யார் அந்த பையன் என்று அவளுக்கு தெரியாது. இவள் யாரென்று அவனுக்கு தெரியாது. அவள் தூக்கிய உடனே வேகமாய் அவளுடன் ஒட்டிக் கொண்டான் அந்த சிறுவன். கையில் அனல் பட்டுவிட தன் கைகளை அதிலிருந்து எடுக்க கூட தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான் சிறுவன்.
இவள் வந்து தூக்கியவுடன் தான் அவனுக்கு நிகழ்வே புரிந்தது. ஆனாலும் பயம் முழுதும் அவனை ஆட்கொண்டு இருந்தது. வேகமாய் அவளது மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான் அவன். அதிலே நன்கு தெரிந்தது அவன் அதிகம் பயந்து போய் இருக்கிறான் என்று.
"ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்லடா... சரியா போயிடுச்சு பயப்படாதீங்க..." என்று தன் நெஞ்சில் படுத்திருந்த அவனது முதுகை மெல்ல மெல்ல தட்டி, நீவி விட்டு சரி செய்தாள்.
ஆனாலும் அச்சிறுவனுக்கு பயம் மட்டும் போகவே இல்லை. "ம்மா… ம்மா…" என்று அலற ஆரம்பித்து விட்டான்.
"இல்லம்மா ஒன்னும் இல்ல. சரியா போயிடுச்சு சரியா போயிடுச்சு… அவ்வளவுதான்" என்று அவள் தட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது அவனது பாட்டி கவிதா வேகமாய் ஓடி வந்தார்.
அவளிடம் கையை நீட்டினார் குழந்தையை கொடுக்குமாறு. ஆனால் அருகில் வரவில்லை அவர்.
ஏனென்று பார்க்கும் பொழுது தான் கீழே இருந்த கண்ணாடி துண்டுகளை பார்த்தாள் அவள். தான் எந்த யோசனையும் இல்லாமல் குழந்தை நெருப்போடு விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து அதுவும் சுற்றிலும் கண்ணாடி துண்டுகள் சூழ்ந்து இருக்க அவனால் எப்படியும் வர முடியாது என்று ஒரு கணம் கூட யோசிக்காமல் கண்ணாடிகளில் காலை வைத்து குழந்தையை தூக்கி விட்டாள். ஆனால் அவனது பாட்டி மிகத் தெளிவாக கண்ணாடியின் அருகில் வரவில்லை. இத்தனைக்கும் செருப்பு அணிந்து இருந்தார். ஆனாலும் அருகே வராமல் கடமைக்கு என்று எட்டி இருந்து குழந்தைக்காக கைகளை அவளிடம் நீட்டிக்கொண்டு இருந்தார்.
அவர் கேட்கவும் குழந்தையை அவரிடம் நீட்ட அவன் அவளது மார்பை விட்டு போகவே இல்லை. இரு கைகளாலும் அவளது மார்பு புடவையை பிடித்துக் கொண்டு முகத்தை அவளை விட்டு எங்கும் அசைக்காமல் அவளுடனே ஒட்டிக் கொண்டான். ஆது குட்டி யாருடைய சொல் பேச்சையும் கேட்காமல் எல்லாவற்றையும் எடுத்து போட்டு உடைக்கும் பொழுதே அதை சிசிடிவி கேமரா மூலம் பார்த்த சர்வா உடனடியாக அலுவலகத்திலிருந்து கிளம்பி வந்துவிட்டான் வீட்டுக்கு.
வந்தவனின் கண்களுக்கு அங்கிருந்த சூழ்நிலை ஒரு நொடியில் புரிந்து போனது. இவ்வளவு கேர்லெஸ எப்படி இருந்தார்கள் என்று ஆத்திரம் கண்களை மறைத்தது.
