விடாமல் குழந்தை அழும் குரல் கேட்க நேற்றைக்கு அழைக்காமலே உதவிக்கு வந்த பஞ்சவன் கண் முன் வர வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவளுக்கு மனம் கேட்காமல் பிள்ளையை பேபி பேக்கில் இருந்து வெளியே எடுத்து விட்டு தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பஞ்சவன் வீட்டு வாசலில் போய் நின்றாள்.
“என்ன ஆச்சு... ஏன் பேபி அழுவுது?” என்று குரல் கேட்க இருவரும் அவளை திரும்பி பார்த்தார்கள்.
“என்னன்னு தெரியல சிஸ்டர்... ஆனா விடாம அழுதுக்கிட்டே இருக்கா” என்று சொன்னான் யுவன்.
“உள்ள வரலாமா..?” என்று தயங்கி தயங்கி அவள் கேட்க,
“வாம்மா” என்ற யுவன் அவளின் கையில் இருந்த பிள்ளையை வாங்கிக் கொண்டான்.
முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டவள் வேகமாய் கிட்சன் சென்று கைகளை கழுவிக் கொண்டு பிள்ளையிடம் விரைந்தாள்.
பஞ்சவன் பிள்ளையிடம் இருக்க, அவனிடம் போய் நின்றாள்.
“நான் பார்க்கவா..?” கேட்டாள்.
“ம்ம்” என்றவன் நகர்ந்துக் கொண்டான்.
பிள்ளையை கையில் தூக்கியவள் அவளின் உடைகளை எல்லாம் கலைந்து விட்டு ஒரு இடம் விடாமல் எல்லா இடத்தையும் சோதித்துப் பார்த்தாள்.
அப்பொழுது தான் குழந்தைக்கு உரம் விழுந்து இருப்பது புரிய,
“பிள்ளைக்கு கழுத்துல உரம் விழுந்துடுச்சு... அது தான் விடாம கத்திட்டே இருக்கா..” என்று சொன்னவள்,
“முறம் இருக்கா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் எதுவும் இல்லையே..” என்றான் யுவன்.
“உரம்னா” என்ன என்று யுவன் கேட்டான்.
“அது சதை பிடுச்சுக்கும் அது தான் வேறு ஒன்னும் இல்லை” என்றவள் தன் வீட்டில் இருந்து முறத்தை எடுத்துக் கொண்டு வந்து அதில் குழந்தையை போட்டு ஆட்ட,
“ஹேய் என்ன பண்ற?” பதறிப் போனான் பஞ்சவன்.
அவனிடம் கூகிள் சேர்ச்சில் போட்டு காண்பிக்க அதை பற்றிய தகவல்களை வாசித்துப் பார்த்தான். முறத்தில் போட்டு எடுப்பதும், அது இல்லாத பட்ச்சத்தில் இரு பக்கமும் மெல்லிய துணையை இருவர் பிடித்துக் கொண்டு அதில் பிள்ளையை போட்டு உருட்டுவார்கள் என்பதும் இருந்தது.
இது கை வைத்தியம் இதுக்காக மருத்துவரிடம் கூட்டிட்டு போய் பிள்ளையை அலைய வைக்க வேண்டாம் என்று சொன்னாள் மகரா.
பிள்ளையை முறத்தில் போட்டு உருட்டி உருட்டி எடுக்க கொஞ்ச நேரத்திலே அந்த சதை பிடிப்பு போய் விட பிள்ளை அதன் பிறகு தான் அழுகையை நிறுத்தியது. அது வரை பால் கூட குடிக்காமல் இருந்ததை யுவன் சொல்ல,
பாவமாய் போனது.
“லேடிஸ் யாரும் இல்லையா...?” கேட்டாள்.
பஞ்சவன் பதில் எதுவும் சொல்லவில்லை. யுவன் தான் “யாரும் இல்ல சிஸ்டர்.. நானும் இவனுமா தான் இந்த பிள்ளையை பார்த்துக்குறோம்” என்று சொன்னவன் பிள்ளைக்கு பாலை புகட்ட அது தட்டி தட்டி விட்டது...
வயிறு ஓட்டிப் போய் இருந்தது. அதை பார்க்க பாவமாய் இருக்க,
“குழந்தையோட அம்மா இல்லையா..?” என்று கேட்க துடித்த நாவை அடிக்கிக் கொண்டு தன் பிள்ளையை வாங்கிக்கொண்டு அவளுடைய வீட்டுக்கு போய் விட்டாள்.
போன உடன் பிள்ளையை வாக்ரில் அமர வைத்து விட்டு குளித்து விட்டு வாந்தாள். வந்தவுடன் தன் பிள்ளைக்கு பசி அமர்த்த அவளின் மனமோ பஞ்சவனிடம் இருந்த குட்டி குழந்தையை நாடியது.
குழந்தை பாசியாற்றி விட்டு அவனை கீழே விரித்து இருந்த குட்டி ரஜாயில் படுக்க வைத்து விட்டு கதவை திறந்தாள்.
திறந்த உடனே அந்த குழந்தையின் அழுகை கேட்டது.
“மறுபடியும் என்ன ஆச்சு?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் மகரா.
