஸ் செல்வநாயகம்.. நான் ரொம்ப விருப்பப் பட்டோ இல்ல ஆசை பட்டோ உங்க வீட்டுக்கு வரல. எனக்கு அதுல பெருசா விருப்பமும் இல்லை. எனக்கு குடுத்த வேலையை தான் செய்ய வந்தேன். தென் உங்க பேரன் நெருப்போடவும் உடைந்த கண்ணாடிகளுக்கு நடுவிலும் இருந்ததால் மட்டுமே அதுவும் ஒரு மனிதாபி மானத்தோடு தான் நான் இவனை தூக்கினேன்...” என்றவள் அவரை இன்னும் ஆழமாக பார்த்து,

“முக்கியமா இந்த வீட்டுல இருக்கிற ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை நான் செய்து இருக்கிறேன்...” என்று அவர் செய்யாமல் விட்ட கடமையை வெளிப்படையாகவே சுட்டிக் காட்டியவள்,

“தவறு உங்க மேல வச்சுக்கிட்டு சின்ன பையனை இந்த அளவுக்கு நோகடிக்கிறது தவறு. அதோட உதவி செய்த என்னை இப்படி தரக்குறைவா பேசுறது ரொம்ப ஒர்ஸ்ட்...” என்று நிமிர்வுடன் சொன்னவளை வெறித்துப் பார்த்தார் கவிதா.

சகி பேசிய பேச்சை கேட்டு அவளை வெறுப்படன் பார்தார். அவளின் இந்த வெளிப்படையான குற்றம் சாட்டிவிட்டு அதை தன் மகனுக்கு முன்னாடியே சுட்டிக் காட்டியதில் வெறித்துப் பார்த்தார். “யார பார்த்துடி ஒர்ஸ்ட்ன்னு சொல்ற...? உன்னையெல்லாம்...” என்று சொல்லியபடி அவளை அறைய வர, ஒற்றை கரத்தால் பிள்ளையை வலுவாக பிடித்துக் கொண்டவள், இன்னொரு கையால் அவரின் கரத்தை பிடித்து இறுக்கினாள்.

அவளது பிடியில் அவர் முகத்தை சுழிக்க பார்த்துக் கொண்டு இருந்த சர்வாவுக்கு ஏனோ புன்னகை வந்தது. சகியை பொறுத்த வரை அவளது சுய மரியாதையை எங்கும் விட்டுக் கொடுக்கவே மாட்டாள்... அது பல பேருக்கு அகம்பாவமாய் தெரிந்தாலும் அவளை புரிந்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே அவளது தன்மானம் என்று அது புரியும்.

சர்வா தன் தோளில் கிடந்த மழலையை தட்டிக்கொடுத்துக் கொண்டே அங்கு நடப்பதை சுவாரஸ்யமாக பார்த்தான். அதற்கும் சகி முறைத்து பார்த்ததை கண்டு தான் இதுவரை மறந்துப் போன ஒரு உணர்வை அவள் அவனுக்கு தூவி விட்டது போல இருந்தது.... இதழோரம் யாருமறியாமல் ஒரு இரகசிய புன்னகையை அவனே உணர்ந்தான்.

அதுவும் அவளிடம் சண்டை போடுவதற்காக பிள்ளையை அதுவரை இழுத்துக் கொண்டு இருந்தவர் பட்டென்று அவனை விட்டுவிட்டு சகியை அடிக்க பாய, அவளோ தன்னை அவர் அடிக்க வருவதை உணர்ந்தாலும் பிள்ளையை கீழே நழுவ விடாமல் ஒரு கரத்தால் அவனை தன்னோடு இறுகப் பற்றி நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

அதையும் மிக நுணுக்கமாக உள் வாங்கிக் கொண்டான் சர்வா... முடியை பிடித்து சண்டை போடாத குறையாக இருவரும் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்க இவனோ அதை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் இருப்பதை பார்த்து தீ விழி விழித்தாள் சகி.

அவளது பார்வையை எதிர் நோக்கியவன் அவளையே ஆழ்ந்துப் பார்த்தான். அவனது பார்வையில் இவளுக்கு சட்டென்று உள்ளுக்குள் வியர்க்க, அவனிடமிருந்து பார்வையை பட்டென்று விலக்கியவள், கவிதாவை பிடித்திருந்த கரத்தை பட்டென்று உதறி விட்டு சற்றே தள்ளியும் விட்டாள்...

அதில் நிலை தடுமாறி அவர் சோபாவில் விழ, கட்டுக்கடங்காமல் ஆத்திரம் வந்தது அவருக்கு...

