Notifications
Clear all

அத்தியாயம் 6

 
Admin
(@ramya-devi)
Member Admin

பஞ்சவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் நிற்கவே இல்லை. அவரது தோளில் தானே அவனது மழலை காலங்கள் எல்லாம் கழிந்தது. அடுத்து கொஞ்சம் வளர்ந்த பிறகு அவனது சிறுவயது எல்லாம் அவரின் விரல் பிடித்து தானே நகர்ந்தது.

தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு அவரின் தோள் மேல் கை போட்டு அல்லவா சென்றது அவனுக்கு பொழுதுகள் எல்லாம்... அப்படியாப்பட்டவரை அவனால் எப்படி இழக்க முடியும். முடியவே முடியாதே.

“யார் மேலையோ உள்ள கோவத்தை உங்க மேல காட்டிட்டேன் தாத்தா... என்னை பொறுத்துக்கோங்க (மன்னிச்சிடுங்க) இனி உங்களை விட்டு எங்கயும் போக மாட்டேன்... போனா உங்களையும் கூட்டிட்டு தான் போவேன்” என்று அவரை இறுக கட்டிக் கொண்டான்.

“நினைப்பு பூரா நீ மட்டும் தான் ய்யா.. எங்க இருந்தாலும் நீ நல்லா இருக்கணும்னு தான் எண்ணம் முழுவதும். அவரு உன்னை நினைக்காத நாள் இல்ல.. உன்னை ஒரு முறையாவது குடும்பமா பார்த்திட மாட்டமான்னு அவரு உள் மனசு ஏங்கிக்கிட்டு இருக்கு ராசா” என்று பாட்டி கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

“என்னை பொறுத்துக்கோங்க(மன்னிச்சுடுங்க) தாத்தா... உங்களை இத்தனை நாளும் பார்க்க வரமா இருந்ததுக்கு...” என்று சொல்லி தன் முகத்திலே அறைந்துக் கொள்ள அவனது கையை நடுங்கும் விரல்களால் தடுத்து தன்னோடு கட்டிக் கொண்டார் அந்த முதியவர்.

“உன்னால என்னை பார்க்காம இருக்க முடியாதுன்னு தெரியம் ய்யா. அப்படி என்னை பார்க்க வரமா இருந்தன்ன உன் மனது எவ்வளவு புண் பட்டு போயிருக்கும் என்று புரிந்துக்கொள்ளாத தற்குறியா நானு” என்று குரல் நடுங்க சொன்னவரின் பார்வை தான் பெற்ற மகன்களை கடுமையாக குற்றம் சுமத்தியது. 

தன் தந்தையின் பார்வையில் தலைக்குனிந்துக் கொண்டார்கள் தணிகாசலமும் மருதகாசியும்.

“இவ்வளவு நாளும் அப்போ இந்த கிழவன் நடிச்சுக்கிட்டு தான் இருந்தாரா?” என்று இரு மருமகள்களும் வாயில் கை வைத்துக் கொண்டார்கள்.

பஞ்சவன் எல்லோரிடமும் இரத்தின சுருக்கமாய் தான் பேசுவான். அவனது தாத்தாவை தவிர. அவர் மட்டும் அவனுக்கு விதிவிலக்கு எப்பொழுதுமே.

தாய் தந்தை கூட அவனுக்கு இரண்டாம் பட்சம் தான். அதில் கவிதாவுக்கு எப்பொழுதுமே வருத்தம் தான். ஆனால் பஞ்சவன் அதை எல்லாம் கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளவே மாட்டான்.

அதனாலே அவனை இழுத்து பிடிக்க வேண்டும் என்று தன் அண்ணன் மகளை திருமணம் செய்து வைத்தார் கவிதா. தன் அண்ணன் மகள் எப்படியும் தன் பிள்ளையை தன்னிடம் கொண்டு வந்து சேர்த்து விடுவாள் என்று அவர் எதிர் பார்க்க, அவளோ மொத்தமும் உடைத்து போட்டு விட்டு கம்பி நீட்டிவிட்டாள்.

தன் தலைவிதியை நொந்துக் கொண்ட கவிதா மீண்டும் தன் மகனை விட்டு தள்ளி நிற்கும் அவலம் ஏற்பட்டது. அன்பு எல்லாம் தானாக மலரவேண்டும். வலுக்கட்டாயத்தின் பேரில் யாரும் திணிக்க முடியாது என்று மறந்துப் போனார்.

சிறு வயதில் எல்லாம் ஓடி வந்த பஞ்சவனை தன் மாமனார் மாமியாரிடம் விட்டுவிட்டு கணவனோடு வெளியே கிளம்பி விடுவார். வீட்டு பாடம் சொல்லிக் கொடுப்பது முதற்கொண்டு அவனுக்கு உணவு ஊட்டி தூங்க வைப்பது வரை எல்லாமே தாத்தா தான். தன் மனைவியை கூட அருகில் விட மாட்டார்.

