Notifications
Clear all

அத்தியாயம் 25

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

கிட்டத்தட்ட கடைசி பத்து நாட்களாக சுத்தமாக தூக்கமே இல்லை. ஏதோ கிடைக்கும் இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்தாள் மிரு. அவளுக்கு பக்க துணையாக நின்றது சக்தியும் சுதிரும் தான்.

சக்தி வேறு ஒரு ப்ராஜெக்டில் சைன் ஆகி இருந்தான். அந்த படத்தின் வெளியீடு தீபாவளி என்பதால் கொஞ்சம் தாமதமாக பத்து பதினைந்து நாள் கழித்து ஆரம்பித்தால் போதுமானது. எனவே மிருவிற்கு உதவி செய்ய வந்துவிட்டான் கடைசி நாட்களில். அதுவரை திரை கதையை ரெடி பண்ணுவதில் பிசியாக இருந்தான்.

அந்த கதையை ஓகே செய்து சைன் ஆகி அதற்கான ஆரம்ப கட்ட வேலையில் இருந்தான். அதை தன்னுடைய பிஏவிடம் ஒப்படைத்து விட்டு மிருவிடம் வந்து விட்டான். கேமரா மேன் சுதிர் தான். எனவே அவன் எப்பொழுதும் அவளுடன் தான் இருந்தான்.

படம் ஒப்பந்தம் ஆன உடனே அவர்களின் கூட்டாளி மியூசிக் டைரக்டரை பார்க்க சென்றாள்.

“வாங்க மேடம்...” என்று வரவேற்றான் அவன்.

அவனை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல் ப்ராஜெக்ட் பேப்பரை நீட்டியவள், கூடவே அந்த படத்துக்கான மியூசிக் அவன் தான் என போட்டு இருந்த ஒப்பந்த படிவத்தையும் அவன் முன்பு வைத்தாள் அவன் சைன் பண்ணுவதற்காக.

அதை எடுத்து படித்தவனின் விழிகளில் அப்பட்டமாய் ஒரு கோவம் தெரிந்தது. அதை அப்படியே அவளிடம் காட்டினான்.

“என்ன பிச்சை போடுறியா?”

“அப்படின்னு நீ நினைச்சா நான் ஒண்ணும் பண்ண முடியாது... இவ்வளவு வருசமா அந்த பிரபல மியூசிக் டைரெக்டர்கிட்ட அசிஸ்டென்டா இருந்தும் ஒரு படத்துல கூட உன் பேரு வரல... இதுல அந்த ஆளை விட்டு வர இவ்வளவு தூரம் யோசிச்சுக்கிட்டு இருக்க... ஆனா நான் முதல் படத்துலையே உன்னை மியூசிக் கம்போசர போடுறேன்னு அக்ரிமேன்ட்டோட வந்து இருக்கேன். என்னை பார்த்தா உனக்கு பிச்சை போடுற மாதிரி தெரியுது இல்ல...” என்று முறைத்தாள்.

“மிரு...” என்று அவன் பல்லைக் கடிக்க,

“அந்த ஆளு போட்டது அத்தனையும் உன்னோட நோட்ஸ் தான்னு உனக்கும் தெரியும் எங்க எல்லோருக்கும் தெரியும். அப்படி அந்த ஆளு உன் திறமை எல்லாத்தையும் திருடி அவரு பெயர் வாங்கிக்கிட்டு இருக்காரு... இருந்தும் நீ பேசாம தான் இருக்க... உன்னோட தவம் கலையிறது போல எனக்கு தெரியல... இந்த வாய்ப்பை பயன்படுத்தி உன் திறமையை இந்த உலகத்துக்கு காண்பிக்கிறதும் இல்ல இருட்டுக்குல்லையே இருக்குறதும் உன்னோட விருப்பம்.” என்று சொன்னவள் கூடுதல் தகவலாக,

“இந்த படத்துக்கு பாட்டு ஏற்கனவே எழுதியாச்சு... முதல் ஓப்பெனிங் சாங் மட்டும் மிருதன், மீதி இருக்கிற ஐந்து பாட்டும் மிருளாணி எழுதி இருக்கா..” என்றாள் அவனை அறிந்தவளாய்.

அந்த செய்தியில் அவளை இன்னும் முறைத்து பார்த்தான்.

