அவன் இறங்கவும் பார்த்துக் கொண்டு இருந்த அவனின் குடும்பத்தார்களுக்கு பெரும் அதிர்வு.. அதுவும் அவனை பல வருடங்களுக்கு முன்பு பார்த்தது. இப்போ இந்த நிமிடம் எதிர்பார்க்காத அதிர்ச்சியில் உறைந்துப் போனார்கள்.
மலர் மயங்கி சரிந்தார். பொன்மாரி அவரை தாங்கிக் கொள்ள, சந்தானம் தடுமாறினார். அவரை சிவலிங்கம் பிடித்துக் கொண்டார்.
தங்கைகள் மூவரும் தங்களின் அண்ணனை பார்த்த நொடியில் கையில் இருந்த ஆரத்தி தட்டு கீழே விழுந்து கொட்டியது.
ஹேய் என்று குணா தான் அதை கீழே விழாமல் இடையில் பிடித்துக் கொண்டான். அவனும் இப்படி தான் நிகழும் என்று எண்ணி இருந்தானே. அதனால் சுதாரித்து தாவி வந்து பிடித்துக் கொண்டான்.
அனைவரின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த அசோகனுக்கு குற்ற உணவர்வாய் போனது..
இவர்களிடம் எல்லாத்தையும் சொல்லிட்டு செய்து இருக்கலாமே என்று தோன்றியது. காலம் கடந்த சிந்தனை தான். ஆனாலும் இப்பொழுதாவது தொன்றியதே என்று பெருமூச்சு விட்டான்.
தயாழினி மட்டும் இவன் வருவான் என்று கணித்து இருந்தாள். ஆனாலும் இத்தனை வருடங்கள் கழித்து கூடப் பிறந்தவனை பார்த்த பொழுது அவளுள்ளும் பெரும் அதிர்ர்வு தான்.
அதே போல திகைப்பில் இருந்து சட்டென்று மீட்டுக் கொண்டவள், குணா கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டு,
“பிடிச்சு சுத்துங்க” என்று தங்கைகளிடம் சொன்னவள் எந்த உணர்வையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அண்ணனுக்கு ஆராத்தி சுற்றினாள்.
“அத்தை நீங்க வந்து பொட்டு வைங்க” என்று பொன்மாரியை அழைத்து அவரையே பொட்டு வைக்க சொல்லி விட்டு தயாழினி நகர்ந்து விட்டாள். அவளை அப்படியே பாலோ செய்தார்கள் தங்கைகள்.
மூன்று தங்கைகளும் தனக்கு பொட்டு வைக்காமல் விலகிப் போனதை பார்த்து பெருமூச்சு விட்டவன்,
“இதெல்லாம் தேவையா? இதுக்கு தான் நான் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னேன்” என்று தன் நண்பனை முறைத்தான் அசோகன்.
“இன்னும் எத்தனை நாள் இப்படி வீட்டை விட்டு பிரிஞ்சே இருக்கலாம்னு நினைக்கிற.. போதும் இவ்வளவு நாள் நீ இவங்களை விட்டு பிரிஞ்சு இருந்தது எல்லாம். இனி ஒழுங்கா குடும்பமா இருந்து பழகு” என்று சொல்லி கிளம்பியவனை கையோடு கூட்டிக் கொண்டு வந்து விட்டான் தயாகரன்.
ஆனால் வந்தவனை இப்படி அவமானப்படுத்தவும் சுர்ரென்று கோவம் ஏறியது அவனுக்கு.
வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த தயாழினியின் பின்னோடு இவனும் சென்று அவளை பிடிபிடி என்று பிடித்து விட்டான்.
“உன் மனசுல நீ என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க.. நீ என்ன பெரிய இவளா? நானே அவனை வலுக்கட்டாயமா கட்டல் பட்டு கூட்டிட்டு வந்து இருக்கேன்.. நீ என்னன்னா உன் இஷ்ட்ட டேஷுக்கு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு அவனுக்கு பொட்டு வைக்காம வர்ற.. உன்னை பார்த்து உன் தங்கச்சிங்களும் அவனுக்கு பொட்டு வைக்காம அவமானப் படுத்துறாளுங்க. என்ன திமிரா?”
