“ஒரு பிஞ்சு பிள்ளைக்கு உணவு குடுக்க மனசு வரல. ரெண்டு பிள்ளைக்கு பால் கொடுக்கணும்.. பச்சை உடம்புக்காரின்னு கூட நினைக்காம என் பொண்டாட்டிக்கு சோறு குடுக்கல.. ரோட்டுல படுத்து இருக்கிற ஒரு ஏழை கூட இவ்வளவு கல்நெஞ்சமா இருக்க மாட்டாங்க. அவங்க கூட இல்லன்னு போய் நின்னா அவங்க கிட்ட இருக்கிறதை குடுப்பாங்க. ஆனா நீங்க...” என்று கண்கள் சிவக்க தன் குடும்பத்தை நிற்க வைத்து விளாசி தள்ளினான்.
“அது தெரியாம..” என்று சித்தப்பா வர,
“எது தெரியாம செய்தது... அவ பச்சை உடம்பு காரின்னு தெரியாதா? இல்ல ரெண்டு பிள்ளைக்கு பசியாற்றுவது தான் தெரியாதா? சரி அது தெரியாமலே போகட்டும். நான் தாலி கட்டி தானே அவளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். ஒரு மருமகளா கூட அவளை நீங்க பார்த்து இருக்க வேணாம். ஒரு சக மனுசியா நீங்க அவளை பார்த்து இருந்து இருக்கலாம் இல்ல... இந்த வீட்டுக்கு வந்து மூணு நேரம் ஆகிப்போச்சு. ஒரு வாய் அவளை சாப்பிட கூப்பிட்டீங்களா? இல்ல சாப்பிடுன்னு தான் சொன்னீங்களா?” என்று கோவத்துடன் கேட்டவன்,
“சரி அதை கூட விட்டுடலாம்... நீங்க யாரும் கூப்பிட வேணாம். ஆனா அவளா தானே சாப்பிட வந்தா... சாப்பிட விட்டு இருந்து இருக்கலாம்ல.. அப்படி என்ன அவ பண்ணிட்டா உங்களுக்கு. பசி எடுத்து சாப்பிட வந்தவளை அவ்வளவு பேசி வேதனை படுத்தி அனுப்பி இருக்கீங்க... அசிங்கம்மா இல்ல.. உங்களை எல்லாம் என் உறவுன்னு சொல்லிக்க எனக்கு வெட்கமா இருக்கு” என்று அம்மா சித்தி இருவரையும் அருவெறுப்புடன் பார்த்தான்.
“என் வருமானத்துல என் பொண்டாட்டி சாப்பிட கூடாதுன்னு நீங்க யாரு முடிவு பண்றது. நான் முடிவு பண்ணனும். இத்தனை வருடமா ஏன் எதுக்குன்னு உங்களை ஒரு சொல் கேள்வி கேட்டது இல்லை. கேட்கிற பணத்தை அப்படியே கொடுத்தேன். ஏன் அதை விட அதிகமா தான் செலவு செய்து இருக்கேன். ஆனா இனி என்னால அப்படி செலவு செய்ய முடியாது..”
“அதனால உங்க உங்க செலவை நீங்களே பார்த்துக்கோங்க.. என்னக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. என் குடும்பத்தை பார்க்காத உங்களுக்காக நான் மட்டும் ஏன் செலவு செய்யணும். செய்ய முடியாது” என்று நித்தட்ச்சயமாக மறுத்து விட்டான் பஞ்சவன்.
“பஞ்சவா... தம்பி... ராசா... அண்ணா” என்று பலதரப்பட்ட குரல். அவன் எதற்கும் செவி சாய்க்கவில்லை.
“எனக்குன்னு ஒரு குடும்பம் ஆகிடுச்சு.. இனி நான் அதை பார்க்கணும். ஏற்கனவே ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க.. இதுல அடுத்த பிள்ளையும் பிறந்தா அவங்களுக்கு எல்லாம் நான் எப்படி சேர்த்து வைக்கிறது.. என் பிள்ளைங்களுக்குன்னு நான் எதையாவது கொடுக்கணும் இல்ல. அதோட என் பொண்டாட்டிக்கு நான் ஏதாவது குடுக்கணும் இல்ல. அதனால இப்போதுல இருந்து உங்க செலவை நீங்க பார்த்துக்கோங்க” என்று கூறி எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டான் பஞ்சவன்.
