ஒவ்வொரு சடங்கிலும் தன்னவனை எதிர்பார்த்தாள் மிருதி. ஆனால் மிருதஞ்சயன் வரவே இல்லை...! திருமண நாளுக்கு முன் நான்கு நாட்கள் முழுவதும் ஒரே அமளி துமளி தான்... மிருதி குடும்பத்தை தங்களின் இல்லத்திலே தங்க வைத்துக்கொண்டார்கள்.
“இனி தினமும் ஒரே சடங்கும் கொண்டாட்டமும்மாக தான் இருக்கும்... அதனால நீங்க வந்துட்டு வந்துட்டு போறதுக்கு சிரமமா இருக்கும் சுதா... நீங்க இங்கயே இருந்துக்கோங்க. உங்களுக்கும் அலைச்சல் இல்லாம இருக்கும் அண்ணா...” என்று சுதா மற்றும் பரவாசுவிடம் சொன்னார் சம்பூர்ணவதி.
அவர் சொல்வதும் ஒரு விதத்தில் சரி தான் என்றாலும் தங்களின் பெண்ணுக்கு உறவினர்கள் அனைத்தும் வந்து சாப்பாடு ஆக்கிப் போட்டு தட்டு வைத்து சுத்தி போட்டு என வேலை இருக்கிறதே என்று சுதா தயங்க,
“அப்போ கிளம்பி காலையில உங்க வீட்டுக்கு போயிட்டு மாலை நடக்குற விழாவுக்கு வந்துட்டு இப்படியே இங்கயே தங்கிக்கோங்க...” அதற்கும் அவர் யோசனை சொல்ல சரி என்று தலையை ஆட்டினார்கள்.
ஹல்டி, மெகந்தி, மற்றும் சங்கீத் பங்க்ஷன் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி களை கட்டியது..! காலையில் எழுந்து மூவரும் அவ்ன்ர்களின் வீட்டுக்கு சென்று அங்கு உறவினர்கள் செய்த செய்முறைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு அப்படியே மத்தியம் அங்கு இருது விட்டு மத்தியம் மூன்று மணி போல மிருதனின் வீட்டுக்கு வந்தால் இரவு பதினோரு மணி வரை தனிமை என்பதே கிடைக்கமால் போனது.
நிகழச்சிகள் எல்லாம் முடிந்தவுடன் மேலே வந்தால் தனிமை அவளின் முகத்தில் அறைவது போல இருக்கும். மிருதஞ்சயனின் வருகையை எதிர் பார்த்து எதிர் பார்த்து மிகவும் சோர்ந்துப் போனாள். ஆனால் அவன் மட்டும் வரவே இல்லை.
அவனை எப்படி தொர்பு கொள்வது என்றும் தெரியவில்லை. போன் நம்பர் மாற்றி இருப்பான் போல... இடையில் ஒரு நாள் அவனுக்கு போன் செய்து பார்த்தாள். போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. அதே சம்பூர்ணவதி போட்டால் மட்டும் போன் போனது.
அதை உணர்ந்தவளுக்கு தன்னை தவிர்க்கிறானா? என்கிற கேள்வி அவளுள் எழுந்தது. ஆனால் அவன் அப்படி இல்லையே.. போன முறை வந்த பொழுது கூட அவன் வருகையை யாருக்கும் தெரிவிக்க வில்லையே... என்று யோசித்தாள்.
சரி எதுவாக என்றாலும் அவரே ஒரு அடி முன்னால் எடுத்து வைக்கட்டும். பிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம்.. என்று முடிவெடுத்த பிறகு நடக்கும் நிகழ்ச்சிகளில் ஈடுபாட்டுடன் கலந்துக் கொண்டாள்.
அவ்வப்பொழுது மகேந்திரன் மட்டும் அவளை முறைத்துப் முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். ஆரம்பத்தில் அதில் டிஸ்டப் ஆனவள் போக போக அவரின் பார்வையை கண்டுக் கொள்ளாமல் இருக்க ஆரம்பித்தாள். அதில் வெற்றியும் கண்டாள்.
