திருமண நிகழ்வுகள் மற்றும் அதை ஒட்டிய சடங்குகள் எல்லாம் அருமையாக நடைபெற்று முடிய மெல்ல மெல்ல இரவு கவிழ்ந்தது... இரவு சடங்குக்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் மிருதனின் அறையில் செய்துக் கொண்டு இருந்தார்கள் வயதில் பெரியவர்கள்.
அப்பா அம்மாவை அதிகம் பிரிந்தது இல்லை மிருதி. அதனால் அவளின் நெஞ்சில் தன் பெற்றவர்களை எண்ணி கலங்கிக் கொண்டு இருந்தாள். அவளின் அழுகையை பார்த்த சம்பூர்ணவதிக்கே பாவமாய் போனது. அதனால் இரவு வேளை என்று கூட பாராமல் சுதாவுக்கு அழைத்து விட்டார்.
வீட்டில் உறவினர்களின் இருப்பு இருந்தாலும் சுதாவுக்கும் பரவாசுவுக்கும் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. ஒரே மகள்.. இந்த வீடு நிறைய ஓடியாடி இவர்களோடு வம்பிழுத்து மூவரும் ஒரே அணியாய் பல முறை அவர்களுக்குள் கலகலத்துக் கொண்டு இருந்த நாட்களை எல்லாம் எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அவளின் சின்ன வயது புகைப்பட தொகுப்புகளை இருவரும் வருடி விட்டுக் கொண்டு இருந்தார்கள். இருவரின் விழிகளும் கண்ணீர் படலம். அவள் விரும்பிய மணமகனே கிடைத்து விட அவளை விட அதிகம் மகிழ்ந்தது என்னவோ இவர்கள் தான்.
எல்லாம் சரியாக தான் போய் கொண்டு இருந்தது...! வந்தவர்களை வரவேற்று, புன்னகை முகமாய் உபசரித்து, பெரிய பெரிய ஆட்களை கண்டு வியந்து, கேட்பவர்களுக்கு முறையாக பதில் சொல்லி, தன் மகளுக்கு கிடைத்த வாழ்க்கையை எண்ணி பெருமை பட்டுக் கொண்டு என மண்டபத்தில் வளைய வந்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களை மேடைக்கு அழைத்து பெண்ணை தாரைவார்த்து கொடுக்க சொல்லும் பொழுது இருவருமே ஒருசேர கலங்கி விட்டார்கள்.
வெடித்துக் கொண்டு விம்மல் தெரித்தது...! அதை யாரிடமும் குறிப்பாக மிருதி அறிந்திவிடாமல் அடக்கிக் கொண்டவர்கள் மிருதியை மிருதஞ்சயனுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டு மனம் கணக்க அவ்விடத்தை விட்டு விலகி நின்று தன் மகளின் முகத்தில் தெரிந்த மகிழ்வை கண்டு இரசித்து நின்றார்கள். அவர்களின் துக்கம் அவர்களோடு வைத்துக் கொண்டார்கள்.
நேரம் இன்னும் சற்றே கடந்து தங்கள் மகளின் கழுத்தில் தாலி ஏறிய சமயம் அதுவரை அடிக்கி வைத்திருந்த கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது அவர்களையும் மீறி...
தாலி ஏறியவுடன் மிருதனின் தோளில் சாய்ந்தவள் மன நிறைவுடன் தன் பெற்றவர்களை தேடினாள். அவளின் தேடலை உணர்ந்தவர்கள் தங்களின் கண்ணீரை சட்டென்று துடைத்துக் கொண்டு அவளுக்கு புன்னகை முகமாய் காட்சி கொடுத்தார்கள்.
எங்கே தங்களது கண்ணீரை கண்டால் பெண்ணவளும் கண்ணீர் சிந்துவாளோ என்று மறைத்துக் கொண்டார்கள். தாலி ஏறிய பின் அழக்கூடதே...!
