Notifications
Clear all

அத்தியாயம் 17

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

அடிக்கடி மகராவின் கண்கள் பஞ்சவனை தேடி தழுவிக் கொண்டே இருந்தது அடுத்து வந்த நாள்களில் எல்லாம். அதை கவனித்த யுவனுக்கும் தாத்தாவுக்கும் மனம் நிறைந்துப் போக பொருள் நிறைந்த பார்வையை இருவரும் பரிமாறிக் கொண்டார்கள்.

பஞ்சவன் அதை கண்டுக் கொண்டாலும் தற்பொழுது அவனுக்கு இருக்கும் பிரச்சனை அவனை இறுக்கிப் பிடிக்க எதிலும் கவனம் கொள்ள முடியாமல் போனது.

கீழே இவளுக்கு என்று தனியாக இருந்த அடுப்படிக்குள் நுழைந்து ஏதோ சமைக்கப் போக “நல்லா தான் ஆம்பிளையை மயக்க கத்து வச்சு இருக்கா... இல்லன்னா ஒன்னுக்கு ரெண்டு புருசனை கட்டிக்க முடியுமா? நமக்கு வருமாடி இந்த சாமார்த்தியம்.. நல்லா தான் வளர்த்து வச்சுருக்காங்க இவளை பெத்தவங்க... ஊர் மேயிறது எப்படின்னு பிஞ்சுளையே சொல்லிக் குடுத்து வளர்த்து விட்டு இருப்பாங்க போல” என்று நரம்பில்லாத நாக்கு பலவாறாக பேச அடுப்பை பற்ற இருந்த கை அப்படியே நின்றுப் போனது.

விழிகளில் நீர் வழிய இதழ்களை கடித்து தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டாள். எதிர்த்து பேச ஒரு நொடி ஆகாது தான். ஆனால் தன்னால் பஞ்சவனுக்கு மேலும் கெட்ட பெயர் ஆகிவிடக் கூடாது என்பதால் மௌவுனம் காத்தாள்.

அது அவர்களுக்கு தோதாகப் போய் விட எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவு அவளை அசிங்கப்படுத்தி கேவலப் படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

“ஏன் அக்கா.. ஒரு வேளை நம்ம பஞ்சவனையும் பிடிக்காம போயிட்டா இவ இன்னொரு ஆம்பளையை தேடி கட்டிக்குவாளோ?” என்று ராகமாக கேட்டாள் வனிதா.

“இருக்கும்டி... இவளுக்கு எல்லாம் ஒரு நாள் கூட ஆம்பளை சுகம் இல்லாம இருக்க முடியாது. எங்க எவன் கிடைப்பன்னு அலைஞ்சிக்கிட்டே இருப்பாளுங்க” என்று சொன்ன கவிதா,

“எனக்கு ஒரு சந்தேகம் வனிதா... இவளுக்கு ஒரு நேரத்துக்கு ஒரு ஆம்பிள்ளையோட நிறுத்திக்குவாளா இல்ல... இன்னும் ரெண்டு பேத்தை சேர்துக்குவாளா...” என்று மகராவின் ஒழுக்கத்தை எவ்வளவு தரம் தாழ்த்த முடியுமோ அந்த அளவுக்கு அவர் தரம் தாழ்த்திப் பேச பொத்தென்று சமையல் அறையில் இருந்து சத்தம் வந்தது.

ஒரு கணம் இருவரின் மனமும் அதிர்ந்துப் போய் ஒருவரை ஒருவர் திருதிருவென்று பார்த்துக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தார்கள்.

உள்ளே மகரா தரையில் வீழ்ந்துக் கிடந்தாள். அதை நடிப்பென்று எண்ணியவர்கள்,

“ரொம்ப தான் அக்கா நடிக்கிறா” என்று சொன்னாலும் உள்ளுக்குள் ஒரு உதறல் இருக்கவே செய்தது.

“இந்த விசயம் மட்டும் பஞ்சவனுக்கு தெரியவந்தால் தங்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவான்.. அதோடு தங்களின் கணவன் மார்களே தோளை உரித்து உப்புக் கண்டம் போட்டு விடுவார்கள் தான். ஆனால் தங்களை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்த வைத்துவிட்டவளின் மீது அளவுக்கு மீறி ஆத்திரம் இருக்கிறதே.. அதை எப்படி வெளிப்படுத்துவது.

