மகரா வாயெடுக்காமல் குடித்ததிலே அவளின் பசியின் அளவு புரிய இன்னொரு பழச்சாரையும் அவளுக்கு பருக்கக் கொடுத்தான்.
“இல்ல போதும் ங்க” என்று மறுத்தவளின் வாயில் தானே வைத்து புகட்டி விட்டான் பஞ்சவன்.
“கொஞ்சம் ரெஸ்ட் எடு... நான் இதோ வரேன்” என்றவன் தன் பாட்டியிடம் போய் நின்றான்.
“என்ன ராசா...” அவர் கேட்க,
“பால் ஊற மாட்டிகிது அவளுக்கு... இமிடியட்டா பால் ஊற என்ன பண்ணனும்” என்று கேட்டான்.
“பூண்டை நல்லா சுட்டு குடுத்தா பால் சுரப்பு பிடிச்சுக்கும்” என்று அவர் சொல்ல கேட்டுக் கொண்டவன் அடுப்படிக்கு போக வீட்டு பெண்கள் எல்லோரும் வாயில் கை வைத்து நின்றார்கள். கூடவே பதட்டப் பட்டுப் போனார்கள்.
“தம்பி நீ ஏன் அடுப்படிக்கு எல்லாம் போயிக்கிட்டு” என்று அவனை தடுக்க வந்த அம்மா மற்றும் சித்தியை ஒரு பார்வை பார்த்தவன் பார்வையிலே இருவரையும் தள்ளி வைத்தான்.
அவனின் பின்னோடு வந்த பாட்டி,
“பாலை சூடு பண்ணி அதில பூண்டை வேக விட்டு குடுத்தா கூட நல்லா பால் சுரக்கும் ராசா...” என்று சொல்லி அடுப்பில் பாலை காய வைக்க ஆரம்பித்தார். அவரை அவன் தடுக்கவில்லை.
அதிலே அவர்களின் திருகு தளத்தை மகன் அறிந்துக் கொண்டான் என்று புரிந்துக் கொண்டவர்கள் உள்ளுக்குள் அலண்டுப் போனார்கள்.
அய்யயோ என்ன செய்ய போறான்னு தெரியலையே...! என்று பயந்துப் போனார்கள். அவனோ யாரையும் சட்டை செய்யாமல் இரண்டு போக் எடுத்து பத்து பல்லு பூண்டை சுட்டு எடுத்துக் கொண்டு தன் மனைவி இடம் ஓடினான்.
அதன் தோளை உரித்து ஆறவிட்டு அவளுக்கு சாப்பிட குடுக்க கண்கள் எல்லாம் கலங்கிப் போனது மகராவுக்கு. அவள் முதல் முதல் அறிந்த நேசம். அவளுக்காக என்று ஒரு உயிர் துடிப்பதை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது.
பிறந்த வீட்டில் கூட அவளுக்காக யாரும் எதுவும் செய்தது கிடையாது. முதலாவதாக பிறந்து இருந்தாலும் மூத்தவள் என்கிற கண்டிப்பு அதிகமே. பெரியவ நீயே இப்படி இருந்தா உனக்கு பின்னாடி பிறந்தவங்க உன்னை பார்த்து கெட்டு போக மாட்டாங்களா? என்ற பேச்சு தான் அதிகம் அவள் வாங்கி இருந்தது. அதனால் சாதரணமாக கூட அவளால் சிரித்து பேசிவிட முடியாது. எல்லாவற்றிலும் ஒரு கட்டுப்பாடு..
மூத்தது ஒழுங்கா இருந்தா தானே மத்தது சரியா இருக்கும் என்கிற பேச்சு கேட்டு கேட்டு அவளுக்கு தன் உன்ர்ன்வுகள் எல்லாம் செத்துப் போய் விட்டது. திருமணம் ஆனால் எல்லாம் சரியாகும் என்று எண்ணி இருந்தவளுக்கு ஒரே மாதத்தில் அதுவும் இழுத்து மூடப்பட்டு விட மீண்டும் பிறந்த வீட்டில் சிறை வாசம்.
முன்பை விட அதிக பேச்சு.. மீண்டும் தனக்கான தேடல் துளிர்க்க இங்கிருந்து மூச்சு முட்டுவதை விட தனித்து வாழ்ந்து விடலாம் என்று எண்ணி இதோ இந்த இரண்டு வருடங்களும் வாழ்ந்து விட்டாள்.