பிறகு தொடர்ந்து சடங்குகள் நடக்க எல்லாவற்றையும் இருவரும் இணைந்தே செய்தார்கள் மணமக்கள் இருவரும். ஒருவழியாக மண்டபத்தில் நடக்கும் சடங்குகளை எல்லாம் முடித்து விட்டு பெண் வீட்டுக்கு சென்று அங்கு சடங்குகளை எல்லாம் முடித்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்லும் பொழுது தான் இனி தன் தாய் தந்தையுடன் தன் வசிப்பு இருக்காது என்று பொட்டில் அறைந்தது போல புரிந்தது மிருதிக்கு.
அப்பொழுது தான் உணர்வுகள் வந்தது போல திகைத்து திரும்பி பார்த்தாள். பெற்றவர்கள் வாசலோடு நின்று இருந்தார்கள். அவளோடு காரில் ஏறவில்லை... எல்லா பெண்களும் சந்திக்கும் இக்கட்டான சூழல்.
இதுவரை உரிமையாக வளம் வந்த வீடு இனி அவள் வந்து போகும் வீடாக ஆகிப்போனது. அவளின் வீடு என்றால் இனி அது அவளின் கணவனின் வீடு மட்டுமே...!
என் இடம் தானே இது என்று அவளின் உள்ளம் கூப்பாடு போட தாய் தந்தையரை விட்டு எப்படி என்னால் போக முடியும்...
இது நாள் வரை அவர்களுக்கு நான் மட்டும் தானே உலகம்... இந்த உலகத்தை எப்படி அவர்கள் இழப்பார்கள். இழந்து தான் வாழ்ந்தாக வேண்டுமா? கண்ணீர் உடைப்பெடுத்தது... வேகமாய் அவர்களை போய் இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் போனாள். இவங்களுக்கு என்னை தவிர வேறு எதுவும் தெரியாதே... எப்படி தனிமையில் இருப்பார்கள்.. இவர்களோட மூச்சுக் காற்றே நான் தானே...! என்று அவள் மனதில் அரற்ற... பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு பாவமாய் போனது.
அது வரை அடக்கி வைத்திருந்த இருவரின் கண்ணீரும் மிருதியின் தோளை நனைத்தது. அவர்களுக்கு இவளை தவிர வேறு சிந்தனையே இருக்கலையே இவ்வளவு நாளும். இவளையே தங்களின் அனைத்துமாக பார்த்து விட்டார்களே...
இன்று அவளை பிரிய வேண்டிய சுழலில் அவளை விட இவர்கள் தான் அதிகம் தவித்துப் போனார்கள். அதை பார்த்த மூன்று நண்பர்களுக்கும் நெஞ்சில் பாரம் ஏறியது.
ஏனெனில் மூவரின் பிணைப்பும் இவர்களுக்கு மிக நன்றாக தெரியுமே... மிருதனுக்கு அவர்களின் நிலையை கண்டு கொஞ்சம் கடினமாக இருக்க திரும்பிக் கொண்டான். ஆறுதல் சொல்லி தேற்றும் நிலையில் அவன் இல்லையே..!
அவனுக்கு சட்டென்று மகேந்திரனின் நினைவு வந்து விட அவனால் அவர்களை போய் சமாதனம் செய்ய முடியவில்லை. ஆனால் மிருதியின் உறவினர்களுக்கு எந்த சங்கடமும் இல்லையே...! அதனால் அவர்களின் மூவரையும் அதட்டி உருட்டி,
“மாப்பிள்ளை இன்னும் எவ்வளவு நேரம் இப்படி வாசலிலே நின்று இருப்பார். நேரமாகுது இல்லையா..? அவ தான் சின்ன பிள்ளை தெரியாம அழுவுரான்னா நீங்களும் சேர்ந்து அழுதா சரியா போச்சா..? கண்ணை துடைச்சிட்டு பெண்ணை அழாம வழியனுப்பி வைங்க” என்று சொல்லவும் கடமை உணர்ந்து அவளை மிருதனோடு அனுப்பி வைத்தவார்கள் அவளின் பிரிவை தாங்க முடியாமல் அவர்களின் அறைக்குள் நுழைந்துக் கொண்டார்கள்.