“ஏய் எங்க வந்து யாரை தள்ளி விடுற... உனக்கு அவ்வளவு திமிரா...? டேய் சர்வா இங்க பாருடா இவளுக்கு இருக்கிற திமிரை... என்னையவே தள்ளி விடுறா டா...” என்று சர்வேஸ்வரனிடம் புகார் கூற...

அவன் எதுவும் சொல்லாமல் அவரையே கூர்ந்து பார்த்தான்.

“என்னடா தம்பி அவ இந்த அளவுக்கு போயிக்கிட்டு இருக்கா... நீ என்னடான்னா பிடிச்சி வச்ச பிள்ளையாராட்டம் இருக்கிற? இப்போ இந்த நிமிடம் அவ இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்...” என்று அவர் நிலையாக நிற்க,

“இது ஒரு சின்ன விசயம் இதுக்கு ஏன் இப்படி ஓவரா ரியாக்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க... லீவிட்...” என்றவன்,

“குழந்தை ரொம்ப பயந்துப் போய் இருக்கான்... முதல்ல அவனை கவனிக்கணும்” என்றவன் இன்னொரு கையால் சகியிடம் இருந்த அவனது மகனை வாங்கிக்கொள்ள பார்க்க அவனோ சர்வாவிடமும் போக மறுத்தான். இதழ்களில் ஒரு கவர்ச்சியான புன்னகை ஒட்டியது.

அதை யாரின் கண்களுக்கும் தெரியாமல் மறைத்தவன்,

“அவன் ரொம்ப பயந்து போய் இருக்கான்... அதனால அவனை கொஞ்சம் சமாதனம் செய்...” என்றவன் தன் மகளோடு அமர்ந்துக்கொள்ள சகிக்கு இவன் என்ன இப்படி சொல்கிறான் என்று திகைத்துப் போய் பார்த்தாள்.

“ஹலோ...” என்று அவனை விழிக்க அவன் திரும்பி நின்று ஒரு வெட்டும் பார்வை பார்க்க நாக்கை கடித்தவள்,

“சாரி சார்...” என்றவள்,

“எனக்கு வேலை இருக்கு. நான் அலுவலகம் போகணும்..” என்றாள் பிடிவாதமாய்.

அவள் அப்படி சொல்லவும் அந்த குட்டி பையன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொள்ள... இருவரையும் ஒரு பார்வை பார்த்தவன்,

“அவன் விட்டா நீ இங்க இருந்து போ...” என்று சொல்லிவிட்டு தன் மகளோடு ஐக்கியமாக என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றாள் சகி.

அங்கு நடக்கும் இந்த கூத்துக்களை பார்த்துக் கொண்டு இருந்த கவிதாவுக்கு நெருப்பில் நிற்பது போல அப்படி ஒரு தகிப்பாய் இருந்தது.

“ஏன்டா நான் இவ்வளவு தூரம் சொல்றேன். உனக்கு ரொம்ப அலட்ச்சியமா போச்சா? இரு உங்க அப்பா வரட்டும்... உன்னையும் என்னன்னு கவனிக்க சொல்றேன்...” என்று அவர் அப்பட்டமாய் மிரட்டி சொல்ல அவரை ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வையில் அவருக்கு சர்வமும் அடங்கிப் போனது என்றாலும் அவருடைய திமிர் மட்டும் குறையவே இல்லை.

“என்னடா அமைதியா இருக்க? அவ...” என்று அவர் மேலும் பேச வர,

“அப்பா கிட்ட சொல்ற அளவுக்கு இங்க என்ன நடந்து போச்சு... அப்பாக்கிட்டன்னு இல்ல நீங்க வேற யார்கிட்ட சொன்னாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை... என் பிள்ளைக்கு சூடு வைக்க நீங்க யாரு...?” என்று அவன் கர்ஜிக்க அந்த கர்ஜனையில் அவருக்கு உடம்பு தூக்கிவாரிப் போட்டது.

“சர்வா...” என்று அச்சம் கொள்ள,

“மூணு வயசு சின்ன பையன் கிட்ட இப்படி தான் பிகேவ் பண்ணுவீங்களா? கொஞ்சம் கூட சென்சே கிடையாதா... இதுல அப்பாகிட்ட சொல்லுவேன் ஆட்டுக்குட்டிக் கிட்ட சொல்லுவேன்னு மிரட்டல் வேற...” என்று கத்தியவனை பார்த்து சர்வமும் அடங்கிப் போனது.