படியில் நின்று கேட்டுக் கொண்டு இருந்தவளுக்கு கண்களில் கண்ணீர் தளும்பி விட்டது. தனக்காகவா இவ்வளவு கோவம்.. நான் இன்னைக்கு வந்தவள் தானே... என்று அவள் உருகிப் போனாள்.
விருட்டென்று அவள் மேல போய்விட்டாள். அவளால் பஞ்சவனின் அன்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு நாட்களாய் இறுக்கமாய் இருந்த அவளின் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் இளகியது. பட்டென்று அவன் மலையளவு கொடுத்த அன்பை அவளால் தாங்க முடியவில்லை. என்னவோ நெஞ்செல்லாம் அடைத்துக் கொண்டு வந்தது.
வாய் விட்டு அழ வேண்டும் போல ஒரு உணர்வு. பிள்ளையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் அவளையே ஆதாரமாக கொண்டு பிள்ளையின் கழுத்தில் அழுந்தாமல் முகம் புதைத்துக் கொண்டாள் மகரா.
சத்தமில்லாமல் ஒரு அழுகை. அவளின் தோளை ஒரு முரட்டு கை தொட அழுது சிவந்துப் போன முகத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.
பஞ்சவன் தான் நின்றிருந்தான். அவளது கண்ணீரை துடைத்தவன்,
“தனியா கிட்சன் ஒன்னு ரெடி பண்ண சொல்லி இருக்கேன். யுவன் போய் பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்திடுவான். உனக்கு ஓகே தானே” என்று கேட்க அவனை தாவி வந்து கட்டிக் கொள்ள மனம் பரபரத்தது.
ஆனால் அதை செய்ய இயலாமல்,
“எனக்காக உங்க குடும்பத்தை பகைச்சுக்க வேணாம் சார்... நான் எப்போ வேணாலும் போயிடுவேன்” என்றாள் நிதர்சனத்தை உணர்ந்து.
அதில் ஒரு கணம் பஞ்சவன் விழிகளை மூடி திறந்தான். தன்னை தானே கட்டுப் படுத்திக் கொள்கிறான் என்று புரிய சொல்வதை சொல்லி தானே ஆகணும் என்று அவள் எண்ணினாள்.
“அதை பிறகு பார்த்துக்கலாம்.. என்னை நம்பி வந்தவ நீ... என்கூட இருக்கிறவரை நீ என்னோட பொறுப்பு... உன் சுக துக்கம் அனைத்தும் என்னோட சேர்ந்தவை மகரா..” என்றான் அழுத்தமாய். அவள் விழி அகற்றி அவனை பார்த்தாள்.
“இன்னொன்னு நான் உனக்கு தாலி கட்டி இருக்கிறேன்” என்றான் அடிக்குரலில்.
“அதுக்கு” என்று உள்ளடங்கிப் போன குரலில் கேட்டாள்.
“இந்த சார் மோர் இதெல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ஒழுங்கா முன்னாடி கூப்பிட்டல்ல அது மாதிரி என்னங்கன்னு கூப்பிடு. அது பிடிக்கலன்னா மாமான்னு கூப்பிடு” என்றான்.
“ஹாங்” என்று அவள் அதிர்ந்துப் போனாள்.
“மாமான்னு கூப்பிட உனக்கு சங்கடமா இருக்கும். அதனால என்னங்கன்னே கூப்பிடு. கூப்பிட்டு தான் ஆகணும்” என்றான் கட்டளையாய்.
“நான் கூப்பிடலன்னா என்ன பண்ணுவீங்க?” ஏனோ அவனது கோவத்தை பார்க்க அவளது மனம் விளைந்தது.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “கூப்பிட வைப்பேன்” என்றான் அலட்டிக் கொள்ளமால். அதில் சற்றே ஜெர்க்கனவள் அவனை வம்பிழுக்காமல் பிள்ளையோடு அமர்ந்துக் கொண்டாள்.
“பேபிக்கு இப்போ பசியாற்றணுமே..” என்றான் கேள்வியாய்.