அவர்களின் பொறுப்பை சக்தியும் சுதிரும், இசை அமைப்பாளரும் எடுத்துக் கொண்டு வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்து, யார் யார் ஊருக்கு செல்கிறார்கள் என அறிந்து அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்து, மற்றவர்களுக்கு தங்க ஏற்பாடு செய்து என பொறுப்பான மகன்களாய் மாறிப்போனார்கள் அந்த குடும்பத்துக்கு.
அறைக்குள் நுழைந்தவர்களுக்கு மகளின் நினைவுகளே சூழ்ந்து இருக்க அவளை தவிர வேறு எதிலும் சிந்தை செல்லவே இல்லை... வீடு முழுவதும் அவளது புகைப் படம் தான். ஏன் அவர்களின் அறையில் கூட அவளின் புகைப் படம் தான்.
வம்படித்து மாட்டினார் பரவாசு...
“ஏன் ப்பா வீடு முழுக்க போதாதுன்னு உங்க பேட் ரூம்ல கூடவா? நோ இதை என் ரூமுக்கு எடுத்துட்டு போறேன்” என்றவளிடம் கொடுக்காமல் தங்களின் அறையில் மாட்டிக் கொண்டார் பரவாசு.
அந்த பெரிய புகைப்படத்தில் தங்கள் மகள் தெய்வீக புன்னகையுடன் நின்றிருந்ததை கண்டு இன்னும் கலங்கிப் போனார்கள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல கூட அவர்களால் இயலவில்லை.
சுதா புகைப்பட தொகுப்பை எடுத்துக் கொண்டு வர அதை இருவரும் பார்த்தார்கள். ஒவ்வொரு சூழலிலும் எடுத்த புகைப்படங்களை வருடிக் கொண்டே கண்களில் நீர் நெகிழ ஒருவரி தோளில் இன்னொருவர் சாய்ந்து அமர்ந்து இருந்த நேரம் தான் போன் வந்தது சம்பூர்ணவதியிடம் இருந்து.
என்னவோ ஏதோ என்று பேச அவர் சொன்ன விசயம் கேட்டு சட்டென்று தங்களை தேற்றிக் கொண்டவர்கள் மகளை தேற்ற உடனடியாக கிளம்பினார்கள் மிருதனின் வீட்டுக்கு.
வந்தவர்களை பாய்ந்து போய் கட்டிக் கொண்டாள் மிருதி.
“இப்படி அழுதா எப்படி தங்கம்... இதெல்லாம் இயற்கை தான். நீ போனா என்ன அடுத்த வருடமே உன் பிள்ளை அங்க வீட்டுக்கு வந்துடும். இதுக்கு போய் அழுதுக்கிட்டு” என்று அவளை தேற்றி இரவு சடங்குக்கு கிளம்ப பணித்தார் சுதா.
பரவாசுவும் தெளிவான முகத்தோடு கூடத்தில் இருக்க அவரை ஏக்கமாக பார்த்தாள் மிருதி. அவளின் அருகில் வந்தவர் அவளின் தலையை வருடி விட்டு,
“என் கண்ணமாவுக்கு என்ன பிரச்சனை. நாங்க தனியா இருக்கோம்னா. அதுக்கு தான் உன் நண்பர்கள் மூணு பேரும் வீட்டுக்கு வந்துட்டானுங்களே. அப்புறம் எதுக்கு டா அழற... அழாத. இன்னைக்கு தான் உனக்கு வாழ்க்கையே ஆரம்பித்து இருக்கு. இந்த நேரம் கண்டதையும் போட்டு மனதை குழப்பிக்காதடா..” என்று ஆறுதல் சொல்லி அவளுக்கு எதார்த்தத்தை புரிய வைத்தார்.