இப்படி அசிங்கமாக பேசி அவளை கூனி குறுக வைத்து அவளின் நடத்தையை கேள்விக்குறியாக்கி அவளின் மனம்  நொந்துப்போகும் அளவுக்கு வைத்தால் தான் இவர்கள் இருவருக்கும் இரண்டு வாய் சோறே உள்ளுக்குள் இறங்குகிறது. கொஞ்சமேனும் திருப்தியாக உணர்கிறார்கள் இருவரும்.

மயக்கத்தில் இருந்தவளை தட்டி எழுப்பி விட மனம் வராமல் அவளின் அருகில் போய் நின்று ஏளனமாக பார்த்த இருவரும்,

“இவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்... வாடி போகலாம்” என்று வனிதாவை கூட்டிக்கொண்டு வெளியே போய் விட்டாள் கவிதா.

நீண்ட நேரமாகியும் மகரா வராமல் போக பஞ்சவன் யோசனையாகி கீழே வந்தான். அந்த நேரம்,

“மகரா மகரா...” என்று பாட்டியின் அலறல் குரல் கேட்க வேகமாய் குரல் கேட்கும் இடத்துக்கு வந்தான் பஞ்சவன். அங்கே தரையில் அசையா ஓவியமாய் கிடந்தவளை கண்டு பதறிப் போனவன், வேகமாய் அவளை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான்.

“என்ன பாட்டி ஆச்சு...? இவ ஏன் இப்படி மயக்கம் போட்டு விழுந்து இருக்கா...?” என்று கேட்டுக் கொண்டே அவரின் கையில் இருந்த சொம்பில் இருந்து நீரை அள்ளி அவளின் முகத்தில் சற்று போர்சாக அடித்தான்.

மெல்ல அவள் கண்களின் கருவிழி மட்டும் அசைந்தது. ஆனால் அவளால் கண்களை திறக்கவே முடியவில்லை.

“மகரா மகரா...” என்று அவளின் கன்னத்தைப் பிடித்து தட்ட மெல்ல அவள் கண்களை விழித்தாள். விழித்தவளின் கண்கள் அப்பட்டமாய் சிவந்துப் போய் இருந்தது.

“என்னம்மா ஆச்சு...? ஏன் மயக்கம் போட்டு விழுந்த?” என்று பாட்டி பதறிப் போய் கேட்டார்.

“என்னடி ஆச்சு...? உடம்புக்கு என்ன ஆச்சு...? மருத்துவர் கிட்ட போகலாமா? வரவர நீ ரொம்ப வீக்கா இருக்கடி.. உன்னை நீ கேரே பண்ணிக்க மாட்டிக்கிற..” என்று தவித்துப் போனான்.

அவனது தவிப்பில் கண்கள் கலங்கியவள் வேகமாய் அவனை கட்டிக்கொள்ளத் தோன்றியது. ஆனால் அதை செய்ய முடியாமல் அவளின் மனம் தவிக்க அவனது மடியில் இருந்து எழுந்துக் கொண்டாள் பெண்ணவள். ஏனோ அவனை நேருக்கு நேர் பார்ப்பது கூட இனி சிரமம் என்று அவளுக்கு நன்கு புரிந்துப் போனது.

அவனிடம் சொல்லி அழ அவளின் பெண்மனம் தவியாய் தவிக்க அதை செய்ய விடாமல் அவளது தன்மானம் தடுத்தது.

“இல்ல எனக்கு ஒன்னும் இல்ல... கொஞ்சம் டையர்டா இருந்தது.. அது தான்” என்று சொல்லி சமாளித்தவள் யாரின் முகத்தையும் பார்க்காமல் மேலே பஞ்சவனின் அறைக்குப் போய் விட்டாள்.

வாய் விட்டு அழவேண்டும் போல இருந்தது. ஆனால் பஞ்சவனை வைத்துக் கொண்டு அவளால் அழக்கூட முடியாதே... தன் அழுகையை பார்த்தால் அவன் மீண்டும் இந்த வீட்டினரிடம் சாமியாடி விடுவான் என்று புரிந்து தன் அழுகையை அடக்கிக் கொண்டாள்.

அவள் அழுது இருந்தால் கூட கொஞ்சம் வலிக்காமல் இருந்து இருக்கும். ஆனால் அவள் அழுகையை அடக்கி இருக்க அவளின் தொண்டையும் நெஞ்சும் வலியில் கனத்துப் போய் இருந்தது.