அவர் எதிலும் கலந்துக் கொள்ளவே இல்லை. வெறும் பார்வையாளாராக மட்டுமே இருந்தார். விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மிருதிக்கு கொஞ்சமும் தூக்கம் என்பதே இல்லாமல் போனது. மனம் முழுக்க மிருதன் மட்டும் நிறைந்து இருந்தான்.
வருவானா மாட்டானா என்கிற கேள்வியிலே அவளின் ஒட்டு மொத்த தூக்கமும் பறிப்போனது. சுதாவும் பரவாசுவும் எதுவும் கேட்க வில்லை என்றாலும் இருவரின் கண்களிலும் ஒருவித சோகம் இழையோடிக் கொண்டு தான் இருக்கிறது.
மாப்பிள்ளையை கண்ணார கண்டு விட்டால் கொஞ்சம் நிம்மதி பிறக்கும். அதுவரை இந்த அலைப்புருதலும் சோகமும் இருந்துக் கொண்டே தான் இருக்கும்... என்று எண்ணியவளுக்கு சுத்தமாக முடியவில்லை. ஏனோ இந்த இடமே மூச்சை அடைப்பது போல ஒரு உணர்வை கொடுக்க வேகமாய் வெளியே வந்தாள்.
மிருதனின் வீடு தான். காலையில் பத்து மணிக்கு தான் முகூர்த்தம். அதனால் இங்கிருந்து கிளம்பிக்கலாம் என்று மிருதனின் வீட்டிலே தங்க வைக்கப்பட்டு இருந்தாள்.
அவளோடு மிருளாணியும் துணைக்கு இருந்தாள். மற்ற உறவுகள் எல்லாம் மண்டபத்துக்கும், ஹோட்டல்ஸ் ரூமிலும் தங்கிக் கொண்டார்கள். செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மிக நேர்த்தியாக செய்ய வைத்துக் கொண்டி இருந்தார் சம்பூர்ணவதி.
அதனால் பரவசுவுக்கும் சுதாவுக்கும் எந்த வேலையும் இல்லை. மகளுக்கு பார்த்து பார்த்து நகைகள், உடைகள் என வாங்கி குவித்து வைத்தார்கள்.
திங்க்ஸ் எதுவும் வேண்டாம் என்று விட சுதா அதற்கும் சேர்த்து நகைகளாகவே தன் மகளுக்கு செய்து போட்டார். அனைவரும் தூங்கிக் கொண்டு இருக்க, கார் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
ஒரு படபடப்பு இருந்தாலும் இந்த தனிமையும், வெளிக்காற்றும் மிக அவசியமாய் பட எதையும் யோசிக்காமல் காரில் ஏறி வெளியே கிளம்பி விட்டாள்.
அவளின் மனம் மொத்தமும் அலைப்பாய்ந்துக் கொண்டே இருந்தது.. உரியவனிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அவனின் வருகையும் இல்லாமல் இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் திக்கற்று இருக்கும் சுழலில் மாட்டிக் கொண்டது போல இருந்தது அவளுக்கு.
மிருதன் எதையும் மனம் விட்டு பேசவும் இல்லை... பேசி இருக்கவும் இல்லை. ஏன் ஒரு மெசேஜ் கூட இல்லை. மனம் விட்டு பேசவில்லை என்றால் கூட திருமண சடங்குக்காகவது வந்து இருந்து இருக்கலாம். அப்பொழுதும் வரவில்லை.
இதோ விடிந்தால் கல்யாணம்... குறைந்தபட்சம் இந்த இரவு பொழுதாவது வந்து சேர்ந்து இருந்தால் கூட இந்த அலைப்புருதல் எதுவும் இருந்து இருக்காது.. மிருதன் இந்த நள்ளிரவு பொழுது கூட வந்து சேர்ந்து இருக்கவில்லை. அவள் எதிர்பார்த்து வைத்திருந்த கல்யாண கனவுகள் எல்லாம் இதோ மிருதனின் வருகை இல்லமால் நீர் குமிழியாய் உடைந்து சிதறிப் போனது...!
கண்களில் கண்ணீர் நெகிழ்ந்துப் போனது... இரும்பாய் கணக்கும் இதயத்தை ஆறுதல் படுத்த தெரியாமல் கை போகிற போக்கில் காரை ஒட்டிக் கொண்டு சென்றாள்.
