அதன் பிறகு ஒவ்வொருவராய் வர, எல்லோருக்கும் பரிமாறினார்கள் அக்கா தங்கை மூவரும்.
“மலர் நீயும் சாப்பிட வா.. எவ்வளவு நாள் கழிச்சு உன் மகன் வந்து இருக்கான். அவனோட சேர்ந்து சாப்பிடலாம் இல்லையா?” பொன்மாரி அழைக்க,
“இருக்கட்டும் அண்ணி.. இப்போ பசிக்கல.. முதல்ல வந்தவங்க சாப்பிடட்டும் வயிறார” என்று மகள்களுடன் அவரும் பரிமாற தன் தாயை கூர்ந்துப் பார்த்தான் அசோகன்.
அவரிடம் தான் வந்ததற்கான எந்த பரபரப்பும் இல்லாததை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்தது. ஆனாலும் அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார். அதில் தயாகரன் சற்றே தன் கோவத்தை தனித்தான். இல்லை என்றால் மனைவியிடம் இன்னும் ஆடி இருப்பான்.
விருந்து முடிய, அதன் பிறகு நால்வரும் அமர்ந்து உண்டார்கள். மத்திய நேரத்துக்கு அப்பொழுதே ஏற்பாடு செய்ய போக,
“இந்தா பொண்ணுங்களா வேலையை அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல வராதவன் வந்து இருக்கான். அவனை கவனிக்காம என்ன அடுப்படி அடுப்படின்னே இருக்கீங்க.. வாங்க இங்க” பொன்மாரி சத்தம் போட்டு அழைக்க,
மூவரும் வந்து நின்றார்கள்.
“ப்ச் பேசுங்கடி அவன் கிட்ட..” எடுத்து வேறு சொல்ல,
“முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட என்ன பேச சொல்றீங்க அத்தை” என்றாள் தயாழினி.
“எது முன்ன பின்ன தெரியாதவனா? அவன் உங்க அண்ணன்டி”
“அப்படின்னு தான் நாங்க நினைச்சோம். ஆனா உங்க மூத்த மகன் அப்படி சொல்லல அத்தை. வந்தவர் அவரோட நண்பன் மட்டும் தானாம். அப்போ நாங்களும் அந்த எல்லைக்குள்ள இருந்து தானே ஆகணும்” என்றவளை கொலை வெறியுடன் பார்த்தான் தயாகரன்.
அவனின் காதோரம் “நீ தான் எனக்கு சூனியம் வச்ச ஆளாடா. உன்னால என்ன செய்ய முடியுமோ அதை நல்லா செஞ்சு விட்டுட்டடா” சன்னமாக முணகினான் அசோகன்.
“ப்ச் இவளை” என்று கடுப்புடன் எழுந்தவன்,
“யாழி” என்று அவன் அவளை திட்ட வரும் முன்பே,
“இங்க பாருங்க.. உங்க நண்பனுக்கு எந்த குறையும் வராம நாங்க பார்த்துக்குறோம். அதை தானே நீங்க என்கிட்டே இருந்து எதிர் பார்த்தீங்க. என் சார்புல இருந்து விருந்துல எந்த குறையும் வைக்க மாட்டேன்” என்றாள்.
“ஏய்” என்று நெற்றியை நீவி விட்டுக் கொண்டான் தயாகரன்.
“ஆமாங்க மாமா.. அதுக்கு நாங்களும் உறுதி தரோம்..” என்று குறிஞ்சியும் பிறையும் வேறு சொல்ல, கண்களால் மனைவியை முறைத்தான்.
“மாமா அத்தை என்ன இது.. இவ இப்படி பேசிட்டு இருக்கா.. நீங்க கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க.. என்னன்னு அவளை கேட்க மாட்டீங்களா?” மாமனார் மாமியாரிடம் எகிறினான்.
“அவங்க சரியா தானே மாப்பிள்ளை பேசுறாங்க.. வந்தவங்க உங்க விருந்தாளி. அப்போ நல்லா கவனிச்சுக்கணும்னு நீங்க எதிர் பார்க்கிறது தப்பு இல்லையே. அதே போல அவர்களும் நல்லா கவனிச்சுக்குவாங்க மாப்பிள்ளை. எந்த குறையும் வராது. கூடவே நானும் இருப்பேன்ல” என்று மலர் பேச,
“மலரு” என்று பொன்மாரி அதட்டினார்.