“இங்க பாரு அவனை வச்சு தான் நீங்க இந்த வீட்டுல வாழ வந்து இருக்கீங்க... அவனுக்காக மட்டும் தான் உங்க மூணு பேருக்கும் நாங்க வாழ்க்கை குடுத்து இருக்கோம்.. அதை முதல்ல ஞாபகம் வச்சுக்கோ.. என்னவோ உங்க மேல ஆசை பட்டு ஒன்னும் உங்களை நாங்க கல்யாணம் பண்ணிக்கல.. அதனால அவனுக்கு குடுக்க வேண்டிய மரியாதையை நீங்க குடுத்து தான் ஆகணும். அப்படி இல்லாம இப்போ அவமானப் படுத்துற மாதிரி ஏதாவது குட்டி கலாட்டா பண்ணீங்க.. அக்கா தங்கச்சி மூணு பேரையும் கட்டம் கட்டி தூக்கிடுவேன். என் குணம் என்னன்னு தெரியும் தானே..” என்று ஆட்டமாய் ஆடினான் தயாகரன்.
அவன் பேசிய பேச்சில் இன்னும் மனதில் ரணம் கொண்டவள் அடிபட்ட பார்வை பார்த்தாள் தன் கணவனை. ஆனாலும் வாயை திக்கவே இல்லை. மௌனமாக நின்றாள்.
“அவன் உங்க அண்ணன் மட்டும் இல்ல.. என் நண்பன்.. முதல்ல அவன் எனக்கு நண்பன் அதுக்கு பிறகு தான் உங்களுக்கு அவன் அண்ணன். உங்க அண்ணன் மேல இருக்கிற கோவத்தை எல்லாம் என் நண்பன் கிட்ட காட்டக் கூடாது. அவனுக்கு ஒரு குறையும் வைக்கக் கூடாது. மரியாதையா நடத்தணும்.. அவன் முகம் கொஞ்சம் சுருங்குச்சு அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்..” என்றவன்,
“உங்க அம்மா அப்பா கிட்டயும் சொல்லி வை.. அவன் என் நண்பன். அவனை திட்டி பழிச்சு பேசுற வேலையெல்லாம் வச்சுக் கூடாதுன்னு” என்று கொட்டி தீர்க்கும் அருவியாய் ஆர்பாட்டம் செய்து விட்டு அவன் கீழே போய் விட்டான்.
போகும் அவனை வெறித்துப் பார்த்த தயாழினிக்கு விழிகள் கலங்கிப் போனது. முயன்று தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு கீழே வந்தாள். கூடத்தில் அசோகனை அமரவைத்து பேசிக் கொண்டு இருந்தார்கள் பொன்மாரியும் லிங்கமும். இன்னொரு இருக்கையில் மலரும் சந்தானமும் அமர்ந்து இருந்தார்கள். அப்பொழுது தான் முகத்தில் நீரை தெளித்து மயக்கத்தில் இருந்து எழுந்து இருந்தார் மலர். அவரின் கையை ஆதரவாக பற்றிய படி இரு தங்கைகளும் நின்று இருந்தார்கள்.’
அசோகனின் வருகை அவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்று உணர்ந்தவள் யாரையும் கலைக்காமல் அடுப்படிக்கு உள்ளே நுழைந்து தயாராக இருந்த பாலில் டீத்தூளை போட்டு கொதிக்க வைத்து ஏலக்காய் இஞ்சி தட்டிப் போட்டு அனைவருக்கும் எடுத்து வந்து குடுக்க,
அக்காவின் முகத்தையே இரு பெண்களும் பார்த்தார்கள். அவளின் முகம் எந்த சலனமும் இல்லாமல் இருந்தது.
“அக்கா” என்று அவர்கள் இவளிடம் வர,
“வடை பாதியிலே இருக்கே.. போய் போட்டு எடுங்க.. விருந்தினர் வந்து இருக்காங்க இல்லையா? எந்த குறையும் அவங்களுக்கு வைக்கக் கூடாது” யாருக்கும் கேட்காமல் தங்கைகளிடம் சொல்லி விட்டு மற்றவர்களுக்கு டீயை நீட்டினாள்.
“அக்கா” என்று அதிர்ந்துப் போனார்கள். வந்தவன் அவர்களுடைய கூடப் பிறந்த அண்ணன். ஆனால் அக்கா விருந்தாளி என்று சொல்லவும் திகைத்துப் போனார்கள்.
“உங்க மாமா தான் சொன்னாரு. வந்து இருக்கிறது அவரோட நண்பனாம். சோ எந்த குறையும் வரக் கூடாதுன்னு சொன்னாரு. அதுக்கேத்த மாதிரி நீங்களும் நடந்துக்கோங்க” என்றாள்.
