“என்னடி?” என்று கேட்டான்.
“ம்ஹும்.” என்று தலையை இரு பக்கமும் ஆட்டி அசைத்தவளை நெருக்கி பிடித்தவன் அவளை மீண்டும் தேடத் தொடங்கினான்.
அவனது தேடலில் முகம் சிவந்துப் போனாள். அவளின் வெட்கத்தை இரசித்தவன் அவளை மேலும் மேலும் வெட்கப்பட வைத்து இன்னும் இரசித்துப் பார்த்தான்.
அதில் கூச்சம் கொண்டவள் அவனின் நெஞ்சையே பாதுகாப்பு கேடயமாக எண்ணி அவனை இழுத்து அவனின் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள். அதில் அவனுக்கு இன்னும் அவளை சீண்டிவிட வேண்டும் என்று தோன்ற அதில் அவன் ஈடுபட அவளின் செல்ல சிணுங்கல்கள் அந்த அறை எங்கும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
“ம்மா. ப்ளீஸ். கொஞ்ச நேரம் சும்மா தான் இருங்களேன். ப்பா முடியல. ஐயோ. வேணாங்க.” என்ற சின்ன சின்னதாய் அவளை அலறவிட்டான்.
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் அவன் செய்த சேட்டையை அவள் அவனுக்கு செய்ய அவன் உலகையே மறந்தான்.
“ஏய்.” என்று அலறியவன் அவள் செய்த சேட்டையில் அவனது இத்தனை நாள் இறுக்கமும் தவிடு பொடியாகிவிட கவசம் உடைந்தவனாய் அவளை தலைக்கு மேல் தூக்கி சுற்றினான்.
“என்னங்க...” என்று அவனை தடுக்க பார்த்து தோற்றவள் எப்பொழுதும் இல்லாத வகையில் அவனது நெருக்கமும் தேடலும் மிகுந்த ரசனையாகவும் நிதானமாகவும் இருக்க நறுமுகையின் பாடு தான் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளானது.
“நீங்க ரொம்ப மோசம் மாமா...” தேடல் முடிந்த பின்பு நறுமுகை அவனிடம் புகார் வாசித்தாள்.
“இருந்துட்டு போறேன் போடி.” என்றவன் அவளது வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டு மீசையால் கோலம் போட்டான்.
“அம்மா.” அலறியவள்,
“நீங்க சரியே இல்லை இந்த ரெண்டு நாளும். ஒழுங்கா கிளம்பி நாளைக்கு அலுவலகம் போறீங்க.” மிரட்டினாள்.
“நான் அலுவலகம் போகலன்னா நீ ஏன்டி விடுமுறை எடுத்த?” நக்கல் பண்ணினான்.
“தெரியாம பண்ணிட்டேன் சாமி. இனி விடுமுறையே எடுக்க மாட்டேன். பாவம் மூக்குல இருந்து இரத்தம் வருதேன்னு அனுதாபப்பட்டு லீவு போட்டேன். அதுக்கு தான் டிசைன் டிசைனா வச்சு செய்யிறீங்களே.” சிணுங்கினாள்.
“நீ வீட்டுல இருந்தா இதை தான்டி செய்வேன்.” என்று அவளது வயிறை லேசாக கடித்தும் வைத்தான்.
“ம்ம்ம் செய்வீங்க செய்வீங்க.” என்று அவனது தலையைக் கோதிக்கொடுத்தவள் அந்த நாளையையும் அவனுடன் மகிழ்வாக கழித்தாள்.
அடுத்த நாளில் இருந்து அவனது ஓட்டம் தொடங்கிவிடும் என்று அவளுக்கு நன்கு புரிந்தது. அதனாலே இந்த நாட்களை அவள் பெரிதும் ரசித்தாள். விரும்பியே அவனிடம் கிடையாய் கிடந்தாள்.
அவனும் அதை உணர்ந்து தான் இருந்தான். அவள் காட்டும் நெருக்கமும் உணர்வுகளும் அவனது உடல் நிலையை தேற்றியது. அவன் தேடிய அமைதி அவளிடம் நிறைந்துக் கிடந்தது. அவளது அருகாமையில் எதை பற்றியும் எந்த சிந்தனையும் எழாமல் இருந்தது. அந்த அமைதியே அவன் அடுத்து ஓடும் ஓட்டத்திற்கு ஊக்கமாய் அமைந்தது.
