"பரவால்ல ஒன்னும் பிரச்சனை இல்ல குடுங்க… நான் பாத்துக்குறேன்… அவன் விடாம அழறான் பாருங்க… குடுங்க நான் பாத்துக்குறேன்" என்று அவனிடமிருந்து குழந்தையை வாங்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்வாவின் தாய்க்கு தான் அவ்விடம் அந்நியமாகப் பட்டது போல உணர்ந்தார். ஓடி வந்து பேரனை தூக்கி அணைத்துக் கொள்ளாமல் தள்ளியே இருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் அவரை வெரித்து பார்த்தான் சர்வா…
இது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு தானே குடும்பத்தை விட்டு தள்ளி தானே இருப்பார் இன்றைக்கு மட்டும் பேரன் என்கிற பாசம் வந்துவிடுமா என்ன? என்று எண்ணி உள்ளுக்குள் பரிகசித்துக்கொண்டான் சர்வா…
சற்றே பெரிய காயம் தான். கண்ணாடி ஒரு இன்ஞ் அளவு கிழித்திருந்தது அவளது காலை. வலி உயிர் போனது. கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டாலும் பிடுங்கப்பட்ட வலியும் அதோடு சேர்த்து மருத்துவம் பார்க்கப் பட்டதில் தன் மார்பின் மீது இருக்கும் குழந்தை மிரண்டு போகாமல் இருப்பதற்காக தன் வலியை தன் அலறலை வெளியிடாமல் உதட்டை கடித்து வலியை பொறுத்துக் கொண்டாள்.
அவள் படும் வேதனையை பார்த்துக் கொண்டிருந்த சர்வாவுக்கு ஏனோ ஒரு மாதிரி ஆனது. யாரோ ஒரு குழந்தைக்காக அவள் கண்ணாடிகளில் நடந்து இவ்வளவு காயம் வாங்கி இருப்பதை பார்த்து மனம் சற்று நெகிழ்ந்து தான் போனது. ஆனாலும் தன் நெகிழ்வை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் திடமாக நின்றான்.
விழிகள் மொத்தமும் அவளிடமே சரணடைந்து இருந்தது. தான் ஏன் அவளை பார்க்கிறோம் என்று கூட உணராமல் வைத்த கண் வாங்காமல் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் தன் பிள்ளை அவளது மார்பில் புதைந்து இருப்பதை கண்டு உணர்வுகளும் எண்ணங்களும் எங்கெங்கோ செல்ல தன் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டவனுக்கு பெருமூச்சு எழுந்தது.
அந்த நேரம் "வீல்.." என்கிற சத்தம் கேட்டது. அது யார் என்று அறிந்தவனுக்கு உதட்டில் மெல்லிய புன்னகை ஒன்று பரவியது. வேகமாக சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான். உள்ளே நுழைந்த உடனே இன்னும் சத்தம் அதிகமாக, வேகமாய் ஓடிப்போய் தன் மகளை மார்போடு தளுவிக் கொண்டான்.
தன் தந்தையின் மார்பு சூட்டில் என்ன உணர்ந்தாளோ அப்படியே அமைதியாகி விட்டாள் அந்த குட்டி பெண்.
இவ்வளவு கலவரம் அங்கே நடந்து முடிந்தது. ஆனால் இவ்வளவு சத்தத்துக்கும் சர்வாவின் மனைவி வெளியே வராமல் இருப்பது கண்டு நெற்றி சுருக்கினாள் சகி. ஆனால் அதைக் கேட்கும் தொகுதி தனக்கு இல்லை என்று அமைதியாகிப் போனாள்.
கவிதாவுக்கு தன் கண் முன் நடக்கும் நிகழ்வுகளை கண்டவருக்கு ஒரு கணம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதுவும் சகியை இங்கே இவ்வளவு நாள் கழித்து பார்த்தவுடன் பெரிதும் அதிர்ந்து போனார். கூடவே அவரின் எண்ணங்கள் எல்லாம் நான்கு வருடங்களுக்கு பின்னோக்கி போக அவரின் முகத்தில் கட்டுக்கடங்காத கோவம் வந்தது... அதை உடனே தன் கணவனிடம் சொல்ல வேண்டும் என்று தோன்ற வேகமாய் செல்வநாயகனுக்கு போன் போட்டார்.
