மீண்டும் அவளின் இடையில் தன் கையை வைத்து பிடித்துக் கொள்ளப் பார்க்க, மீண்டும் அவனது கரத்தை தட்டி விட்டாள்.
“படுத்துறாளே” எண்ணியவன் அவள் தந்த முத்தத்தில் தன்னை இழந்தவன் முத்த சுவை உப்பு கரிக்கவும் தான் தன்னை நிதானித்தான்.
சட்டென்று அவளை விட்டு விலகப் பார்க்க, அதற்கு அனுமதிக்காதவள் அவனின் பின்னந்தலையில் கையை வைத்து தன் முகத்தோடு அழுத்தியவள் இடை விடாமல் இன்னும் முத்தம் குடுத்தாள். அவளின் பிடிவாதம் கண்டு மலைத்து நின்றான் தயாகரன்.
“ஏய்” அவன் விலகப் பார்க்க, அவனின் இதழ்களை கவ்விக் கொண்டவள் இத்தனை நாள் அவனை பார்க்காத ஏக்கத்தை எல்லாம் அந்த ஒற்றை முத்தத்தில் கொட்டி தீர்த்தவள் சட்டென்று அவனை விட்டு விலகிக் கொண்டாள்.
“யாழி” என்றான் பேரமைதியாய்.
“உங்களை உணரனும் போல இருந்தது. அது தான்.. இத்தனை நாளா உங்களை பார்க்க முடியாம நான் தவித்த தவிப்புக்கு மருந்து போட்டுக்கிட்டேன். மத்தபடி உங்களை எதுக்கும் நான் கட்டாயப் படுத்தல.. அப்படி உங்களுக்கு தோணுனதுன்னா வெரி சாரி. அப்படியே உங்க நண்பர் கிட்டையும் நான் என் குடும்பத்து சார்பா மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று சொன்னவள், அறையை விட்டு விலகி அசோகன் தங்கி இருந்த அறைக்கு முன்னாடி வந்து நின்றாள்.
நீண்ட மூச்சை எடுத்து விட்டவள், கதவை நாசுக்காக தட்டினாள்.
உள்ளே குறுங்கண் ஓரம் நின்று இருந்தான். “கதவு திறந்து தான் இருக்கு. உள்ள வாங்க” என்று சத்தம் குடுத்தான்.
கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தவளை பார்த்த அசோகன் எதுவும் பேசவில்லை. அதே போல நின்ற இடத்தில் இருந்து அசையவும் இல்லை.
அவளே பேசட்டும் என்று நின்று இருந்தான்.
“சாரி சார்..” எடுத்த உடனே..
“எதுக்கு?” என்றான். அவள் சொன்ன சார் என்ற சொல்லில் பலமாக மனதில் அடி வாங்கினான்.
ஏற்கனவே அப்பா அம்மா பேசியதிலே தான் எவ்வளவு தவறு இளைத்து இருக்கிறோம் என்று புரிந்து ஆடி போய் இருந்தான். இப்போ இவள் என்ன பேசப் போகிறாளோ என்று பார்த்து நின்றான்.
அவளின் பின்னாடியே அடித்து பிடித்துக் கொண்டு தயாகரனும் வந்து விட்டான்.
அவள் சாரி சொன்னதை கேட்டுக் கொண்டே உள்ள வந்தவன் “ஏய் வாயை மூடிக்கிட்டு முதல்ல வெளியே போடி.. வந்துட்டா இப்ப தான் அண்ணன் காரன் கிட்டயே சாரி சொல்ல” உறுமினான்.
அவனை சட்டை செய்யாமல் அசோகனை பார்த்தபடி,
“எங்க அப்பா அம்மா பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றாள்.
“அப்போ எனக்கு அவங்க அப்பா அம்மா இல்லையா?” அசோகன் தலையை உயர்த்தி கேட்டான். அவனது குரலில் எதையும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.