மூச்சு விடவே சிரமமாய் இருந்தது. எப்போதடா இந்த வீட்டை விட்டு போகலாம் என்கிற நிலையில் இருந்தாள். அவளின் உள்ளம் உளைக்கலாமாக கொதித்துக் கொண்டு இருந்தது. தன் ஆதரவுக்கு பிள்ளைகளை அணைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

இங்கே பஞ்சவனோ மிகுந்த கவலையில் ஆழ்ந்துப் போனான். “என்ன ஆச்சு பாட்டி இவளுக்கு... ஏன் இவ்வளவு அனிமிக்கா இருக்கா.. ரெண்டு பிள்ளைக்கு பால் கொடுக்கணும்ல... அவளை கொஞ்சம் கவனிச்சா தானே உடம்பு கொஞ்சமாச்சும் தேறும். இப்படி பண்ணிட்டு இருக்கா... அவளுக்கு அவ கொஞ்சம் கூட கேரே எடுத்துக்க மாட்டிக்கிறா” என்று அவன் தவித்துப் போனான். .

“எனக்கும் தெரியல ய்யா... நானும் இப்போ தான் வந்துப் பார்த்தேன். மகரா மயங்கி கீழே விழுந்து இருந்தா. பதறிப் போயிட்டேன்.. அவ அவளை கவனிச்சிக்குறாளோ இல்லையோ இனி நீ அவளை கொஞ்சம் கவனிச்சுக்க ராசா. அந்த பிள்ளைக்கு உன்னை விட்டா வேற யாரும் இல்ல ய்யா” என்றார் மகராவின் மீது உண்மையான பாசம் கொண்ட விசாலாட்சி.

“ம்ம்ம்... சரிங்க பாட்டி” என்று சொன்னவனுக்கு என்னவோ மனமே இல்லை. மகராவின் ஓய்ந்துப் போன தோற்றமே அவனின் கண்முன் வந்துப்போனது.

“யுவன் அப்பப்போ மகராவை கொஞ்சம் கவனி” என்று அவனிடம் சொல்லி விட்டு தாத்தாவின் காதிலும் விசயத்தை போட்டு வைத்து விட்டு தன் வேலையில் முக்கியமாக கவனத்தை திருப்பி விட்டான்.

இன்றைய இரவு ஊருக்கு திரும்ப வேண்டும்... மகராவுக்கு அப்பாடி என்று இருந்தது. இவ்வளவு நாளும் மூச்சே விட முடியாத நிலையில் தான் இருந்தாள். எப்போதடா தன் வீட்டுக்கு போகலாம் என்று ஆகி இருந்தது அவளுக்கு.

அப்படி என்ன வைத்து விட்டார்கள் பஞ்சவனின் வீட்டு ஆட்கள். தாத்தா பாட்டியிடம் விடை பெற்று வாடகை காரில் மூவரும் இரு பிள்ளைகளுடன் ஏறிக்கொண்டார்கள்.

தாத்தாவுக்கு தான் பஞ்சவனை ஊருக்கு அனுப்பவே மனம் வரவில்லை. ஆனால் அவன் போய் தானே ஆகவேண்டும். அதனால் அவர் எதுவும் சொல்லவில்லை.

வழிநெடுக எதுவும் பேசவில்லை. பிள்ளைகளை கவனிப்பதில் மட்டும் மகரா கவனத்தை வைத்தாள். பஞ்சவனை அவள் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. எதற்கு இந்த மனம் இப்படி அலைப்பாய்கிறது என்று அவளின் மனதையே அவள் நிந்தித்துக்கொண்டாள்.

ஆனால் பலன் என்னவோ பூசியம் தான். பள்ளம் கண்ட நீராய் அவனை தேடி நாடியே ஓடியது பெண்ணவளின் மனது. அந்த உண்மை அவளுக்கு வேம்பென கசந்தது.

பஞ்சவன் திரும்பி அவளை பார்த்தான். அவளின் பார்வையை உணர்ந்தவள் சத்தமில்லாமல் பெருமூச்சு விட்டு கண்களை அழுந்த மூடிக் கொண்டாள். அவனை ஏறிட்டுப் பார்க்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை.

நாளைக்கு மீட்டிங் இருக்கு. இந்த ஒரு வாரம் செய்து இருந்த வேலைகளை நாளைக்கு சப்மிட் செய்து நிறைக்குறைகளை எல்லாம் சரி செய்ய வேண்டி இருந்தது.

அடுத்த ஒரு வாரத்துக்கு செய்ய வேண்டிய வேலைகளையும் பட்டியல் போட்டு டவுட் கிளியர் பண்ணி என அன்றைய நாளே ஓடிவிடும். அந்த நாள் முழுவதும் அவனின் பார்வையில் தான் இருக்க நேரிடும் என்று எண்ணியவளுக்கு அவனின் அருகாமை நெருப்பை போல சுட்டது.