“ம்ம் ரெடியாகிடுச்சு” என்றாள் சங்கடமாக.
“ஓகே.. முதல்ல அன்புக்கு குடு” என்று தன் மகளை வாங்கிக்கொண்டான்.
“இல்ல அவன் சாப்பிட்டுட்டான். பாப்பாவுக்கு தான் பீட் பண்ணனும். என்கிட்டே குடுங்க” என்றாள்.
“ஆனா அவன் உன்னை தேடுனானே..”
“அது பார்த்துக்கலாம்” என்றவள் மகளை வாங்கிக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து விட்டாள்.
“நான் போய் அவனை கூட்டிட்டு வரேன்.. அதுக்கு முன்னாடி கொஞ்சம் சாப்பிடு” என்றான்.
“ம்ம்” என்றாள்.
பஞ்சவன் கீழே வந்து மகனை வாங்கிக்கொண்டு யுவனிடம் சில விசயங்களை எல்லாம் சொல்லி அதற்கு எல்லாம் ஏற்பாடு செய்ய சொன்னான். அவனும் கிளம்பி விட்டான் கடைக்கு.
இங்கே மேலே வந்தவன் யுவன் வாங்கி வந்த பைகளில் இருந்த பழங்களை எல்லாம் எடுத்து வெளியே வைத்தான். அன்பு பழத்தை கைக்காட்ட,
“பழம் கேட்கிறான் குடுக்கவா மகரா?” கேட்டான் பஞ்சவன்.
“இல்லங்க கொஞ்ச நேரம். பாப்பாவை கவனிச்சுட்டு அவனை வாங்கிக்கிறேன்” என்றாள். அவளுக்கு மனம் ஆறவே இல்லை. பிள்ளை கேட்டு பிள்ளைக்கு கொடுக்க முடியாமல் போனதில் பெரும் வருத்தம். எனவே அவனை அள்ளி எடுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டால் தான் அவளுக்கு நிம்மதியாகும்.
அதென்னவோ பிள்ளைகள் கேட்டு கொடுக்க முடியாமல் போனால் ஒவ்வொரு தாய்க்கும் எவ்வளவு வேதனை ஆகுமோ அதை விட அதிக வேதனை கொண்டாள் மகரா. வேறு எதுவும் என்றால் கூட சரி போ என்று விட்டு விட்டு இருப்பாள்.
ஆனால் பிள்ளை பசி என்று அவளிடம் அழுதது அவளின் நெஞ்சை அறுத்துப் போட்டு இருந்தது. அதனால் அவனை அள்ளி எடுத்து அரவைணைத்து தன் மார்போடு சேர்த்த பிறகு தான் அவளுக்கு அவளின் தாய்மையே நிறைவானது போல ஆகும்.
பழத்தை கொடுத்து விட்டால் தன்னிடம் பசியாற மாட்டான் என்று அவள் சொல்ல அவளின் தாய்மையை புரிந்துக் கொண்டான்.
“நீ ஒரு நல்ல அம்மா” என்றான் பஞ்சவன்.
“நீங்களும் நல்ல அப்பா” என்றாள் இவள். மந்தகாசமாய் சிரித்தான்.
“பாப்பாவை என்கிட்டே குடுத்துட்டு இவனை கவனி” என்றான்.
“ம்ம்” என்றவள் மகளின் வயிறு நிறைந்துப் போன பிறகே அவனிடம் கொடுத்தாள். மகனை வாங்கி அவனை கவனிக்க அவனும் அவனது முந்தைய தேடல் அவனுக்கு கிடைத்து விட அமைதியாகி விட்டான்.
பஞ்சவன் மகரா இருவரும் ஒரே அறையில். படுக்கையில் எப்படி என்று அவள் தவிக்க,
“பிள்ளைக்களுக்கு தொட்டில் வாங்கியாச்சு” என்று இரு தொட்டிலை காட்ட,
“இல்ல அன்புவை என் கிட்ட போட்டு தான் படுப்பேன்” என்றாள் தவிப்பாக.
“ஓ... சரி” என்றவன் தொட்டிலை எல்லாம் மடக்கி வைத்து விட்டு பெரிய படுக்கையை பார்த்தான். பெரியவர்களே ஐந்து பேர் தூங்கும் அளவுக்கு இருந்தது.
