முதல் படம் பயங்கர சக்சஸ்.. அதுக்கு முழுக்க முழுக்க மிருதனின் ஸ்பூன் பீடிங் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் அந்த வெற்றி மிருதிக்கு தன்னுடைய தனிப்பட்ட வெற்றி என்று அவளால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் ஈச் அண்ட் எவ்ரி எல்லாமே அதில் மிருதன் மட்டும் தான்.
அதனால் அந்த வெற்றி மிருதனுக்கே கொடுத்து தள்ளி நின்றாள். பேட்டி கண்ட அத்தனை பேரிடமும் மிருதனை முன் நிறுத்தியே பேசினாள். அதில் மகேந்திரனுக்கு ஒரு வித கடுப்பு அவள் மீது.
அதை அவர் நேரடியாக கேட்டு விடவும் செய்தார்.
“இல்லங்க சார்.. இயக்கம் மட்டும் தான் என்னோடதே தவிர அந்த கதையோட முழு உழைப்பும் மிருதன் சாரோடது. அதனால அவர் பெயர் வெளியே தெரியிறது தான் சரி. இல்லன்னா இது அறிவு திருட்டு மாதிரி போயிடும். எனக்கு திருடியா இருக்க விருப்பம் இல்லை. அது மாதிரி என்னை எங்க வீட்டுல வளர்க்கவும் இல்லை. சோ யாருக்கு இந்த வெற்றி போய் சேரனுமோ அவங்களுக்கு போய் சேர நான் ஒரு தூண்டுகோல் அவ்வளவு தான்..” என்று இனிமையாக முடித்துக் கொண்டாள்.
அவளின் பேச்சைக் கேட்டு மகேந்திரன் தான் கடுப்பானார். அது அவளுக்கு தெரிய கூட இல்லை. அவர் தெரிய விடவும் இல்லை...
முதல் படம் ஓடிக் கொண்டு இருக்கும் பொழுதே அடுத்த கதையை பத்து நாளில் எடுத்துக்கிட்டு வா... என்று அவளை அடுத்த ஓட்டத்துக்கு துரிதப்படுத்தினார்.
ஏற்கனவே சில கதைகள் கைவசம் இருக்க, அதை தூசு தட்டி மிருதன் முன்பு கொடுத்த தொகுப்பில் இருந்ததை உதாரணமாக எடுத்துக் கொண்டு, படத்துக்கு எங்கெங்கு லொகேஷன் வேண்டும் என்பதை தேர்வு செய்தாள். அதன் பிறகு எத்தனை நாள் செட்யூல். அங்கு போய் என்ன காட்சி எடுக்க வேண்டும், எத்தனை ஆர்டிஸ்ட் வேண்டும் என எல்லாவற்றையும் ஓரலாய் ஒரு பட்டியல் போட்டுக் கொண்டாள்.
அதன் படி எங்கெங்கு பெர்மிஷன் வாங்க வேண்டும் என்பதையும் குறித்துக் கொண்டாள். எல்லோருடைய சம்பளத்தையும் கணித்து ஓவரால் படத்துக்கு எஸ்டிமெட்டை தயார் செய்தாள்.
விலாவரியாக எல்லாவற்றையும் தொகுத்து ப்ரொட்யூசர் மகேந்திரனிடம் கொடுத்தாள் மிருதி. அதை வாங்கிப் பார்த்தவர் நெற்றிக் கண்ணை திறந்தார்.
“உன் மனசுல என்ன நினைச்சுக் கிட்டு இந்த அளவுக்கு பட்ஜெட் போட்டு இருக்க... நீ ஒரே ஒரு படத்தை மட்டும் தான் எடுத்து இருக்க அதை நினைவில் வச்சுக்க... உன் இஷ்டத்துக்கு போட்ட பட்ஜெட்ல எல்லாம் படம் எடுக்க முடியாது... கதையை முதல்ல வாசித்து பார்த்தியா..? அந்த கதையில அப்படி என்ன இருக்குன்னு பத்துக்கோடி பட்ஜெட் கேக்குற... முதல்ல பத்து லட்சத்துல படம் எப்படி எடுக்குறதுன்னு கத்துக்க...” என்று அவர் பணத்தை முன்னிருத்தி அவளை வேதனைப் படுத்தினார்.