இரு நாட்கள் ஓடிய வேகம் தெரியவில்லை. அடுத்த நாள் காலையில் எழுந்தவள் அருகில் பார்த்தாள். விக்ரமசேனனை காணவில்லை. எப்பொழுதும் போல அவனது வேலையைத் தொடங்கிவிட்டான் என்று அறிந்தவளுக்கு பெருமூச்சு எழுந்தது. அதை அடக்கிக்கொண்டு குளித்து கிளம்பியவள் அலுவலகம் சென்றாள். அடுத்தடுத்த நாட்கள் முன்பு போலவே தனிமையில் கழிந்தது.
அவனை பார்க்கும் நேரம் குறைவாய் இருந்தது. தீபனுக்கே இவனது போக்கு கொஞ்சம் கவலையை தான் கொடுத்தது. “நீ முழு மூச்சாக இதுல இறங்குனீன்னா மறுபடியும் உன் ஹெல்த் ரொம்ப பாதிக்கப்படும் விக்ரமா. கொஞ்சம் உன் குடும்பத்தையும் பாரு. தங்கச்சி எதுவும் சொல்லாததுனால நீ அவங்களை ரொம்ப தவிக்க விடாத மச்சான்” என்றான்.
“நான் எப்படி இருந்தாலும் அவள் என்னை அப்படியே ஏத்துக்குவாடா.” முதல் முறையாக அவன் மனம் விட்டு பேசினான்.
“மச்சான்.” வியந்து போய் அவனை பார்த்தான்.
“ம்ம்ம், உன்னை மாதிரி அவ என்னை ரொம்ப முழுமையா புரிஞ்சி வச்சு இருக்கா. சோ நீ கவலை படாத” என்றவன் தன்னவளின் நினைவில் ஒரு புன்னகை எழுந்தது.
நறுமுகையிடம் இருவீட்டு பெரியவர்களும் அடிக்கடி பேசிக்கொண்டு இருந்தார்கள். அவளின் நலத்தை கேட்டு கவனித்துக்கொண்டு இருந்தார்கள். ஆனாலும் நேரில் சென்று பார்க்கவில்லையே என்ற எண்ணம் அடிக்கடி எழ, இரு வீட்டு பெரியவர்களும் சேர்ந்து பேசி ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம் என்று முடிவெடுத்து அவர்களின் வருகையை அறிவிக்க நறுமுகை கைகளை பிசைந்தாள்.
‘இந்த விசயத்தை எப்படி அவர் காதில் போடுவது. சொன்னா கண்டிப்பாக முறைப்பார். சொல்லாம விட்டா இவங்க திட்டுவாங்க. நம்ம பொழப்பு இப்படியா போகணும்.’ என்று விழித்தவள்,
மிகவும் தயங்கி தயங்கி விக்ரமனுக்கு போன் செய்தாள். அவளது நேரமோ என்னமோ அவன் போனையே எடுக்கவில்லை. போன் போட்டு போட்டு சலித்துப் போனவள், தீபனுக்கு போன் செய்தாள். அவனும் போனை எடுக்கவில்லை.
‘அட போங்கடா.’ அலுத்துக்கொண்டவள், வருவது வரட்டும் என்று எதிகொள்ள தயாரானாள். அடுத்த நாள் காலையில் இரு வீட்டு ஆட்களும் வந்து இறங்கினார்கள். வந்து கதவை தட்ட தட்ட கதவு திறக்கப்படவே இல்லை.
“என்ன ஆச்சு?” என்று பதறிப்போனவர்கள் இன்னும் வேகமாக தட்டினார்கள். கூடவே தீபனுக்கும் போனை போட்டார் மணி. அவன் தூக்க கலக்கத்தில் எழுந்து,
“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் அவரின் கனவு கன்னியோடு உல்லாசமாக இருப்பதால் சிறிது நேரம் கழித்து போன் பண்ணவும்.” என்று சொல்ல,
“அடி செருப்பால நாயே...!” ஒரு கம்பீரமான குரல் காதில் விழ அடித்து பிடித்துக்கொண்டு கண்களை திறந்தவன் பயத்துடன் போனை பார்த்தான்.
விக்ரம சேனனின் தந்தை மணி தான் அழைத்து இருந்தார். “அப்பா...” பம்மினான்.