“இல்லங்க அண்ணி.. என் பொண்ணு சரியா தான் சொல்றா..” என்றார் அவர்.
“என்ன இதெல்லாம்.. இவ்வளவு நாள் கழிச்சு வந்து இருக்கான்.. அதுவும் இவ்வளவு துன்பப்பட்டு துயரப்பட்டு வந்து இருக்கிறவன் கிட்ட இப்படி பேசுறது எல்லாம் நல்லாவா இருக்கு மலரு.. வந்தவன் உன் மகன். அதுவும் மூத்த மகன். தாய்க்கு எப்பவும் தலை மகன்னு சொல்லுவாங்க.. அந்த பாசம் கூட உனக்கு இல்லையா?” கேட்ட பொன்மாரியை பாவமாக பார்த்த மலர்,
“உள்ளுக்குள்ள கொட்டி கிடக்குற பாசத்தை நெஞ்சை கிழித்து காட்டுனா கூட சிலருக்கு புரியாது அண்ணி.. என் பாசமும் அப்படி தான். பரவாயில்ல விடுங்க” என்றார் விரக்தியாய்.
“ப்ச் இதெல்லாம் பேசுற பேச்சா” அவர் மேலும் கண்டிக்க,
“நாங்க மட்டும் அன்பு வச்சா போதுமா சம்மந்தி.. நாலரிவு அஞ்சறிவு உள்ள மிருகங்களுக்கு கூட நாம அன்பு காண்பிச்சா திருப்பி அதுவும் அன்பு காண்பிக்கணும்னு அதுங்களுக்கு தெரிஞ்சு இருக்கு. ஆனா சிலருக்கு அதெல்லாம் சுட்டுப் போட்டா கூட வராது. தெரியாது.. ஏன்னா நான் வளர்த்த விதம் தவறு போல.. ஆனா மூத்தவனை வளர்த்த மாதிரி தான். எல்லோரையும் வளர்த்தேன். முதல் இரண்டு பிள்ளையும் எங்களை மனுசனா கூட மதிக்கல.. அப்படி ஒருவேளை எங்களை மனுசனா மதிச்சு இருந்து இருந்தா அவனுங்களை பற்றிய எல்லாத்தையும் சொல்லி இருப்பானுங்களோ என்னவோ..”
“இல்லன்னா அவனுங்க சொல்றதை புரிஞ்சுக்குற அளவுக்கு எங்களுக்கு அடிப்படை அறிவே இல்லன்னு நினைச்சுட்டானுங்களோ என்னவோ..” விரக்தியாக பேசினார் சந்தானம்.
கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட மலர்,
“எங்க இருந்தாலும் அவங்க நல்லா இருந்தா போதும்னு தான் நாங்க நினைக்கிறோம்.. மத்தபடி அவங்க எங்களுக்கு சம்பாரிச்சு குடுக்கனும்னோ இல்ல எங்களை கடைசி காலத்துல வச்சு பார்துக்கனும்னோ கூட நாங்க எதிர் பார்க்கல.. இந்தா இங்க இருக்கேன். இத பண்றேன்னு மட்டும் சொன்னா போதும். வேற எதையும் நாங்க அவன் கிட்ட கேட்கல.. ஆனா அதை சொல்ல கூட மனசு வரலன்னா நாங்க பெத்தவங்களா இருக்குறதுல அர்த்தமே இல்லையே அண்ணி” மூக்கை சிந்தியவர், தன் மகனை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை.