“உங்க நண்பன் தான் நீங்க இந்த வீட்டு விருந்தாளின்னு சொன்னாரு”
“கூடவே இருந்துட்டு என்ன வேலைடா பார்த்து வச்சு இருக்க” தயாகரனை பார்த்து முறைத்த அசோகன்,
“அவன் ஏதோ சொன்னா நீ உடனே அதை அப்படியே பிடிச்சுக்குவியா? அவனுக்கு நண்பன் தான். ஆனா உனக்கு நான் யார்?” அழுத்தமாக கேட்டான்.
தயாழினிக்கு கண்கள் கலங்கியது அவன் கேட்ட கேள்வியில்.
“சொல்லு உனக்கு நான் யார்?” என்று மீண்டும் அசோகன் கேள்வி கேட்க, அழுகையில் விக்கிக் கொண்டு வந்தது அவளுக்கு.
“அ.. அண்ணன்” என்றாள்.
“அது இப்போ தான் தெரியுமா?” மீண்டும் அழுத்தமாகவே அவன் கேட்டான்.
“எனக்கு எப்பவுமே நீங்க அண்ணன்னு தெரியும். ஆனா” என்று தயாகரனை பார்த்தாள்.
“அவன் என்னவும் சொல்லிட்டு போகட்டும். அவனின் மச்சான் மேல அவனுக்கு எப்பவுமே பாசம் அதிகம். அவனை மாத்த முடியாது. அதே போல தான் உனக்கும் உன் அண்ணன் மேல பாசம் அதிகம்னு காண்பிக்கணுமா இல்லையா?” தீர்க்கமாக கேட்டவனை பார்த்து விக்கித்துப் பார்த்தாள்.
“எவ்வளவு கோவத்தை வேணாலும் நீ என்கிட்ட காட்டு. நான் தாங்கிக்குவேன்.. அதென்ன விருந்தாளி மாதிரி நடத்துறது.. இதுக்கு தான் உங்களை எல்லாம் இத்தனை வருடம் கழித்து பார்க்க வந்தனா?” கேள்வி மேல் கேள்வி கேட்டு அவளை திணறடித்தான்.
“அண்ணா”
“அண்ணன் தான். உன் அண்ணன் தான் நான். உன் பாசத்தை காட்ட மட்டும் நான் இல்ல. உன் கோவத்தை காட்டவும் தான் இருக்கேன். என்ன கோவமோ அதை என் மூஞ்சிக்கு நேரா காட்டு.. உங்களை விட்டு இருந்ததுனால எனக்கு உங்க மேல எல்லாம் பாசம் இல்லாம இல்ல..” என்று சொன்ன நொடியே வேகமாய் ஓடிப் போய் தன் அண்ணன் நெஞ்சில் விழுந்தாள்.
விக்கி விக்கி அப்படி ஒரு அழுகை. அவனின் நெஞ்சில் குத்தி அடித்து தன் ஆற்றாமை எல்லாம் கொட்டி தீர்த்தவள்,
விழிகள் சிவக்க அவனை நிமிர்ந்து பார்த்து,
“ஏண்ணா இவ்வளவு நாள் எங்களை விட்டு பிரிஞ்சி இருந்தீங்க? நீங்களும் சின்ன அண்ணனும் இல்லாம நாங்க எவ்வளவு வேதனை பட்டோம் தெரியுமா? அதுவும் உங்க மேல தப்பான அபிப்ராயம் கொண்டு வந்த பிறகு தள்ளி போனாலும் எங்க தேடல் எல்லாம் உங்க ரெண்டு பேர் மேல தான்.. எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போய் இருந்து இருக்காலாம் தானே.. நாங்க என்ன உங்களை தடுத்திடவா செய்வோம். எங்க ரெண்டு அண்ணனுங்களும் இந்த நாட்டுக்கு சேவை செய்யிறாங்கன்னு பெருமை பட்டுக்குவோம் தானே...” என்று கண்ணீர் விட்டவளை நெஞ்சோடு அணைத்தவன்,
“இனி உங்களை விட்டு எங்கும் போறதா இல்ல.. இனி எங்க போனாலும் சொல்லிட்டே போறேன்..” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன்,
“சாரி கேட்கவா அண்ணன்?” அவளிடமே கேட்க, வேகமாய் அவனின் வாயை பொத்தினாள்.
