நினைவுகளாக நீக்கமற நீ நிறைந்து இருக்கையில் யாரிடம் கொட்டி தீர்க்க என் குமுறல்களை எல்லாம்...!
“அவன் கிட்ட யாரு சொன்னா சுதிர்...? அவனுக்கு எப்படி தெரியுமாம்..” வண்டியை ஓட்டிக் கொண்டே பின்னால் திரும்பி கேட்டான் சக்தி.
“ப்ரொடெக்ஷன் மேனேஜரோட அசிஸ்டன்ட் தான். அவன் மகேந்திரனோட கையாளு.. அது தான் நாம சொல்றதுக்கு முன்னாடி அவன்கிட்ட சொல்லி அவனை தேவையில்லாம டென்சன் பண்ணிவிட்டுட்டான் டா.” கடுப்படித்தான்.
“அவனை தான் செட்டுக்குள்ள வர கூடாதுன்னு மிருதன் சொல்லி இருக்காரே... பிறகு எப்படி வந்தான் சுதிர்..” முன் பக்கம் அமர்ந்து இருந்த மிருதி கேட்டாள்.
“ஒரு எமர்ஜென்சின்னு சொல்லி மிருதனை பார்க்க அனுமதி கேட்டு இருக்கிறான் செக்யூரிட்டி கிட்ட.. அந்த ஆளும் உடனே அவனை விட்டு இருக்கான்...” என்று எரிச்சல் பட்டான்.
“ப்ச்... ஏற்கனவே இன்னைக்கு அவன் ரொம்ப நல்ல மூடுல இருக்கான். இதுல இந்த விசயம் வேற சேர்ந்திருக்கு.. எப்படி சாமி ஆட போறான்னு தெரியல...” என்று மூவரும் புலம்பினார்கள்.
மிருதன் எப்பொழுதும் போகும் பாருக்கு மூவரும் சென்று தேடினார்கள்... வழக்கமாக வருகிறவர்கள் என்பதாலும் பிரபலமானவர்கள் என்பதாலும் எந்த சோதனையும் இல்லாமல் உள்ளே அனுப்பி வைத்தார்கள் பவுன்சர்ஸ்.
இருள் நிறைந்த இடத்தில் கண்களில் அதிக சிவப்புடன் காக்டெயிலை குடித்தபடி மெத்திருக்கையில் கால்களை நன்றாக பரப்பி அமர்ந்து இருந்தான் மிருதன்.
கொஞ்சம் கொஞ்சமாக மிருதனின் நிதானம் தவறிக் கொண்டு இருந்தது. அதை மூவரும் உணர்ந்தவர்கள் வேகமாய் அவனருகில் போனார்கள்.
“மிருதன்...” என்று அவனை தொட ஏறிட்டுப் பார்த்தவனின் விழிகளில் தான் எவ்வளவு ரௌத்திரம்...! மூவருமே ஒரு கணம் அதிர்ந்து தான் போனார்கள்.
“என்னடா...?”
“ஏன்டா...?” என்று இருவரும் கேட்க, மிருதி அமைதியாக இருந்தாள். அவன் உள்ளம் படும் வேதனை நன்கு தெரியுமே அவளுக்கு..
தெரிந்த விசயத்தை என்னவென்று கேட்க முடியும்..? அதனால் மிருதனை பார்த்தபடி அமைதியாக நின்றாள்.
மிருதன் பதில் எதுவும் பேசவில்லை.. ஆனால் காக்டெயில் மட்டும் உள்ளே இறங்கிக்கொண்டே இருந்தது...!
அதை நிறுத்த வழி தெரியாமல் மற்ற மூவரும் அமைதியாக இருந்தார்கள். அவர்களுக்கும் மனம் உளைக்கலமாக தான் கொதித்துக் கொண்டு இருந்தது.
ஏனெனில் ஊட்டி செல்வதற்கு எவ்வளவு ஏற்பாடு செய்ய முடியுமோ அவ்வளவு வேலையும் செய்து முடிச்சாச்சு... கிளம்புவது மட்டும் தான் வேலை. நாளை காலை கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு சொகுசு பேருந்தில் அனைவரும் கிளம்ப ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது.
போகும் வழியில் ஒரு ஹோட்டலில் ஆர்டர் சொல்லியாச்சு, இரவு தாங்கும் விடுதிக்கு முன் பணம் கட்டியாச்சு... மூன்று நாட்களுக்கு உரிய புட் முதற்கொண்டு எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருந்தார்கள் இவர்கள் நால்வரும்.