“சரிக்கா” என்று கூறி விட்டு சட்டென்று அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டார்கள் இருவரும்.
ஆதுவரை தாயின் கையை பிடித்துக் கொண்டு இருந்தாலும் தங்களின் அண்ணனை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் குறிஞ்சியும், மலரும். நெருங்கிப் போய் எதுவும் பேசவில்லை. பேச சற்றே தயக்கம். ஆனாலும் ஒரு வார்த்தையாவது பேசிவிடணும் என்று அங்கு நின்று இருந்த சமயம் தயாழினி வந்து அவன் அண்ணன் இல்லை. விருந்தினர் என்று சொல்லவும் தங்களின் உள்ளத்து உணர்வுகளை மறைத்துக் கொண்டு அடுப்படிக்கு போய் விட்டார்கள் இருவரும்.
அவர்களின் ஆசையை அறியாதவாளா தயாழினி. அண்ணன் எதிரியிடம் மாட்டி இருக்கிறான் என்று அறிந்து அவனுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் பண்ண முடிவெடுத்தவளுக்கு இத்தனை நாள் தங்களை தவிக்க விட்டுட்டு இருந்த அண்ணனின் மீது அவ்வளவு கோவம் இருந்தது.
ஆனாலும் தங்களின் அடிப்படை கோவத்தை கூட காட்ட விடாமல் செய்த தயாகரனின் பேச்சில் அடிபட்டுப் போனாள்.
அப்போ எங்களுக்கு அண்ணனாக வரவில்லையா? இவரின் நண்பனாக தான் வந்து இருக்காரா? என்ற கேள்வி எழ, அப்போ நீங்க எங்களுக்கு விருந்தினர் தான் என்று அந்த எல்லையிலே நின்றுக் கொண்டாள் தயாழினி. மற்றவர்களையும் நிற்க வைத்து விட்டாள்.
பெண் பிள்ளைகள் ஒரு வார்த்தை பேசாமல் ஒதுங்கிப் போவதை பார்த்து மலருக்கு உள்ளுக்குள் சுருக்கென்று இருந்தது.
அதுவும் தயாழினியின் முகத்தில் வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்து வைத்து இருந்த சிரிப்பை பார்த்து நெற்றி சுருக்கியவர் எதுவும் பேசாமல் எழுந்துக் கொண்டார்.
“என்ன மலர் அதுக்குள்ள எழுந்துட்ட... வராதவன் வந்து இருக்கான் ரெண்டு வார்த்தை பேசலாம் இல்ல..” என்று பொன்மாரி தடுக்க,
“என்ன பேசுறதுன்னே தெரியல அண்ணி. எனக்கு அந்த அளவுக்கு அறிவு இல்ல.. எல்லாத்தையும் புருஞ்சுக்க எங்களுக்கு புத்தி இல்ல..” சொன்னவர்,
தன் மகன் புறம் திரும்பி, “வாங்க தம்பி.. நலமா இருக்கீங்களா? உடம்பு இப்ப பரவாயில்லையா?” என்று மூன்றாம் மனிதராய் நலம் விசாரித்து விட்டு,
“பிள்ளைங்க அங்க எண்ணெய் சட்டியில நிக்கிறாளுங்க.. நான் அங்க போய் பார்க்கிறேன். இல்லன்னா கொதிக்கிற எண்ணெயை மேல சிந்திக்குவாளுங்க அண்ணி” என்று சொன்னவர் மூத்த மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே போய் விட்டார்.
“என்ன இவ இப்படி இருக்கா...” என்று பொன்மாரி அலுத்துக் கொண்டவர்,
“நீங்களாவது ரெண்டு வார்த்தை பேசுங்க” என்று லிங்கத்திடம் சொன்னார்.
“பேசலாமே...” என்றவர்,
“தம்பி எப்படி இருக்கீங்க? உடம்பெல்லாம் நல்லா இருக்கா? என் மருமகன் என்னவோ சொன்னாரு.. உங்களுக்கு உடம்பெல்லாம் கொஞ்சம் அடின்னு.. இப்போ பரவாயில்லையா?” ஒட்டாத தன்மையுடன் தன் மகனிடம் கேட்டு விட்டு,
“எனக்கு ரொம்ப அதிர்வா இருக்குங்க.. மனசெல்லாம் ரொம்ப தளர்ந்து போய் இருக்கு. நான் கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரிச்சு வரேன்” என்றவர் உள்ளே போய் விட்டார்.
