“ஹேய் பிள்ளையை என்னடி பண்ற?” என்று கோவமாகவே கத்தி விட்டான். அவன் பேசியதை உணராமல்,
“ஒன்னும் இல்ல சார்” என்று மீண்டும் அவள் முன்பு செய்ததை போலவே செய்ய,
“இடியட் பிள்ளைக்கு மூச்சு முட்டுதுடி” என்று வேகமாய் அவளின் புடவை மறைப்பில் இருந்து பிள்ளையை வெடுக்கென்று தன் கையில் எடுத்துக் கொள்ள,
“ப்ளீஸ் சார் அவனை என்கிட்டே குடுங்க” என்று அவள் அழுத முகத்துடன் கேட்க,
“நீ என்ன பண்றன்னு தெரியுதா?” என்று அவன் கத்த, அன்பு அதிக சத்தம் போட்டு அழ ஆரம்பித்து விட்டான்.
“ஒண்ணும் இல்லடா கண்ணா...” என்று வேர்த்து விருவிருத்து இருந்தவனின் சட்டையை கழட்டி விட்டு ஏசியை போட்டு அவனை ஆசுவாசப் படுத்திப் பார்த்தான்.
ஆனால் அன்புவின் அழுக்குரல் குறையவே இல்லை. அதோடு அவனது நெஞ்சுப் பகுதியை அவன் சப்ப ஆரம்பிக்க,
“பசிக்கிது போலயே” என்று அவளை பார்த்தான்.
அவள் ஆமாம் என்று தலையாட்ட,
“சரி அவனை போட்டு அமுக்காம குடுக்க வேண்டியது தானே...” என்று பிள்ளையை அவளிடம் நீட்டினான்.
வாங்கியவள் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து பிள்ளையை கவனிக்க,
பட்டென்று பிள்ளையின் அழுகை நின்றது. ஆனால் அடுத்த சில நொடிகளிலே அவனது அழுகை இன்னும் அதிகம் ஆகியது...
“ஏய் பிள்ளை முகத்தை அமுக்காம குடுக்க தெரியாதாடி” என்று கத்தினான். பிள்ளையின் அழுகுரல் அவனுக்கு என்னவோ செய்தது.
அவள் அதை காதில் வாங்கிக்கொண்டதை போலவே தெரியவில்லை. பட்டென்று அவளின் முன்னாடி வந்து நிற்க மகரா அவனை நிமிர்ந்துப் பார்க்கவே இல்லை. தலை குனிந்து இருந்தவளின் கண்ணீர் பிள்ளை மீது விழுவதை பார்த்து,
“மகரா என்ன ஆச்சு? ஏன் அழற?” என்று நிதானித்தான். ஏனெனில் இந்த முறை அவள் பிள்ளையை அழுத்தவில்லை. ஆனாலும் பிள்ளை அழுதுக் கொண்டு இருந்தான். கூடவே இவளும் அழுகிறாள்.
இதில் வேறு என்னவோ இருக்கிறது என்று உணர்ந்தவன் அவளிடமே கேட்டு நின்றன்.
“ஒன்னும் இல்ல சார்... அவனுக்கு என்ன வேலை. இடம் மாறுனதுல இப்படி தான் நைய்யின்னு இருக்கான்” என்று அவள் அவனை பார்க்காமலே சொல்ல,
“இப்ப நீயா சொல்றியா இல்ல நானா செக் பண்ணவா?” என்று அதிரடியாய் கேட்டான். ஏனெனில் இவ்வளவு நேரமும் பிள்ளை அழவில்லையே. இப்பொழுது மட்டும் அழறான் எனில் இதில் வேறு ஏதோ இருக்கிறது என்று தானே பொருள்.
அவள் தலையை நிமிர்த்தவே இல்லை. கண்களில் இருந்து கண்ணீர் சரம் சரமாய் இறங்கி அவளின் நெஞ்சையும் பிள்ளையின் உடம்பையும் நனைத்தது.