“என் குடும்பத்து பாரத்தை தோளில் சுமக்க என் மூத்த பொண்ணு இருக்கா.. எங்களை பார்த்துக்க அவ இருக்கா.. அவளை தாண்டி வேற யாராலும் எங்களை நல்லா பார்த்துக்க முடியாது. மத்த ரெண்டு பொண்ணுங்களையும் அவதான் இவ்வளவு நாள் பார்த்துக்கிட்டா.. இனியும் அவ பார்த்துக்குவா. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. என் மூணு பொண்ணுங்களை பற்றியோ எங்களை பற்றியோ எந்த கவலையும் எனக்கு இல்லை. ஏன்னா தயாழினி எல்லாவற்றையும் பார்த்துக்குவா”
“ஆனா பெத்த மனசு இல்ல.. மூத்தவனுங்க ரெண்டு பேரும் உயிரோடவாவது இருக்கானுங்களான்னு மனசு கிடந்து அடிச்சுக்கும். ஒவ்வொரு நாள் இரவும் என் பெரிய பொண்ணுக்கிட்ட பேசும் பொழுது எல்லாம் இவனுங்களை பத்தி பேசாத நாள் இல்ல... எங்க அன்பும் பாசமும் சின்னது தான்.. எங்களுக்கு பெருசா எதையும் புரிஞ்சுக்க கூடிய அளவுக்கு அறிவோ பக்குவமோ இல்ல..” தொண்டையடைக்க பேசிய மலரின் ஆதங்கத்தில் வாயடைத்துப் போனார்கள் எல்லோரும்.
“பெத்த பிள்ளைங்க உயிரோட இருக்கா இல்லையான்னு கூட தெரியாம தினமும் தவிக்கிற தண்டனை இருக்கு பாருங்க அதெல்லாம் ரொம்ப பெரிய கொடுமை. இதை விட வேற யாரும் எந்த தண்டனையும் தந்துட முடியாது எங்களுக்கு..” உடைந்துப் போய் விட்டார் மலர்.
“ம்மா” என்று அதட்டலுடன் வந்தாள் தயாழினி.
“இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்கீங்க. கண்ணை துடைங்க முதல்ல” என்று அதட்டியவள், “சாரிங்க எங்க அம்மா கொஞ்சம் எமோஷனல் டைப்.. வந்த விருந்தாளி முன்னாடி அழுது சீன் க்ரியேட் பண்ணிட்டாங்க. இனி இப்படி நடக்காம பார்த்துக்குறேன்” தயாகரனிடம் சொன்னவள் தாயை உள்ளே அழைத்துக் கொண்டு போக, அதுவரை அமைதியாக இருந்த அசோகன் எல்லோரும் பேசுவதை கேட்டு விருட்டென்று எழுந்து அவனுடைய அறைக்குப் போய் விட்டான்.
போனவனின் முகத்தில் இருந்த உணர்வுகளை பார்த்த தயாகரன் கடுப்புடன் தயாழினியை முறைத்தான். அவனது முகத்தில் கட்டுக்கடங்காத சினம் துளிர்த்து நின்றது.
“தயாழினி மேல வா” என்று அடக்கப்பட்ட கோவத்துடன் அழைத்து விட்டு மேலே போக,
“இல்லங்க வந்த விருந்தாளிக்கு விருந்து செய்யணும் இல்லையா? இப்போ மேல வர முடியாது. விருந்து ஏற்பாடு எல்லாம் நான் தான் பார்காணும்” என்றவளை திரும்பி பார்த்து முறைத்தவன்,
“நீ இதுவரை விருந்தாளியை கவனிச்சதே போதும் தாயி.. மரியாதையா மேல வா” என்று கத்தி விட்டு தன் அறைக்குள் போய் நுழைந்தான் தயாகரன்.
“அக்கா நீ போ நான் பார்த்துக்குறேன்” என்று குறிஞ்சி சொல்ல,
“உன் மாமா ஒன்னும் கொஞ்ச என்னை கூப்பிடல.. காது வலிக்க வலிக்க திட்ட போறாரு..” பெருமூச்சு விட்டவள் “அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக்கோங்க. ரெண்டு பெரும் ரொம்பவே உடைஞ்சு போயிட்டாங்க” தங்கையிடம் சொன்னவள்,
“ம்மா அண்ணன் வந்ததே போதும்.. இதுக்கு மேல அவன் மனம் நோகும்படி எதுவும் பேசிடாதீங்க..” என்று சொல்லிவிட்டு மேலே போனாள்.
அவள் வந்த உடனே கதவை அடித்து சாற்றியவன்,
“உன் குடும்பத்துல இருக்குறவங்க எல்லாம் மனசுல என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.. இப்படி தான் வந்தவனை மனம் நோக வைப்பீங்களா? அவன் அப்பவே அப்படியே போறேன்னு தான் சொன்னான். நான் தான் வலுக்கட்டாயமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். ஆனா வந்தவனுக்கு நீயும் உன் குடும்பமும் நல்ல மரியாதை பண்ணீட்டீங்கடி” எண்ணையாய் காய்ந்தான்.