அதன் பிறகு கொஞ்சமே கொஞ்சம் சமாதனம் ஆகி இரவு சடங்குக்கு கிளம்பினாள் மிருதி. அவர்கள் கொடுத்த மெல்லிய பட்டில் கிளம்பி மிருதனின் அறையில் விடப்பட்டாள்.
உள்ளே நுழைந்தவளின் தேகத்தில் அறையின் குளிர் நிலை வேகமாய் அடிக்க அதிலே கூசிப் போனாள். ஏற்கனவே பல நாட்கள் வந்துப் போன அறை தான். ஆனாலும் இன்று ஏனோ புதிதாய் ஒரு உணர்வை கொடுத்தது..
விழிகளை நிமிர்த்தி அறையை ஆராய மிருதஞ்சயன் பட்டு வேட்டியில் வெற்று தேகத்தோடு நின்றிருந்தான். அவனது இந்த தோற்றமே அவளை வலுவிழக்க செய்ய அப்படியே நின்று விட்டாள்.
அவள் அங்கேயே நிற்கவும், “வா..” என்றான் ஒற்றை சொல்லில். வேரோடி போய் இருந்த கால்கள் நகர சிரமம் கொள்ள அடி மேல் அடியாய் நடக்க பழகாத பிள்ளையாய் அவள் நடக்க பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு பொறுமை பறந்ததோ என்னவோ... அவளுக்கு பின்னாடி இருந்த கதவை அடித்து சாற்றினான்.
அதில் அவளது தேகம் தூக்கிவாரிப் போட திகைத்து பின்னால் திரும்பிப் பார்த்தாள். மிருதஞ்சயன் கதவின் மீது சாய்ந்து நின்றான்.
அவனது தோற்றத்தில் அடிவயிற்றில் பயம் உருக்கொள்ள கையில் இருந்த பால் செம்பு லேசாய் அசைந்தது. அதை அவனிடம் நீட்ட வெட்கமாக இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்றாள்.
அவளை நெருங்கி வந்தவன் அவளின் கரத்தில் இருந்ததை வாங்கி அருகில் வைத்து விட்டு மீண்டும் படுக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.
தன்னிடம் ஏதாவது பேசுவான் என்று எதிர் பார்த்தாள். ஆனால் அவனோ எதுவும் பேசாமல் போய் அமர்ந்து விட திகைத்துப் போனாள். அவளின் விழிகளில் ஏற்பட்ட திகைப்பை உணர்ந்தாலும் மிருதன் எதுவும் பேசவில்லை.
இவ்வளவு நாள் காணமல் போய் இருந்ததை பற்றி ஏதாவது விளக்கம் சொல்லுவான் என்று எதிர் பார்த்தாள். அது கூட அவனது விருப்பம். ஆனால் திருமண நாள் ஏற்பாடு செய்யப் பட்டதில் இருந்து பேச வில்லையே... ஒரு வேலை அதற்கான விளக்கம் சொல்லுவான் என்று எதிர் பார்த்தாள். அதுவும் இல்லாமல் போக அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்துப் போனது...
முதல் முதலாக ஒரு உரிமையான பந்தம் இருவருக்கு இடையே உருவான இந்த நாளில் இப்படி பட்டும் படாமலும் இருந்ததில் கொண்டிருந்த நேசக் கயிறு லேசாக காற்றில் அசைந்தது.
பெருமூச்சு விட்டாள். இந்த விசயத்தில் ஈகோ பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவள் தானே முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.
“எப்போ வந்தீங்க...?”
“ஏன் வரமாட்டேன்னு நினைச்சியோ?” பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்டான்.
இப்படி பேசினால் அவள் எப்படி மறு வார்த்தை பேசுவாள். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் தானே ஆரம்பித்தாள்.
“நான் அப்படி நினைக்கல...”
“ஓ... அப்படி நினைக்காதவ தான் மூணு நேரம் பட்டினி கிடந்தியா?” சுல்லேன்று விழுந்தான்.