பத்து கோடி என்பது எல்லாம் இப்பொழுது சர்வ சாதரணமாக போய் விட்டது... குறைந்தது எல்லோரும் இருபது முப்பது என பட்ஜெட் போட்டு படம் எடுக்கிறார்கள். ஏன் இவர்கள் பேனரிலே ஐநூறு கோடி, ஆயிரம் கோடிக்கு கூட படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இவள் படத்துக்கு வெறும் பத்து கோடி பட்ஜெட் போட்டதுக்கு அந்த குதி குதித்தார்.
“பணத்தோட அருமை தெரியுமா? தெரிஞ்சா இந்த மாதிரி வீண் விரைய செலவுக்கு இவ்வளவு பட்ஜெட் போட்டு இருக்க மாட்ட... முதல்ல நான் சொல்ற பட்ஜெட்டுக்குள்ள ஒரு படத்தை போய் எடுதுட்டு வா. பிறகு பத்து கோடிக்கு ஆசை படு” என்று மிகவும் அசிங்கமாக பேசி விட, போங்கடா நீங்களும் உங்க படமும் என்று தூக்கி எரிய மனம் ஆவேசம் கொண்டது.
ஆனால் மிருதன் கைக்காட்டி விட்டு போய் இருக்க இந்த இடத்தை விட்டு அவளால் நகர முடியவில்லை. இல்லை என்றால் மகேந்திரன் பேசிய பேச்சுக்கு எப்பவோ எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு போய் இருப்பாள்.
அன்றைக்கு எதுவும் பேசாமல் வந்துவிட்டாள். கதையில் எதுவும் ஓட்டை இருக்கா என்று நன்றாக செக் பண்ணிப் பார்த்தாள். சக்தியிடம் கொடுத்து ஒரு முறை ஆழ்ந்து படிக்க சொன்னாள். அதே போல தன் அசிஸ்டென்ட் பரதனிடமும் கொடுத்து தரவாக செக் செய்துக் கொண்டாள்.
“மேம்... கதையில எந்த கோளாறும் இல்லை... பக்கா காமர்சியலா இருக்கு. இந்த ஸ்க்ரிப்ட் படி அப்படியே எடுத்தா கண்டிப்பா நீங்க போட்ட பத்து கோடி பட்ஜெட்டுக்கு நூறு நூத்தி இருபது கோடி கண்டிப்பா வசூல் ஆகும்... ஆக்சுவலி இது பேசிக் தான். இந்த ஸ்க்ரிப்ட் மத்த மொழிக்கு குடுத்தோம்னா கண்டிப்பா அதுல ஒரு அமவுண்ட் பல்கா வரும். சோ எப்படி பார்த்தாலும் நட்டம்னு பெருசா வராது...” என்று பரதன் சொன்னான். அதையே தான் சக்தியும் சொன்னான்.
அவளுக்கும் அதே தான் எண்ணம் உள்ளுக்குள் தோன்றியது. ஏனெனில் பக்கா கமர்சியல் என்னும் போது யாரையும் டிசபாயின்ட் பண்ணாது.
அதோடு இப்பொழுது தியேட்டரில் பாக்ஸ் ஆபிஸ் சக்சஸ்க்கு பிறகு ஓடிடி யில் ரிலிஸ் செய்யும் பொழுது ஆன்லைன் பிளாட்பார்மில் இன்னும் வசூலை வாரி குவிக்கும்...
எனவே பத்து கோடியில் பட்ஜெட் என்பது எப்படியும் நட்டம் வராமல் நூறு கோடிக்கு மேலாக வசூலை வாரிக் குவிக்கும்... என்று நன்றாக புரிய பெருமூச்சை எடுத்து விட்டவள், அடுத்த நாள் மகேந்திரனை தனிப்பட்ட முறையில் சந்தித்தாள்.
காலையிலே வந்தவளை கேள்வியாக புருவம் சுருக்கி பார்த்தார்.
வந்தவள்,
“சார் நீங்க சொன்ன பத்து இலட்சத்துக்கு குறும்படம் வேணா எடுக்கலாமே தவிர மூணு மணி நேரம் ஓடுற சினிமாவை எடுக்க முடியாது. குறிப்பா இப்போ நான் கைவசம் வச்சி இருக்கிற கதையை படமாக்க முடியாது...” என்றாள் நிமிர்வாக.
