Notifications
Clear all

கதை முன்னோட்டம்

 
Admin
(@ramya-devi)
Member Admin

கதை தலைப்பு - முத்தமிட்ட சுவடுகளில் எல்லாம் உன் நினைவே...

 

கதை முன்னோட்டம்

 

தலைவன் – விக்ரமசேனன்

தலைவி – நறுமுகை

 

“முகூர்த்தத்துக்கு நாழியாகிறது பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ.” குரல் கொடுக்க உறவு பெண்கள் புடைச்சூழ மணப்பெண்ணான நறுமுகையை அழைத்துக்கொண்டு வந்து விக்ரமசேனன் அருகில் அமரவைத்தார்கள்.

நறுமுகை பெயருக்கு ஏற்றார் போலவே மனம் வீசும் மனதைக் கொய்யும் பண்புடைவயவள். தேவதை போல இருந்தாள் விக்ரமசேனன் வாங்கி கொடுத்த கூரை புடவையில்.

ஓரக்கண்ணால் தன் அருகில் அமர்ந்து இருந்தவனைப் பார்த்தாள். அமர்ந்து இருந்த பொழுதே அவனது உயரம் நன்கு தெரிந்தது. கூன் விழாத முதுகு, நரம்பு புடைத்துக்கொண்டு தெரிந்த அவனது கரம், கருமை என்றாலும் கம்பீரமாய் தெரிந்த அவனது தீர்கமான முகம் எல்லாமே அவளை வசீகரித்தது. அதோடு அவனது தோற்றமே சொல்லியது காவலன் என்று. உள்ளுக்குள் பயம் எழுந்தது.

தான் வந்து இவ்வளவு நேரம் ஆகியும் அவன் திரும்பி கூட பார்க்கவில்லையே என்று அவனை பார்க்க அவனோ கருமமே கண் என்று அய்யர் சொன்னதைச் செய்துக் கொண்டு இருந்தான்.

லேசாய் அவள் மனம் வாடிப்போனது. எல்லா மணப்பெண்களுக்கும் இந்த ஒரு நாளை மனதில் நிலை நிறுத்திக்கொள்ள பல சுவையான சம்பவங்கள் இருக்கும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லாமல் போக மனதில் ஒரு வெற்று இடம் உருவானது.

இருவருக்கும் நிச்சயம் ஆன பொழுது கூட அவளது விரலை பற்றி மோதிரம் போட்ட தோடு சரி, அவளது கண்களை கூட அவன் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அதன் பிறகு ஒரு நாள் அவளது போன் லைனில் வந்தான். ஒரு ஹலோ கூட சொல்லவில்லை. எடுத்த எடுப்பில்,

“உனக்கு எதுவும் என்கிட்டே பேசணுமா?” என்று கேட்டான் அதிரடியாய். அதில் அவள் திருதிருவென்று முழிக்க,

“உன்கிட்ட தான் பேசுறேன். என்கிட்டே உனக்கு ஏதாவது சொல்லணுமா? இல்ல பேசணுமா?” என்று சற்றே முரட்டு தனமாக கேட்டான் விக்ரமசேனன். அவனது இந்த அதிரடியில் திகைத்துப் போனவள்,

“அப்படியெல்லாம் எதுவும் இல்லங்க” என்று தட்டுத்தடுமாறி இவள் சொல்ல, “அப்போ ஓகே. கல்யாணத்துல மீட் பண்ணலாம்” என்று வைத்துவிட்டான்.

அவ்வளவு தான் அவன் இது வரை பேசியது. இப்போது கூட எதுவும் பேசவில்லை. நேர்கொண்ட பார்வை தான் அவனிடம் இருந்தது. யாருக்கும் தலையை கூட அசைக்கவில்லை. முகத்தில் புன்னகை இல்லை. அழுத்தமாக அமர்ந்து இருந்தான்.

மங்கல மேளம் ஒலிக்க, பெரியவர்கள், வந்தவர்கள், உற்றவர்கள், உறவினர்கள், நண்பர்கள், சொந்தங்கள், பந்தங்கள் என எல்லோரும் அட்சதைப் போட்டு வாழ்த்துக் கூற பெண்ணவளின் கண்களை பார்க்காமலே அவளுக்கு தாலி கட்டினான் கடமைக்கு என்று.

நறுமுகை நிமிர்ந்து அவனது முகத்தை தான் பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்தும் கூட அவன் அவளது பக்கம் அசையக்கூட இல்லை. அவளை சுற்றி நெற்றி வகிட்டில் பொட்டு வைத்தவன் கடமை முடிந்தது போல விலகி அமர்ந்துக்கொண்டான்.

புகைப்படம் எடுக்கும் பொழுது கூட பெரிதாக எந்த ஒத்துழைப்பும் அவன் தரவில்லை. “மேடம் மேல கை போட்டு நில்லுங்க சார்.” என்று சொன்னது தான் கேமரா மேனின் முகத்தை உடைக்கும் அளவுக்கு அவனை முறைத்து பார்த்தான் விக்ரமசேனன்.

