Notifications
Clear all

அத்தியாயம் 2

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 992
Topic starter  

ஆட்டோ போகும் வழியில் பழுதாகி விட கைக் குழந்தையோடு இறங்கி சாலையில் நின்று இருந்தாள். அந்த நேரம் அந்த சாலையின் வழியாக பல உயர்தரம் வாய்ந்த கார்கள் சல்லு சல்லு என்று போனது.

அவளது கவனம் அதிலெல்லாம் இல்லை. கை பேசியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தாள். “சாரி சார்... வர்ற வழியில ஆட்டோ நின்றிடுச்சு... இன்னும் அறை மணி நேரத்துல எப்படியும் ஸ்பாட்டுல இருப்பேன் சார்..” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தாள்.

“உன்கூட எனக்கு பெரும் ரோதனையா போச்சு வராளி. சரி நீ ரொம்ப கட்டல்(கஷ்ட்ட)ப்படுறியே உனக்கு ஏதாவது உதவி செய்யலாம்னு சின்ன சின்ன ரோல் வாங்கி குடுத்தா நீ எல்லாத்தையும் ரொம்ப சொதப்பி வைக்கிற... உன்னால அவனுங்க கிட்ட நான் தான் திட்டு வாங்குறேன்... இனி நீயே தனியா சான்ஸ் தேடிக்க வராளி” என்று அவர் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக பேச வராளிக்கு கண்கள் கலங்கியது.

“ப்ளீஸ் சார்... நான் எப்படியும் வந்திடுறேன்... இந்த ஒரு முறை மட்டும் எஸ்க்யூஸ் குடுங்க பாரதி சார்” என்று கெஞ்சினாள்.

“இப்படியே தான் ஒவ்வொரு முறையும் சொல்ற... சரி சரி சீக்கிரம் வா” என்று சொல்லி விட்டு அவர் வைத்து விட்டார். பெருமூச்சு விட்டாள்.

பாரதி கடுமையாக திட்டுவார். ஆனால் அவர் பெண்களிடம் ஒரு நாளும் தவறாக நடந்துக்கொள்ள மாட்டார். அதே போல அவரை நம்பி போனால் கவனமாக பார்த்துக் கொள்வார். யாரையும் அருகில் கூட விட மாட்டார். பாதுகாப்பு கவசம். வருகிற சம்பளத்தில் அவர் கொஞ்சம் கமிஷன் எடுத்துக் கொள்வார்.

ஆனாலும் பாதுகாப்பு அதிகம் என்பதால் அவள் அதை எல்லாம் கண்டுக் கொள்ள மாட்டாள். வேறு சில இடங்களுக்கு சென்ற அனுபவம் அவளுக்கு இருந்தது. கொஞ்சம் கூட பாதுகாப்பே இருக்காது. அசால்ட்டாக மேலே கையை வைப்பார்கள். காசு தரேன் என்று சொல்லி அவர்களின் வக்கிரத்துக்கு உடன்பட சொன்னார்கள்.

வராளிக்கு உமட்டிக் கொண்டு வர குறைந்த சம்பளம் என்றாலும் நிம்மதியாக இருக்கலாம் என்று பாரதியிடம் வந்து விட்டாள். அதன் பிறகு அவள் எங்கும் போகவே இல்லை. இவருடன் தான் இந்த மூன்று மாத காலமாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

சின்னது பெரியது என எதையும் பார்க்கமாட்டாள். எந்த கேரக்டர் என்றாலும் செய்ய ஆரம்பித்தாள். உடை விளம்பரத்தில் பத்தில் ஒருத்தியாக இருப்பாள். கடந்து போகும் ஒரு வினாடியில் கூட யாரோ போல நடப்பாள்.

அவளை பொறுத்தவரை அது போதும் என்று எண்ணிவிட்டாள். அதனால் முன்னணியில் வர அவள் ஆசைப்பட்டேதே கிடையாது. இப்பொழுதும் அப்படி ஒரு விளம்பரத்துக்கு தான் போய் கொண்டு இருக்கிறாள். ஆட்டோ பாதியிலே ரிப்பேர் ஆகிவிட வேறு வழி இல்லாது கால்டேக்சி புக் பண்ணினாள்.

அந்த கால் டேக்சி வெள்ளை நிறத்தில் அவளை கடந்துப் போக, “சார்...சார்” என்று அந்த காரை பின் தொடர்ந்து ஓடினாள். அவள் ஓடி வருவதை பார்த்து அந்த கார் டிரைவர் வண்டியை நிறுத்தினார்.

