எப்பேர்பட்ட குடும்பம். நாலு தலைமுறை உட்கார்ந்து தின்று தீர்த்தாலும் தீராத சொத்து உடையவர் கிருஷ்ணன். தன் ஏக போக நிறுவனத்தை கட்டி காப்பாத்தவே தன் முதல் மகளை ராணி போல வளர்த்தார். தனக்கு தெரிந்த மேனேஜ்மென்ட், சூசகம், எப்படி அடித்தால் எப்படி விழும் என்கிற நாசுக்கு என முழுவதையும் தன் மகளுக்கு சொல்லி சொல்லி வளர்த்தார்.
தலைமைத்துவம் என்பது என்ன என்று தெளிவாக விளக்கி அதன் படியே அவளுக்கு பயிற்சியும் கொடுத்து இருந்தார். இவளும் கல்லூரி படித்துக்கொண்டே நிறுவனத்துக்கு வந்து மேனேஜ்மென்ட் படிக்க ஆரம்பித்தாள்.
அப்பொழுதே அவளிடம் ஒரு நிமிர்வு இருக்கும். ஒரு தலைமைத்துவமான பண்பு நிறைந்து இருந்தது. ஆயிரம் பேரை கட்டி போடும் வல்லமை அவளிடம் இருந்தது. அதை தன் பாணியில் கிருஷ்ணன் மெருகேற்றினார்.
எல்லாம் நன்றாக தான் சென்றுக் கொண்டு இருந்தது. சகிக்கு மேல்படிப்புக்கு வெளிநாடு செல்லும் சூழல் வரும் வரை. அவள் லண்டன் போன பிறகு அவருக்கு அடி சருக்க ஆரம்பித்தது. தொட்ட தொழில் அத்தனையிலும் நட்டம், அதோடு நண்பர்கள் சொல் கேட்டு மேலும் மேலும் கடன் வாங்கி நிறுவனத்தில் போட ஆரம்பித்தார்.
மகள்களின் நகைகளை எடுக்க கூடாது என்று உறுதியாக இருந்தவர் தன் சொத்துக்களை அடமானம் வைத்து பணம் திரட்ட ஆரம்பித்தார். அதில் இடை தரகர்களான தன் நண்பர்களுக்கு முழு தொகை குடுக்க வேண்டி இருந்தது.
“இந்த பணத்தை பிரட்ட நான் எவ்வளவு கட்டல்(ஷ்ட்டப்) பட்டேன்னு எனக்கு தான்டா தெரியும்...” என்று சொல்லி இவரிடம் இருந்து சொத்து பத்திரங்களை வாங்கி அடி மாட்டு விலைக்கு தான் போனது என்று கதை கட்டி விட்டு, பெரும் பணத்தை அவர்கள் சுருட்டி விட்டு இவரிடம் பாதி பணத்தை தான் கொடுத்தார்கள். இவருக்கு நிறுவனத்தை விட்டு வெளியே போக முடியாத சூழலால் தன் நண்பர்களை மிகவும் நம்பினார்.
சொத்து விசயத்தில் யாரையும் இடையீடு வைக்க கூடாது என்று மறந்துப் போனார் போல... பாவம் அத்தனையையும் இரண்டே வருடத்தில் மூழ்கடித்து விட்டார்.
இருக்க வீடும், பெண் பிள்ளைகளுக்கு என்று சேர்த்து வைத்த நகைகள் மட்டும் தான் அவர் கைவசம் இருந்தது.
சரி அதை வைத்து தன் முதல் பெண்ணை திருமணம் செய்து கொடுத்து விட்டு, அவளின் உதவியோடு இரண்டாவது மகளின் திருமணத்தை நடத்தி விடலாம் என்று எண்ணியவர்,
தன் பெரிய மகளுக்கு பெரிய இடத்தில் சம்மந்தம் பேசினார். அந்த சம்மந்தம் தான் சர்வா... எல்லாம் கூடி வந்தது... பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் பிடித்து போனது... அடுத்து திருமணம் தான் என்று இருவரும் கனவில் இருந்தார்கள். ஆனால் இறுதி கட்டத்தில் திருமணம் நடைபெறவில்லை. பெண்ணை காணவில்லை என்று மண்டபம் முழுவதும் பேச்சாகிப் போனது. ஆம் திருமண நாள் அன்று சகி மண்டபத்தில் இல்லை.
அதில் மாப்பிள்ளை வீட்டார்கள் கிருஷ்ணனை பேசாத பேச்செல்லாம் பேசி எவ்வளவு நோகடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நோகடித்து இருந்தார்கள். அதில் மனம் உடைந்தவர் தான் அதன் பிறகு முற்றிலும் தளர்ந்துப் போனார்.
அன்று இரவே அவர்களது வீட்டுக்கு கார்த்திக்கோடு உள்ளே நுழைந்தாள் சகி...