வீட்டுக்குள் நுழைந்த உடனே, "இன்னைக்கு யார் கேர்டேக்கர் டியூட்டி…" என்று அவன் கர்ஜிக்க நடுநடுங்கி கொண்டே இரண்டு பெண்கள் அவன் முன்பு வந்து நின்றார்கள். அவர்களை எரிப்பது போல பார்த்தவன்,
"எப்படி உங்களால இவ்வளவு கேர்லஸ்ஸா இருக்க முடியுது…? இது பேரு கேர்லஸ் கூட கிடையாது.. வேணும்னு செய்யிற செயல்... என் மகனோட உயிர் உங்களுக்கு எல்லாம் அவ்வளவு துச்சமா போயிடுச்சா... அவன் வச்சி தான் உங்க பொழப்பு இருக்குன்றது மறந்து போயிடுச்சா..” என்று கண்களில் கட்டுக்கடங்கா சினத்துடன் கர்ஜித்தான்.
“ஆது கண்ணாடி சாமானை தூக்கி போட்டு உடைக்கிறவரை நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க? பிளஸ் லைட்டர யாரு அவன் பக்கத்துல வச்சது…?” அவன் கேட்ட கேள்வியில் சர்வமும் ஒடுங்கிப் போய் அனைத்து பணியாளர்களும் பயத்தில் நடுநடுங்கி போனார்கள்..
"இல்ல சார் பாப்பா அழுதிட்டு இருந்தா. அதனால பாப்பாவை பாக்குறதுக்காக அங்க போய்ட்டோம்…" என்று கேர்டேக்கர் இருவரும் சொல்ல..
ப்ளோர் க்ளீனிங் ஆட்களை எரிக்கும் பார்வை பார்த்தவன்,
“நீங்க இங்க தானே இருந்தீங்க... ஆதுவை பார்த்துக்குறத்தை விட அப்படியென்ன வெட்டி முரிச்சுக்கிட்டு இருந்தீங்க...”
“இல்ல சார் க்ளீனிங்...” என்று அவர்கள் தடுமாற,
“ஏய்...” என்று கர்ஜித்தவன்,
“அவனுக்கு எட்டுற மாதிரி கண்ணாடி சாமான வைச்சு அவனை அதுலையே விளையாட விட்டு அது பத்தாதுன்னு லைட்டரையும் பக்கத்துல வச்சிட்டு மெழுகு திரியும் பக்கத்துல வைப்பீங்களா? அறிவு இல்ல... சின்ன பிள்ளை வீட்டுல இருக்கானே... எதாவது சேட்டை செய்வானேன்னு கொஞ்சம் கூட புத்தி யோசிக்கலையா?”
“இப்படி மடத்தனமா மெத்தனமா இருந்துட்டு சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருந்தீங்க... இதுவரை முதலாளியா பார்த்த என்னை வேற மாதிரி பார்க்க நேரும்...” என்று அரட்டியவனுக்கு மனமே ஆறவில்லை...
“எப்படி தைரியம் வந்தது? மூணு வயது சிறுவன் இருக்கான் என்கிற அறிவு வேணாம். இப்படியா நடந்துக்குவீங்க… உங்களை நம்பி தானே நான் என் மகனை விட்டுட்டு போனேன்.." என்று அவன் ஆத்திரத்தில் பல்லை கடித்தான்.
"இல்ல சார்.. அது வந்து…"
"நான் பாப்பாவ பார்த்துக்க தான் இன்னும் இரண்டு கேர்டேக்கர்ஸ் போட்டு இருக்கேனே. நீங்க எதுக்கு அங்க போனீங்க…? எனக்கு பொய் சொன்னா பிடிக்காது… பொய் சொல்லாதீங்க ரெண்டு பேரும் டியூட்டி டைம்ல எங்க போனீங்க? என்ன பண்ணீங்க?" என்று அவன் அழுத்தம் திருத்தமாக கேட்க, அவனது தீர்கமான கேள்வியில் நா வரண்டுப் போனது இருவருக்கும்.
"இல்லை சார் நாங்க பாப்பா கிட்ட தான் இருந்தோம்…" என்று எச்சில் விழுங்கிய படி அவர்கள் மேலும் சொல்ல,
எதுவும் பேசாமல் தன்னுடைய சி சி டி வி கேமரா பொறுத்தி இருந்த போனை எடுத்து அவர்களிடம் காண்பித்தார்கள். அவர்கள் இருவரும் ஸ்டோர் ரூமில் ஏதோ திருடுவதற்காக சென்றது தெரிய தலை குனிந்து கொண்டு நின்றார்கள்.