“மகரா” என்று அவன் அழுத்தமாய் அழைக்க, அவள் நிமிரவே இல்லை. பிள்ளையின் அழுக்குரளும் ஓயவே இல்லை.
படுக்கையின் ஓரத்ததில் அமர்ந்து இருந்தவளுக்கு கீழே மண்டியிட்டு அமர்ந்தவன் அவளின் புடவையை விளக்கினான்.
அங்கு அவன் கண்ட காட்சி அவனை அடியோடு துடிதுடிக்க வைத்தது. பால் வராமல் பாலுக்காக பிள்ளை அழுது கரைந்துக் கொண்டு இருந்தது. பிள்ளையின் பசியை போக்க முடியாமல் கையாலாகாத தனத்துடன் அவள் அழுதுக் கொண்டு இருப்பதை கண்டு நெஞ்சு கலங்கிப் போனான் பஞ்சவன்.
இரு பிள்ளைகளின் பசியையும் போக்குபவளுக்கு பால் வரவில்லை என்றால் என்ன பொருள். அவள் உணவு உண்ணவில்லை என்று தான் பொருள். பஞ்சவனுக்கு உடம்பு மொத்தமும் ஆடிப் போனது.
“ஏன்டி இப்படி? என்கிட்டே ஒரு சொல் சொல்லி இருக்கலாமேடி என்னை நம்பி தானே உன்னை கூட்டிட்டு வந்தேன். உன் சுக துக்கம் எல்லாமே என்னை சேர்ந்தது தானேடி” என்று அவளிடம் கேட்க அவனை நிமிர்ந்துப் பார்க்க முடியாமல் மேலும் கண்ணீர் வழிந்தது அவளுக்கு.
அவள் உணவு உண்ண அமரும் போது வனித்தா பேசிய சொற்களை கேட்டு மனம் நிரம்பி போய் விட்டதே. பிறகு எங்கிருந்து அவள் ஒரு பிடி உணவை வாயில் வைப்பது. இந்த வீட்டுக்கு வந்து மூன்று வேளை கடந்து விட்டது.
மூன்று வேலையும் அவள் வயிற்றுக்கு ஒன்றையும் ஈயவில்லை. கொண்டு வந்த பிஸ்கட் பழங்கள் எல்லாம் மூன்று வேலைக்கு ஐந்து வேளையாக மகனுக்கு பசியாற்றிவிட்டாள். மீந்துப் போனதை வைத்து ஒரு வேளை உணவாக அதை வைத்துக் கொண்டாள். அதனால் அவனது மகளுக்கு ஓரளவு பசியாற்றி விட்டாள்.
ஆனால் அவளது மகனுக்கு தான் பசியை தணிக்க முடியவில்லை. அவளுக்கு பாலும் சுரக்கவில்லை.
இவள் தனித்து இருந்து இருந்தால் கூட நிம்மதியாக இருந்து இருப்பாள். என்னுடைய சுயநலத்துக்காக இவளின் தன்மானத்தை அடகு வைத்து பட்டினி போட்டு பிள்ளைக்கு பசியாற்ற முடியாமல் போன தன் நிலையை எண்ணி தன்னையே வெறுத்துக் கொண்டான் பஞ்சவன்.
அவனது முகத்தில் அவனே அறைந்துக் கொள்ள, “ப்ளீஸ்” என்று அவனது கையை இறுகப்பற்றிக் கொண்டாள் மகரா.
“சாரிடி... உன்னை நான் கவனிச்சு இருக்கணும்.. கவனிக்காம போனது என்னோட தவறு. தாத்தாவை முழுவதுமாக செக் பண்ண வைத்து அவர் கூடவே இருந்ததால உன்னை மிஸ் பண்ணிட்டேன்டி.” என்று கலங்கிப் போனான்.
“இரு நான் கீழ போய் உணவு” என்று அவன் ஆரம்பிக்க மகரா அவனை பட்டென்று ஒரு பார்வை பார்த்தாள்.