இந்த தனிமையில் எந்த காயங்களும் இல்லை. எந்த வருத்தங்களும் இல்லை. இயல்பாக அவளால் மூச்சு விட முடிந்தது. அவளுக்கான வாழக்கையை தன் பிள்ளையோடு இரசித்து வாழ்ந்து வந்தாள். அதில் கூட அவளுக்காக செய்ய என்று யாரும் இல்லை. அந்த ஏக்கம் உள்ளுக்குள் இருந்தாலும் காயம் இல்லாததே அவளை இலகுவாக்கி இருந்தது.
இன்று மீண்டும் ஒரு காயம்... ஆனால் அந்த காயத்துக்கு மறந்தாக பஞ்சவனின் கவனிப்பு.. மனம் சற்றே நெகிழ்ந்தது... அவனது பிள்ளைக்கு பால் வேண்டும் என்று தான் தன்னை கவனிக்கிறான் என்று அவளது அறிவு சொன்னாலும் அவனது முகத்தில் துளி கூட சுயநலம் தெரியவில்லை. அதை உணர்ந்தவள் அவனது முகத்தை ஆழ்ந்துப் பார்த்தாள்.
பஞ்சவனுக்கு மகராவின் கண்ணீர் மட்டுமே கண் முன் நின்றது. என்ன செய்து அவளின் கண்ணீரை போக்குவது என்று துடித்துக் கொண்டு இருக்கிறான். அது அவனது செயலில் மிக நன்றாகவே தெரிந்தது.
வாயால் ஊதி ஆறவைத்து கொடுத்தவனை விழியகலாது பார்த்தாள். அவளது பார்வையை உணராதவன் காரியத்திலே கண்ணாக இருக்க பாட்டி உள்ளே வந்தார்.
படுக்கையின் ஓரத்தில் மகரா அமர்ந்து இருக்க அவளுக்கு கீழே பாதி மண்டி இட்டு தோளை உரித்து ஊதி ஊதி கொடுத்து அவளை சாப்பிட வைத்துக் கொண்டு இருக்கும் பேரனை கண்டு இரசித்தவர்,
“சாமி இதையும் பேத்திக்கு ஆறவச்சு குடுய்யா” என்று மகராவின் அருகில் வந்து அமர்ந்தார்.
“பாட்டி” என்று அவள் தடுமாற,
“நானும் இந்த கிழவனை பார்த்துட்டு இருந்ததுல உன்னையும் என் கொள்ளு பேரனையும் கவனிக்க முடியாம போயிடுச்சு தாயி. மனசுல எதுவும் வச்சுக்காத” என்று அவளின் கன்னம் வருடி வேதனைப் பட்டார்.
“அச்சோ அதெல்லாம் ஒண்ணும் இல்ல பாட்டி.. நீங்க ஏன் வருத்தப் படுறீங்க” என்று அவரை சமாதனம் செய்ய, அவளின் கையை பிடித்துக் கொண்டவர்,
“யுவன் வெளில இருந்து சாப்பாடு வாங்கிட்டு வரவும் தான் இங்க நடந்த குட்டி கலாட்டா எல்லாம் எங்களுக்கு தெரிய வந்தது மகரா” என்றார் வேதனையாக.
“பாட்டி அதெல்லாம்” என்று அவள் அவரை சமாதனம் செய்ய வர அவளின் இதழ்களில் உரித்த பூண்டை வைத்து திணித்தான் பஞ்சவன்.
“முதல்ல சாப்பிடு பிறகு பேசு” என்றான் கண்டிப்பாக.
“பாட்டி முதல்ல அவளை சாப்பிட விடுங்க. அப்புறம் பேசுங்க” என்றவன் அவர் கொண்டு வந்த பூண்டு பாலையும் அவனே ஊதி குடுத்து அவளை குடிக்க வைத்தான்.
அவனது பணிவிடையில் மனம் கரைந்தவள் அவனது சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதியாக உண்டாள்.
முழுவதும் குடித்து முடித்தா பிறகே அவளை விட்டவன், வாயையும் அவளுக்கு துடைத்து விட சட்டென்று இருவரின் பார்வையும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டது. மகளின் வாயை துடைத்து விடும் பழக்கத்தில் இவளது வாயையும் துடைத்து இருந்தான்.
இருந்தாலும் யாரும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“கொஞ்ச நேரம் தூங்கு” என்று பாட்டியை அழைத்துக் கொண்டு கீழே போய்விட்டான்.
கீழே வந்த பஞ்சவன் அனைவரும் அமர்ந்து உண்டுக் கொண்டு இருப்பதை பார்த்தவன் தானும் அவர்களோடு போய் அமர்ந்தான். அவனுக்கு தட்டு வைத்து பரிமாற வந்தார் கவிதா. அவன் தடுக்கவில்லை.