தயாழினி எதுவும் பேசவில்லை. அப்படியே நின்று இருந்தாள். அவளின் மனதில் இருந்த எல்லா கொந்தளிப்பையும் அடக்கிக்கொண்டு வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் நிர்மலமாக முகத்தை வைத்துக் கொண்டாள். உள்ளுக்குள் பல எரிமலை வெடித்துக் கொண்டு இருந்தது.
“சொல்லுடி உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். உங்களை தேடி வந்தவனை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப் படுத்தீட்டீங்க.. பெரியவனுக்கே இந்த கதின்னா.. இன்னும் சின்னவன் வந்தா அவனை என்ன பண்ணுவீங்களோ.. நீங்க எல்லாம் மனுசங்க தானா.. ச்சீ..” என்று அவன் வெறுத்து உமிழ, கண்களில் இருந்து கண்ணீர் இறங்கி விட்டது அவளுக்கு.
ஆனாலும் எதுவும் பேசவில்லை. வாயையே திறக்கவில்லை அவள்.
“எல்லாத்துக்கும் தைய தக்கான்னு குதிப்பல்லடி... இப்போ பேசு..” என்றவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தாள். அதன் பிறகு அவனின் உடம்பில் தன் விழிகளை ஓட்டி அவனை பரிசோதித்தவளை பார்த்தவன் திகைத்துப் போனான்.
“ஹேய் என்னடி” என்று அவன் கேட்ட அடுத்த நிமிடம் அவனின் உயரத்துக்கு எம்பி அவனின் இதழ்களை சிறைசெய்தாள்.
அவளின் இதழ் முத்தத்தில் அதிர்ந்துப் போனவன், அவனையும் அறியாமல் அவளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தான். நீண்ட நாட்களுக்கு பிறகான முத்தம்.. முற்றிலும் அவனை புத்தி பேதலிக்கச் செய்தது.
அவளின் இடையோடு தன் கரத்தை கொண்டு போனவன் அவளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள பார்க்க, அவனின் கரத்தை தட்டி விட்டவள் அவனின் இதழோடு தன் இதழ்களை இன்னும் அழுத்தினாள்.
மீண்டும் அவளின் இடையில் தன் கையை வைத்து பிடித்துக் கொள்ளப் பார்க்க, மீண்டும் அவனது கரத்தை தட்டி விட்டாள்.
“படுத்துறாளே” எண்ணியவன் அவள் தந்த முத்தத்தில் தன்னை இழந்தவன் முத்த சுவை உப்பு கரிக்கவும் தான் தன்னை நிதானித்தான்.
சட்டென்று அவளை விட்டு விலகப் பார்க்க, அதற்கு அனுமதிக்காதவள் அவனின் பின்னந்தலையில் கையை வைத்து தன் முகத்தோடு அழுத்தியவள் இடை விடாமல் இன்னும் முத்தம் குடுத்தாள். அவளின் பிடிவாதம் கண்டு மலைத்து நின்றான் தயாகரன்.
“ஏய்” அவன் விலகப் பார்க்க, அவனின் இதழ்களை கவ்விக் கொண்டவள் இத்தனை நாள் அவனை பார்க்காத ஏக்கத்தை எல்லாம் அந்த ஒற்றை முத்தத்தில் கொட்டி தீர்த்தவள் சட்டென்று அவனை விட்டு விலகிக் கொண்டாள்.
“யாழி” என்றான் பேரமைதியாய்.
“உங்களை உணரனும் போல இருந்தது. அது தான்.. இத்தனை நாளா உங்களை பார்க்க முடியாம நான் தவித்த தவிப்புக்கு மருந்து போட்டுக்கிட்டேன். மத்தபடி உங்களை எதுக்கும் நான் கட்டாயப் படுத்தல.. அப்படி உங்களுக்கு தோணுனதுன்னா வெரி சாரி. அப்படியே உங்க நண்பர் கிட்டையும் நான் என் குடும்பத்து சார்பா மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று சொன்னவள், அறையை விட்டு விலகி அசோகன் தங்கி இருந்த அறைக்கு முன்னாடி வந்து நின்றாள்.
நீண்ட மூச்சை எடுத்து விட்டவள், கதவை நாசுக்காக தட்டினாள்.