நறுக்கென்று விசயத்தை சொன்னாவர் தன் வீட்டில் ராஜ மரியாதையில் மருத்துவம் பெற்றுக்கொண்டு இருந்த சகியின் முன்பு ஆத்திரத்துடன் வந்து நின்றார்.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சி இருப்ப...? உன்னால நாங்க பட்ட அவமானம் போதாதா? இத்தனை வருடம் கழிச்சு மறுபடியும் எங்களை அவமானப் படுத்த பார்க்குறியா? முதல்ல இங்க இருந்து வெளியே போ... உன் முகத்துல முழிச்சாலே எங்களுக்கு பாவம் வந்து சேரும்...” என்றவரை எந்த உணர்வும் இல்லாமல் ஏறெடுத்துப் பார்த்தவள் தன்னை கட்டிக்கொண்டு இருக்கும் பிள்ளையை விலக்கி விட்டு எழ பார்க்க,
“அவ உங்களை பார்க்கவோ இல்லை இந்த வீட்டை சொந்தம் கொண்டாடவோ, இல்லை என்னோட வாழவோ வரவில்லை. அவ ஜஸ்ட் என்னோட எம்ப்ளாயி... அந்த மரியாதையை நீங்க அவளுக்கு குடுத்து தான் ஆகனும்...” என்று கர்ஜனையான குரல் கேட்க வேகமாய் திரும்பி பார்த்தார் கவிதா.
“டேய் தம்பி என்னடா நீ... அவளை எதுக்கு நீ நம்ம வீட்டுக்குள்ள வர விட்ட... அவ யாருன்னு உனக்கு மறந்து போச்சா... இல்ல அவ செய்ததை தான் நீ அவ்வளவு ஈசியா மறந்துட்டியா? அவ யாருன்னு உனக்கு ஞாயபகம் இருக்கா. அவளால தான் நீ அன்னைக்கு அத்தனை பேருக்கு முன்னாடியும் தலைகுனிஞ்சி நின்ன... அதை மறந்துடாத...” என்று தூபம் போட்டவர், அவளின் நெஞ்சோடு புதைந்து கிடந்த பேரனை வலுக்கட்டாயமாக பிடுங்க பார்த்தார்.
“அதை எல்லாம் அவ்வளவு சீக்கிரமா என்னால மறக்க முடியாது. ஆனா அவ இப்போ இங்க வந்தது என்னோட எம்ப்லாயியா மட்டும் தான். சோ அவளுக்கு என்ன மரியாதை குடுக்கணுமோ அந்த மரியாதையை நீங்க குடுத்து தான் ஆகணும்...” என்று தன் தாயிக்கே ஆர்டர் போட்டவன் சகியை ஆழ்ந்து பார்த்தான்.
அவனது பார்வையை அலட்ச்சியம் செய்தவள்,
தன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு இருந்த பிள்ளையை கவிதா வேகமாக பிடுங்க பார்க்க, அவனோ எள்ளு முனையளவு கூட நகரவில்லை. ஒரு கரத்தில் முதுகோடு அவளை இறுக்கிப் பிடித்தவன், இன்னொரு கரத்தை அவளின் மார்பு சேலையோடு இறுக்கிக் கொண்டான். அவனது முகத்தை திருப்பவே இல்லை. பாட்டியிடம் போக மாட்டேன் என்பது போல அவன் நிலை இருக்க சகி தான் என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்தாள்.
இதுவரை யாரும் அவனை அள்ளி தூக்கி அணைத்துக் கொண்டது இல்லை. முதல் முறையாக பதறியடித்துக் கொண்டு தன்னை அள்ளி தூக்கி நெஞ்சோடு கட்டிக் கொண்டு முதுகை நீவி விட்டு... “ஜோ... ஜோ...” என்று அவனை சீராட்டியது, பயத்தில் அலறிய போது தன்னை யாரும் தூக்காமல் காத்து அரவணைத்துக் கொள்ளாமல் தனியே விட்டு வேடிக்கை பார்த்த நேரத்தில் ஓடி வந்து தன்னை தூக்கிக் கொண்டு நெஞ்சில் போட்டு தட்டிக் கொடுத்து ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை என்று சமாதனாம் செய்தது என எல்லாவற்றையும் உணர்ந்து பிள்ளையவன் அவளின் மார்பில் தன்னை புதைத்துக் கொண்டான்.