ஏனெனில் அவளின் கதையில் அனைத்து சிறப்பு அம்சமும் இருந்தது. தன் கதையில் எந்த தொய்வும் இல்லை. அது கொடுத்த நிமிர்வும் இன்னது செய்தால் இன்னது விளையும் என்ற கணக்கும் அவளை நிமிர்வாக வைத்தது.
அதற்கு தான் ஆழம் பார்த்து காலை விடணும் என்று சொல்லுவார்கள். யாரோ ஒருவர் பணம் போடுகிறார்கள் நாம் நம் வேலையை மட்டும் பார்ப்போம் என்று நாம் எதையும் கவன குறைவாக இருந்திடக் கூடாது.
அப்படி கவனிக்காமல் விட்டால் முழம் போவதும் தெரியாது.. ஜான் ஏறினாலும் தெரியாது. ஒரு தொலைநோக்கு பார்வை கட்டாயம் வேண்டும். அதை மிருதன் மிருதிக்கு நன்றாகவே காட்டி இருக்க,
“நான் இவ்வளவு செலவு இதுல செய்யிறேன்னா கண்டிப்பா அதை விட பத்து மடங்கு பணம் வரும்... லாபம் இல்லாம நட்டத்துக்கு யாரும் படம் எடுக்க மாட்டாங்க. அதுபோல கதையும் இது இல்லை.. என் கதையையும் என்னையும் நம்பி இதுல பணம் போட ஒத்துக்கிட்டா நான் படம் எடுக்குறேன். இல்லன்னா நோ ப்ராப்ளம் நான் வேற ப்ரொட்யூசரை பார்த்துக்குறேன்” என்று நிமிர்வாக பேசினாள்.
அவளின் நிமிரவில் ஒரு கணம் மகேந்திரன் ஆடி தான் போனார். எப்படியும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்க முயலுவாள். அதனால் பட்ஜெட்டை மாற்றி போட்டு அட்லீஸ்ட் ரொம்ப இல்லை என்றாலும் இரண்டு கோடியை குறைப்பாள். பிறகு இறுதி கட்ட படபிடிப்பில் இன்னும் செலவு இருக்கிறது என்று தன்னிடம் தானே வந்து ஆக வேண்டும். அப்பொழுது இன்னும் அவளை பேசி பேசி ஓட ஓட விரட்டலாம் என்று அவர் ஒரு கணக்கு போட்டு இருந்தார்.
ஆனால் அவரின் எண்ண போக்கை முளையிலே கில்லி போட்டுவிட்டாள் மிருதி. இது தான் என்னோட பட்ஜெட். இதுக்கு ஒத்து வந்தா நாம படம் பண்ணலாம். இல்லை என்றால் ஒதுங்கிக்கலாம் என்று தெளிவாக அவள் பேச எங்கிருந்து அவளின் தலையில் மிளகாயை அரைக்க... அவர் தான் இறங்கி வர வேண்டி இருந்தது.
அந்த நேரம் பெருவுடையாரும் வந்து விட அவர் எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்து அப்ருவல் கொடுத்து விட வேலை சுருசுருப்பாக ஆரம்பம் ஆனது. அதில் இன்னும் காண்டு ஆனது மகேந்திரனுக்கு.
‘அதெப்படி மிருதனுடன் சேருறவங்க எல்லாம் அவனை மாதிரியே இருந்து வைக்குதுங்க...’ கடுப்படித்துக் கொண்டவர் அதன் பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவையில்லாமல் அமர்ந்துக் கொண்டு அது இது என்று ஏதாவது சொல்லிக் கொண்டு இருந்தார்.
அவர் இருக்கவும் பெருவுடையாரும் வந்து விடுவார்... அதன் பிறகு எங்கே தன் வேலையை காட்டுவது. பெட்டி பாம்பாக அடங்கி விடுவார் மகேந்திரன். அதை எல்லாம் நினைத்துப் பார்த்தவளுக்கு கொஞ்சம் அச்சமாய் இருந்தது.
மகேந்திரனுக்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. ஆனால் அவரின் விருப்பத்துக்கு இங்கு யார் அதிக முக்கியத்துவம் கொடுக்க யாருமில்லை...