“தம்பி..” என்று அவர் ஆரம்பிக்க,

“உங்களை என்னைக்காவது என் பிள்ளைகளை பார்த்துக்க சொல்லி சொல்லி இருக்கேனா? இப்ப மட்டும் என்ன அக்கறை... கொஞ்ச நேரம் முன்னாடி அவன் இருந்த நிலையை கண்டு கொஞ்சமும் பதறல... அவனை பிள்ளைன்னு நினைச்சீங்களா இல்ல பொம்மைன்னு நினைச்சீங்களா? அந்த பிடுங்கு பிடுங்குறீங்க..” கொஞ்சம் கூட தயவு தாட்ச்சண்யம் பாராமல் வெறிக்கொண்டு கத்தியவனை பார்க்கையில் உள்ளுக்குள் நடுக்கம் வந்தது கவிதாவுக்கு.

“இன்னொரு முறை என் மகன் கிட்ட வந்தீங்க... என்னை மனிதனா பார்க்க முடியாது சொல்லிட்டேன்...” என்று அவரை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி தள்ளியவன்,

“இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக்கோ... நாளைக்கு அலுவலகம் வந்தா போதும்...” என்று சகியிடம் குரலை சற்று நெகிழ்த்தி சொன்னவன், அவளிடம் இருந்த குழந்தையை வாங்க கையை நீட்டினான். ஏற்கனவே அவனது கரத்தில் ஒரு பிள்ளை இருக்க இவனையும் கேட்க எப்படி தூக்குவான் என்று அவள் அவனை பார்க்க,

“நான் சமாளிச்சுக்குவேன் குடு..” என்று அவளிடம் கரத்தை நீட்டியபடியே,

“ஆது அப்பாக்கிட்ட வாடா...” என்று குரல் கொடுத்தான். அவனது குரல் கேட்டு குட்டி பையன் திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் அவளது மார்பிலே முகம் புதைத்துக் கொண்டான்.

அவனது செயலை கண்ட சர்வாவுக்கு புன்னகை தான் வந்தது... அவனை நெருங்கியவன்,

“அவங்களுக்கு கால்ல அடி பட்டு இருக்குடா. பாவம் தானே... இன்னைக்கு ஒரு நாள் அவங்களுக்கு ரெஸ்ட் குடு. நாளைக்கு ஆது குட்டியை பார்க்க அவங்க வருவாங்க...” என்று அவனது தலையை கோதி விட்டு மெல்ல மெல்ல சமாதனம் செய்து அவளிடமிருந்து பிள்ளையை வாங்கிக்கொண்டவன்,

கார் ஓட்டுனரை வர வைத்து இவளை வீட்டில் விட சொல்ல,

“நோ நீட்...” என்றவள் வெளியே போக பார்க்க,

“என் மகனை காப்பாற்றியதால் தான் உனக்கு இந்த உபகாரம். மற்ற படி உனக்கு எதுக்கு நான் கார் ஏற்பாடு செய்ய போறேன்..” என்று அலட்சியம் காட்டியவன், ட்ரைவரிடம் கண்ணை காட்டினான்.

அவனது அலட்சியம் கண்டு உள்ளம் குமுறியவள்,

“நீங்க எனக்கு இந்த பேவர் பண்ணுவீங்கன்னு ஒண்ணும் நான் உங்க மகனை காப்பாத்தல சார்...” நறுக்கு தெரித்தார் போல அவளும் சொல்ல,

“ப்ச்... ஆர்கியுமென்ட் பண்ணாம ஒழுங்கா இங்க இருந்து கிளம்பு...” சொன்னவன், அவள் முறைப்பதை பார்த்து,

“கெடவுட்...” என்றான். அவனது இந்த செயலில் முகம் கருத்தவள், அவனை அடிக்க கரம் ஓங்கியது... முயன்று அதை கட்டுப் படுத்தியவள்,

அவன் ஏற்பாடு செய்திருந்த காரை உதாசீனம் செய்து விட்டு தாங்கி தாங்கி நடந்து பேருந்து நிலையத்தை அடைந்தவள் பேருந்தில் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டாள்.

அவளது இந்த உதாசீனம் சர்வாவை பல்லைக்கடிக்க வைத்தது. இவன் கெட்டவுட் சொல்லும் பொழுது ஏற்படாத உணர்வு அவள் அவனை உதாசீனம் செய்யும் பொழுது பெரிதாக வந்தது. பல்லைக் கடித்தபடி போகும் சகியை கடுப்புடன் பார்த்தான்.

 

Loading spinner

Quote
Topic starter Posted : October 21, 2025 11:46 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top