பரபரவென்று தன் முன் பிஏ வேலை செய்து கொண்டு இருந்த சகியை பார்க்க பார்க்க கடுப்பு ஏறியது சர்வாவுக்கு. ஆனால் முழு கோபத்தையும் அவளிடம் காட்ட முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.
ஆனாலும் அவளிடம் கடுமையை காட்டாமல் இருக்க அவனால் முடியவில்லை. தான் இழந்தது எல்லாமே கண் முன் வர அவ்வளவு கோபம் வந்தது. சரி விரைவில் அவளை விட்டுவிடலாம் என்று தான் அவனும் எண்ணினான்.
ஆனால் இதோ ஒரு மாத காலம் ஆகியும் அவள் மீது உள்ள அந்த கோபமும் ஆத்திரமும் சிறிதும் கூட குறையவே இல்லை. அப்படியே உள்ளுக்குள் கணன்று கொண்டே இருந்தது. தன் எதிரில் இருந்தவளை பார்க்க பார்க்க கோவமும் ஆத்திரமும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருந்ததை உணர்ந்தவன் இது எப்பொழுது கரை உடைத்து வெளியே வரும் என்று அவன் தன் விழிகளை உருட்டிக் கொண்டு இருந்தான்.
ஆனால் கண்டிப்பாக அதில் அவள் பாதிக்கப்படுவாள் என்பது மட்டும் அவனுக்கு மிக நன்றாக தெரிந்தது.
அந்த காயத்தை அவளுக்கு கொடுக்கக் கூடாது என்று அவனது இன்னொரு மனமும் யோசித்தது. இரண்டுக்கும் மத்தியில் அவன் மாட்டிக் கொண்டு உச்சகட்ட ஆத்திரத்தில் அவளிடம் வெடிக்கவும் செய்தான். அதுவும் அவளது நிமிர்வைக் கண்டு இன்னுமே கோபம் வந்தது.
"அது எப்படி என்கிட்ட உன்னால மட்டும் இவ்வளவு நிமிர்வாக இருக்க முடியுது. உன்னோட நிமிர்வை நான் உடைத்து போட்டே தீருவேன்டி" என்று பல்லை இறுக கடித்துக்கொண்டு அவளிடமே தன் வெஞ்சினத்தை கொட்டினான்.
அவன் கோபத்தை காட்டும் பொழுது எல்லாம் ஒரு வரட்டு சிரிப்புடனுமோ இல்லை வெற்று பார்வையுடனுமோ அவனை கடந்து சென்று விடுவாள். நின்று பதில் சொன்னால் இன்னும் பிரச்சனை பெரிதாகும் என்பதால் பெரும்பாலும் அமைதியாக அவனை கடந்து சென்று விடுவாள்.
ஆனாலும் விடாமல் எப்பொழுதும் சீண்டி கொண்டு இருப்பவனிடம் என்றைக்காவது ஒரு முறையாவது பதிலடி கொடுக்காமல் இருக்கவும் மாட்டாள்.
இன்றைக்கு முக்கியமான பைல் ஒன்றை வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தான் அலுவலகத்துக்கு. அந்த பைல் இன்னைக்கு சைன் பண்ண வேண்டும் என்பதால் இவளை விட்டு எடுத்து வர சொல்லி இருந்தான்.
"நானா நான் எப்படி உங்க வீட்டுக்கு போறது? இல்ல நான் போகல. நீங்க உங்க பிஏ கிரியை விட்டு எடுத்துக்க சொல்லுங்க" என்று இவள் சொல்ல,
"அப்போ நீ யாருடி...?” என்று அவன் கர்ஜிக்க, அவனது வார்த்தயில் உண்மை புரிய சட்டென்று மௌனமானாள்... அவளது மௌனத்தில் இன்னும் கோவம் வர,
“ஏய் அறிவில்ல, நான் என்ன உன்னை என் வீட்டுக்கு வாழவா போக சொல்றேன்.” என்று கடுப்படித்தவன்,
“பைலை எடுத்துட்டு வா. இன்னைக்கு ஒரு முக்கியமான கான்பிரன்ஸ் இருக்கு. அதுக்கு எல்லாமே ரெடி பண்ணனும். அவனுக்கு நான் இன்னொரு வேலை கொடுத்து இருக்கேன். அதனால நீ போய் எடுத்துட்டு வந்துரு..." என்று அவன் கோவமாக சொல்ல அவளுக்கு பெரும் தயக்கமாக இருந்தது.
என்ன செய்வது என்றும் வெறு தெரியவில்லை. கைகளை பிசைந்து கொண்டே இருக்கவும் அவனுக்கு ஆத்திரம் வந்தது.