அதில் உஷாரான கேமரா மேன் தன் முகத்தை காப்பத்திக் கொள்ள எண்ணி விக்ரமசேனனின் போக்கிலே விட்டுவிட்டான்.

“டேய், இது உன்னோட கல்யாணம்டா. இதுக்காவது சிரிச்ச முகமா இருக்கலாம்ல” காதோரம் விக்ரமனின் உயிர் நண்பன் கெஞ்சிக்கொண்டு இருந்தான்.

அதற்கும் அவன் முறைக்க, “ராசா நீ சிரிக்கலன்னா உன் அப்பா என்னை தான்டா முறைக்கிறாரு. கல்யாணத்துக்கு கூட இப்படி சிரிக்க மாட்டேன்னு நீ அடம் பண்றது கொஞ்சம் கூட சரியில்ல. பாவம் பாரு சிஸ்டர் முகம் வாடி போயிடுச்சு. உங்கப்பா வேற கையில கட்டையோட என்னை துரத்தி துரத்தி அடிக்கிறாரு” என்று சொல்ல அதற்கும் அதே முறைப்பை தான் கொடுத்தான்.

“இல்ல மச்சான் நான் என்ன சொல்லவற்றேன்னா.” ஆரம்பிக்கும் போதே, “மூடிட்டு போடா” என்று அடி குரலில் உறுமினான். அவ்வளவு தான் தீபன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்துக்கொண்டான்.

அதற்கும் சேர்த்து விக்ரமனின் அப்பா மணியிடம் மாட்டி நொந்து நூடில்ஸ் ஆனான். அவர் விக்ரமனிடம் ஏதாவது பேச வேண்டும் என்றால் இவனிடம் தான் பேசுவார். இவன் மூலம் தான் தன் கோவத்தையும் விக்ரமனிடம் காட்டுவார்.

மணி சொல்வதை விக்ரமனிடம் சொல்லும் தூது புறாவாக தான் இவ்வளவு நாளும் தீபன் இருக்கிறான். இப்பொழுதும் அப்படி தான். அவர் சொன்னதை வந்து இங்கு சொல்ல அவரை விட அதிகம் முறைத்து வைத்தான் இவன். சில நேரம் சரமாரியாக அடிகளும் விழும். அப்பன் மகன் இருவரிடமும் மாட்டிக்கொண்டு முழிக்கிறான்.

விக்ரமன் பல்லைக்கடித்து உருமியனுப்ப தீபன் அவனது கண்ணில் படாமல் ஒளிந்துக் கொண்டான். இல்லை என்றால் இவனது கடவாய் பல் தான் உடையும். அதற்கு பெட்டர் முன்னெச்சரிக்கையாக யாரின் கண்ணிலும் படாமல் ஒளிந்துக்கொண்டான்.

மேற்கொண்டு சடங்குகள் ஆரம்பமாக அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் கடுப்புடன் அமர்ந்து இருந்தான் விக்ரமசேனன். சடங்குகள் வேறு வகை வகையாக இழுத்துக்கொண்டே போக ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல்,

“ஜஸ்ட் ஸ்டாப். ஐ வான்ட் கோ.” என்று கிளம்பிவிட நறுமுகையின் தந்தைக்குப் பக்கென்று இருந்தது. “மாப்பிள்ளை...” என்று அவர் பதறிப்போக, அப்பொழுது தான், தான் திருமண மண்டப்பத்தில் இருப்பதையே விக்ரமசேனன் உணர்ந்தான்.

“சார்...” என்று தன் மாமனாரை அழைக்க அவர் பாவம் திருதிருத்தார். மணிக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

“மாமான்னு கூப்பிட சொல்லுடா” தீபனின் காதோரம் கத்தினார் மணி. அவரது பேச்சைக்கேட்டு அவனது காதோரம் தீபன் முணுமுணுக்க, அவனை முறைத்து பார்த்துவிட்டு,

“இந்த சம்பிரதாயத்தை இப்போ வச்சுக்க நேரமில்ல. எனக்கு டைம் ஆகிடுச்சு. நான் கிளம்புறேன். உங்க மகளுக்கு விருப்பம் இருந்தா என்னோட வர சொல்லுங்க. இல்லையா இந்த சடங்கு சம்பிரதாயத்தை எல்லாம் முடிச்சுட்டு மெதுவா கூட்டிட்டு வந்து விடுங்க” என்றவன் தன் காரை எடுத்துக்கொண்டு மணியும் தனமும் தடுக்க தடுக்க கிளம்பினான் அவ்விடத்தை விட்டு.

 

தினமும் அத்தியாயம் தொடர்ந்து வரும் தோழமைகளே...

படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

நன்றி

Loading spinner
Quote
Topic starter Posted : March 13, 2025 1:20 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top