நின் மன எழுச்சி தனில்
சிக்கி சிறுத்து சிதறுக்கிறேன்...!
மயக்கம் கொடுக்க கூடிய அந்தி பொழுதில் தன் முன் அமர்ந்து இருந்தவனை பாவமாக பார்த்துக்கொண்டு இருந்தாள் மிருதி...
அவளது பார்வை கண்டு எதிரில் இருந்த மிருத்தஞ்சயனுக்கு எரிச்சலாய் வந்தது.. ஆனாலும் வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அழுத்தம் என்றால் அப்படி ஒரு அழுத்தம்.
ஆயிரம் வார்த்தை பேச கூடிய இடத்தில் நூறு வார்த்தையாவது பேசவேண்டும்... இல்லையா குறைந்தது பத்து வார்த்தையாவது பேசவேண்டும்...
ஆனால் மிருதன் ஒத்தை வார்த்தை கூட பேசமாட்டான்... பெரும்பாலும் அவனது தலையும், கண்களும் மட்டுமே அதிகம் பேசும்..
அவனாக மனது வைத்தால் மட்டுமே அவனது இதழ்களில் இருந்து ஒத்தை வாரத்தை முத்து போல சிந்துவான்... இல்லையென்றால் வெறும் பார்வை மட்டுமே...
அவனை சுற்றி இருப்பவர்களுக்கு இந்த குணம் பிடிக்காது என்றாலும், அவனை யாரும் ஒதுக்க மாட்டார்கள்.
ஏனெனில் அவனது பழக்கங்கள் நன்முறையில் இருப்பதோடு, யாருக்கு எந்த உதவி என்றாலும் அவனால் முடிந்தவரைக்கும் உதவி செய்வான் சத்தமே இல்லாமல்.
அதனாலே அவனது நட்பை இழக்க யாரும் விரும்பவில்லை...
இதில் மிருதி மட்டும் இயல்பை தாண்டி அவனை காதலித்துக்கொண்டு இருக்கிறாள். அந்த காதலுக்கு மிருதனிடம் எந்த வித பிரதிபலிப்பும் இதுவரை இருந்தது கிடையாது...
இருவரும் ஒரு தனியார் ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். நேரடி பாட்டு மற்றும் காமெடி கலந்த ஷோவின் இயக்குனர் தான் மிருதன்.
அவனுக்கு அசிஸ்டென்ட் மிருதி மற்றும் சக்தி இவர்கள் இருவரும் தான்.
வாரத்தில் மூன்று நாள் இவர்களின் ஷோ வரும்.. இரண்டு கட்டமாக அந்த ஷோ நடைபெறுவதால் சூட்டிங் ஒரு நாளில் தொடர்ந்து இருபது மணி நேரம் நடைபெறும்.
அதை தொடர்ந்து எடுத்த காட்சிகளை வரிசை படுத்தி எடிட் பண்ணி ரிலீஸ் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.
அதில் பாதி நேரம் மிருதியிடம் தான் வெடிப்பான். அவ்வளவு கோவம் வரும்... யாரு என்ன என்று எதையும் பார்க்க மாட்டான்.
கண்ட மேனிக்கு பேசிவிட்டு அதற்காக வருந்த கூட மாட்டான். எப்பவும் அவன் வைத்தது தான் நியதி என்கிற அளவுக்கு அவனுடைய ஆட்டிடியூட் இருக்கும். உடைத்து சொல்ல வேண்டும் என்றால் ஆன்டி ஹீரோக்கான அத்தனை தகுதிகளும் அவனிடம் இருக்கும்.
பொறுமை என்பது மருந்துக்கு கூட இருக்காது... இதில் சக்தி தான் பாவம். எல்லோரிடமும் மாட்டிகொண்டு முழிப்பான்.
ஆர்டிஸ்ட் ஒரு பக்கம் என்றால், மேனேஜ்மென்ட் ஒரு பக்கம், அதோடு மிருதனின் கையாள், எடிட்டிங் மேற்பார்வை, ஸ்க்ரிப்ட் சைடும் ஒரு பார்வை பார்ப்பான். இப்படி ஓவரால் எல்லாவற்றையும் கண்காணிப்பது இவனது வேலை..
கேமரா மேன் சுதிர் மிருதனுடைய இன்னும் நெருங்கிய நண்பன்... இருவருடைய கருத்துக்களும் மிகவும் பொருந்தி போகும். அதனாலே இவன் இயக்கும் எல்லாம் நிகழ்வுகளுமே மிக பெரிய வெற்றியை தேடி தந்தது...
அதை விட அவனது மொத்த கருத்தையும் உள் வாங்கி வேலை செய்யும் மிருதியும் சரி சக்தியும் சரி இவனுக்கு இரண்டு கைகள் போல்... அவ்வளவு கச்சிதமாக வேலையை செய்து முடிப்பார்கள்.
இவர்கள் இருவரும் இல்லை என்றால் மிருதனின் வெற்றி பாதியாக தான் இருக்கும். அந்த அளவு இருவரின் உழைப்பும் மிருதனுக்காக இருக்கிறது...