அப்பாவுக்கும் தங்கைக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி... தன் மகள் வெற்று ஒரு ஆணோடு வந்ததை பார்த்து அதிர்ந்து போனார். சம்மந்தி வீட்டு ஆட்கள் சொன்னது பேசியது எல்லாம் கண் முன் வர ஒரு கணம் ஆடி தான் போனார். ஆனால் தன் மகள் மீது கொண்ட நம்பிக்கையால், என்ன ஏது என்று கார்த்திக்கை பற்றி விசாரிக்கவில்லை.
“இந்த கல்யாணம் பிடிக்கலையாடா...?” ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்.
அவள் என்ன பதில் சொல்வாள் வரட்ச்சியாக ஒரு சிரிப்பை கொடுத்தவள், அதுவும் இரவு பொழுதில் ஒரு ஆணோடு வீட்டுக்குள் நுழைந்தும் தன்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் கல்யாணம் பிடிக்கலையா என்று கேட்ட தகப்பனை இறுக கட்டிக் கொண்டு, “ஆமாம் ப்பா... நான் உங்க மகளா இருக்க தான் ஆசை படுறேன்...” என்றவள் நிலைக்குலைந்து போன குடும்பத்தை சீர் செய்ய தொடங்கினாள்.
இக்கட்டான சுழலில் ஒருவர் மீது வைக்கும் நம்பிக்கை மட்டும் தான் சார்ந்தவரை விரக்தி அடைய விடாமல் தடுத்து ஆட்கொள்ளும் உன்னதமான பண்பு. அதை கிருஷ்ணன் தன் மகளுக்கு கொடுத்தார்.
அதை உணர்ந்தவள் எதையும் பகிர்ந்துக் கொள்ளாமல் தனக்குள்ளே போட்டு புதைத்துக் கொண்டாள். கடனாளர்கள் வீட்டை சுத்தி வர, குடி இருந்த பெரிய வீட்டை விற்று, தன் கல்யாணத்துக்கு வைத்திருந்த நகையையும் விற்று ஓரளவு கடனை அடைத்தாள். அந்த நேரம் தான் கிருஷ்ணனுக்கு கைக்கால் இழுத்துக் கொள்ள முழு நேரமும் அவரை கவனிக்க கூட இருந்துவிட்டாள்.
மேலும் தங்கை வேறு சிறு பிள்ளை. அப்பொழுது தான் பன்னிரண்டாவது முடித்து இருந்தாள் என்பதால் வெளியே வேலைக்கு எங்கும் போக முடியவில்லை. தந்தையோடு கூட இருக்க வேண்டிய சூழல்... மீதி இருக்கும் நகையை வைத்து வாடகை வீடு ஒன்றை பார்த்தவள், நால்வரும் அதில் குடி ஏறினார்கள்.
மிருதுளாவை மேற்கொண்டு படிக்க வைக்க கல்லூரிக்கு அனுப்பினாள். கிருஷ்ணனையும் ஓரளவுக்கு நன்றாக தேற்றி எடுத்தாள். அவரால் இப்பொழுது சுயமாக நடக்கும் அளவுக்கு கொண்டு வர... அதிலே இதோ அதோ என நான்கு வருடங்கள் கழிந்து இருந்தது... அதையெல்லாம் எண்ணிப் பார்த்துகொண்டு இருந்தவருக்கு பெருமூச்சு எழுந்தது.
வாழ வேண்டிய பெண்... இப்படி தோளில் பாரம் போட்டு சுமந்துக் கொண்டு இருப்பதை பார்த்தவருக்கு மனம் எப்பொழுதும் போல ஆற்ற முடியா துயரத்தில் விழுந்தது...
அடுத்த நாள் காலை விடியல் பரபரப்பாக இருந்தது. கார்த்திக் சமையலறையில் சகி வருவதற்கு முன்பே சமைத்துக் கொண்டிருக்க, அவனை கண்டித்தாள்.
“ஏன்டா நான் வந்து செய்வேன் இல்ல..? நீ ஏன் செய்ற?” என்று அவனை கடிந்துக் கொள்ள,
“நீதான் வேலைக்கு போற இல்ல நான் வீட்ல சும்மா தானே இருக்கேன். நான் செஞ்சு தரேன்... நீ நிதானமா ஆபிஸ்க்கு கிளம்பு” என்று சொன்னவன் அவளுக்கு ஒரு வேலை கூட இல்லாமல் எல்லா வேலைகளையும் அவனே எடுத்து போட்டுக்கொண்டு செய்ய,
அவளுக்கு பாவமாய் இருந்தது. “நான் செய்யமாட்டேனாடா.. நீ மட்டும் செய்யிறியே...” என்று அவள் கேட்க,
“பரவால்ல விடு அட்லீஸ்ட் நான் இந்த வேலையாவது செய்கிறேனே.. வெளியில் தான் எனக்கு வேலை கிடைக்கல.” என்றவனை பாவமாக பார்த்தாள்.