அந்த பார்வையில் இருந்த பொருளை உணர்ந்துக் கொண்டவன்,
“உன்னை அந்த அளவுக்கு சங்கடப்படுத்த மாட்டேன்டி. யுவனை டிபன் வாங்கிட்டு வர சொல்லி சொல்லி இருக்கிறேன். வந்துட்டானன்னு பார்க்கிறேன்” என்றான்.
அவள் தலையை ஆட்டிக் கொண்டாள். ஆனாலும் அவளை விட்டு அவனால் நீங்க முடியவில்லை. பிள்ளையை தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு சமதானம் செய்தவன் யுவனுக்கு போனை போட்டான். சரியாக அவன் அறையினுள் நுழைந்தான் பெரிய பெரிய கவர்களோடு..
அதை பிரித்து படுக்கையில் வைத்தவன், “சாப்பிடு மகரா” என்றான் பஞ்சவன். அவளால் சாப்பிட முடியவில்லை ஏனோ கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது. தொண்டை அடைத்தது.
“பிள்ளைக்கு இட்லி நான் ஊட்டுறேன். நீ சாப்பிடு” என்று பிள்ளையை அவள் கையில் இருந்து தூக்கிக்கொண்டு இரண்டு இட்லியை எடுத்துக் கொண்டு வெளியே போய் விட்டான் யுவன்.
பஞ்சவன் அவளை கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைக்க அவளால் ஒரு வாயை கூட எடுத்து வைக்க முடியவில்லை. அவளது வாழ்விலே முதல் முறையாக முகத்துக்கு நேரான அவமானம். அதுவும் வயிற்றுக்கு உணவு உண்ண வரும் பொழுது. அவளால் அதை சீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
முதல் கணவன் அவளை விலகி வைக்கும் பொழுது கூட அடுத்த நேர உணவுக்கு யார் கையையும் அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.
வேலைக்கு போய் சேர்த்து வைத்த பணம் இருக்க அதை கொண்டு தான் தாய் வீட்டில் இருந்த நாட்களில் கூட உண்டு வந்தாள். பெண்ணுக்கு கல்யாணம் என்று ஒரு முறை ஆகி விட்டாலே அடுத்த நாளில் இருந்து இல்லை அந்த நொடியில் இருந்தே பிறந்த வீட்டுக்கு அந்த பெண் வேண்டாத சுமை தான்.
அதை நன்கு அறிந்துக் கொண்ட மகரா தன் தாயிடம் முன் பணமாக கொடுத்து விட்டாள்.
“எதுக்குடி இதெல்லாம்?” என்று அவளின் தாய் கேட்டாலும் கையில் வாங்கிக் கொண்டார். அதை எண்ணி சிரித்துக் கொண்டவள் அதன் பிறகே மூச்சு விட முடிந்தது அந்த வீட்டில்.
அப்படி பிறந்த வீட்டிலே அவளுக்கு இந்த நிலை எனில் மறுமணம் செய்த வீட்டில் அவளுக்கு இதெல்லாம் மிகவும் சாதாரணம் தான். ஆனால் அதை உணவில் காட்டுவார்கள் என்றோ அதுவும் பச்சை பிள்ளை உணவில் காட்டுவார்களோ என்று கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்கவில்லை.
கண்களை மூடினாலே அவர்கள் பேசிய பேச்சு தான் கண் முன் வந்தது. அழுகையை அடக்கப் பார்த்தாள். வெகு சிரமப்பட்டு அழுகையை அடக்க, அதுவோ சட்டென்று பீரிட்டு வெளியே வர வாய் விட்டே அழுது விட்டாள். அவளின் அழுகையை காண முடியாமல் கலங்கிப் போனான் பஞ்சவன்.
“சாரிடி” என்று அவன் பேச பேச அவளின் அழுகை அதிகமாகிக் கொண்டே போனது. அவள் வாய் விட்டு அழுவதை பார்க்க முடியாமல் இவனும் கலங்கிப் போனான்.