“ஏன்டா நேரம் என்ன ஆச்சு? இப்போ தான் தூங்கிக்கிட்டு இருக்கேன்னு சொல்றவன். உன்னையெல்லாம் என் ஊரு பண்ணையில சாணி அல்ல விட்டு இருக்கணும். போனா போவுதேன்னு கவர்மென்ட் வேலை வாங்கி குடுத்தான் பாரு என் பிள்ளை அவனை சொல்லணும்டா.” என்று கர்ஜித்தார்.
“எத நான் பார்த்துக்கிட்டு இருக்கிற உத்தியோகத்தை உங்க பையன் வாங்கி குடுத்தானா?” அதிர்ந்து நெஞ்சை பிடித்துக்கொண்டான்.
“இல்லையா பின்ன?”
“நான் ராப்பகலா கண்ணு முழிச்சி படிச்சு இந்த வேலையை வாங்கி இருக்கேன்.” என்று மீசையை முறுக்கினான் தீபன்.
“யாரோட டா சேர்ந்து படிச்ச?” கர்ஜிக்க,
“உங்க மகனோட.” என்று சுருதி குறைந்தது அவனுக்கு.
“ம்ம்ம், அப்போ என் மகன் தானே உனக்கு இந்த உத்தியோகம் கிடைக்க வழி செஞ்சு குடுத்து இருக்கான். அப்போ நான் சொன்னது சரி தானே.” என்று அவர் உறும,
“ஆமாம் ப்பா. உங்க மகனோட கருணையே கருணை. அப்படியே உங்களை மாதிரியே உங்க மகனுக்கும் பறந்து விரிந்த மனசு” என்று பொருமினான்.
“அது...” என்று மீசையை முறுக்கியவர், “சீக்கிரம் வீட்டுக்கு வா” என்றார் மொட்டையாக.
அவன் எந்த வீட்டுக்கு என்று புரியாமல் “வீட்டுக்கா?” என்று விழித்தான்.
“இங்க தம்பி வீட்டுக்கு வாடா.” அவனுக்கு புரியும் படி அவர் சொல்ல, “இதோ வந்துட்டேன் ப்பா.” என்று அரக்க பறக்க கிளம்பி மூஞ்சியயைக் கூட கழுவாமல் கலைந்து போய் அங்கும் இங்கும் ஒழுங்கற்று பறந்துக்கொண்டு இருந்த தலைமுடியுடன் அப்படியே வந்து நின்றான்.
“என்னப்பா என்ன ஆச்சு?”
“அதை தான்டா நானும் கேக்குறேன். என்ன ஆச்சு? இவ்வளவு நேரமா கதவை தட்டிக்கிட்டு இருக்கோம். அவன் கதவையே திறக்க மாட்டிக்கிறான்.”
“அவன் கதவை திறக்கலன்னா பலியாடு நானா?” நொந்தவன், “போன் பண்ணி பார்த்தீங்களாப்பா?”
“அதுக்கு தான் உன்னை வர சொன்னேன். நீயே போன் பண்ணி என்னன்னு கேளு” என்றார்.
“வீட்டு வாசல்ல வந்து நின்னுக்கிட்டு அவனுக்கு போன் போடாம நல்லா தூங்கிக்கிட்டு இருக்கிறவனை அடிச்சி பிடிச்சி எழுப்பிவிட்டு இந்த தடிமாடை எழுப்ப வர சொன்னது எல்லாம் ரொம்ப அநியாயம். இதெல்லாம் ஒரு பெரிய மனுஷன் செய்யிற செயலா?” புலம்பியபடி விக்ரமசேனனுக்கு போன் போட்டான். போன் போய்க்கொண்டு இருந்ததே தவிர யாரும் எடுக்க காணோம்.
“இந்த தங்கச்சியாவது எடுக்கலாம் இல்ல.” புலம்பியவன் மீண்டும் கால் செய்து பார்த்தான்.
இவர்களை எல்லாம் காக்க வைத்துக்கொண்டு இருந்த தம்பதிகளோ அயர்ந்து போய் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். இரண்டு வாரங்களுக்கு பின் வந்த விக்ரமன் நறுமுகையை எப்பொழுதும் போல தேடத் தொடங்க அவனிடம் சொல்ல காத்திருந்த விசயத்தை அவள் மறந்தேப் போனாள். சொல்ல வந்த பொழுது அவன் எங்கே அவளை பேசவிட்டான். வந்த உடனே வாயை கவ்விக்கொண்டவன் தான். அதன் பிறகு அவளை விடவே இல்லை.
