அவளுக்காக வெளியே நின்ற சக்தி ‘என்ன...?’ என்பது போல பார்த்தான். அவள் உதடு பிதுக்கி இல்லை என்பது போல தலையாட்ட, சக்திக்குமே கஷ்டமாய் போனது.
“சரி விடு இன்னும் ஒரு வாரம் இருக்கே பார்த்துக்கலாம்...” என்று அவளை தேற்றியவன் அவளை வீட்டில் விட்டுட்டு தன் வீட்டுக்கு வந்தான்.
வீட்டுக்கு வந்தவள், கூடத்தில் இருந்த தாய் தந்தையரிடம் சிறிது நேரம் பேசி அன்றைய நாளில் நடந்ததை பகிர்ந்துக்கொண்டவள்,
“அம்மா எனக்கு ஏன்னே தெரியல அந்த மிருதன ரொம்ப புடுச்சி இருக்கு. ஆனா அவனை கட்டாயப்படுத்தவும் தோணல மா... இது என்ன உணர்வுன்னே புரியல...” பாவமாய் சொன்ன தன் மகளை வாஞ்சையுடன் தோள் அணைத்த சுதா,
“கண்ணா அவனை சுதந்திரமா இருக்க விடு... உன்னோட அன்பால கட்டிப்போட பார்க்காத... கண்டிப்பா ஒரு நாள் உன் நேசம் அவனை உன்கிட்ட இழுத்துட்டு வரும்... அதுக்கு நிறைய நாள் ஆகும்...” சொல்ல,
அவளின் தந்தை பரவாசுவோ, “பாப்பா உனக்கு சுதந்திரமா முடிவெடுக்க எல்லா உரிமையும் இருக்குற மாதிரி அவனுக்கும் இருக்கு... அவன் என்ன முடிவு எடுத்தாலும் அதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்... அது உன்னோட வாழ வந்தாலும் சரி, இல்ல உன்னோட வாழ முடியாதுன்னு விலகி போனாலும் சரி.”
“நீ அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு உன் வாழ்க்கையை வாழனும்... இது தான் எங்க கருத்து... நீயும் இதன் படியே இரு... வர்றத மனப்பூர்வமா ஏத்துக்கடா...” என்று தந்தை அறிவுரை கூற மனம் சற்றே அமைதி அடைந்தது..
“ஆம்மால்ல... எனக்கு தானே அவனை பிடுச்சி இருக்கு.. அவனுக்கு என்னை பிடிக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே... அதனால அவனை கட்டுப்படுத்துவது தவறு... அவனுக்கு பிடுச்சாலும் சரி, பிடிக்காம போனாலும் சரி நான் அவனை தான் காதலிச்சுகிக்கிட்டு இருக்க போறேன் ப்பா...” தெளிவாய் சிந்தித்தவள், எப்பொழுதும் போல அவனை தொல்லை படுத்தாமல் தன் அன்பை மட்டும் அவனிடம் காட்ட தொடங்கினாள்.
அன்றிரவு எப்பொழுதும் போல சுவரத்தை சுழல விட்டவள்,
அதில் ஒலித்த பாடலின் வரிகளை அப்படியே உள் வாங்க தொடங்கினாள்.
“யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது...
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது...
தாளாத பெண்மை வாடுமே..
வாடுமேமேமேமே....
மார்கழி பூக்கள் என்னை தீண்டும்
நேரமே வா
தேன் தரும் மேகம்
வந்து போகும்
சிந்து பாடும் இன்பமே
ரோஜாக்கள் பூமேடை போடும்
தென்றல் வரும்
பார்த்தாலும் போதை தரும்...
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது...”
வாணி ஜெயராம் பாடலில் மெய் மறந்து போனவள் தன் நிலையும் அதுவே என்று எண்ணியவள், ஒரு வித சிலிர்ப்புடன் எழுந்து குருங்கண்ணோரம் சென்று மூடி இருந்த கதவை திறந்து வைத்தாள்.
மழைக்கால மேகங்கள் திரண்டு நின்று சாரலாய் வீசிக்கொண்டு இருக்க, மந்த மாருதம் அவளின் மெல்லிய மேனியை வன்மையாக தழுவி சென்றது...
அதை ஆசையுடன் ரசித்தவள், மெல்ல கண்களை மூடிக்கொண்டாள்.
வயலின் இசையும் தீந்தமிழில் எழுதிய பாட்டு வரியும் அவளை மெய் மறக்க வைக்க, அதிலே ஆழ்ந்து போனாள்.
நெஞ்சில் வந்து போன மிருதனை இறுக்கி வைத்தவள், அவனுடன் கற்பனையாக சாரலில் நனைவதாக எண்ணி உடல் சிலிர்த்தாள்.