மகராவை யாரோ ஒருத்தி என்பது போல அவனால் நினைக்கவே முடியவில்லை. அவளின் அழுகையை கையைக்கட்டி வேடிக்கை பார்க்க முடியவில்லை அவனால். பட்டென்று தன்னோடு அவளை அணைத்துக் கொண்டான்.
அவனது தோள் சாய்ந்தவளுக்கு இன்னும் அழுகை பீரிட்டு வர அவளை அவளது போக்குக்கு விட்டு இவன் அவளை வெறுமென வருடி விட்டுக் கொண்டு மட்டும் இருந்தான். அவனின் மனம் மறுத்துப் போனது தன் குடும்பத்தாரை எண்ணி.
“என்ன மாதிரியான குடும்பம்” என்று தன்னக்குள் தானே நொந்துக் கொண்டவன், இப்பொழுதே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அவனுள் ஒரு வெறி எழ அதை அடக்கி விட்டு இப்பொழுது இவளை உண்ண வைப்பது மட்டுமே முதல் வேலை என்று தன்னை திசை திருப்பியவன்,
அவளை சமாதனம் செய்து உணவை அவளுக்கு ஊட்டி விட்டான்.
“என்னால சாப்பிட முடியலங்க” என்றாள் திணறலாய். “சரி சாப்பிட வேண்டாம்... இந்த ஜூசை குடி” என்று அவளுக்கு வாங்கி இருந்த ஜூசை குடிக்க குடுக்க காய்ந்து போய் இருந்த தொண்டைக்கும் சாப்பிடாமல் இருந்த வெற்று வயிறுக்கும் குளிர்ச்சியாய் இருந்தது அந்த பழச்சாறு.
மகரா வாயெடுக்காமல் குடித்ததிலே அவளின் பசியின் அளவு புரிய இன்னொரு பழச்சாரையும் அவளுக்கு பருக்கக் கொடுத்தான்.
“இல்ல போதும் ங்க” என்று மறுத்தவளின் வாயில் தானே வைத்து புகட்டி விட்டான் பஞ்சவன்.
“கொஞ்சம் ரெஸ்ட் எடு... நான் இதோ வரேன்” என்றவன் தன் பாட்டியிடம் போய் நின்றான்.
“என்ன ராசா...” அவர் கேட்க,
“பால் ஊற மாட்டிகிது அவளுக்கு... இமிடியட்டா பால் ஊற என்ன பண்ணனும்” என்று கேட்டான்.
“பூண்டை நல்லா சுட்டு குடுத்தா பால் சுரப்பு பிடிச்சுக்கும்” என்று அவர் சொல்ல கேட்டுக் கொண்டவன் அடுப்படிக்கு போக வீட்டு பெண்கள் எல்லோரும் வாயில் கை வைத்து நின்றார்கள். கூடவே பதட்டப் பட்டுப் போனார்கள்.
“தம்பி நீ ஏன் அடுப்படிக்கு எல்லாம் போயிக்கிட்டு” என்று அவனை தடுக்க வந்த அம்மா மற்றும் சித்தியை ஒரு பார்வை பார்த்தவன் பார்வையிலே இருவரையும் தள்ளி வைத்தான்.
அவனின் பின்னோடு வந்த பாட்டி,
“பாலை சூடு பண்ணி அதில பூண்டை வேக விட்டு குடுத்தா கூட நல்லா பால் சுரக்கும் ராசா...” என்று சொல்லி அடுப்பில் பாலை காய வைக்க ஆரம்பித்தார். அவரை அவன் தடுக்கவில்லை.
அதிலே அவர்களின் திருகு தளத்தை மகன் அறிந்துக் கொண்டான் என்று புரிந்துக் கொண்டவர்கள் உள்ளுக்குள் அலண்டுப் போனார்கள்.
அய்யயோ என்ன செய்ய போறான்னு தெரியலையே...! என்று பயந்துப் போனார்கள். அவனோ யாரையும் சட்டை செய்யாமல் இரண்டு போக் எடுத்து பத்து பல்லு பூண்டை சுட்டு எடுத்துக் கொண்டு தன் மனைவி இடம் ஓடினான்.