“உனக்கு ஓகே தானே” என்று அவன் கேட்க,
“ம்ம்” என்று விட்டு மகனோடு இவளும் ஒரு ஓரம் படுத்துக் கொள்ள,
அவனும் மகளோடு படுத்துக் கொண்டான்.
இடையில் இரு பிள்ளைகளின் பசியையும் போக்கிவிட்டு அசந்து தூங்கினாள். இரவெலாம் அவள் கண் விழிக்க, பாவமாகப் போனது பஞ்சவனுக்கு.
ஒரு பிள்ளை என்றால் ஓரளவு தூங்கலாம். இங்கே இரு பிள்ளைகள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவள் கண் விழிக்க வேண்டி இருந்தது.
அதனால் காலையில் அவள் அசந்து தூங்குவதை பார்த்தவன் அவளை கலைக்கவில்லை. நன்றாக தூங்கட்டும் என்று விட்டுவிட்டான்.
யுவன் எப்பொழுதும் போல பஞ்சவன் ஒதுக்கி இருந்த சமையல் அறையில் காலை உணவை பிள்ளைக்கும் அவர்கள் மூவருக்கும் செய்து வைத்தான். அன்பு முழித்து இருக்க அவனை மட்டும் தூக்கிக்கொண்டு கீழே வந்தவன் யுவன் சமைத்து வைத்ததை எடுத்து ஊட்ட ஆரம்பித்து விட்டான்.
பாட்டி வந்து வாங்கிக்கொள்ள பார்க்க,
“வேணாம் பாட்டி நானே ஊட்டுறேன்” என்று அவனே மகனுக்கு ஊட்டினான். அவனுக்கு அருகில் தாத்தா அமர்ந்துக் கொண்டார்.
பேரனிடமும் கொள்ளு பேரனிடமும் அவர் பேசிக் கொண்டு இருந்தார். அவருக்கு சத்துமாவு கஞ்சி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அவர்களோடு தானும் பேசியபடி குடித்தார்.
“தாத்தா வயக்காட்டுக்கு போகணும்” என்றான்.
“நானும் வரேன் பஞ்சவா. என் நிலத்தை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” என்றார்.
“உங்களால எப்படி தாத்தா” என்று அவன் தயங்க,
“நிலத்தை பார்த்தாலே நான் இன்னும் தெளிஞ்சிடுவேன் பஞ்சவா” என்றார் ஆசையாக.
அவரின் ஆசை புரிய, “சரி வாங்க போகலாம்.. ஆனா இப்ப இல்ல. மகரா எழுந்துக்கட்டும். அவ வந்த பிறகு அவளையும் கூட்டிக் கொண்டு போகலாம்” என்றான்.
அதன் பிறகு உண்டுவிட்டு மகராகவுக்கு காத்திருக்க அவள் பிள்ளையின் சத்தத்தில் தான் எழுந்தாள்.
“அச்சோ எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்...” என்று பதறியவள் அவசர அவசரமாக தன்னை சுத்தம் செய்துக் கொண்டு பிள்ளையை கவனித்து குளித்து கீழே வர அவளை அமரவைத்து உணவு கொடுத்தான் பஞ்சவன்.
அவள் திகைத்துப் பார்த்து அவனை மறுக்க,
“நீ என் கூட இருக்கிற வரை உனக்கு நான் செய்வேன். என்னை மறுக்கணும்னு நினைக்காத தோத்து போயிடுவ மகரா. அதோட எல்லாத்தையும் மறுக்கணும்னு அவசியம் இல்லை. சிலதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் வாழ்க்கை” என்றான் நிதானமாய். அதில் அவள் விக்கித்துப் போனாள்.
“என்ன பார்வை ஒழுங்கா சாப்பிடு” என்றவன் அவளை சாப்பிட விட்டுட்டு பழச்சாறு போட போய் விட்டான்.
பஞ்சவனின் நடவடிக்கையை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த வீட்டு பெண்களுக்கு பத்திக் கொண்டு வந்தது. நேற்று இரவு அவர்களின் கணவன்மார்கள் கவனித்த விதம் அப்படி.