"எவ்வளவு தைரியம் இருந்தால் என் வீட்டிலேயே வந்து திருட செஞ்சு இருக்கீங்க…? அதோட இல்லாம என் மகனை ஒழுங்கா பார்த்துக்காம கண்ணாடியிலையும் நெருப்புலையும் விளையாட விட்டு இருக்கீங்க.. இதுக்கு உங்களுக்கு என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம்…? என்று அவர்களை உக்கிரமாக பார்த்தவன்,
"நீங்கள் பொண்ணுங்களா போயிட்டதனால என் தண்டனையிலிருந்து தப்பிச்சீங்க.." என்றவன் அவர்களோடு சேர்ந்து க்ளீனிங் ஆட்களையும் வீட்டை விட்டு துரத்தி விட்டதோடு இல்லாமல் இனி எங்குமே எங்கும் வேலை கிடைக்காத அளவுக்கு செய்து விட்டான்.
இப்படி நடக்கும் என்று அறியாதவர்களுக்கு பக்கென்று போனது. தங்களது குடும்ப நிலையை எண்ணி அவனது காலில் விழ…
"சீ சீ தள்ளி போங்க.. உங்க நிழல் என் மேல பட்டா கூட எனக்கு பாவம் பிடிக்கும். இனி உங்களை நான் எந்த ஏரியாவிலும் பார்க்க கூடாது. பெண்களா போயிட்டீங்க அதனால தான் உங்களுக்கு ரொம்ப குறைந்தபட்ச தண்டனை கொடுத்து இருக்கேன். இதுவே உங்க இடத்துல வேற யாராவது இருந்திருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும். முதல்ல உங்க ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புறேன்…" என்று கொஞ்சம் கூட இறங்கி வராதவன் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்தில் புகார் அளித்து உடனடியாக உள்ளே தள்ளி விட்டான். அவனைப் பொறுத்தவரையில் இதுவே இரக்கம் தான் என்று எண்ணுபவன். ஆனால் அவர்களுக்கு அது எவ்வளவு கொடுமை என்று அவர்களுக்கு தானே தெரியும். காசு பணத்திற்காக ஆசைப்பட்டு தாங்கள் செய்த தவறை எண்ணி குமைந்து போனார்கள்.
அதோடு ப்ளோர் கிளீனிங் ஆட்கள் பேசியது அப்பட்டமாய் அவன் போட்டு காட்ட இந்த ஆட்களுக்கும் பயம் பேயாட்டம் போட்டது.
“என் மகன் கண்ணாடி துண்டுகளுக்கு நடுப்புற நிக்கிறான். நீங்க கொஞ்சம் கூட பதட்ட படாம ஒருமுறை இப்படி பட்டா தான் அடுத்த முறை இந்த மாதிரி எடுத்து போட மாட்டன்னு நீங்க சொகுசா இருக்க அவனை இரக்கமே இல்லாம கண்ணாடி துண்டுகளுக்கு மத்தியிலும் நெருப்பின் மத்தியிலும் விட்டுட்டு பாவலா காட்டிக்கிட்டு நின்னு இருக்கீங்க...”
“இதே மாதிரி தான் உங்க வீட்டு பிள்ளைங்க விளையாண்டா நடந்துக்குவீங்களா?” என்று கேட்டவன் அவர்களுடைய பிள்ளைகளை வீட்டுக்கு வர வைத்து பயம் காட்ட அலறி துடித்துப் போய் அவனது காலில் விழுந்தார்கள்.
“ஏய்... ச்சீ... தள்ளி போங்க... உங்க நிழல் என் மேல பாட்டா கூட தரித்திரம்... உங்க பிள்ளைங்க என்றவுடனே துடிக்கிது... ஏன் நீங்க மட்டும் தான் பத்து மாதம் சுமந்து பெத்தீங்களா? மத்தவங்க எல்லாம் குறை மாசத்துல பெத்து போட்டு வச்சி இருக்காங்களா என்ன?” என்று கண்களை உருட்டி அவர்களை லேபிட் ரைட் வாங்கியவன் ஒருவரை கூட விட்டு வைக்காமல் அடித்து வெளியே துரத்தி விட்டான்.
சர்வாவின் இந்த அதிரடியில் அவனின் தாயே ஒரு கணம் ஆடி தான் போனார்.