“அது...” என்று அவள் தடுமாற,
“சோ.. நான் வரமாட்டேன்னு நினைச்சுட்ட இல்லையா...?” அவனது கேள்வியில் அதிக கோவம் இருந்தது.
அவனை எப்படி சமாதனம் செய்வது என்று தெரியாமல் தடுமாறியவள் சட்டென்று அவனின் முன்பு மண்டி இட்டு அமர்ந்தாள். அவன் முறைக்க,
“இல்ல இது தான் கம்பார்ட்டா இருக்கு” என்றவள், அவனின் முகம் பார்த்து தன்னிலையை விளக்கி கூறினாள்.
“உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லங்க... ஆனா கல்யாண நாள் நெருங்க நெருங்க உற்றவங்க, உறவுக்காரங்க, ஏன் என்னை பெத்தவங்க கூட மாப்பிள்ளை வரலையா? மாப்பிள்ளை பேசலையான்னு கேட்டு கேட்டே என்னை டென்ஷன் பண்ணி விட்டாங்க... அது மட்டும் இல்லமா” என்று அவள் தடுமாற, அவனது பார்வை இன்னும் கூர்மையாக அவள் மீது படிந்தது.
“அது...” என்று தயங்கியவள் பின் பெருமூச்சு விட்டு தன்னை நிலை நிறுத்திக் கொண்டவள்,
“உங்களை காயப்படுத்தனும்னு இதை சொல்லல.. ஆனா நீங்க கோவப்பட்டதுனால இதை சொல்றேன்” என்று ஆரம்பித்தாள். அவன் காலடியில் இருந்து விலகியவள் எழுந்து குறுங்கண்ணோரம் நின்றுகொண்டாள்.
“உங்களுக்கு எப்படியோ தெரியல. ஆனா எனக்கு இந்த கல்யாணம் கனவு தான். நான் பார்த்து பார்த்து ஒவ்வொரு நிகழ்வா என் மனதுக்குள்ள கற்பனை செய்து வைத்த நிகழ்வு இது. இந்த நிகழ்ச்சியில ஒரு நொடி கூட நீங்க இல்லாமல் போனதுனால வந்த விரக்தி, ஏக்கம், ஏமாற்றம் இப்படி எதுவேணாலும் நீங்க வச்சுக் கோங்க...” என்று மூச்சை நிதானமாக இழுத்து விட்டாள். அதில் தான் கொண்ட ஏக்கங்களை எல்லாம் போக்கி விட முனைந்தாள்.
ஆனால் அது அவ்வளவு எளிதாக போய் விடாதே...!
“முகூர்த்த புடவை எடுக்கும் பொழுதும், பத்திரிக்கை அடிக்கும் பொழுதும், நகைகள் எடுக்கும் பொழுதும், தாலி உருக்கும் பொழுதும், மருதாணி போடும் பொழுதும், பூ நீராட்டும் பொழுதும் இப்படி பல நிகழ்வுகள் நீங்க இல்லாமலே தான் நகர்ந்தது...! ஆனா நான் கண்ட கனவுல நீங்க இல்லாம என் மூச்சுக் காற்று கூட வெளியே வரல... நான் கொண்ட கற்பனைக்கும் நிகழ்வுக்கும் ஏகப்பட்ட வித்யாசம்... ஒரு ஒற்றுமை கூட இல்லை.” அவன் குறுக்கே ஏதோ பேச வர,
“ப்ளீஸ் நான் பேசிடுறேன்...” என்றாள்.
“பெண்ணவளின் அதிக ஆசையே உற்றவனின் விருப்பம் அறிந்து பொருள்களை தேர்ந்தெடுப்பது தான் அதுவும் கல்யாண பொருள்கள் வாங்குவதில். இதுல ஒண்ணு கூட என் விருப்பத்தோடு நடக்கல. வாழ்க்கையில ஒரே ஒரு முறை மட்டுமே நடைபெறும் விழா இது. மறுமுறை நீங்க வச்சாலும் அந்த முதல் முறை நடக்குற மாதிரி எதுவும் அவ்வளவு சிறப்பா அமையாது மிஸ்டர் மிருதன்.” என்றாள் வலி நிறைந்த உள்ளத்தோடு.