அப்படி இருக்கும் பொழுது இப்படி ஊட்டி சுற்றுலாவை கேன்சல் செய்தால் யாருக்கு தான் கோவம் வராது. அதுவும் மிருதனின் மீது உள்ள தனிப்பட்ட வன்மைத்துக்காக இப்படி ஒட்டு மொத்த டீமையும் பழிவாங்கும் மகேந்திரனை என்ன செய்வது. பெரிய மனிதனுக்குரிய இங்கிதம் சிறிதும் இல்லாமல் சிறுபிள்ளை போல பழிவாங்கி விளையாடுகிறார்.
அவனை தேற்ற முடியாமல் மூவரும் சூழ்ந்து அமர்ந்துக் கொண்டார்கள். மிருதன் மற்ற இருவருக்கும் சரக்கை தள்ளி வைக்க, மிருதி தலையில் அடித்துக் கொண்டாள்.
“உனக்கு வேணுமா?” என்று நக்கலாக கேட்டான்.
“அது தானே என்னடா இன்னும் ஆரம்பிக்கலைன்னு பார்த்தேன்.. இந்தா ஆரம்பிச்சாச்சு...” என்று அலுத்துக் கொண்டவள் தன் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.
“ஓவரா சீன போடாத.. அந்த அளவுக்கு உனக்கு சீன எல்லாம் இல்ல..” உள்ளே போன போதை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது.
மிருதி நிமிரவே இல்லை... குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை... நிமிர்த்தினால் அவனை சமாளிக்கவே முடியாது...! கண்டதையும் பேசி தேரை இழுத்து தெருவில் விட்டு விடுவான். அதனால் கவனமாக அவனை பார்ப்பதை மட்டும் தவிர்த்து விட்டாள்.
பேரர் அவளிடம் வந்து போதை வஸ்துவை நீட்ட,
“அவ நவீன கண்ணகி... அதனால இதெல்லாம் கண்ணால பார்த்தால் கூட தோசம் வந்துடும்னு நினைப்பா... நீ இங்க என்கிட்டே எடுத்துக்கிட்டு வா...” என்று அவனை கூப்பிட்டு தன் அருகில் நிற்க வைத்தவன்,
“இந்த பாட்டில்ல இன்னும் அஞ்சு ஆறு எடுத்துட்டு வா...” என்றான்.
அவன் சரி என்று சொல்லாமல் மிருவை பார்த்தான். அவளது கண்கள் வேண்டாம் என்று மறுத்தது.
“நீ என்னடி எனக்கு வாயா...? அதென்ன என்னை குடிக்க வேணான்னு நீ சொல்றது. நான் சொல்லணும். நான் குடிக்கணும்னா அதை நான் தான் முடிவு பண்ணுவேன். நான் குடிக்க கூடாதுன்னு முடிவெடுக்கணும்னா அதையும் நான் தான் முடிவு பண்ணுவேன். நீ யாருடி என் சார்பா முடிவெடுக்க” என்று அடவு கட்ட ஆரம்பித்தான்.
இப்பொழுது ஆரம்பித்து பவுன்சர்ஸ் வெளியே துரத்தும் வரை இதே அளப்பரையை தான் பண்ணிக் கொண்டு இருப்பான். என்ன ஒவ்வொரு முறையும் வித விதமாக பண்ணுவான். அவ்வளவு தான் வித்யாசம்.
சக்தியும் சுதிரும் இவர்கள் இருவரையும் கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளவில்லை. ஏனெனில் இவர்களின் பாண்டு அப்படி... இவர்களின் இடையில் வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது. மிருதனிடம் எத்தனை பேர் சிபாரிசு செய்து போனாலும் அவனது செவி சாயும் இடம் ஒன்றே ஒன்று தான்.
அது மிருதி தான். அது அவளுக்கு தெரியும். ஆனால் மிருதன் தான் அதை ஒத்துக்கொள்ள மாட்டான். நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று வாதம் பண்ணுவான்.
அதனால் மிருதி அதை பற்றி பேசுவதே கிடையாது. என் உள்மனம் உரைக்கும் காதல் எனக்கு தெரியும். நீ வாய் வார்த்தையாக சொல்லி தான் நான் கேட்கணும்னு ஒன்றும் இல்லை... என்று எண்ணி தன்னை தானே தேற்றிக் கொள்வாள்.
அதற்கு உதாரணம் தான் சில்லென்ற ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தது. அவனை தவிர வேறு யார் அவளை கவனிப்பார்கள். இதழ்களின் ஓரம் புன்னகை எழுந்தது.
மிருதனை கேட்டால், அவளை அடித்ததினால தான் இந்த கவனிப்பு மத்தபடி எனக்கென்ன தலை எழுத்தா என்று போய் விடுவான்...