அவளையும் அறியாமல் அவனிடம், “அதே வீடு தானே...?” என்று கேட்டு வைத்தாள். அந்த கேள்வியில் அவனுக்கு மறைந்திருந்த கோபம் சுர்ரென்று உச்சிக்கு ஏறியது. எரிக்கும் விழிகளால் அவளை நோக்கியவன்,
"நான் என்ன பச்சோந்தியா உன்ன மாதிரி நேரத்துக்கு மாசத்துக்கு ஒரு வீடு மாற்றுவதற்கு. அதே வீடு தான். நாலு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் உறுதி செய்து உனக்கும் எனக்கும் நிச்சயம் நடந்தது இல்லையா அதே வீடுதான்." என்று அவன் பல்லை இறுக கடித்துக் கொண்டு பேச, குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. விழிகளில் நீர் முட்டி ஏதோ என்னவோ தலையை கவிழ்ந்தவள் கவிழ்ந்தபடியே நின்றாள். அப்படி நிற்கவும் இன்னும் அவனுக்கு கோவம் வந்தது.
"இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிக்க போற. போய் முதல்ல அந்த பைலை எடுத்துட்டு வா…" என்று வெறுப்புடன் சொன்னவன் தன்னுடைய சிஸ்டம் பக்கம் திரும்பிக் கொண்டான்.
அவளை காயப்படுத்தக் கூடாது என்று எண்ணினாலும் அவனையும் மீறி அவள் மீது தன் கோபத்தை கொட்டினான்.
அவனிடமிருந்து விலகியவள் அவனது வீட்டை நோக்கி பயணமானாள். பேருந்தில் ஏறி சென்றவளுக்கு மனமெல்லாம் மிகவும் பாரமாய் இருந்தது. 'என்ன செய்யப் போகிறேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்…' என்று அவளுக்கே புரியவில்லை. தான் செய்வது சரியா? தவறா? 'இல்லை நான் அந்த வீட்டுக்குள் நுழையக்கூடாது. அது தவறு…' என்று அவளின் உள் மனம் அவளைப் போட்டு பாடாய் படுத்தியது. ஆனாலும் வேறு வழியில்லை அவளுக்கு.
வேறு எங்குமே வேலை கிடைக்கவில்லை. அவனது கம்பெனியில் தான் வேலை கிடைத்தது. அதை விடவும் அவளுக்கு சூழ்நிலை சரியாக இல்லை. அவள் மட்டும் இல்லையே அவளை நம்பி இன்னும் மூன்று ஜீவனும் இருக்கிறதே. அவர்களுக்காகவே இந்த வேலைக்கு வந்தாள்.
எனவே அவர்களை மனதில் நிறுத்திக் கொண்டு வருகிறதை அப்படியே எதிர்கொள்வோம் என்று எண்ணி துணிந்து அந்த வீட்டினுள் காலடி எடுத்து வைத்தாள்.
சர்வாவின் வீட்டினுள் உள்ளே நுழையும் பொழுதே ஒரே சத்தமாக இருந்தது. பொருட்கள் போட்டு உடையும் சத்தம் காதை கழித்துக் கொண்டு வந்தது. அதற்கு மேலே அங்கிருக்கும் பணியாளர்களின் சத்தம் வேறு கேட்டது.
"ஏன்டா பையா இப்படி போட்டு எல்லா சாமானையும் உடைக்கிற. உன்கிட்ட முடியல டா. இப்படியா போட்டு உடைச்சு வைப்ப. வீட்ட பாரு எப்படி இருக்குன்னு.. எத்தனை முறை தான் இதை கிளீன் பண்ணி கிளீன் பண்ணி நான் எடுத்து வைக்கிறது. கண்ணாடி எல்லாம் உன் கையையும் காலையும் கூத்தினால் என்னதான் பண்றது. உங்க அப்பாவுக்கு நான் என்ன பதில் சொல்றது…" என்று கடுமையாக மூன்று வயது சிறுவனிடம் கத்திக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி.
அதோடு அங்கு இன்னும் சில வேலை ஆட்கள் அந்த மூன்று வயது சிறுவன் போட்டு உடைத்த பொருட்களை சுத்தம் செய்து கொண்டும் எடுத்து வைத்துக் கொண்டும் இருந்தார்கள். அத்தனையும் கண்ணாடி பொருட்களாக இருக்க அதற்கு நடுவே மூன்று வயது சிறுவன் வெறும் காலோடு நின்று கொண்டு இருந்ததை பார்க்கவே பக்கென்று இருந்தது.