இவளும் எல்லாவற்றையும் மறந்து அவனுடன் ஒன்றிப்போனாள். இதில் விக்ரம் வேறு ஏதாவது தொல்லை வரும் என்று அலைப்பேசியில் சத்தம் போடாமல் அமைதி குறியைப் போட்டு இருந்தான்.
நறுமுகையோ இவன் செய்த அட்டகாசத்தில் போனை கூடத்தில் வைத்துவிட்டு அறைக்குள் வந்து இருந்தாள். அதனால் அவளுக்கு போன் வருவதே தெரியவில்லை.
ஊருக்கு வருகிறேன் என்று சொன்ன மனிதர்கள் தான் இந்தா இன்னைக்கு வரேன் நாளைக்கு வரேன் என்று எதுவும் சொல்லாமல் மொட்டையாக ஊருக்கு வரோம் என்று மட்டுமே சொல்லி இருக்க இவளும் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டாள்.
குறுங்கண்ணோரம் வெளிச்சம் கசிவதை பார்த்து, “விடிஞ்சி போச்சுங்க. பாருங்க எப்படி வெளிச்சம் இருக்குன்னு. இப்பவாவது விடுங்களேன்.” விக்ரமனின் முரட்டு கைகளுக்குள் தஞ்சமடைந்து இருந்தவள் அவனிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள்.
“இப்போ உனக்கு வெளிச்சம் தான் பிரச்சனையாடி?” என்றவன் குறுங்கண்ணின் திரையை இழுத்துவிட்டு இருவருக்கும் சேர்த்து தலையோடு போர்வைப் போர்த்தி அவளை கட்டிக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தான்.
“உங்களோட முடியலங்க” முணகியவளின் இதழ்கள் அவள் வசமிருக்கவில்லை.
“தூங்கும் போது காதுக்குள்ள குசுகுசுன்னு பேசிக்கிட்டு இருந்த இரவின் தொடர்கதை இப்போது நடக்கும் பார்த்துக்க.” என்றவன் அவளை இன்னும் நெருக்கமாக கட்டிக்கொண்டு தூங்கிப்போனான்.
“இனிமேல் வாயையே திறக்க மாட்டேன்.” என்று அவளும் தூங்கிப்போக, வெளியே கடுப்புடன் கதவை தட்டிக்கொண்டு இருந்தான் தீபன்.
“ஒரு சின்ன புள்ளைய தூங்க விடாம கொடுமை பண்றாங்கலேய்யா? இதெல்லாம் யாரும் தட்டி கேட்க மாட்டாங்களா? ஐ யம் பாவம்.” என்று புலம்பிக்கொண்டே கதவோடு மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தான்.
கதவு தட்டும் சத்தம் இப்பொழுது மிக நன்றாக கேட்டது இருவருக்கும். “மறுபடியும் என்னடி முணுமுணுத்துக்கிட்டே இருக்க...” கடுப்படித்தவன் போர்த்தி இருந்த போர்வையை விலக்கிவிட்டு அவளை தேட ஆரம்பிக்க,
“ஐயோ நான் வாயையே திறக்கலங்க. வெளியே யாரோ கதவை தட்டுறாங்க போல. அந்த சத்தம் தான்” என்று அலறினாள்.
“அந்த பயம் இருந்தா சரி தான். யாரு இந்நேரத்துல.” என்றவன் போர்வையை எடுத்து அவள் மீது வீசிவிட்டு ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக்கொண்டு வெளியே வந்து கதவை திறந்து பார்த்தான்.
பார்த்தவனுக்கு கோவம் உச்சியில் ஏற, “ஏய்...” ஒரே ஒரு சத்தம் தான்.
“என்ன. ங்க?” என்றபடி அவள் எப்பொழுதும் அணியும் அவனது உடையில் வெளியே வந்தாள். வந்தவள் அங்கு நின்றிருந்த இரு வீட்டின் ஆட்களையும் கண்டு மகிழ்ந்தவள்,
“வாங்க மாமா, வாங்க அத்தை, வாங்க ப்பா, வாங்க ம்மா” என்று பெரியவர்களை வரவேற்றவள், விக்ரமனின் தம்பியை “வாங்க.” என்று அவனையும் வரவேற்றவள் தன் தங்கையை கட்டிக்கொண்டு,
“எப்படிடி இருக்க?” நலம் விசாரித்தாள்.