“என்னம்மா?” என்று அவர் எரிச்சலில் கேட்டார்.

“என்ன சார் கால் டேக்சி புக் பண்ணேன்... நீங்க பாட்டுக்க போறீங்க... கஸ்ட்டமரை இப்படி தான் ஓட விடுவீங்களா?” என்று மூச்சு வாங்கியபடியே கேட்டாள்.

“எது கால் டேக்சியா?” அவர் புரியாமல் கேட்டார்.

“இங்க பாருங்க” என்று அவள் புக் பண்ணி இருந்ததை காட்டினாள்.

“எம்மா நம்பரை ஒழுங்கா பார்க்க மாட்டியா? முதல்ல போய் நம்பரை பாரும்மா” என்று எரிச்சலில் சொன்னார். “அதே நம்பர் தானே சார்...” என்று இவள் நம்பர் பிளேட்டை பார்க்க ஏழு என்று இருந்த என் ஒன்று என மாறி இருந்தது. தூரத்தில் இருந்து பார்த்ததால் இந்த சிக்கல் என்று புரிந்துக் கொண்டவள்,

“சாரி சார்...” என்று சொன்னவள் காரை விட்டு நகர்ந்துக் கொள்ள பின்னால் இருந்த கண்ணாடி மெல்ல இறங்கியது.. அதை பார்த்தவள்,

“தேவையில்லாம இவங்களை தொந்தரவு பண்ணிட்டோம் போலையே...” என்று உணர்ந்து, “சாரிங்க... உங்களை தொந்தரவு பண்ணதுக்கு... நான் வேணும்னு செய்யல... அவசர.... த்துல” என்று முடிக்கும் முன்பே அவளின் வாய் பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக் கொண்டது. மின்சார கம்பியின் மீது கால் வைத்தது போல அத்தனை சாக் அடித்தது அவளுக்கு.

வெள்ளை சட்டையில் கூர் பார்வையுடன் முறுக்கிய மீசையில் போர் வீரனுக்குரிய அத்தனை அம்சங்களையும் கொண்டு இருந்த உதயாதிபனை கண்டு மூச்சு முட்டியது அவளுக்கு. அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்திப்பு..

“சா...ரி சாரி.. சார்...” என்றவள் சட்டென்று அந்த காரைவிட்டு விலகி பாட்டி இருந்த இடத்துக்கு ஓடி வந்து விட்டாள்.

“என்ன ஆச்சு பாப்பா... ஏன் இப்படி ஓடி வர? நாம புக் பண்ண கால் டேக்சி தானே” என்று அவர் கேட்க அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

பெரும் அதிர்ச்சி... தடுமாற்றம்... இவ்வளவு நாள் இல்லாமல் இப்பொழுது ஏனிந்த சந்திப்பு என்று தவித்துப் போனாள். அந்த கார் நிற்காமல் போக, போகும் அந்த காரையே வெறித்துப் பார்த்தாள் சில கணங்கள். நிச்சயம் அவனுக்கு தன்னை நினைவு இருக்காது என்று நம்பினாள். இல்லை என்றால் அந்த காரை வைத்தே தன் மீது ஏற்றி இருந்தாலும் ஏற்றி இருப்பான் என்று பெருமூச்சு விட்டாள்.

ஆனால் அவளை மூச்சு விட முடியாமல் வேகமாய் போன கார் ரிவேர்சில் வர அதிர்ந்துப் போனாள். அதுவும் அவளுக்கு மிக அருகில் வந்து நின்றது அந்த கார்.

“எதுக்காக கார் மறுபடியும் வருது” என்று யோசித்துக் கொண்டே நின்ற இடத்தில் இருந்து விலகி நிற்க,

அதற்குள் காரின் டிரைவர் “மேடம் நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க... நாங்களே உங்களை கொண்டு போய் விடுறோம்.. இந்த இடம் சேப் இல்ல... வாங்க” என்று அந்த கார் டிரைவர் சொன்னார். அவர் சொன்னதும் சரிதான். நடு காடு... உள்ளுக்குள் பயமாக இருந்தது. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல், யோசனையுடன் இருந்தவள், “அதுக்கு அவசியம் இல்ல சார், என் டேக்சி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும். தேங்க்ஸ் பார் யுவர் கைண்ட்நெஸ்” என்று சொன்னவள் மறந்தும் உதயாதிபனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