அவளை பொறுத்தவரை மிருதன் காட்டும் நேசத்துக்கு காதல் என்று பெயர் வைத்தாள். ஆனால் மிருதனை பொறுத்தவரை காதலாவது மண்ணாங் கட்டியாவது என்று எரிக்கிற பார்வை பார்த்து வைப்பான்.
ஆனால் மிருதுவின் காதலை தனக்கு எவ்வளவு சாதகமாக பயன் படுத்திக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்கிறான்.
எதுக்கெடுத்தாலும் இது தான் உன் காதலா என்று கேட்டு அவளை ஒவ்வொரு முறையும் நெருப்பில் தீக் குளிக்க வைக்கிறான்.
ஒரு நாள் அந்த கேள்விக்கு வரும் விடை முறிந்து போனால் தான் மிருதனுக்கு உண்மை அப்பட்டமாய் முகத்தில் அரையும். அது வரை இவனது ஆட்டம் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கும்.
அலைகள் ஓயாதது போல இவர்களின் பிணக்கும் ஓயாது...! மூவரும் கணக்கு வழக்கு இல்லாமல் மட்டை ஆகிவிட அங்கு உதவிக்கு என்று இருந்தவர்களின் மூலம் மூவரையும் வண்டியில் ஏற்றினாள்.
மிருதனின் காரில் அனைவரையும் ஏற்றியவள் தங்களின் காரை அங்கயே நிறுத்திவிட்டு வந்தாள். ஏற்றிய மூன்று பேரையும் ஒவ்வொருவரின் இடமாய் பார்த்து இறக்கி விட்டாள்.
கடைசியாய் மிருதனை இறக்கி விட்டவள், அவனை தோளோடு பிடித்துக் கொண்டு வீட்டினுள் கூட்டிக்கொண்டு சென்றாள். காரை பார்த்த உடனே வாசலில் இருந்த செக்யூரிட்டி கேட்டை திறந்து விட்டுட்டு, உட்புறம் இருந்த வேலையாட்களுக்கு போன் செய்து சொல்ல வீட்டு கதவை திறந்து விட்டார்கள் அவர்கள்.
மிக மிக பிரம்மாண்டமான வீடு... இரண்டு மூன்று தலைமுறையாக சினிமா மற்றும் சின்னத்திரையில் ப்ரொடியூசர்ஸ்சாக இருக்கிறார்கள் என்றால் சும்மாவா...
பிரம்மாண்டமே வாயை மூடிக் கொள்ளும் அளவுக்கு பிரம்மாண்டம் அந்த வீடு... வீடு மட்டுமல்ல அங்கு இருக்கும் நபர்கள் அத்தனை பேரும் மிடுக்கு குறையாது, உபயோகிக்கும் பொருள்கள் அனைத்தும் மீண்டும் ஒரு முறை உபயோகிக்காத அளவுக்கு பணம் படைத்தவர்கள்.
அதே போல மனமும் ரொம்ப விசாலம் தான். ஒரே ஒருவரை தவிர... ஆம் அது மகேந்திரன் தான். குறுகிய குணம் கொண்டவர்.. ஒரு பழமொழி உண்டே...
“சிறுத்து பெருத்தாலும் சின்ன புத்தி போகாது...
பெருத்து சிறுத்தாலும் பெரும் புத்தி போகாது...” அது மாதிரி தான் மகேந்திரன்..
ஒன்றுமே இல்லாமல் தான் மிருதனின் அம்மாவை கல்யாணம் செய்தார். மிருதனின் அம்மா கோயில் சிலை போல... பார்க்கும் அனைவரும் கையெடுத்து குடும்பிடும் அளவுக்கு இருப்பார். குணத்திலும் அப்படி தான். இவரது அப்பா பெருவுடையார் பரம்பரை செல்வந்தர். இவரது மனைவி பெருவுடையாள்.
நாடகம் போட்டு வாழுபவர்களை பெரிதும் ஆதரித்து தங்க இடம் கொடுத்து அந்த கலையை வளர்த்து விட்டார் பெருவுடையாரின் அப்பா... அவர் தலைமுறையிலே சினிமா என்னும் துறை வளர்ச்சி பெற, தங்களிடம் இருந்த சொத்துக்களை எடுத்து தைரியமாக சினிமாவில் போட்டார்.
அது பல மடங்காக திருப்பிக் கொடுக்க, தொடர்ந்து அதிலே முதலீடு செய்ய ஆரம்பித்தார். அதுவும் தரமான படங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார். பரம்பரை சொத்துக்களை எடுக்காமல் முதல் முறை போட்ட முதலிலே அடுத்து அடுத்து வந்த இலாபங்களில் மட்டுமே படங்களை வழங்க ஆரம்பித்தார்.