அதோடு நெருப்பில் இருந்து வந்த வெளிச்சமும் வெப்பமும் அவனை பயமுறுத்தி இருக்க அந்த பயம் அவனது உடல் மொழியிலயே நன்றாகவே தெரிந்தது.
அதை உணரக்கூட இல்லாமல் தன்னிடம் தஞ்சமாய் இருந்த பிள்ளையை பிரிப்பதைக் கண்டு எதுவும் செய்ய முடியாமல் உரிமையற்ற நிலையில் கையறு நிலையோடு சேர்ந்து நின்றிருந்தாள் சகி.
அவளின் மார்பில் வந்த தாய்மையின் அணைப்பு அந்த சிறுவனுக்கு இது வரை கிடைத்தது இல்லையல்லவா... தகப்பன் அவனது மார்பில் போட்டு வளர்த்தாலும் தாய்மையின் நெருக்கம் என்றுமே தனி தானே... அந்த உணர்வு கொடுத்த தாக்கம் அவனை சகியை விட மறுத்தது. அதோடு நெருப்பை கண்டு வந்த பயம் அவனை பெரிதும் ஆட்டிப் படைக்க தன்னை காப்பாற்ற வந்தவளை அவனுக்கு விடவே மனம் வரவில்லை.
இந்த நெஞ்சை விட்டால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல அந்த சிறுவன் உணர்ந்தான் போல... அதனால் அவளை விட்டு இம்மி கூட நகரவில்லை. அவனது நிலை உணர்ந்தாலும் சகி,
“கண்ணா ப்ளீஸ் நீ உன் பாட்டிக்கிட்ட போடா... பாட்டியும் உன்னை மாதிரி பயந்து தான் போய் இருக்காங்க... போடா” என்று அவன் காதோரம் சமாதனம் சொல்ல அவன் “மாத்த்தேன்...” என்று சொல்லி பிடிவாதமாக அவளின் நெஞ்சில் இன்னும் இன்னும் முகம் புதைத்துக் கொள்ள பார்த்துக் கொண்டு இருந்த கவிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. யாரிடமும் இவ்வளவு நெருங்காதவன் சகியிடம் ஒட்டிக்கொண்டு வர மாட்டேன் என்று சொல்லி அடம் பிடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து கண் மண் தெரியாமல் கோவம் வந்தது அவருக்கு.
“இப்போ நீ வரப் போறியா இல்லையாடா... நீ இப்போ வரல சூடு வச்சிடுவேன்... பாரு” என்று அவர் மிரட்டியபடி அவளின் நெஞ்சில் இருந்த பிள்ளையை அவனுக்கு வலிக்க வலிக்க பிடித்து இழுக்க இரு கரத்தால் அவளின் மார்பு சேலையை பிடித்துக்கொண்டு,
“வத்த மாத்தேன் போதி...” என்று அழுதான். குழந்தையின் முழு உடலும் அவரின் வசம் போனது. ஆனால் அவரால் முழுதாக குழந்தையை வாங்க முடியவில்லை. தன் பிஞ்சு கரங்களால் சகியின் மாராப்பை அவ்வளவு இறுக்கமாக பிடித்து வைத்திருந்தான்.
கவிதாவின் இந்த சுடு சொல்லைக் கேட்டு சகிக்கு பக்கென்று போனது...
தாயிடம் இருந்து பிள்ளையை வலுக்கட்டாயமாக பிரித்தால் அது எப்படி தாயின் மாராப்பை பிடித்து இழுக்குமோ அது போல அவன் அவ்வளவு இறுக்கமாக பற்றி இருந்தான் அவளின் மாராப்பை..