“எங்க அண்ணன் யாரு கிட்டயும் சாரி கேட்க வேணாம். அதுக்கு நாங்க விடவும் மாட்டோம்” என்று சொல்லிக் கொண்டே குறிஞ்சியும் பிறையும் உள்ளே வர, தயாழினியை ஒரு கையால் அணைத்துப் பிடித்தவன் அவர்களை பார்த்து இன்னொரு கையையும் நீட்டினான் அசோகன்.
அவனது விரிந்த கைகளுக்குள் மற்ற இரு தங்கைகளும் வேகமாக நுழைந்துக் கொள்ள, நெஞ்சோடு மூவரையும் அணைத்து நின்றவனுக்கு தன் கூட்டுக்குள் திரும்பிய உணர்வு..
என்ன தான் மனதை இறுக்கமாக கட்டி வைத்துக் கொண்டு வேலையில் ஈடுபட்டாலும் குடும்பத்தின் நினைவுகளும் அவர்களின் மீது கொண்ட பாசமும் அவனை மிகவும் அலைக்கழித்துக் கொண்டு தான் இருந்தது.
மூன்று தங்கைகளையும் அணைத்து நின்றவன் வாசலில் நிழலாட நிமிர்ந்துப் பார்த்தான். அங்கே அவனது பெற்றவர்கள் இருவரும் கண்ணீருடன் வந்து நிற்க கண்டு,
“சாரிப்பா சாரிம்மா” என்று தங்கைகளை அணைத்துக் கொண்டு சொன்னவனை கண்டு கதறி அவனை ஓடி வந்து அணைத்துக் கொண்டார்கள் இருவரும்.
“உன் மேல எங்களுக்கு கோவம் எல்லாம் ப்பா.. முதல் கட்ட ஆதங்கம் தான். மற்றபடி உன்னை விட்டுட்டு இருந்த எங்க நாட்கள் எல்லாம் வெறும் பாலைவனம் தான்.. சாரி கேட்டு எங்களை தள்ளி வச்சுடாத.. இவ்வளவு நாள் நீ தள்ளி இருந்ததே எங்களால தாங்க முடியல” என்று சொன்ன பெற்றவர்களின் அன்பில் நெகிழ்ந்துப் போனவன்,
“இனி எங்கையும் போக மாட்டேன் ப்பா..” என்றவன்,
“ம்மா” என்றான் உறுதியாக..
“நீ எங்க கண் முன்னாடி இருக்க.. அது ஒன்னு மட்டும் போதும்டா அசோகா. நீ எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம்.. நீ சொல்லி தான் உன்னை பத்தி நாங்க தெரிஞ்சுக்கணும்னு இல்ல.. எங்க இருந்தாலும் நீ எங்க மகன் தான்” என்று அவனை அணைத்து உச்சி முகர்ந்தார்.
குடும்பத்தின் ஒட்டு மொத்த அன்பில் திளைத்தவன், இத்தனை நாளும் இதை இழந்து தானே இருந்தான். மனமார அவர்களின் அன்பை உள்வாங்கி அவர்களுக்கும் அதை திரும்பிக் குடுத்தான்.
அப்படி இப்படி என்று பாசமழை பொங்கிப் பெருக,
“போதும் போதும்.. உங்க அழுகையை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு முதல்ல வந்தவனுக்கு நல்ல சாப்பாட்டை ஆக்கி போட வாங்க... அதை விட்டுட்டு கண்ணுல தண்ணியை வச்சுக்கிட்டு.. அவளுங்க தான் சின்ன பிள்ளைங்க.. உனக்கு எங்க போச்சு மலரு.. நீயும் அவளுங்களோட சேர்ந்துக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்க” என்று அதட்டல் போட்டு எல்லோரையும் இயல்புக்கு கொண்டு வந்தார் பொன்மாரி.
அவரின் அதட்டலில் எல்லோரும் சற்றே தங்களை மீட்டுக் கொண்டவர்கள், அண்ணனுக்கு தங்களின் கையால் விருந்து செய்ய ஓட,
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. கொஞ்ச நேரம் என் கூட இருங்க” என்று அமர்த்திக் கொண்டான் அசோகன்.