பல நபர்கள் இந்த நால்வரது கூட்டணியையும் உடைக்க வேண்டும் என்று கட்டம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நொடியில் உடைந்து போகும் பனி கட்டி என்று எண்ணி இருக்கிறார்கள். ஆனால் இது என்றைக்கும் உடையாத பலம் வாய்ந்த கூட்டணி என்று அவர்களுக்கு தெரியவில்லை.
இவன் இயக்கிக்கொண்டு இருக்கும் ஒரு நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியை கொடுத்துக்கொண்டு இருந்தது...
அதை இன்னும் சிறப்பிக்கும் வகையில் தயாரிப்பாளர் அந்த குழு மட்டும் ஒரு வாரம் உல்லாச பயணமாக சென்று, அங்கேயே சூட்டும் செய்து, கொண்டாடும் வகையில் ஊட்டியிலே ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் மிருதனோ அதற்கு சம்மதம் கொடுக்காமல் பிசியாக சுற்றிக்கொண்டு இருந்தான்.
தயாரிப்பாளர் வேறு கடுமையாக சக்தியையும் மிருதியையும் திட்டிக்கொண்டு இருந்தார்.
“அவனுக்கு என்ன கொம்பா முளைச்சி இருக்கு... அவன் இஷ்டத்துக்கு எது வேணாலும் செய்யலாம். ஆனா என் விருப்பத்துக்கு நான் ஒண்ணு கூட செய்ய கூடாதா...? இந்த அரை இறுதி சுற்று ஊட்டியில தான் நடக்கணும்... இது தான் என் முடிவு...”
“இதுக்கு அவன் சம்மதிக்கலன்னா இந்த நிகழ்ச்சியோட டைரேக்டரை மாத்திக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன்... ரெண்டு பேரும் அவன் கிட்ட இதை சொல்லுங்க...” என்று எச்சரிக்கை செய்திருந்தார்.
அதனாலே மிருதனிடம் அந்த விசயத்தை சொல்லி கெஞ்சிக்கொண்டு இருக்கிறாள் அவனையும் வர சொல்லி...
அவனோ எதுவும் சொல்லாமல் தன் கையிலிருந்த உணவு வகை பட்டியலை பார்த்துக்கொண்டு இருந்தான் எதை தேர்ந்து எடுப்பது என்று...
அவனிடம் மிருதுவால் கோவப்படவே முடியவில்லை.. அது இன்று மட்டுமில்லை... எப்பொழுது அவனை பார்த்தாளோ அந்த நாளிலிருந்து அவள் அவனிடம் கோவப்படுவதே கிடையாது...
ஆனால் அவளது பார்வை, அவளது காதல், அவளது நச்சரிப்பு எல்லாமே அவனுக்கு எரிச்சலையே கொடுக்கும்..
பலமுறை அவளிடம் அவன் சொல்லி பார்த்துவிட்டான். ஆனால் அவள் கேட்பது போலவே தெரியவில்லை... அவள் அவளுடைய எண்ணங்களில் உறுதியாக இருக்கிறாள். அதை கண்டு காண்டவான்.
பல்லைகடித்துக்கொண்டு அவளை அந்த மாதிரி சமயங்களில் பொறுத்து போவான். இல்லை என்றால் ஒரு ஆட்டம் ஆடி தீர்த்துவிடுவான்.
அவனிடம் ஏதாவது செய்தியை பகிர வேண்டும் என்றால் அனைவரும் அனுகுவது மிருதியை தான்.
இப்பொழுதும் சக்தி அவளை தான் தூது விட்டு, படபடக்கும் நெஞ்சுடன் வெளியே காத்திருக்கிறான்.
‘எல்லோரும் என்னையே கோர்த்து விடுங்கடா...’ திட்டியவள்,
“கொஞ்சம் யோசிச்சு பாருங்க மிருதன்...” என்று அவனது கரத்தை பற்ற வர, வேகமாய் தன்னுடைய கரத்தை பின்னுக்கு இழுத்தவன், எரிச்சலாய் அவளை பார்த்தான்.
அவனது பார்வையில் ஏறிய எரிச்சலை கண்டு மனம் லேசாய் வலித்தது மிருதாவுக்கு... ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,
“இல்ல நான் எதார்த்தமா தான் கையை தொட வந்தேன்...” என்று விளக்கம் சொல்லியவள்,
“நம்ம எல்லாரோட எதிர்காலமுமே இந்த சக்சஸ்ல தான் இருக்கு மிருதன்... நீங்க இதை சொதப்புனா எல்லோர எதிர்காலமும் கேள்வி குறி தான்... இதை நான் சொல்லி தான் நீங்க தெருஞ்சுக்கணும்னு இல்ல... உங்களுக்கே நல்லா தெரியும்...” என்றவளின் பேச்சை காதிலே வாங்காமல் இரக்கமே இல்லமால் ‘முடியாது’ என்பது போல தலையை ஆட்டினான்.