“அவளோட முதல் கவிதை தொகுப்பு புத்தகமா வர போகுது. அதற்கு முன்னாடி அவளோட எழுத்து உன்னோட இசையில வரணும்னு நாங்க எல்லோரும் ஆசை படுறோம்... இதுக்கு மேல உன் விருப்பம்” என்றவள் எழுந்துக் கொள்ள,

“வாழ்த்துக்கள்...” என்றான் மிக மிக அழுத்தமான குரலில்.

“இதை சொல்ல உனக்கு இவ்வளவு நாளா?” என்று கேட்டாள் மிருதி.

“ப்ச்...” என்று அவன் உச்சுக் கொட்ட,

“எதுல சரியோ இல்லையோ இதுல மட்டும் மாமனும் மச்சினனும் ஈக்குவலா இருக்கீங்க...” என்றவளை முறைத்துப் பார்த்தான்.

“என்னை முறைச்சி பார்த்து ஒரு ப்ரோயோசனமும் இல்லை. சீக்கிரம் இசை தொகுப்பை ஆரம்பி... நாட்கள் ரொம்ப கம்மி... முதல்ல பாடல்களை ரெடி பண்ணி குடுத்துடு” என்றாள்.

“நான் ஒத்துக்கிட்டேன்னு சொல்லவே இல்லையே...” என்றான் அழுத்தமாய்.

போனவள் மீண்டும் வந்து அந்த ஒப்பந்த பத்திரத்தில் அவன் சட்டையில் சொருகி வைத்திருந்த பேனாவை எடுத்து அவன் கண் முன்னாடியே அவனது கையெழுத்தை கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் போட்டவள் இன்னொரு காபியிலும் கையெழுத்து போட்டு எடுத்துக் கொண்டாள்.

அவளது செயல்களை எல்லாம் வெறும் பார்வையாளாராக இருந்து பார்த்தானே தவிர வேறு எதுவும் செய்யவில்லை சொல்லவுமில்லை.

“எந்த ஸ்டுடியோ வேணும்னு இன்னைக்கு இரவு சொல்லிடு. அப்போ தான் ஏற்பாடு செய்ய வசதியா இருக்கும்..” என்றாள்.

“நான் இன்னும் ஒத்துக்கல..” என்றான் மீண்டும் அழுத்தமாக.

“உன் சம்மதத்தை நான் கேட்கவே இல்லையே...!” என்றவளை ஆத்திரமாக முறைத்து பார்த்தான்.

“நீ வந்து தான் ஆகணும். அப்படி இல்லன்னா கோர்ட்டுக்கு போவேன். மியூசிக் போட ஒத்துக்கிட்டு பிறகு போட்டு தரலைன்னு இந்த சைன் பண்ண பேப்பரை கோர்ட்டுல சப்மிட் பண்ணி உன் மேல மன நட்ட வழக்கு போடுவேன்” என்றாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.

“திமிரு திமிரு. உடம்பு முழுக்க திமிரு.. அவனோட காத்து உனக்கும் அடிச்சிடுச்சு...” என்றான் கடுப்பாக.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல ஓகே சொல்லு” என்றாள் பிடிவாதமாய்.

அவன் பெருமூச்சு விட்டான். அவனது தவிப்பு புரிய,

“உன் திறமையை நீ நிரூபிக்க போற, ஒரு வாய்ப்பு தேடி தானே இத்தனை வருடம் போராடிக்கிட்டு இருக்க... இப்போ அந்த வாய்ப்பு உன்னை தேடி வருதுண்ணா... ஏன் மறுக்கிற” தவிப்புடன் கேட்டாள்.

“உனக்கு புரியல மிரு.. அந்த மகேந்திரன்...” என்று அவன் வார்த்தையை தனக்குள் முழுங்க,

அவனது கரத்தை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் அழுத்திக் கொண்டவள்,

“எதையும் மனதுல வச்சிக்காம உன் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு என்று மட்டும் பாரு... வேறு எதையும் யோசிக்காத. உன்னோட ஒட்டு மொத்த திறமையையும் இதுல காண்பிச்சு உன்னை நிரூபணம் பண்ணு... உனக்கு நான் சொல்லி எதுவும் புரிய வைக்க வேண்டிய எந்த அவசியம் இல்லை.” என்று சொன்னவள்,

“உன்னை மட்டும் முழுதாய் நம்புண்ணா... எங்களுக்கு உன் மேல அபார நம்பிக்கை இருக்கு... அதை காப்பாத்த வேண்டியது உன்னோட கடமை. உன் கடமையை என்றைக்கும் யாருக்கும் விட்டு குடுக்க மாட்டன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். உன் கூட்டை உடைத்து போட்டுவிட்டு வெளிய வா” என்றவளை ஆதுரமாக பார்த்தான்.