“நான் இருக்கிறது இருக்கட்டும். நாங்க வந்து எவ்வளவு நேரம் ஆச்சு தெரியுமா?” என்றபொழுதே தீபன் அங்கு நின்றிருப்பது கண்டு,
“என்னண்ணா இவ்வளவு சீக்கிரமா வந்து இருக்கீங்க?” அவனிடம் விசாரிக்க அவன் தன் சொந்த கதை சோக கதையை சொல்ல ஆரம்பிக்க,
“அவன் கிடக்குறான். நீ வாம்மா” என்று மணி எல்லோரையும் உள்ளே அழைத்துக்கொண்டு செல்ல விக்ரமன் தீவிழி விழித்துப் பார்த்தான் நறுமுகையை. அவனது பார்வையில் ஜெர்க்கானவள் அப்படியே அப்பீட் ஆக பார்க்க,
அறைக்குள் வேகமாய் நுழைந்தவன் “ஏய்...” என்றான் கர்ஜனையாக. அவனது அந்த சத்தத்தில் அடித்து பிடித்துக்கொண்டு போனாள். வந்தவுடன் அவள் மீது பாய்ந்தான்.
“நான் தான் யாரையும் இங்க வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல. அப்புறம் எதுக்குடி எல்லோரையும் கூப்பிட்டு விட்டிருக்க?”
“ஐயோ எனக்கு எதுவும் தெரியாதுங்க. மாமா தான் நேத்திக்கு போன் பண்ணி வரேன்னு சொன்னாங்க.”
“அதை ஏன் என்கிட்டே நீ சொல்லல.” முறைத்தான்.
“எங்க நீங்க தான் போனும் எடுக்கல. சரி வீட்டுக்கு வந்தாலாவது சொல்லலாம்னு இருந்தேன். வந்த உடனே என்னை பேசக்கூட விடல.” புகார் படித்தாள்.
“இதெல்லாம் வக்கனையா பேசுடி.” முறைத்தவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.
“முதல்ல போய் குளிடி. அப்புறம் வெளியே போ.” என்றான். சட்டென்று அருகில் இருந்த கண்ணாடியில் பார்த்தவளுக்கு, “ஐயோ” என்று வந்தது. முகம் அந்தி வானமாய் சிவக்க வேகமாய் குளியல் அறைக்குள் சென்று நுழைந்துக்கொண்டாள்.
“மடச்சி இப்படியேவா அவங்க முன்னாடி போய் நின்ன.” என்று தன்னை கடிந்துக்கொண்டே குளித்து முடித்து புடவைக் கட்டினாள்.
வெளியே வந்து பார்க்க தீபன் எல்லோருக்கும் தேநீர் கொடுத்துக்கொண்டு இருந்தான். “அச்சோ நீங்க ஏன் அண்ணா இதெல்லாம் பண்றீங்க? நான் பார்த்துக்க மாட்டனா?” என்றபடியே அவனது கைகளில் இருந்து தேநீர் நிறைந்தத் தட்டை வாங்கிக்கொண்டு அனைவருக்கும் கொடுத்தாள்.
அவளின் பாங்கு கண்டு மணிக்கும் தனத்துக்கும் அவ்வளவு நிம்மதியாய் இருந்தது. தன் மகள் குடும்பம் நடத்தும் அழகை அன்பாக பார்த்துக்கொண்டு இருந்தார்கள் முத்தழகியும் கந்தனும்.
விக்ரமனின் தம்பி மதுசூதனன் மரியாதையாக நறுமுகையிடம் நடந்துக்கொண்டான். அவனது கண்கள் அடிக்கடி நறுமுகையின் தங்கை ரதியிடம் பாய்ந்துக்கொண்டு இருந்தது.
எல்லோரும் மகிழ்வாக இருக்க விக்ரமசேனனுக்கு தான் பத்திக்கொண்டு வந்தது. முகத்தை தூக்கி வைத்து இருந்தான். தீபனிடம் ஒரு கப்பை கொடுத்தவள், தன்னவனிடம் வந்து ஒரு கப்பை நீட்ட, அவனோ அதை வாங்காமல் அவளை முறைத்துப் பார்த்தான்.