இனி பார்த்து என்ன ஆகப்போகிறது... என்று எண்ணிவிட்டாள் போல.. “இல்ல மேடம் நீங்க வாங்க... நாங்க கொண்டு போய் விட்டுடுறோம்” என்று டிரைவர் காரை விட்டு இறங்கி வந்து அவளிடம் பேச,

“ஏன் சார் இப்படி டார்ச்சர் பண்றீங்க.. ஆக்சுவலி நீங்க யாரு...? நீங்க எதுக்காக எனக்கு உதவி செய்யணும்.. உங்க உதவி தேவையில்லை. உங்க சேவை தேவை படுறவங்களுக்கு செய்ங்க” என்று சொல்லி விட்டு அவள் மீண்டும் நடக்க, சரியாக அந்த நேரம் மழை பிடித்துக் கொண்டது.

கையில் கை பிள்ளையோடு வயதானவருடன் அவள் அத்துவான காட்டில் ஒதுங்க கூட இடமில்லாமல் இருக்கும் நிலையை கண்டு வேதனை கொண்டாள். ஆனால் அதுக்காக அவனது காரில் ஏற முடியுமா? செத்தாலும் அவளந்த காரில் ஏற மாட்டாள். வீம்புடன் அவள் முன்னாடி நடக்க அதற்குள் பாட்டி பிள்ளையை தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்.

“கண்ணு வா அந்த காருல போயிடலாம்... மழை ரொம்ப வலுக்குது... உன் மகனுக்கு சேராம போயிடும். நீயும் வேற பச்சை உடம்புக்காரி.. மழையில நனைஞ்சா எல்லோருக்கும் உடம்பு முடியாம போயிடும்” என்று அவர் சொல்ல,

“இல்ல பாட்டி அது நம்ம வண்டி இல்லை... தெரியாம நான் போய் நிறுத்திட்டேன். நம்ம வண்டி இன்னும் வரல. வந்தா அதுல போய்க்கலாம்” என்றாள்.

“அதுக்காக இந்த நடு காட்டுல நிக்கிறது நல்லதுக்கு இல்ல பாப்பா... ஒரு பஸ்டான்ட் பக்கமாவது போய் நின்னுக்கலாம். வா நான் போய் அவங்க கிட்ட கேக்குறேன்” என்று சொல்லி அவளை அவர் கூட்டிக்கொண்டு காரை நோக்கி வர அந்த டிரைவரும் இவர்களை நோக்கி ஓடிவந்தார்.

“மேடம் ப்ளீஸ் வாங்க... ஒரு சேபான இடமா பார்த்து நாங்க டிரா பண்றோம்” என்று அவர் வேறு வந்து அழைக்க பாட்டி இவளின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

அவரிடம் எதுவும் சொல்ல முடியாமல் தவித்துப் போனாள். “கடவுளே உன்கிட்ட ஒன்னே ஒண்ணுதான் கேக்கிறேன். தயவு செய்து அவனுக்கு என்னை நினைவுக்கு வரக் கூடாது... ப்ளீஸ்” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டே கார் அருகே வந்தாள்.

“கண்ணு நீ புள்ளையோட பின்னுக்கு உட்கார்ந்துக்க. நான் முன்னாடி உட்கார்ந்துக்குறேன்” என்று அவளிடம் பிள்ளையை கொடுத்து விட்டு முன்னாடி அமர்ந்துக் கொண்டார்.

வேறு வழியில்லாது இவள் பிள்ளையோடு பின்னாடி அமரவேண்டிய நிலை. ஏறி அமர்வதற்குள் கொஞ்சமே கொஞ்சம் நனைந்து இருந்தாள். ஆனால் மழை தன் மகனை நனைக்க விடாமல் தன் மார்போடு அவனை பொத்தி வைத்து முந்தானையால் அவனை மூடி இருந்தாள்.

காரில் அமர்ந்த பிறகு அவளின் உடம்பில் மெல்லிய நடுக்கும் ஏற்பட்டது. தலையை உதயாதிபன் பக்கம் திருப்பவே இல்லை. பிள்ளையை மடியில் கிடத்தி மழை பிள்ளையை எங்கும் நனைத்து இருக்கிறதா என்று எண்ணி ஆராய்ந்தவளுக்கு காரிலிருந்து வந்த ஏசி குளிர் அவளை இன்னும் அதிகமாக வெடுவெடுக்க வைத்தது.

ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் பிள்ளைக்கு குளிர் எடுப்பதை உணர்ந்தவள் தன் முந்தானையால் பிள்ளையை மீண்டும் சுற்றி தன்னோடு அணைத்துக் கொண்டாள். அவளின் சூட்டில் பிள்ளை சுகம் கண்டான். அந்த நேரம் அவன் அழ அதே நேரம் வராளியின் சேலையும் நனைய தவித்துப் போனாள்.

“கண்ணு புள்ள அழுவுறான் பாரு.. அவன் பாலே குடிக்க மாட்டான்.. எப்பவாது தான் அடம் பிடிப்பான்... அவனை முதல்ல கவனி” என்ற பாட்டி,

“ரொம்ப நன்றிங்க... தக்க சமயத்துல உதவி பண்ணீங்க” என்று டிரைவரிடம் சொன்னார். “எனக்கு நன்றி சொல்லாதீங்க ஐயாவுக்கு சொல்லுங்க” என்று பின் பக்கம் கையை காட்டினார் அவர்.

“அய்யாவா?” என்று பின்னாடி திரும்பி பார்த்தார். அங்கே நல்ல திடகாத்திரமான உடலுடன் முறுக்கிய அளவான மீசையில் இருந்த உதயாதிபனை மூச்சை அடைக்கப் பார்த்தார் பாட்டி.

“அய்யா நீங்க தொழில்துறை அமைச்சர் தானே... நான் பார்க்கிறது கனவா நனவா? அய்யோ... உடம்பெல்லாம் புல்லரிக்கிது... எவ்வளவு பெரிய பதவியில இருக்கீங்க...”

“உங்களுக்கு என்ன அவசியம் வந்தது எங்களுக்கு உதவனும்னு. ஆனா சாமானிய மக்களா இருக்குற எங்களுக்கு உதவுற உங்க கருணை மனதுக்கு தான் நீங்க இவ்வளவு பெரிய பதவியில இருக்கீங்க. அய்யா சீக்கிரமே முதலமைச்சர் ஆகிடனும்...” என்று பாட்டி புகழ்ந்து தள்ளினார்.

ஆனால் வராளி அவன் பக்கம் திரும்பக் கூடயில்லை. அவன் யாரோ இவள் யாரோ என்று அமர்ந்து இருந்தாள். அவளின் போதாத நேரமோ என்னவோ அவளின் மகன் பசிக்கு அழ ஆரம்பித்தான் விடாமல்.

“அப்படியே குடிக்கிற மாதிரி தான் அழுவான். ஆனா பசியே ஆறாம வேடிக்கை தான் பார்ப்பான். இதுக்கு இந்த அக்கப்போரு பண்றான்..” முணுமுணுத்தவள் அவனது வாயில் ரப்பர் நிப்பிளை வைத்தாள்.

ஆனால் அந்த குட்டி வான்டோ அதை கையால் தள்ளி விட்டுட்டு தன் தாயிடம் முகம் புதைத்தான். “அடேய் நேரம் காலம் பார்க்கம நீ வேற படுத்தாதடா” என்று முணகினாள்.

“பாப்பா பிள்ளை அழறான் பாரு” என்று பாட்டி வேற படுத்த இவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் பல ஆண்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மத்தியில் ஒரு சின்ன அறையில் தான் மகனின் பசியை ஆற்றுவாள். பல நேரம் அறை கிடைக்காது... வெட்ட வெளி ஷூட்டிங் என்றால் ஒரு ஓரமாக போய் விடுவாள். ஆனால் இப்பொழுது இவ்வளவு நெருக்கத்தில் ஒருவனின் முன்பு எப்படி என்று அவள் தடுமாற,

“முந்தானையை போத்திக்க பாப்பா” என்று சொன்னார் பாட்டி. கார் முழுவதும் பிள்ளையின் அழுகை சத்தம் தான் நிறைந்து இருந்தது. வேறு வழியில்லாமல் பிள்ளையை மடியில் போட்டு அவனை சுற்றி இருந்த முந்தானையை எடுத்து போத்திக் கொண்டவள் பாட்டியிடம் இருந்து ஒரு துண்டை வாங்கி பிள்ளையை மூடிக் கொண்டாள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top