விடியும் வேளையில் வீடு வந்து சேர்ந்தார்கள். மகரா அவளது வீட்டுக்குள் நுழைந்து கதவை சாற்றிக் கொண்டாள். அதில் பஞ்சவனுக்கு புருவம் சுருங்கிப் போனது.

அவனின் பின்னாடி வந்த யுவன்,

“என்ன மச்சான்” என்று கேட்டான்.

அவனிடம் தன் எண்ணத்தை பகிராமல்,

“நத்திங்” என்றுவிட்டு தன் மகளோடு தங்களின் வீட்டுக்குள் நுழைந்துக் கொண்டான்.

வீட்டின் உள்ளே நுழைந்த மகராவுக்கு கத்தி அழவேண்டும் போல் இருக்க தூங்கும் பிள்ளையை அலுங்காமல் தொட்டிலில் போட்டவள் குளியல் அறைக்குள் நுழைந்து ஷவரை திறந்து விட்டு அதனடியில் மணிக்கணக்காக நின்று தன் துக்கம் துயரம் தீரும்வரை அழுதுக்கரைந்தாள்.

ஆற்றுவார் தேற்றுவாரின்றி அவள் அழுத அழுகையை கல் மனம் கொண்ட யாரவது ஒருவர் பார்த்து இருந்தால் அவர்களின் நெஞ்சுக்கூட ஒரு கணம் கனதுப்போகும். அந்த அளவுக்கு அவள் அழுது தீர்த்தாள்.

அழுது தீர்த்து குளித்து வெளியே வந்தவள் மணியை பார்த்தாள். மணி எட்டை கடந்து இருக்க நொந்துக் கொண்டவள் வேகமாய் குழந்தையை எழுப்பி கிளப்பியவள் கதவை திறக்க அங்கே எதிரில் பஞ்சவன் மகளோடு நின்று இருந்தான்.

சட்டென்று பிள்ளை அவளிடம் தாவ தன் கையில் இருந்த பிள்ளையை உள்ளே படுக்க வைக்கப் போக அவளை நிறுத்தி தன் கையில் வாங்கிக்கொண்டான்.

கதவை தாழிட அவளின் உள்ளம் முரண்ட அதை செய்யாமல் அறைக்குள் நுழைந்து அந்த கதவை மற்றும் சாத்திக் கொண்டு மகளை கவனித்தவள் வெளியே வந்தாள்.

வந்தவள் கூடத்தில் பிள்ளையோடு அமர்ந்து இருந்த பஞ்சவனின் கண்களை பார்க்காமல் அவளிடம் மகளை நீட்டியவள், தன் மகனுக்காக அவளிடம் கையை நீட்டினாள்.

தன் கண்களை பார்க்க மறுக்கும் பெண்ணவளின் மீது கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது... ஆனால் பொறுமையாக போக அவனின் மனம் எடுத்துரைக்க இழுத்துப் பிடித்த பொறுமையுடன் இருந்தான் பஞ்சவன். ஆனால் அவனின் பொறுமை பறக்கும் அளவுக்கு மகராவின் அடுத்தடுத்த செயல்கள் இருந்தது.

“கிளம்பி இரு.. நான் அலுவலகம் போகும் பொழுது உன்னையும் கூட்டிட்டு போறேன். பிள்ளையை க்ரஷில் விட வேண்டாம். யுவன் வீட்டில் தான் இருக்கிறான். அதோட கேர்டேக்கருக்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறேன். அவங்க ரெண்டு பேபியையும் பார்த்துக்குவாங்க” என்று விட்டு அவன் மகளோடு அவனது வீட்டுக்குப் போய் விட்டான்.

போகும் அவனையே தொண்டையடைக்கப் பார்த்தவள் கலங்கிய விழிகளை கட்டுப் படுத்திக்கொண்டு தன் ஸ்கூட்டியில் அலுவலகத்துக்கு கிளம்பி விட்டாள். பேபி பேக்கில் பிள்ளையையும் சுமந்துக் கொண்டு அவள் போக போனவளை வெறித்துப் பார்த்தான் பஞ்சவன்.

பஞ்சவன் அவ்வளவு தூரம் சொல்லியும் திமிரெடுத்துப் போய் போனவளின் மீது கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது... அது அலுவலகத்தில் மகராவின் மீது நன்றாகவே எதிரொலித்தது.

Loading spinner
Quote
Topic starter Posted : July 27, 2025 9:23 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top