தலைவன் - சினிமா இயக்குனர் மிருதன்
தலைவி - அவனின் உதவி இயக்குனர் மிருதி
மயக்கம் கொடுக்க கூடிய அந்தி பொழுதில் தன் முன் அமர்ந்து இருந்தவனை பாவமாக பார்த்துக்கொண்டு இருந்தாள் மிருதி...
அவளது பார்வை கண்டு எதிரில் இருந்த மிருத்தஞ்சயனுக்கு எரிச்சலாய் வந்தது.. ஆனாலும் வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அழுத்தம் என்றால் அப்படி ஒரு அழுத்தம்.
ஆயிரம் வார்த்தை பேச கூடிய இடத்தில் நூறு வார்த்தையாவது பேசவேண்டும்... இல்லையா குறைந்தது பத்து வார்த்தையாவது பேசவேண்டும்...
ஆனால் மிருதன் ஒத்தை வார்த்தை கூட பேசமாட்டான்... பெரும்பாலும் அவனது தலையும், கண்களும் மட்டுமே அதிகம் பேசும்..
அவனாக மனது வைத்தால் மட்டுமே அவனது இதழ்களில் இருந்து ஒத்தை வாரத்தை முத்து போல சிந்துவான்... இல்லையென்றால் வெறும் பார்வை மட்டுமே...
அவனை சுற்றி இருப்பவர்களுக்கு இந்த குணம் பிடிக்காது என்றாலும், அவனை யாரும் ஒதுக்க மாட்டார்கள்.
ஏனெனில் அவனது பழக்கங்கள் நன்முறையில் இருப்பதோடு, யாருக்கு எந்த உதவி என்றாலும் அவனால் முடிந்தவரைக்கும் உதவி செய்வான் சத்தமே இல்லாமல்.
அதனாலே அவனது நட்பை இழக்க யாரும் விரும்பவில்லை...
இதில் மிருதி மட்டும் இயல்பை தாண்டி அவனை காதலித்துக்கொண்டு இருக்கிறாள். அந்த காதலுக்கு மிருதனிடம் எந்த வித பிரதிபலிப்பும் இதுவரை இருந்தது கிடையாது...
இருவரும் ஒரு தனியார் ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். நேரடி பாட்டு மற்றும் காமெடி கலந்த ஷோவின் இயக்குனர் தான் மிருதன்.
அவனுக்கு அசிஸ்டென்ட் மிருதி மற்றும் சக்தி இவர்கள் இருவரும் தான்.
வாரத்தில் மூன்று நாள் இவர்களின் ஷோ வரும்.. இரண்டு கட்டமாக அந்த ஷோ நடைபெறுவதால் சூட்டிங் ஒரு நாளில் தொடர்ந்து இருபது மணி நேரம் நடைபெறும்.
அதை தொடர்ந்து எடுத்த காட்சிகளை வரிசை படுத்தி எடிட் பண்ணி ரிலீஸ் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.
அதில் பாதி நேரம் மிருதியிடம் தான் வெடிப்பான். அவ்வளவு கோவம் வரும்... யாரு என்ன என்று எதையும் பார்க்க மாட்டான்.
கண்ட மேனிக்கு பேசிவிட்டு அதற்காக வருந்த கூட மாட்டான். எப்பவும் அவன் வைத்தது தான் நியதி என்கிற அளவுக்கு அவனுடைய ஆட்டிடியூட் இருக்கும். உடைத்து சொல்ல வேண்டும் என்றால் ஆன்டி ஹீரோக்கான அத்தனை தகுதிகளும் அவனிடம் இருக்கும்.
பொறுமை என்பது மருந்துக்கு கூட இருக்காது... இதில் சக்தி தான் பாவம். எல்லோரிடமும் மாட்டிகொண்டு முழிப்பான்.
ஆர்டிஸ்ட் ஒரு பக்கம் என்றால், மேனேஜ்மென்ட் ஒரு பக்கம், அதோடு மிருதனின் கையாள், எடிட்டிங் மேற்பார்வை, ஸ்க்ரிப்ட் சைடும் ஒரு பார்வை பார்ப்பான். இப்படி ஓவரால் எல்லாவற்றையும் கண்காணிப்பது இவனது வேலை..
கேமரா மேன் சுதிர் மிருதனுடைய இன்னும் நெருங்கிய நண்பன்... இருவருடைய கருத்துக்களும் மிகவும் பொருந்தி போகும். அதனாலே இவன் இயக்கும் எல்லாம் நிகழ்வுகளுமே மிக பெரிய வெற்றியை தேடி தந்தது...
அதை விட அவனது மொத்த கருத்தையும் உள் வாங்கி வேலை செய்யும் மிருதியும் சரி சக்தியும் சரி இவனுக்கு இரண்டு கைகள் போல்... அவ்வளவு கச்சிதமாக வேலையை செய்து முடிப்பார்கள்.
இவர்கள் இருவரும் இல்லை என்றால் மிருதனின் வெற்றி பாதியாக தான் இருக்கும். அந்த அளவு இருவரின் உழைப்பும் மிருதனுக்காக இருக்கிறது...
பல நபர்கள் இந்த நால்வரது கூட்டணியையும் உடைக்க வேண்டும் என்று கட்டம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நொடியில் உடைந்து போகும் பனி கட்டி என்று எண்ணி இருக்கிறார்கள். ஆனால் இது என்றைக்கும் உடையாத பலம் வாய்ந்த கூட்டணி என்று அவர்களுக்கு தெரியவில்லை.
இவன் இயக்கிக்கொண்டு இருக்கும் ஒரு நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியை கொடுத்துக்கொண்டு இருந்தது...
அதை இன்னும் சிறப்பிக்கும் வகையில் தயாரிப்பாளர் அந்த குழு மட்டும் ஒரு வாரம் உல்லாச பயணமாக சென்று, அங்கேயே சூட்டும் செய்து, கொண்டாடும் வகையில் ஊட்டியிலே ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருந்தார்.