கண்களில் மெல்லிய காதல் சுமை விரிந்து கிடக்க, அழகியலையும் வாழ்வியலையும் நேர் செய்யும் ஒரு ஏக்க சிலிர்ப்பு அவளிடம்...
இவளின் மென்மையான குணத்திற்கு நேர் எதிர் துருவமாய் மிருதன்... இரு கோடுகளும் இணை சேர்ந்து காவியம் போற்றுமா...?
--
மிருதன் இந்த ஒரு நாள் ஷூட்டிங்கை ஷூட் பண்ணவில்லை என்றால் கண்டிப்பாக சொதப்பி விடும் என்றே எல்லோரும் எண்ணினார்கள். அது தான் உண்மையும் கூட...
இந்த ஒரு நாளுக்காக வேறு ஒரு இயக்குனரை போட்டு அந்த வார எபிசோடை எடுத்தால் மொத்த சக்சசும் போய்விடும்.. அதனாலே அவனிடம் எல்லோரும் வித விதமாக பேசி அவனை ஊட்டி அழைத்து வர முயன்றுக்கொண்டு இருந்தார்கள்.
தயாரிப்பாளர் மகேந்திரனுக்கும் மிருதனுக்கும் ஏகப்பட்ட உள்பூசல்கள் இருக்கிறது... இருவரும் ஏட்டிக்கி போட்டியாக தான் நடந்துக்கொள்ளுவார்கள்.
அவர் ‘சரி’ என்று ஒத்துக்கொண்டால் இவன் மறுத்து ஏதாவது செய்வான். அதே போல அவன் ஒத்துக்கொண்டால் இவர் ஒத்துக்கொள்ள மாட்டார்..
இருவரும் முரண்டு பிடித்து மொத்த யூனிட்டையும் தலையை பிச்சுக்க வைப்பார்கள். இப்பொழுதும் அப்படி தான். மகேந்திரனாவது ஓரளவு இறங்கி வருவார். ஆனால் மிருதன் இறங்கியே வரமாட்டான்.
முரண்டு பிடித்தால் பிடித்தது தான்...
அதை போலவே இந்த முறையும் முரண்டு பிடித்து, அந்த ஊட்டி சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு, அதே செட்டில் வைத்து இயக்கி முடித்து அதை எடிட்டும் பண்ணி ஒளிபரப்பியவன்,
அதை கொண்டாட ஊட்டிக்கு போகணும் என்று எல்லோரையும் கிளப்பி இருந்தான்.
அதை பார்த்த மகேந்திரனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது... வந்ததோடு அல்லாமல் அவ்வளவு ஆத்திரமும் தலைக்கு ஏறியது... வன்மத்துடன் அவனை பார்த்தார். அவரது பார்வையை கண்டவன் இகழ்ச்சியாய் புன்னகைத்துவிட்டு அவரை கடந்து செல்கையில்,
“உங்க குடுமி என் கையில மிஸ்டர் மகேந்திரன்... இவ்வளவு நாள் நீங்க சொன்னத நான் கேட்டேன்.. இனி நான் சொல்ற படி தான் நீங்க ஆடியாகணும்... பொம்மலாட்டம் தெரியுமா...? அதுல வர பொம்மை தான் நீங்க... அதை ஆட்டுவிப்பவன் தான் இந்த மிருத்தஞ்சயன்...” என்று விழிகளில் பலிவாங்கும் வெறி அப்பட்டமாய் தெரிய சொன்னவனை கண்டு கொஞ்சம் பயம் வந்தது அவருக்கு.
ஏனெனில் அவர் தான் இந்த சேனலின் ஓனர்.. இவ்வளவு சக்ஸஸாக இந்த சேனல் ஓடுகிறதுது என்றால் அதன் பங்கு மிருதனுக்கு மட்டுமே... இவன் இந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் இயக்கவில்லை. பல நேரடி லைவ் ஷோக்களை இயக்கிக்கொண்டு இருக்கிறான்.
அதனாலே அவன் என்ன செய்தாலும் அவனை ஓரளவு அனுசரித்தே சென்றார்கள் அனைவரும்... ஆனாலும் மகேந்திரன் அவனை சீண்டிக்கொண்டே இருப்பார்.
அவர் சீண்டுதல் ஒரு புறம் என்றால் மிருதனின் நடவடிக்கை அப்படி தான் இருக்கும். அதனால் இருவரின் புறமும் பலமான எதிர்ப்பு நிலவிக்கொண்டே இருக்கிறது...
இதில் மிருதியின் காதல் வேறு... அவனால் அவளது காதலை உணரக்கூட முடியாத அளவு இறுகி போய் இறுக்கமாக இருக்கிறான்... அவனை எப்படி தட்டி கொட்டி சரி செய்வாளோ என்று பொறுத்து இருந்து தான் பார்க்கணும்...