“கண்டிப்பா உனக்கு ஒரு வேலை கிடைக்கும் டா நீ ஏன் வருத்தப்படுற. கோட் சூட் போட்டுக்கிட்டு நீ ஜம்முன்னு ஒரு நாள் வேலைக்கு போக தான் போற பாரு...” என்று அவனை தோலை தட்டி கொடுக்க,
“தெரியும்டி பட்... இப்போ... இப்போ... வேலை வேணுமே உன்ன கட்டல்(ஷ்டப்) படுத்தி உன்னை வேலைக்கு அனுப்பிட்டு நான் வீட்ல இருக்கறது எனக்கு எவ்ளோ கட்டலா(ஷ்டமா) இருக்கு தெரியுமா” என்று அவன் வருத்தப்பட,
“கண்டிப்பா நீ ஒரு நல்ல நிலைமைக்கு வருவாடா. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல எனக்கு சேலரி வந்துவிடும். ரெண்டு மாச சேலரிய வச்சு நான் உனக்கு ஏதாவது ஒரு ஏற்பாடு பண்ணி தரேன் கார்த்திக்” என்று அவள் சொல்லவே,
“முதல்ல உனக்கு கல்யாணம் ஆகணும். உனக்காக சேர்த்து வைக்கணும். அதுக்கு பிறகு தான் மத்ததெல்லாம்” என்று அவன் உறுதியாக சொல்லிவிட,
“ஆமா கல்யாணம் என்ன பெரிய கல்யாணம். நான் கல்யாணத்தை பத்தி எல்லாம் யோசிச்சு பாக்கவே இல்லடா...” என்று அவள் சொல்ல கார்த்திக்கோ,
“அப்போ இப்போ வரையிலும் சர்வா தான் உன் மனசுல இருக்காரா?” என்று கார்த்தி நிதானமாக கேட்க, பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த கைகள் அப்படியே ஒரு கணம் நின்றது. அதன் பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு,
“அவருக்குத் தான் ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை எல்லாம் இருக்கே. அவர எப்படி நான் நினைச்சுட்டு இருக்கேன்னு நீ சொல்லுவ... அது தப்பு இல்லையா. அவர் இன்னொரு வாழ்க்கைக்குள்ள போயிட்டாரு. அதனால நான் அவரை நினைக்கிறது தப்பு.. நீ இப்படி என்கிட்டே கேட்கிறதும் தப்பு..” என்று அவன் கண்களை பார்த்து நேரடியாக அவள் சொல்ல,
“அப்போ உன் மனசுல அவர் இல்லையா?” என்று அவன் தீர்க்கமாக கேட்க,
சிறிதும் கூட தடுமாறாமல், “இப்பன்னு இல்ல எப்பவுமே அவரு என் மனசுல இருந்தது கிடையாது. என் மனசுல இருக்குறத நீங்க மூணு பேரும் மட்டும் தான்டா. உங்க மூணு பேரை தவிர என் மனசுல வேற யாருக்குமே இடம் இல்லை..” என்று அவள் உறுதியாக சொல்ல, கார்த்திக்கால் நம்ப முடியவில்லை.
அவனும் கல்யாணம் நின்றதுல இருந்து இதே கேள்வியை தான் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஆனாலும் அவளும் சலிக்காமல் இதே பதிலை தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அது உண்மையா பொய்யா என்று அவனுக்கு மேலும் சந்தேகம் இருக்கிறது.
‘அது எப்படி கல்யாணம்னு சர்வைவை மாப்பிளையாக பேசி அவனை மனதார நினைச்சவளால அவனை மறக்க முடியும்... ஒருவேளை அவர் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டதினால இவ வெறுத்துட்டளா... இல்லை எங்களை நம்ப வைக்க இவ வெறுக்கிற மாதிரி நடிக்கிறாளா... என்னவா இருக்கும்’ என்று அவனுள் இன்று வரை பல சிந்தனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
ஆனாலும் சகி உறுதியாக இருந்ததால் அவனால் மேற்கொண்டு வேற எதையும் பற்றி அவளிடம் பேச முடியவில்லை. வேறு திருமண பேச்சை எடுத்தாலும் அவள் அதற்கு சம்மதிப்பதும் இல்லை.
அவளைப் பொறுத்தவரை தன்னுடைய தேவை இந்த குடும்பத்துக்கு இருக்கிறது. இந்த குடும்பத்தை நான் தான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அடி நெஞ்சில் பதிந்து போக அவளால் வேறு யாரையும் ஏறெடுத்து கூட பார்க்க முடியவில்லை. கார்த்திக் திருமண பேச்சை ஆரம்பித்தாலே “திருமணத்தில் நாட் இன்ட்ரஸ்ட்டட்” என்று இரண்டே வார்த்தையில் முடித்துவிடுவாள் சகி. இப்பொழுதும் அப்படியே முடித்து விட்டு வேலைக்கு சென்றுவிட்டாள்.
போனவளின் முதுகையே ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டு இருந்தான் கார்த்திக்... நடந்துப் போன நிகழ்வுகள் கண் முன் வர தன் அவசர தனத்தை எண்ணி தானே நொந்துக் கொண்டான்.