நள்ளிரவு வேளை பீச்சுக்கு கொண்டு நிறுத்தினாள் காரை. கதவை திறக்கவில்லை... அப்படியே காரை நிறுத்திவிட்டு இருக்கையின் பின் புறம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ போன் வந்து அவளை கலைக்க, வேகமாய் எடுத்துப் பார்த்தாள். அவளின் அம்மா தான் அழைத்து இருந்தார்.
“ம்மா...” என்றாள் சோர்வுற்று...
“எங்கடா இருக்க... இங்க எல்லோரும் பொண்ணு எங்கன்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க... சீக்கிரம் வாடா” என்று அவர் பதட்டத்தோடு பேசினார்.
வெளியே எட்டிப் பார்த்தாள். விடியும் வேளையே வந்து இருந்தது.. “இதோ வரேன் ம்மா...” என்றவள் காரை கிளப்பிக் கொண்டு வர, அவளின் பின்பு ஒரு கார் அவளை தொடர்ந்தது.
முதலில் அதை கவனிக்காதவள் நீண்ட நேரம் கழித்தே அதை உணர்ந்தாள். சட்டென்று உள்ளுக்குள் ஒரு பயம் வர காரை நன்கு ஊன்றி கவனித்தாள் யார் அது என்று.
அவளின் தோழமைக் கூட்டம் தான் அந்த காரில் அவளை பின் தொடர்ந்துக் கொண்டு இருந்தது. ஆசுவாசமாக மூச்சு விட்டவள் சக்திக்கு அழைத்தாள்.
“இப்போ தான் எங்களை கவனிச்சியா நீ..” என்று சுதிர் கத்தினான்.
“அப்போ எப்போ இருந்து பாலோ பண்ணிக்கிட்டு இருக்கீங்க...?” அதிர்ந்துப் போனாள்.
“ம்ம் ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட...” என்றான் சக்தி கடுப்பாக.
“ப்ச்...” என்று சலித்தவள்,
“ண்ணா...” என்று இசை அமைப்பாளரை அழைத்தாள்.
“நீ கார் எடுக்கும் பொழுதே நாங்களும் கார் எடுத்துட்டோம்” என்றான் அலட்டாமல்.
அதை கேட்டு தன்னையே நொந்துக் கொண்டாள்.
“உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே மிரு...” சக்தி ஆறுதலாக கேட்டான். அவனது கேள்வியில் முணுக்கென்று கண்ணீர் வர,
“அதெல்லாம் சம்மதம் தான்...” என்று சொன்னவள் அதற்கு மேல் பேச முடியாமல் போனை அனைத்து விட்டாள். வீட்டுக்கு வந்தவுடன் எல்லோரும் அவளை சூழ்ந்துக் கொள்ள அதன் பிறகு அவளால் எதையும் யோசிக்கவே முடியவில்லை.
மிருதன் வந்தானா இல்லையா என்று தெரியவில்லையே...! என்று அவள் தடுமாறிக் கொண்டு இருக்க, சம்பூர்ணவதியின் முகத்தில் இருக்கும் பதட்டமே அவன் இன்னும் வரவில்லை என்று உணர்ந்துக் கொண்டவள் பெரிய மூச்சை எடுத்து விட்டாள்.
எப்படியும் அவன் வந்து விடுவான் என்கிற நம்பிக்கை இருக்கு தான். ஆனால் திருமணத்தை ஒட்டி நடக்கும் நிகழ்வுகள், சடங்குகள் எல்லாம் அவனில்லாமல் முற்று பெற்றது போலவே இல்லை.
என்னவோ யாருக்கோ திருமணம் என்று தான் அவளின் போக்கு இருந்தது...! குளித்து அலங்காரமும் முடிந்து இருந்தது. இனி மண்டபத்துக்கு தான் போக வேண்டும்.மற்ற எல்லாமே முடிந்து இருந்தது. பெண் அழைப்பும் மிகச் சிறப்பாக நடை பெற்று மண்டபத்துக்கு முன் வந்து தட்டு சுத்தி அங்கு நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் ஆரம்பம் ஆனது.