கவிதா தட்டு வைத்து வைத்து விட்டு அடுத்து சோறு வைக்க வர வேகமாய் கை வைத்து தடுத்தவன், யுவனை ஒரு பார்வை பார்த்தான். அவனது பார்வையை புரிந்துக் கொண்டு வாங்கி வந்திருந்த பார்சல்களில் இருந்து ஒன்றை எடுத்து பிரித்து வைத்தான்.
தணிகாசலம் அதிர்ந்துப் போனார்.
“ஏன் தம்பி வீட்டுல சோறு இருக்கும் பொழுது வெளில வாங்கிட்டு வந்து சாப்பிடுற...?” கேட்டார்.
அவரது கேள்வியில் கவிதாவும் வனிதாவும் பயந்துப் போனார்கள். ஏதாவது தவறு செய்தால் தூக்கி போட்டு ஒரே மிதி தான். அண்ணனும் தம்பியும். இத்தனை வருடம் குடும்பம் நடத்தி இருக்கிறமோ என்கிற பந்த பாசமெல்லாம் எதுவும் இருக்காது. அப்படி இருந்தால் சோறு போடும் நிலத்தை விற்க ஏற்பாடு செய்து இருப்பார்களா?
அவர்களுக்கு கோவம் வந்தால் மனைவிமார்களிடம் அப்படி தான் இருப்பார்கள். அடி வெளுத்து விடுவார்கள் இருவரும்.
இதோ இப்பொழுது அந்த அடிக்கு தான் கவிதாவும் வனிதாவும் கலங்கிப் போய் இருந்தார்கள்.
பஞ்சவன் எதுவும் பேசவில்லை. அவன் பாட்டுக்க உண்டுக்கொண்டு இருந்தான்.
“அண்ணன் உன்கிட்ட தான் தம்பி கேக்குறாரு.. என்ன ஆச்சுன்னு கடையில வாங்கிட்டு வந்து சாப்பிடுற... உனக்கு ஆக்கி வச்சது பிடிக்கலன்னா உனக்கு பிடிச்ச மாதிரி செய்து தர சொல்லி சாப்பிட வேண்டியது தானே பஞ்சவா” என்று மருதகாசியும் கேட்க பஞ்சவன் வாயையே திறக்கவில்லை.
யார் என்ன கேட்டும் அவன் பதில் சொல்லாமல் போக அண்ணனும் தம்பியும் திரும்பி அவரவர் மனைவி மார்களை பார்த்தார்கள். அந்த பார்வையிலே உள்ளுக்குள் பெரும் பிரளையம் வந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் திடமாக நின்றுக் கொண்டார்கள்.
“உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் தெரியுமா? தம்பி ஏன் வெளில இருந்து வாங்கிட்டு வந்து சாப்பிடுறான்னு” என்று கேட்டார்கள் தந்தைமார்கள்.
“இல்ல தெரியாதுங்க” என்று அவசரமாய் இருவரும் சொன்னார்கள்.
“ம்மா உனக்கு எதுவும் தெரியுமா?” என்று தங்களின் தாயிடம் கேட்டார்கள்.
அவர் பஞ்சவனை ஒரு பார்வை பார்த்து விட்டு எனக்கு எதுவும் தெரியாது.. என்று முடித்துக் கொண்டார். உண்டு எழுந்த பஞ்சவன், எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“சாப்பிட்டு முடிச்சுட்டு எல்லோரும் கூடத்துக்கு வாங்க கொஞ்சம் பேசணும்” என்று விட்டு போய் விட்டான். யுவன் பிள்ளைக்கு உணவு ஊட்டிவிட்டு தானும் உண்டு இருந்தான்.
அதனால் அவன் அவனுக்கு கொடுத்து இருந்த அறைக்கு பிள்ளைகளுடன் போய் விட்டான்.
தாத்தாவை ஒரு எட்டு எட்டிப் பார்த்தான். முழித்து இருந்தார்.
“வெளில வரீங்களா தாத்தா.. இல்ல அறையிலையே இருக்கீங்களா?” என்று கேட்டான்.
“இங்கயே இருக்கிறது ஒரு மாதிரியா இருக்குப்பா... கூடத்துக்கு வரேன்” என்று அவனோடு வந்து அமர்ந்துக் கொண்டார்.
மெல்ல இந்த மூன்று வருடத்தில் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் அவனுக்கு சொல்ல பெருமூச்சு விட்டான்.