"என்ன சர்வா இது… இந்த சின்ன விசயத்துக்கு போய் இப்படி பண்ற…? இப்போ நான் வேலை யாட்களுக்கு எங்க போவேன்... இப்படியே சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் கோவப் பட்டு கோவப்பட்டு நீ உன் நிதானத்தை இழந்துக் கிட்டு இருக்க... இவ்வளவு பெரிய பிசினெஸ் மேன் நீ... நீயே இந்த அளவுக்கு நிதானம் இல்லாம இருக்கலாமா?" என்று அவர் கேட்க, சகிக்கே ஒரு மாதிரி ஆகிப் போனது அவரின் இந்த பேச்சு...
"எது சின்ன விசயம்…? அவன சுத்தி பாருங்க ஃபுல்லா கண்ணாடி துண்டும் நெருப்பும் எரியுது. இது உங்களுக்கு சின்ன விசயமா? சகி வரலன்னா இன்னேரம் என் மகன் நெருப்புக்கு பயந்து கண்ணாடி துண்டில் கால் வைத்து ஓடி வந்திருப்பான். அது உங்களுக்கு சின்ன விசயமா தெரியுது இல்லையா? நெருப்புல நின்னது என் மகன். அதனால அந்த துடிப்பு தானா வரும்... இதுல எங்க இருந்து நிதானம் வந்தது..." என்று அவன் கர்ஜித்தான்.
அவனது கோபம் நியாயமாகவே பட்டது சகிக்கு. இருந்தாலும் அவள் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவள் நெஞ்சில் முகம் பதிந்து படுத்து இருந்தவனை தன்னை விட்டு விலக்கப் பார்த்தாள். அவன் விலகவே இல்லை. அப்படியே அவளோடு சுருண்டு கொண்டான். சிறிது நேரம் கழித்து அவ்விடத்தை விட்டு நகரலாம் என்று நகரும் போது தான் காலில் காயம் இருப்பதே உணர்ந்தாள் சகி.
“ஸ்ஸ்ஸ் ஆ வலிக்குதே…” என்று முணகியவள் சர்வாவிடம் குழந்தை வாங்குமாறு கண்களை காட்டினாள். அவனுக்கு புரியவில்லை ஏன் அவள் நகராமல் நின்ற இடத்தில் குழந்தையை கொடுக்கிறாள் என்று. அவளது முகசுழிப்பை வைத்து தான் கீழே இருந்த கண்ணாடி துண்டுகள் அவள் கால்களில் குத்தி இருப்பதை உணர்ந்தான்.
வீட்டோடு இருக்கும் நர்ஸிடம் அவளது காலை பார்க்குமாறு பணித்தான். ஒரு வழியாக குழந்தையை அவன் வாங்கிக் கொள்ள குழந்தை ஒரே அழுகை நான் வரமாட்டேன் போ அவனது கோட் பட்டனை பிய்த்து எறிந்தது. அதை பார்க்கும் போது அவளுக்கு பாவமாக இருந்தது. கால்களை நீட்டி நர்ஸ்க்கு மருத்துவம் பார்க் வசதியாக காட்டிக்கொண்டே சர்வாவிடம் குழந்தைக்காக கையை நீட்டினாள்.
அவனோ "குழந்தை ஆட்டிவிடுவான். உன்னை ஏதாவது பண்ணுவான். நீ முதல்ல டிரீட்மென்ட் எடுத்துக்கோ அப்புறம் பேபி வாங்கிக்கோ…" என்று அவன் இலகுவாக சொல்லிவிட,
"பரவால்ல ஒன்னும் பிரச்சனை இல்ல குடுங்க… நான் பாத்துக்குறேன்… அவன் விடாம அழறான் பாருங்க… குடுங்க நான் பாத்துக்குறேன்" என்று அவனிடமிருந்து குழந்தையை வாங்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்வாவின் தாய்க்கு தான் அவ்விடம் அந்நியமாகப் பட்டது போல உணர்ந்தார். ஓடி வந்து பேரனை தூக்கி அணைத்துக் கொள்ளாமல் தள்ளியே இருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் அவரை வெரித்து பார்த்தான் சர்வா…