அதில் சற்று கலவரம் எழுந்தாலும் விடாமல் தொடர்ந்து,
“நம்ம எல்லோரும் வெள்ளி திரைக்கு போகணும்னு தான் இவ்வளவு பாடு படுறோம்.. டெக்னிஷியன் முதற்கொண்டு ஆர்டிஸ்ட், மேக்கப் மேன், லைட்மேன், அசிஸ்டென்ட் டைரெக்டர்ஸ் ஏன் சாதாரண புட் குடுக்குறவங்க கூட அதுக்கு தான் ஆசை பட்டுக்கிட்டு இருக்காங்க...”
“அப்படி இருக்கும் பொழுது உங்க தனிப்பட்ட விருப்பு வெறுப்பை இதுல காட்டுறது எனக்கு சரியா தோணல மிருதன்...” என்றவளை எள்ளலுடன் பார்த்தான்.
“அப்போ உன் காதலுக்கு நீ இவ்வளவு தான் மரியாதை குடுக்குறியா...? என் உணர்வுகளை விட உனக்கு மத்தவங்க எதிர்காலம் தான் முக்கியமா படுது இல்லையா...?” என்று கேட்டான்.
அவன் கேட்டதில் மனம் சுருங்கி போனாலும்,
“இதுல என்னால் சுயநலமா இருந்து யோசிக்க முடியாது...” என்றாள்.
“ஓ..! அப்போ நான் சுயநலமா தான் யோசிக்கிறேன்னு சொல்ல வர இல்லையா...?” நறுக்கென்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் ஆமாம் என்ற விடை இருந்தது.
அதை அறிந்தவன் இன்னும் நக்கலாக சிரித்து,
“இது தான் நீ என்னை காதலிக்கிற லட்சணம் இல்லையா...? இதுக்கெதுக்கு இப்படி ஒரு சீன்... என் பணத்தையும் பகட்டையும் தான் நீ காதலிக்கிறன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே..” அவளின் நெஞ்சில் ஆயிரம் ஊசிக்கொண்ட ஆயுதத்தை செலுத்தினான்.
அதில் அவள் அடிபட்டு போனாலும்,
“அப்படின்னே வச்சுக்கோங்க... ஆனா உங்க ஒருத்தருடைய விருப்பத்துக்கு எங்க மொத்த பேருடைய கனவுகளையும் லட்சியங்களையும் காவு வாங்க போறீங்கன்றதை ஞாபகத்துல வச்சுக்கிட்டு மேற்கொண்டு முடிவெடுங்க...” என்றவளது பேச்சில் அவனுக்கு எரிச்சல் இன்னும் அதிகமானது...
“லுக்... எனக்கு அங்க வர விருப்பம் இல்ல... நீங்க போனா போங்க... இல்ல எக்கேடோ கெட்டு போங்க... ஆனா என்னை கட்டாயப்படுத்தாத. நான் எங்கும் வர மாட்டேன். இஷ்டம் இருந்தா இங்க ஷூட்டிங் வைங்க. இல்லையா இடத்தை காலி பண்ணு..” என்றவன் அங்கு பணி புரியும் ஆளை வர செய்து தனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து வர சொன்னவன், எதிரில் இருந்தவளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் அவன் பாட்டுக்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
அவனது குணம் தெரிந்தது தான் என்றாலும் மனம் முண்டிக்கொண்டே இருந்தது...
‘ஒரு பண்பாட்டுக்கு கூட தன்னிடம் ஏதாவது சாப்பிடுகிறாயா...?’ என்று கேளாதவனிடமே மனம் மீண்டும் மீண்டும் சரணடைந்துக்கொண்டு இருக்கும் உணர்வை கண்டு அவளுக்கே பாவமாய் தான் இருந்தது.
இதற்கு மேல் அவனை கலைக்க முடியாது என்று அறிந்து தனக்கும் ஒன்றை வரவழைத்து உண்ண தொடங்கினாள் அவனை மட்டும் தனியே உணவருந்த விடாமல்...
அப்போதும் அவனிடம் எந்த சலனமும் இல்லை... அவன் பாட்டுக்கு அவன் இருந்தான்.
உண்டுவிட்டு “கிளம்பலாமா...?” மிருதி கேட்க,
“வேலை இருக்கு நீ போ..” என்று முகத்தில் அடித்தது போல சொன்னவன் மீண்டும் எதையோ வரவழைத்து உண்டுக்கொண்டே போனை நோண்டிக்கொண்டு இருந்தான்.
அதில் அவளது மென்மையான இதயம் அடி பட்டு போனது... அதன் பிறகு அவனிடம் பேசுவது வீண் என்று அறிந்து கிளம்பிவிட்டாள்.
அவளுக்காக வெளியே நின்ற சக்தி ‘என்ன...?’ என்பது போல பார்த்தான். அவள் உதடு பிதுக்கி இல்லை என்பது போல தலையாட்ட, சக்திக்குமே கஷ்டமாய் போனது.
“சரி விடு இன்னும் ஒரு வாரம் இருக்கே பார்த்துக்கலாம்...” என்று அவளை தேற்றியவன் அவளை வீட்டில் விட்டுட்டு தன் வீட்டுக்கு வந்தான்.
தொடரும்..