“அது சரி.. இவளுங்களுக்கு நீ ஒத்து ஊதுறியா?” கேட்ட பொன்மாரி சிரிப்புடன்,
“அழாம பேசிட்டு இருங்க கீழ நான் பார்த்துக்குறேன்” என்று அவர்களின் குடும்பத்துக்கு தனிமை கொடுத்து விட்டு, தன் மகன்களை கூட்டிக்கொண்டு கீழே போய் விட்டார்.
அசோகனை தொட்டு தடவி மனமாற பார்த்துக் கொண்ட பெற்றவர்களை தவிக்க வைத்து விட்டோம் என்று உள்ளுக்குள் மறுகினான். ஆனாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல்,
“எனக்கு ஒன்னும் இல்லம்மா. நான் நல்லா இருக்கேன்..” என்று தான் அணிந்து இருந்த சட்டையை கழற்றி காண்பித்தான்.
அவனது உடம்பில் அங்கும் இங்கும் சில தழும்புகள் இருந்ததே அன்றி வேறு எந்த பெரிய காயங்களும் இல்லை.
அந்த வடுக்களை தொட்டு பார்த்த மலர்,
“இதெல்லாம் உன் வீரத்தை சொல்லும் இல்ல” என்று அவர் பெருமையாக கேட்க, அசோகனின் முகத்தில் மெல்லிய மலர்வு தென்பட்டது.
இவர்களிடம் சொல்லிட்டே போய் இருந்து இருக்கலாம் இல்லையா? என்று ஆயிரமாவது முறை எண்ணிக் கொண்டான்.
தங்கைகளுடன் அமர்ந்துக் கொண்டவனுக்கு எதுவும் பேச தோன்றவில்லை. அவர்களின் அருகாமை ஒன்றே போதுமானதாக இருந்தது.
ஆனால் அவர்களுக்கு அப்படி இல்லை. இத்தனை வருடங்களாக என்னென்ன நடந்தது என்பதை ஒன்று விடாமல் சொன்னார்கள். அதுவும் குறிஞ்சியும் பிறையும் போட்டி போட்டுக்கொண்டு சொல்ல, தயாழினி அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள்.
“அக்கா தான் அண்ணா நீங்க இருக்க வேண்டிய இடத்துல இருந்து எங்களை பார்த்துக்கிட்டாங்க... நாங்க உங்களை பெருசா மிஸ் பண்ணல.. ஏன்னா எங்களுக்கு அக்கா இருந்தா.. ஆனா அவ தான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணா.. பல நேரம் உங்க ரெண்டு பேரோட போட்டோவை எடுத்து வச்சுக்கிட்டு யாருக்கும் தெரியாம அழுதுக்கிட்டு இருப்பா” என்று குறிஞ்சி சொல்ல, அசோகன் பார்வை தயாழினியின் மீது படிந்தது.
அசோகனுக்கும் அதர்வனுக்கும் முதல் தங்கை மீது எப்பொழுதுமே பாசம் அதிகம். ஏனெனில் அவர்களை அண்ணன் என்று அழைத்தது அவள் தானே. அதுவும் இல்லாமல் இவர்கள் இருவரும் வருவதற்கு முன்பு வந்தவள். அவளோடு இருந்த காலங்களும் சற்று அதிகம். அதுவும் அவள் அண்ணா அண்ணா என்று காலை கட்டிக் கொண்டு இவர்களின் பின்னாடியே அலைந்தது எல்லாம் அதிகம்.. அதுவும் அவள் காட்டும் அன்பும் என்றுமே அளப்பரியது தானே..
கண்களால் தயாழினியை அன்பால் வருடியவனுக்கு நன்கு தெரியுமே.. தாங்கள் இல்லை என்றால் கூட இந்த வீட்டை சரிவர அவள் நடத்தி கொண்டு போய் கரை சேர்ப்பாள் என்று.
விளையாடும் காலத்தில் கூட பொறுப்பு மிக்கவள் ஆயிற்றே.. தயாழினியை அருகில் அழைத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன், அவளின் உச்சந்தலையில் முத்தம் வைத்தான்.