பல இடங்களில் கொட்டகை போட்டார். லாபம் அதிகமாக வர ஆரம்பிக்க இருக்கைகள் போட்டு கொட்டகையை நவீனத்துவம் செய்ய ஆரபித்தார். அவருக்கு பிறகு அந்த இடத்துக்கு வந்தவர் பெருவுடையார்.
பெருவுடையாரும் தன் தந்தையின் புகழை கொஞ்சமும் இறக்காமல் அவரை விட அதிகமாக இந்த சினிமா துறையில் பெயர் எடுத்தார். எடுத்துக் கொண்டும் இருக்கிறார்.
பெயர் பொருத்தம் மாதிரியே இருவருக்கும் மன பொருத்தமும் நூற்றுக்கு நூறு ஒத்துப் போகும்... அந்த அளவுக்கு மனம் ஒன்றி போய் வாழும் தம்பதிகள்.
இவர்களுக்கு ஒரே ஒரு மகள். அவர் தான் மிருதனின் அம்மா சம்பூர்ணவதி. தந்தைக்கு பக்க பலமாக அவரின் மகள் சம்பூர்ணவதியும் இந்த தொழிலில் கொடி கட்டி பறந்துக் கொண்டு இருக்கிறார்.
அவருக்கு பார்த்து பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்... மணமகனும் அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு தான் பார்த்து முடித்தார்கள். இருவரும் மனம் ஒன்றி பார்ப்பவர் கண் படும் அளவுக்கு வாழ்ந்தார்கள். வாழ்ந்தது மொத்தமே ஆறே ஆறு மாதங்கள் தான்... அதற்குள் என்ன அவசரமோ காலன் அவரை தன்னிடம் எடுத்துக் கொண்டான்.
அதன் பிறகு தங்களிடமே மேனேஜராக பணி புரிந்த மகேந்திரனை தன் மகளுக்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தார் பெருவுடையார்...
கல்யாணம் செய்து வைத்தாலும் எந்த சொத்துக்களும் மகேந்திரனின் பெயரில் கிடையாது. எல்லாமே சம்பூர்ணவதியிடம் தான். அதோடு இன்னும் பரம்பரை சொத்துக்கள் பெருவுடையாரிடம் தான் இருக்கிறது...!
அந்த காண்டு மகேந்திரனுக்கு அடி நெஞ்சில் கனன்றுக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக ஆன பொழுதும் இன்னும் எதுவும் அவர் ஆசை பட்ட படி அவரின் கைக்கு வரவில்லை.
அதனால் தன் கோவம் முழுவதையும் அவர் காட்டும் ஒரே இடம் மிருதஞ்சயனிடம் தான். சிறு வயதில் எல்லாம் அவரின் வேதனை சொல்லும் செயலும் அவனை பெரிதாக கலங்க செய்தது. ஆனால் மகேந்திரன் அவனுக்கு ஒவ்வொரு வகையிலும் செய்த அநியாயங்கள் எல்லாம் அவனது மனதை விட்டு அகன்றதே கிடையாது.
அவர் ஏற்படுத்தி இருந்த காயங்கள் எல்லாம் அவனை ஒரு முரட்டு தனாமானவனாக மாற்றி இருந்தது. அந்த முரட்டு தனத்தை எல்லாம் வீட்டில் இருப்பவர்களிடம் மறந்து கூட காண்பிக்க மாட்டான்.
எவ்வளவு வலி எடுத்தாலும் தனக்குள்ளே போட்டு புதைத்துக் கொள்வான். தன் முகம் பார்த்து நிற்கும் அன்னைக்கும், பாட்டிக்கும், தங்கைக்கும் எப்படி இந்த வலியை எல்லாம் காட்ட முடியும்.. அதனால் எல்லாவறையும் தனக்குள் போட்டு அழுத்தி வைக்கிறான்.
அவன் வெடிக்கும் நிலை எல்லாம் மிருதியிடம் தான். அதே போல அவளறியாமல் என்றைக்காவது கருணை பொழிவதும் அவளிடம் மட்டும் தான். அதை அவளை கூட அறிய விட மாட்டான்.
மோசமான குணம் என்று எல்லோரும் அழைக்கும் படி தான் அவனது பெயர் இருக்கும். ஆனால் அவனோடு நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே தெரியும் மிருதனின் அன்பு.
அந்த அன்பை கூட வம்பாய் காட்டுவான் மிருதஞ்சயன்...