அவனை பார்த்தாள். அவன் இடத்தை விட்டு அசையவே இல்லை. அப்படியே அமர்ந்து இருந்தான்.
“உங்களை நான் குறை சொல்லல... உங்க செட்யூல் எப்படின்னு கூட எனக்கு தெரியாது. ஆனா ஆரம்பத்துல இல்லைன்னாலும் நேற்றைக்கு இரவாவது ஒரே ஒரு முறை என்னோட பேசி இருக்கலாம் இல்லையா? பேச கூட வேணாம். கல்யாண ஏற்பாடு எப்படி போயிட்டு இருக்கு... உனக்கு பிடிச்சி இருக்கா? அப்படின்னு ஒரே ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பி இருக்கலாம். இல்லையா ஒரே ஒரு வாய்ஸ் மெசேஜ் பண்ணி இருக்கலாம் இல்லையா? அந்த இரண்டு நிமிடத்துக்கு கூடாவா நான் தகுதி இல்லாம போயிட்டனோன்னு எனக்குள்ள ஒரு வேதனை.”
“அந்த வேதனைய மனது நிறைய வச்சுக்கிட்டு எங்க இருந்து என்னால சாப்பிட முடியும்... எப்போடா உங்க முகத்தை பார்ப்பேன்னு நான் தவம் இருந்துக்கிட்டு இருந்தேன். ஆனா நீங்க ரொம்ப அசால்ட்டா உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லிட்டீங்க...” என்று வேதனைப் பட்டாள்.
அப்பொழுதும் அவன் எந்த சமாதானமும் சொல்ல விளையவில்லை. அப்படியே கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான் மிருதன்.
“நான் உண்ணா விரதம் இருந்து அப்படி என்ன சாதிச்சுட்டேன்... மனது நிறைய இருந்த காதலனை என்னால நான் விருப்பட்ட நேரம் பார்க்க முடிஞ்சதா? இல்லை அவர் ஆசை பட்ட கல்யாண புடவையை தான் என்னால கட்ட முடிஞ்சதா? இல்ல அவர் விருப்பபடி தான் ஒரு கல்யாண பத்திரிக்கையை அடிக்க முடிஞ்சதா? இதுல எதையுமே நான் உண்ணாவிரதம் இருந்து சாதிக்கலையே...?”
“என் மருதாணியில அவர் பெயரை கண்டு பிடிக்க சொல்லி இனிமையாக நகரும் அந்த நொடிகளை சாதிச்சுக் கிட்டனா...? இல்லையே... எனக்கு பூ நீராட்டும் நிகழ்வை பார்த்து இரசிக்க தான் அவர் இருந்தாரா? இப்படி எதுவுமே நான் சாதிச்சுக்கலையே...” என்று விரக்தியுடன் சொன்னவள்,
“பால் குடிக்க சொன்னாங்க...” என்று பாலை ஆற்றி அவனிடம் கப்பை நீட்டினாள். அவளை பார்த்துக் கொண்டே வாங்கியவன் எழுந்து அவள் நின்ற இடத்துக்கு சென்று நின்றுக் கொண்டான். அவன் அவ்விடத்துக்கு போகவும் இவள் மேசையின் அருகே நின்றுக் கொண்டாள்.
அவள் இருக்கும் நிலையில் இந்த பால் ஒன்று தான் கேடா என்று அவளின் பங்கை அப்படியே வைத்து விட்டாள்.
மனமெங்கும் ஏக்கங்களை மட்டுமே சுமந்து இருந்தவளுக்கு இந்த பொழுதின் இனிமை கொஞ்சம் கூட இருக்கவில்லை.