அசோகன் வெறும் தலை அசைப்பை மட்டும் தந்தைக்கு கொடுத்தான். அவரின் ஒட்டாத பேச்சில் உள்ளுக்குள் பாறை வெடித்து சிதறியது.
தயாகரன் திரும்பி தன் மனைவியை முறைத்துப் பார்த்தான். அவனது பார்வையில் இருந்த காட்டம் கண்டு பெருமூச்சு விட்டவள்,
“குளிச்சுட்டு வாங்க.. சாப்பிடலாம்.. எல்லாம் தயாரா இருக்கு” என்று அண்ணனிடம் சொன்னவள்,
“நீங்களும் குளிச்சுட்டு வாங்க...” தன் கணவனிடமும் பிரபாவிடமும் சொல்லி விட்டு அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அவளின் இந்த ஒட்டாத பேச்சில் ஏகத்துக்கும் கடுப்பு வர, “யாழி மேல வா” என்று அவளை அழைத்தான்.
“இன்கா கொஞ்சம் வேலையா இருக்கேன் ங்க.. முடிச்சுட்டு வரேன். நீங்க அதுக்குள்ள குளிச்சுட்டு வந்திடுங்க” அடுப்படியில் இருந்தபடியே சொன்னவளை ஒன்றும் செய்ய முடியாமல், நண்பனுக்கு ஒரு அறையை காண்பித்து, அவனது அளவை சொல்லி குணாவை உடைகள் வாங்கி வைத்திருக்க சொல்லி இருந்தான். அதை எடுத்து நண்பனிடம் கொடுத்து
“குளிச்சுட்டு வா பேசிக்கலாம்” என்று சொல்லி விட்டு, தங்களின் அறைக்குள் நுழைந்துக் கொண்டவனுக்கு மனைவி மேல் அவ்வளவு கோவம் வந்தது. அதுவும் அவள் வாய் திறந்து எதுவும் சொல்லாமலே அவளின் தங்கைகளும் பெற்றவர்களும் அவளை போலவே நடந்துக் கொள்வதை பார்த்து அப்படி ஒரு கோவம் வந்தது.
“முதல்ல இவளை தட்டி கொட்டி சரி செஞ்சா போதும்.. மத்தது தானா வழிக்கு வந்திடும்.. இவ்வளவு நாள் கழிச்சு வராதவன் வந்து இருக்கனே.. அவனை எப்படி எல்லாம் கவனிச்சுக்கலாம்னு இல்லாம இப்போ தான் யாரோ மாதிரி நடத்துறாங்க.. அந்த திமிர் பிடிச்சவ கையில சிக்கட்டும் அதுக்கு பிறகு இருக்கு அவளுக்கு” சீறிக் கொண்டான்.
குளித்து முடித்து கீழே வர, டைனிங் டேபிளில் எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள் தயாழினி.
தலையை துவட்டியபடியே வந்தவன், இன்னும் அசோகன் வரவில்லை என்பதை பார்த்தவன்,
“ஏய்” என்றான். இவள் நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னடி உன் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்க?” என்று அடிக்குரலில் அவளிடம் பேச வரும் முன்பே பொன்மாரி அவ்விடத்துக்கு வந்து விட, மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை அவனால்.
அதன் பிறகு ஒவ்வொருவராய் வர, எல்லோருக்கும் பரிமாறினார்கள் அக்கா தங்கை மூவரும்.
“மலர் நீயும் சாப்பிட வா.. எவ்வளவு நாள் கழிச்சு உன் மகன் வந்து இருக்கான். அவனோட சேர்ந்து சாப்பிடலாம் இல்லையா?” பொன்மாரி அழைக்க,
“இருக்கட்டும் அண்ணி.. இப்போ பசிக்கல.. முதல்ல வந்தவங்க சாப்பிடட்டும் வயிறார” என்று மகள்களுடன் அவரும் பரிமாற தன் தாயை கூர்ந்துப் பார்த்தான் அசோகன்.
அவரிடம் தான் வந்ததற்கான எந்த பரபரப்பும் இல்லாததை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்தது. ஆனாலும் அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார். அதில் தயாகரன் சற்றே தன் கோவத்தை தனித்தான். இல்லை என்றால் மனைவியிடம் இன்னும் ஆடி இருப்பான்.