மூன்று வயது சிறுவன் கண்ணாடி துண்டுகளுக்கு இடையில் இருந்தால் யாரால் தாங்கிக் கொள்ள முடியும். அதுவும் அருகிலே மெழுகுதிரி எரிந்து கொண்டிருக்க அதன் சுடரில் ஒரு துண்டு துணியை வைத்து எரித்துக் கொண்டிருந்தான். அப்படி எரித்துக் கொண்டிருந்த பொழுது அவனது கையில் அனல் பட்டுவிட துடித்துப் போனான்.
அவனை தூக்க யாரும் முன் வரவில்லை. அது அவர்களின் தவறும் இல்லை. ஏனெனில் அவனை சுற்றி அத்தனையும் உடைந்த கண்ணாடி துண்டுகள் இருக்க அவனை யாராலும் நெருங்க முடியவில்லை.
அவன் துடிப்பதை பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு அவனை போய் காப்பாற்ற வேண்டும் என தோன்றவில்லை.
“இந்த ஒரு முறை இவனை இப்படியே விடுங்கடி... அப்போ தான் பயத்துல இனி இந்த மாதிரி சாமானை போட்டு உடைக்க மாட்டான். தீக்குச்சியில விளையாடவும் மாட்டான்... பெரிய வீடு கொஞ்சம் சொகுசா இருக்கலாம்னு பார்த்தா இந்த வாண்டு பய நம்மளை ஆட்டி படைக்கிறானே...” என்று தங்களுக்குள் பேசியபடி அங்கிருந்த கண்ணாடிகளை சுத்தம் செய்வதாக பாவலா காட்டிக்கொண்டு நின்றார்களே தவிர நெஞ்சு பதைபதைத்து போய் அந்த மூன்று வயது சிறுவனை தூக்க மனம் வரவில்லை.
அந்த சிறுவன் நெருப்பின் அனல் தாங்க முடியாமல், அதை தூக்கி போட கூட தெரியாமல் கத்தி கதறி அழுதுக் கொண்டு இருந்த நேரம் தான் சகி அந்த வீட்டுக்குள் நுழைந்தாள். நுழைந்த உடனே அவள் கண்ட காட்சியில் சர்வமும் பதறிப் போனது. எப்பொழுதும் நிதானமாக இருப்பவள் இன்று அதுவும் அந்த சிறுவனின் ஆபத்தான நிலையை கண்டு மிகவும் பதட்டப்பட்டு போனாள். எதைப் பற்றியும் யோசிக்காமல், கால்களை கண்ணாடி கிழிக்கும் என்று உணர்ந்தும் கூட கண நேரம் கூட தாமதிக்காமல் சட்டென்று மிக வேகமாய் உடைந்துக் கிடந்த கண்ணாடி துண்டுகளின் மீது ஓடினாள்.
பாதங்களில் எல்லாம் கண்ணாடி துண்டுகள் கிழித்து உதிரம் கொட்ட தொடங்கியது... சில இடங்களில் மிக ஆழமாக பாதத்தை குத்தி கிழித்து உள்ளே சென்று இருந்தது. அதை பற்றி எல்லாம் யோசிக்காமல் அவன் கையில் எரிந்துக் கொண்டு இருந்த துண்டை வாங்கி வீசி எறிந்தவள் அந்த பையனை தூக்கிக் கொண்டாள்.
யார் அந்த பையன் என்று அவளுக்கு தெரியாது. இவள் யாரென்று அவனுக்கு தெரியாது. அவள் தூக்கிய உடனே வேகமாய் அவளுடன் ஒட்டிக் கொண்டான் அந்த சிறுவன். கையில் அனல் பட்டுவிட தன் கைகளை அதிலிருந்து எடுக்க கூட தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான் சிறுவன்.
இவள் வந்து தூக்கியவுடன் தான் அவனுக்கு நிகழ்வே புரிந்தது. ஆனாலும் பயம் முழுதும் அவனை ஆட்கொண்டு இருந்தது. வேகமாய் அவளது மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான் அவன். அதிலே நன்கு தெரிந்தது அவன் அதிகம் பயந்து போய் இருக்கிறான் என்று.
"ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்லடா... சரியா போயிடுச்சு பயப்படாதீங்க..." என்று தன் நெஞ்சில் படுத்திருந்த அவனது முதுகை மெல்ல மெல்ல தட்டி, நீவி விட்டு சரி செய்தாள்.
ஆனாலும் அச்சிறுவனுக்கு பயம் மட்டும் போகவே இல்லை. "ம்மா… ம்மா…" என்று அலற ஆரம்பித்து விட்டான்.