கல்யாண வேலை களை கட்ட ஆரம்பித்தது...! தென்னிந்தியா சினிமாவில் அசைக்க முடியாது ஒரு இடத்தில் இருப்பவர்கள் தான் இந்த பெருவுடையரும், அவரது குடும்பத்தாரும். எனவே கூட்டம் எக்கச்சக்கமாய் குவியும் என்று அறிந்தவர்கள் முறையாக ஒவ்வொன்றையும் திட்டமிட ஆரம்பித்தார்கள்.
ரிஷப்சனுக்கு யார் யார் வரவேண்டும் என்றும், கல்யாணத்துக்கு யார் யார் வரவேண்டும் என்றும், அதே போல பெருவுடையாரின் பிறந்த மண்ணில் உள்ள மக்களுக்காக தனி வரவேற்ப்பு என எல்லாவற்றையும் தனி தனியாக திட்டம் தீட்டிக் கொண்டார்கள்.
யாரை வைத்து இதையெல்லாம் டேரைக்ட் பண்ணுவது என்று அதற்கு ஒரு தனி டிஸ்கஷன் போனது... ஆனால் இது அத்தனைக்கும் சம்மந்தப்பட்ட இருவரும் இன்னும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை.
மிருதன் கல்யாணத்துக்கு ஒத்துக்கோ என்று அன்றைக்கு பேசியது தான். அதன் பிறகு ஒரு வார்த்தை மிருதியிடம் பேசவில்லை. மிருதியும் பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாள். நிற்க கூட நேரமில்லாமல் அவள் ஓடிக்கொண்டு இருந்தாள்.
எடிட்டிங் பக்காவாக இருந்தது... இன்னும் சில கரெக்சன் மட்டும் இருந்தது... ஆடியோ விடியோவோடு அழகாக பொருந்தி வந்து இருக்க ஆடியோ, பீட்ஸ் என எல்லாவற்றையும் செக் செய்தாள்.
வார்த்தைகள் புரிகிறதா என்று பார்த்துக் கொண்டாள். இல்லை என்றால் சில இடங்களில் வசனம் புரியாமல் பின்னணி இசை அதை அமிழ்த்தி விடுகிறது.. எனவே அதை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டாள்.
கூடவே சக்தியும் அவனது வேலை முடிந்து வந்து விடுவான் மாலை நேரங்களில் எல்லாம்... அவன் இருக்கவும் இன்னும் வேலை கொஞ்சம் சுலபமாக இருந்தது மிருதிக்கு...
நாளைக்கு படம் ரிலீஸ்... அதே நாளில் தான் முகூர்த்தப் புடவை எடுக்க இருக்கிறார்கள். என்னால வர முடியாதே என்று அவள் தடுமாற,
“அதையெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்... நீ இங்க பார்த்துக்க” என்று சுதா சொல்லி விட கொஞ்சம் ரிலாக்ஸ்டா உணர்ந்தாள். ஆனால் முகூர்த்த புடவையை யாரோ எப்படியோ எடுங்க என்று அவளால் விடவும் முடியவில்லை.
ஒன்று மிருதன் எடுக்க வேண்டும். அவன் தான் எங்க இருக்கிறான் என்ன செய்கிறான் என்று யார்க்கும் தெரியவில்லையே பிறகு எங்கிருந்து அவன் எடுப்பது.
சரி இவள் இங்கு தான் இருக்கிறாள். ஆனால் அவளாலும் போக முடியாவில்லை வேலையின் பாரம் வந்து அவளை அழுத்த அவ்விடத்தை விட்டு போகவும் முடிய நிலை...
இருவரின் நிலையை எண்ணி கண்கள் கல்ங்கியவள் யாருமறியாமல் யாரோ எடுத்துக் கொடுக்கும் புடவை தான் தன் கல்யாண புடவையா என்று அவளின் நெஞ்சில் பாரம் ஏறி அமர்ந்தது...
கண்ணோடு கண் பார்த்து அவனின் விழிகள் காட்டும் புடவையை தன் மீது வைத்துக் காட்டி அவனிடம் ஒப்புதல் கேட்கும் வகையறா எதுவும் நடக்காது என்று அறிந்தவளுக்கு இப்படியாப்பட்ட இந்த திருமணம் வேண்டுமா என்கிற எண்ணம் தான் மீதூறி இருந்தது...!