அவனது பார்வையில் தெரிந்த கனிவை உணர்ந்தவள்,

“ஓகே தானே ண்ணா” எதிர்பார்ப்புடன் கேட்டாள்.

“யாருக்காக இல்லன்னாலும் உனக்காக மட்டும்” என்றான்.

“தேங்க்ஸ்ண்ணா” என்று குதுகளித்தவளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் சொல்ல,

அவனை தோளோடு கட்டிக் கொண்டவள்

“அப்போ ஸ்டுடியோல சந்திக்கலாமா?” கேட்டாள்.

தலை ஆட்டினான். சிரிப்புடன் அவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டாள் மிருதி.

இப்படி மிருதனின் கூட்டாளிகள் அனைவரும் ஒருங்கிணைந்தார்கள். ஆனால் மிருதன் மட்டுமில்லை. அந்த ஏக்கம் யாருக்கு இருந்ததோ இல்லையோ மிருதிக்கு மிக அதிகமாகவே இருந்தது...!

பெரிய பெரிய ஆட்கள், சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் வந்து பார்த்து அவர்களது கருத்தை சொல்லிவிட்டு போக முதல் மூன்று நாட்கள் ஓடிய முன்னோட்ட காட்சிகளில் ஒவ்வொரு முறையும் அவளை எதிர் பார்த்தாள்.

சுதாவும் பரவாசுவும் முன்னோட்ட காட்சியை பார்த்து விட்டார்கள். ஆனால் உடைய பட்டவனின் நிழல் கூட எங்கும் தென்படவில்லை.

நாளைக்கு காலையில் முதல் காட்சி திரையரங்கில் ஒளிபரப்ப எல்லா ஏற்பாடும் செய்தாகி விட்டது. படத்தில் நடித்த நாயகன் ஏற்கனவே பிரபலமான நடிகர். பெண் இயக்குனரா என்று முதலில் ஒரு தயக்கம் இருந்தாலும் அவள் கதை சொன்ன விதமும், கதையின் அழுத்தமும் அவனுக்கு வெகுவாக பிடித்து விட, எந்த ஈகோவும் இல்லாமல் முழு ஒத்துழைப்பும் கொடுத்தான். ஹீரோயினும் அது போலவே.

வந்து படம் பார்த்தவர்கள் அனைவரும் அவளை பாராட்டி தள்ளி விட்டார்கள். மகேந்திரன் கூட பரவாயில்லை போட்ட காசுக்கு மேலயே கல்லா கட்டும் என்று கணித்தார்.

ஹீரோ பிரபலமான ஆள் என்பதால் அதிகாலை காட்சியே ரிலிஸ் பண்ணிடலாம் என்று முடிவு செய்து அனைத்து திரை அரங்கிலும் அதிகாலை காட்சிக்கு டிக்கெட் விநியோகத்தை ஆரம்பித்தார்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே...

தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த திரையரங்கில் உப்பரிகை இருக்கைகள் முழுவதும் பட குழுவினருக்காக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

எதற்கும் வர மாட்டார்கள் ஆனால் இந்த படத்துக்கு பெருவுடையார் தன் குடும்பம் மொத்த பேரையும் கூட்டிக்கொண்டு வந்தார். குறிப்பாக மகேந்திரனை.

அவருக்கு அதில் பெரிதாய் விருப்பம் இல்லை. ஏற்கனவே பார்த்தாகி விட்டது... ஆனால் மாமனாரின் அழைப்பை மறுக்க முடியவில்லை.

மிருளாணி வந்து இருந்தாள். மெல்லிய புடவையில் அதிக ஒப்பனை இல்லாமல் குடும்பத்தோடு அமராமல் மிருவின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

அவளுக்கு மெல்ல படபடப்பாய் இருந்தது. அவளின் படபடப்பை உணர்ந்த மிருதி மெல்ல அவளின் கரத்தை தட்டிக் கொடுத்தாள்.

இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ஒருவரின் உணர்வை மற்றவர்களுக்கு நன்கு தெரியுமே.. அதனால் கையணைப்பிலே ஒரு ஆறுதல் கிடைத்தது இருவருக்கும்.