சுதிரும், சக்தியும் ஆளுக்கு ஒரு புறம் பரபரப்பாக போன் போட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அந்த பக்கம் யாரும் எடுக்க வில்லை போல... இருவரும் பார்வையை இல்லை என்று உதடு பிதுக்கி காண்பித்துக் கொள்ள அதை கவனித்தவளின் நெஞ்சில் அது மிருதன் தான் என்று பதிய கண்கள் இன்னும் கலங்கிப் போனது..
தாய் மாமன் மாலை போட்டு மனையில் அமரவேண்டியது மட்டும் தான் பாக்கி... காலை முகூர்த்தம் என்பதால் கொஞ்சம் பரபரப்பு குறைவாக இருந்தது. செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் நிதானமாக செய்தார்கள்.
மனையில் ஏறவும் சொல்லி விட மிருதனை காணமல் எப்படி அவளால் மணமேடை ஏறமுடியும். கால்கள் எல்லாம் தள்ளாடியது. மிருளாணி அவளை பிடித்து இருந்ததால் சமாளித்துக் கொண்டாள்.
கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு எதிரில் இருப்பது எதுவும் தெரியாமல் மறைந்துப் போனது...! கடைசி நேரம் வரை தன்னை அலைக்கழித்துக் கொண்டு இருப்பவனின் மீது அவ்வளவு கோவம் வந்தது.
ஆனால் அந்த கோவத்தை அவனிடம் காண்பிக்கவாவது அவன் வேண்டுமே.. அவன் வரமால் இப்படி தன்னை இழுத்தடிக்க வைத்துக் கொண்டு இருப்பதில் மனம் மிகவும் சோர்வுற்றது. காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை.
சுதாவும் சம்பூர்ணவதியும், பெருவுடையாளும் மிருளாணியும் ஏன் நண்பர்கள் கூட்டமும் வந்து அவளை சாப்பிட வைக்க தலையால் தண்ணீர் குடித்தாலும் அவளை அசைக்க முடியவில்லை. நேற்றிரவு ஒன்றும் சாப்பிடவில்லை.
வெறும் வயிறு பசியை உணர்ந்தது. ஆனால் மனதில் இருந்த ரணம் முன்னாடி அந்த பசி எங்கோ ஓடிப் போய் இருந்தது. எதிரில் இருப்பவை யாவும் மறைந்துப் போனது அவளின் கண்ணீரில். அடுத்த அடி எடுத்து வைக்க கால்கள் பின்னியது.
தலை கூட சுற்றுவது போல ஒரு உணர்வு. பற்றுகோளுக்கு எதையாவது பிடித்து தன்னை நிலை நிறுத்த காற்றில் அவளது முன் கை அலைந்தது.
மிருளாணியும், சிமியும் அவளது எல்பவ்வை பிடித்து இருந்தாலும் அவளின் முன் கை காற்றில் எதையோ தேடி கிடைக்காமல் போக அப்படியே சாயத் தொடங்கினாள்.
அவளின் பாரம் சட்டென்று தங்களின் கை மீது படரவும் இருவரும் ஒருவரை ஒருவர் கலவரமாக பார்த்துக் கொண்டார்கள் நொடியில். அதுவரை மென்மையாக பிடித்து இருந்தவர்கள் அவளின் பாரம் உணர்ந்த உடன் சட்டென்று அவளை அழுத்திப் பிடித்துக் கொண்டு, அவளின் காதோரம்,
“மிரு...” என்று அவளை உலுக்கினாள் யாருக்கும் தெரியாமல். இந்த பக்கம்,
“மேம்.. என்ன ஆச்சு...?” கலவர முகத்துடன் அவளை சுய நினைவுக்கு கொண்டு வர முயன்றாள் சிமி. இருவரின் சொற்களும் எங்கோ கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல கேட்டது மிருதிக்கு. ஆனால் அவளால் அதற்கு எந்த ரியாக்ட்டும் செய்ய முடியவில்லை.
அவளையும் மீறி அவளது சுய நினைவு கொஞ்சம் கொஞ்சமாய் கைநழுவி போவது போல இருந்தது...!