தன் முதல் பேரனுக்கு எல்லாமும் அவரே பார்த்து பார்த்து செய்வார். அதே போல பஞ்சவனும் அவர் தான் உலகம் என்று வாழ்ந்தவன்.

விடுமுறை நாட்களில் எல்லாம் வயல் வெளியில் தான் இருவருக்கும் கழியும். பயிர்த்தொழில் எப்படி செய்வது என்று எல்லா நுணுக்கமும் கற்றுக் கொடுத்து இருந்தார் அவனுக்கு. பஞ்சவனுக்கு பயிர்த்தொழில் மீது ஈடுபாடு வந்ததே அவனது தாத்தாவினால் தான்.

“என் காலம் இருக்கிற வரை நான் இதை செய்யிறேன். எனக்கு பிறகு என் மகன்கள் செய்வாங்கன்னு நான் எதிர் பார்க்கல. ஆனா பஞ்சவா நீ செய்யணும் ய்யா. நம்ம வழி வழியா வர்ற தொழில்... இது நம்மோட பூர்விக இடம். இதை வேற யாருக்கும் குடுத்துடாத சாமி” என்று அவனது ஐந்தாவது வயதிலே அவனுக்கு சொல்லி இருந்தார். அது அவனது மனதில் ஆழமாக வேரூன்றிப் போனது.

அதனாலே தான் அவன் எவ்வளவு படித்தாலும் அவனது ஆர்வம் எல்லாம் பயிர்த்தொழில் மீதே குவிந்து இருந்தது.

தன் தாத்தாவை இறுகிக்கட்டிக் கொண்டவன் அவரை விட்டு விலகவே இல்லை. அருகில் இருந்த டவுனில் உள்ள மருத்துவருக்கு போன் செய்து வீட்டுக்கு வர வைத்தவன் தாத்தாவை முற்றிலும் செக் பண்ண செய்தான்.

“எல்லாம் ஓகே தான். இவரு இவ்வளவு நாள் ஒழுங்கா சாப்பிடாததும் உள்ளுக்குள் உள்ள ஏக்கம் மட்டும் தான் காரணம். மத்தபடி உடல் ஆரோக்கியமாக இருக்கிறார். ட்ரிப்ஸ் இன்னைக்கு ஒரு நாள் ஏறட்டும். நாளையில இருந்து கொஞ்சம் திடமான உணவு குடுங்க பஞ்சவன். நோ ப்ராபளம். கவலை படும் படி எதுவும் இல்லை” என்ற பிறகே நிம்மதிக் கொண்டான் பஞ்சவன்.

பஞ்சவன் வந்த பிறகே வீடு நிறைந்தது போல ஒரு உணர்வு எல்லோருக்குமே வந்தது. ஆனால் தணிகாசலத்திற்கும் மருதகாசிக்கும் அடி வயிற்றில் புளியை கரைத்தது.

இல்லையா பின்ன பஞ்சவன் வராத இந்த மூன்று வருடத்தில் நிலத்தை குத்தகைக்கு விட்டு அந்த பணத்தை விருப்பம் போல செலவு செய்து விட்டதோடு அந்த விளைநிலத்தை விற்கவும் அல்லவா ஏற்பாடு செய்துக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு காலமும் நிலத்தை பாதுகாத்து வந்த அப்பாவும் படுத்த படுக்கையாகி விட இவர்களுக்கு சொல்லவும் வேண்டாம். தங்களின் விருப்பம் போல இருந்தார்கள் இந்த மூன்று வருடமும்.

அந்த விசயம் எல்லாம் தெரிந்தால் பஞ்சவன் எப்படி அவதாரம் எடுக்க போறானோ என்று உள்ளுக்குள் பயந்துப் போனார்கள் அப்பனும் சித்தப்பனும். அதென்னவோ பஞ்சவனை பார்க்கும் பொழுது அவர்களின் தாத்தவும் அப்பாவும் ஒன்றாய் சேர்ந்து செய்த கலவை போல இருப்பான்.

அவனது மாநிறமும் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் விட அதிக உயரமும், எல்லாவற்றிலும் கட்டுப்பாட்டோடு இருப்பவனின் மீது எப்பொழுதுமே ஒரு பயத்தை கொடுத்து இருந்தது. சித்தப்பா மகன் மகளுக்குமே பஞ்சவன் மீது ஒரு தனி பயம் தான்.

தப்பு என்று தெரிந்தால் அவன் யாரையும் விட்டு வைக்க மாட்டான். அது பெற்றவர்கள் என்றாலும் சரி. அதனாலே அவனிடம் எல்லோருமே எட்டி தான் இருப்பார்கள்.

அதில் மாரியப்பனுக்கு எப்பொழுதுமே தனி கர்வம் தோன்றும். என் வளர்ப்பு... என்று மீசையை முறுக்கிக் கொள்வார். அவரை போலவே பஞ்சவனும் ஆண்மைக்கு இலக்கணமாய் கற்றை மீசை வைத்து இருந்தான்.