அது வரை வெறுமென பிடித்து இருந்த மிருளாணி மிருதியின் அருகில் வந்து அமர்ந்தவனின் அருகாமையில் இறுக பற்றினாள். அதில் மிருதியின் கரம் நசுங்கிப் போனது...

வலி எடுத்த போதும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மிருளாணியின் உணர்வுகளை அவதானித்துக் கொண்டாள். வந்த மியூசிக் கம்போசர் மிருதியிடம் மட்டுமே தலை அசைத்து அவளின் இன்னொரு பக்கம் அமர்ந்துக் கொண்டான். அந்த பக்கம் ஒரு உயிர் அமர்ந்து இருக்கிறது என்கிற சிந்தையே அவனிடம் இல்லை.

அவனது அலட்சியம் மிருளாணியை வதைக்க மெல்ல மெல்ல கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது... அது தெரித்து மிருவின் கரத்தில் விழ எந்த வார்த்தை சொல்லி அவளை தேற்ற என்று தெரியாமல் அவளது கரத்தின் மீது இன்னொரு கரத்தை வைத்து தட்டிக் கொடுத்தாள்.

அவன் இந்த பக்கம் திரும்பவே இல்லை. பேச்சு மிருவிடம் அதுவும் இரண்டொரு வார்த்தையோடு முடித்துக் கொண்டான்.

நீண்ட நாள் கழித்து பார்த்த தன்னவனின் பாராமுகம் அவளை வதைக்க விழிகள் போராட்டம் செய்து நீரை கீழே இறக்கியது...

“அண்ணா...” என்று மிருதி அவனை அழைக்க,

“இங்க உட்காரவா இல்ல எழுந்து போகவா...?” என்று ஒரே ஒரு கேள்வி தான். மிருதி வாயை மூடிக் கொண்டாள். இந்த ஆர்பாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் அவளின் பார்வை மொத்தமும் வாயிலில் தான் இருந்தது..!

மிருதன் என்று ஒரு இருக்கையை அவனுக்காக ஏற்பாடு செய்து இருந்தாள். அதை மகேந்திரன் நக்கலாக ஒரு பார்வை பார்த்து விட்டு போக நெஞ்சம் அடைத்துக் கொண்டு வந்தது..! அந்த இருக்கையை தவிர மற்ற அனைத்து இருக்கைகளும் நிறைந்து போய் இருந்தது...

வாசலை பார்த்து கொண்டு இருந்தவளின் விழிகள் நேரம் ஆக ஆக கண்ணீர் படலம் தென்பட ஆரம்பித்தது...! விளம்பரம், சென்சார் போர்ட் சர்டிபிகேட், தயாரிப்பு நிர்வாகம், ப்ரொட்யூசர்ஸ் நேம் எல்லாம் கடந்து, சிறப்பு நன்றி சொல்லும் படலம் வர, அதற்கு மேல் வாசலை பார்க்க தெம்பு இல்லாமல் பெரிய திரையை பார்த்தாள்.

இசை அமைப்பாளனுக்கு அருகில் சுதிர், சக்தி, எடிட்டர், மூவரின் மூவரின் அசிஸ்டென்ட் என வரிசையாக அமர்ந்து இருந்தார்கள்.

நன்றி... என்று பெரிய எழுத்துக்கு கீழே திரு. மிருதஞ்சயன் மகேந்திரன் என்கிற பெயர் வந்தது...! அதை எதிர் பார்க்காதவர் எட்டி மிருதியை பார்த்தார்.

அவரின் பார்வையை எதிர் கொண்டாள் எந்த தயக்கமும் இல்லாமல்.. அவளை முறைத்து பார்த்தவர் தன் பார்வையை திருப்பிக் கொண்டார் திரை பக்கம். அவரது செயலில் சிரிப்பு வந்தாலும் அவளின் எதிர் பார்ப்பு பொய்யாகிப் போனதில் நெஞ்சம் கனத்துப் போனது...!

நடிகர்கள் பெயர் வரிசையாக வந்தது...! அது கடந்து இசை அமைப்பாளர் பெயர் வர, அதற்கு கீழே பாடல்கள் என மிருளாணி பெயரும் வந்து இருந்தது...!

ஒரே ஸ்லைடில் இருவரது பெயரையும் பார்த்த மிருளாணிக்கு கண்கள் கலங்கி விட மிருதியின் கரத்தை இன்னும் வலுவாக பிடித்துக் கொண்டாள்.

அதற்கு நேர் மாறாய் மியூசிக் கம்போசர் மிருதியை முறைத்தான் தீயாய். அவனது பார்வையில் சாம்பலாய்  ஆனாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் மிருதி இல்லையே...

எதிர் பார்ப்புடன் மீண்டும் வாசலை பார்த்தாள். அங்கொன்று இங்கொன்றுமாய் கதவை திறந்துக் கொண்டு வருபவர்களில் அவனது உருவத்தை தேடி சலித்தாள். பெண் தேடிய தேடல்களில் எதுவுமே அகப்படவில்லை...

திரையில் பெயர்கள் மாறிக்கொண்டே இருந்தது.

இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை, சண்டை பயிற்சி, துணை இயக்குனர்கள், உடைகள், ஒப்பனை, மக்கள் தொடர்பு, தயாரிப்பு மேற்பார்வை, தயாரிப்பு நிர்வாகம், புகைப்படம், டிசைன்ஸ் என எல்லாருடைய பெயர்களும் சக்தி, சுதிர் பெயரோடு வரிசையாக வந்த வண்ணம் இருந்தது...!

அதை தொடர்ந்து பட இயக்கம் மிருதி என்று வந்தது... அதற்கு அடுத்து கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, மற்றும் பாடல் மிருதஞ்சயன் மகேந்திரன் என்று இருக்க முழுமையாக அதிர்ந்து போனார் மகேந்திரன். முக்கியமாக மிருதஞ்சயன் பின்னாடி வந்த அவரின் பெயரை கண்டு.

பெரிய திரைக்கு வர விடாமல் மிருதனை தன் காலுக்கு கீழ் வைத்துக் கொள்ள முனைந்த மகேந்திரனை சீனுக்குள் வராமலே தோற்கடித்து இருந்தான். அது மிருதனுக்கு கூட தெரியாது என்பது தான் உண்மை...!

மிருதியும் வேண்டுமென்று எதுவும் செய்யவில்லை. குறிப்பாக அவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் யுத்தம் எதுவுமே தெரியாது. இருந்த போதும் அவனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை சரிவர வாங்கிக் கொடுத்து விட்டாள்.

என்ன ஒன்று வெறும் மிருதஞ்சயன் என்று பெயர் வந்து இருந்தால் நூறில் ஒன்று என்று கடந்து போய் இருப்பார்கள் மிருதனும் மகேந்திரனும்.

ஆனால் இங்கு மிருதஞ்சயன் பெயரோடு அவரின் பெயர் மகேந்திரன் என்று வரவும் உண்மையாக உள்ளே ஆடி தான் போனார்.

உடன் அமர்ந்து இருந்த தோழமை கூட்டம் வியந்து போய் மிருதியை பார்க்க, அவள் “இது அவரோட உழைப்பு அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம். அதை சரியா செய்யணும் இல்லையா.” என்று சொல்ல தோழமைகள் கூட்டம் விசில் அடித்து தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தியது...! அதில் இசையமைப்பாளனும் ஒருவன் என்றால் மிகையில்லை.

எழுத்து பிக்சர் முழுமையாக நிறைவடைந்தது. படம் கால்வாசி ஓடி இருந்தது..! அதற்கு மேல் அதை பார்க்க முடியவில்லை மிருதியால். கண்கள் முழுக்க முழுக்க ஈரமாகிக் கொண்டே இருந்தது.

அவளின் முதல் படைப்பு. உயிரும் உணர்வுமாய் எடுத்த படம்... ஒவ்வொரு சீனுக்கும் உயிர் ஊட்டி எடுத்து இருந்தாள். அதில் உயிரை நிறைத்து எழுதி இருந்தான் மிருதன். அதை அச்சு பிசகாமல் எடுக்க தன் பாதி உயிரை கொடுத்து இருந்தாள். இரவு பகல் பாராது அவன் இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறானோ அதை அப்படியே கொண்டுவர முயற்சித்து வெற்றியும் அடைந்து விட்டாள்.

எஸ் மிருதி எடுத்த படத்தை எங்கெங்கு திரை இட்டு இருந்தார்களோ அந்த இடங்களில் எல்லாம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் முழுமையாக ஆகி இருந்தது...! அந்த திறமையை, அந்த வெற்றியை அங்கீகரிக்க உடையவன் வரவில்லை... நெஞ்சுக்கூடு காலியாகியது போல ஒரு உணர்வு...

எழுந்து வெளியே போய் விட்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 6, 2025 5:14 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top