தன் ஆசை பேரனை பார்த்த உடனே இளமை திரும்பியது போல உணர்ந்தார் மாரியப்பன். அடுத்து வந்த நாட்களில் எல்லாம் எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டார். இன்னும் ஒரு மாதம் கழிந்தால் ஏற் பூட்டி உழவு தொழிலை பார்க்க ஆரம்பித்து விடுவார் போல அந்த அளவுக்கு அவரது திடகாத்திரம் திரும்பி வந்தது.

தன் அறையிலே மகராவை தங்க வைத்துக் கொண்டான் பஞ்சவன். அதில் இருவருமே சங்கடமாக உணர்ந்தாலும் வேறு வழியில்லை என்பதால் ஒருவருக்கு ஒருவர் ஒத்துளைத்து வசிக்க ஆரம்பித்தார்கள்.

ஏற்கனவே கையில் பிள்ளையுடன் இருந்த மகராவை வீட்டில் இருந்த யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை. அவளை விட்டு எல்லோருமே ஒதுங்கியே இருந்தார்கள். ஒதுங்கி இருந்ததை விட ஒதுக்கி வைத்தார்கள்.

அதில் மகரா மிகவும் காயம் பட்டுப் போனாள். பஞ்சவனுக்கு உதவி செய்ய வந்து அவளுக்கு பெரும் மன உளைச்சல் ஏறப்பட்டது.

“அங்கு என் வீட்டில் தனியாக இருந்தப்ப கூட எனக்கு இந்த அளவுக்கு வலிக்கல.. ஆனா இங்க இத்தனை பேர் இருந்தும் என்னால இயல்பா மூச்சுக் கூட விட முடியல” என்று பெரிதும் கலங்கிப் போனாள்.

ஒரு வேளை அவளின் பஞ்சவன் அவளிடம் ஒரு கணவனாய் நடந்து கொண்டு இருந்தால் இந்த வேதனை எல்லாம் அவள் சட்டை செய்து இருக்க மாட்டாளோ என்னவோ.

ஏதோ அவள் மட்டும் தனித்தீவில் இருப்பது போல உணர்ந்தாள். அவளின் மகன் திட உணவு உண்ண பழகி இருந்ததால் அதை சமைக்க அடுப்படிக்கு போன பொழுது

“கண்டவளும் எங்க அடுப்படிக்குள்ள நுழையிறதை எங்களால அனுமதிக்க முடியாது... முதல்ல வெளியே போ” என்று கவிதா அவளை சொற்களால் காயப்படுத்த சட்டென்று கண்ணீர் தளும்பி விட்டது அவளுக்கு.

பிள்ளைக்கு தானே உணவு செய்யலாம்னு வந்தேன்... என்று கலங்கியவள் வேகமாய் மாடி ஏறிவிட்டாள்.

அதை பார்த்துக் கொண்டு இருந்த யுவனுக்கு மனம் புண்ணாகி விட வேகமாய் பஞ்சவனிடம் சொல்லி விட்டான்.

புருவம் சுருக்கி அவன் சொல்வதை கேட்டவன் பிறகு அவனிடம் எதையோ சொன்னான். அவன் தலையை ஆட்டிக் கொண்டு வெளியே போய் விட்டான்.

இங்கு உள்ளே வந்த பஞ்சவன் அன்பு கத்துவதை பார்த்து “என்ன ஆச்சு?” என்று பதறினான்.

“அது ஒன்னும் இல்லங்க” என்றவள் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து அவளோடு அவள் பிள்ளையை இறுக்கிப் பிடித்தாள். அதில் அவனுக்கு மூச்சு முட்டியது போல கைக்கால்களை உதைத்துக் கொண்டு அழ பஞ்சவனால் அதை பார்க்க முடியவில்லை.

“ஹேய் பிள்ளையை என்னடி பண்ற?” என்று கோவமாகவே கத்தி விட்டான். அவன் பேசியதை உணராமல்,

“ஒன்னும் இல்ல சார்” என்று மீண்டும் அவள் முன்பு செய்ததை போலவே செய்ய,

“இடியட் பிள்ளைக்கு மூச்சு முட்டுதுடி” என்று வேகமாய் அவளின் புடவை மறைப்பில் இருந்து பிள்ளையை வெடுக்கென்று தன் கையில் எடுத்துக் கொள்ள,

“ப்ளீஸ் சார் அவனை என்கிட்டே குடுங்க” என்று அவள் அழுத முகத்துடன் கேட்க,

“நீ என்ன பண்றன்னு தெரியுதா?” என்று அவன் கத்த, அன்பு அதிக சத்தம் போட்டு அழ ஆரம்பித்து விட்டான்.

“ஒண்ணும் இல்லடா கண்ணா...” என்று வேர்த்து விருவிருத்து இருந்தவனின் சட்டையை கழட்டி விட்டு ஏசியை போட்டு அவனை ஆசுவாசப் படுத்திப் பார்த்தான்.

ஆனால் அன்புவின் அழுக்குரல் குறையவே இல்லை.

Loading spinner
Quote
Topic starter Posted : July 23, 2025 10:44 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top