“தெரியல... பால் குடுத்தா குடிக்க மாட்டிக்கிறா” என்றான் பஞ்சவன்.
யுவன் உள்ளே சமையலில் இருந்தான் போலும்.
“நான் பார்க்கவா?” என்று கேட்டவள் அவளின் வயிறை சொதித்தவள், பால் புட்டியை எடுத்து அவள் வாயில் வைக்க மீண்டும் தள்ளி விட்டாள் அந்த குட்டி வாண்டு.
“என் வீட்டுக்கு தூக்கிட்டு போகவா” என்று அவனிடம் அனுமதி கேட்டாள்.
அவனுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் போக சரி என்று தலையை ஆட்டினான்.
தன் வீட்டுக்கு அவளை தூக்கிக் கொண்டு போனவள் நேரடியாக குழந்தைக்கு பாலை புகட்ட அவள் சமத்தாய் குடிக்க ஆரம்பித்தாள்.
அவளின் பசியை ஆற்றிவிட்டு மீண்டும் அவனிடம் வந்து பிள்ளையை கொடுத்தாள்.
“ஒரு சில நேரம் பிள்ளைங்க இப்படி தான் அடம் பிடிப்பாங்க... இப்போ அவ வயிறு நிரம்பிடுச்சு... நோ ப்ராப்ளம்” என்று பிள்ளையை கொடுத்து விட்டு இவள் திரும்ப,
“எப்படி பாட்டில் எல்லாம் இங்க இருக்கே” என்று பஞ்சவன் கேட்க,
“அது..” என்று ஒரு கணம் தினறியவள்,
“டைரெக்டா...” என்று மட்டும் சொல்லி விட்டு விடுவிடுவென்று போய் விட்டாள். அதை கேட்ட பஞ்சவனுக்கு ஒரு கணம் எதுவும் அசையாமல் இருப்பது போல ஒரு தோற்றம். பின் தெளிந்து தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
ஆனாலும் அவள் சொன்ன “டைரெக்டா” என்ற சொல் மட்டும் மீண்டும் மீண்டும் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. தலையை உலுக்கி விட்டு தன்னை நிதானித்துக் கொண்டான்.
“இதென்ன புது அவஸ்த்தை” என்று எண்ணியவன் அதன் பிறகு முழுதாக அதை மறந்துப் போனான் சற்றே கடினப்பட்டு.
இப்படி சின்ன சின்ன உதவிகள் இருவருக்குள்ளும் அடிக்கடி நடந்தேறியது. ஆனாலும் மகரா பஞ்சவனை வீட்டுக்குள் விட்டது இல்லை. அதே போல அவன் அவளது வீட்டுக்குள் வர முயன்றது இல்லை. யுவனோடு இயல்பாக பழக முடிந்தவளால் ஏனோ பஞ்சவனிடம் அவ்வளவு எளிதாக நடந்துக் கொள்ள முடியவில்லை.
வீட்டில் அறிமுகம் ஆகி இருந்தால் ஒரு வேலை இயல்பான நட்பு உருவாகி இருக்குமோ என்னவோ. ஆனால் இருவரின் அறிமுகமும் அலுவலகத்தில் தானே நடந்து இருந்தது. அதுவும் பஞ்சவனின் சூடான பேச்சில் விளைந்தது என்பதால் மகரா அவனிடம் ஒரு எல்லை கோட்டுக்குள் நின்றே பழகினாள்.
யுவன் வீட்டு வேலைக்கு ஆளை தேட தன் வீட்டில் வேலையும் பெண்ணையே அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
சமையல் எப்பொழுதும் யுவன் தான் என்பதால் எதாவது விசேசமாக செய்தால் ஒரு டிபன் பாக்ஸ் இவளுக்கு பார்சல் கொடுப்பான்.
அதே போல அவளும் ஏதாவது செய்தால் அவர்களது வீட்டுக்கு போகும். பஞ்சவன் அதை எல்லாம் கண்டுக் கொள்ள மாட்டான்.
அக்கம் பக்கம் உறவுகள் வேண்டும் என்று எண்ணுபவன். ஏதாவது ஒன்று என்றால் சொந்த உறவுகலுக்கு சேதி சொல்லி எல்லாம் வந்து சேருவதற்குள் அக்கம் பக்கத்து வீட்டு ஆட்கள் தான் முன்னாடி வந்து நிற்பார்கள் என்பதால் அவர்களின் நட்பை வளர்த்துக் கொண்டான்.
அந்த தளத்தில் மொத்தம் நான்கு வீடுகள் எ மற்றும் பி ஒரு பக்கமும், அதற்கு எதி பக்கம் பி மற்றும் டி. இதில் பி மற்றும் டியில் தான் இவர்கள் இருக்கிறார்கள்.
மாதமுள்ள வீட்டில் ஒரு இளம் திருமணம் ஆனவர்களும், இன்னொரு வீட்டில் ஒரு வயதான தம்பதிகள் இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் இங்கு இருப்பதே இல்லை. அருகில் தான் மகன் மற்றும் மகளின் வீடு இருப்பதால் பெரும்பாலும் அங்கு தான் இருப்பார்கள்.
இன்னொரு வீட்டில் இருக்கும் தம்பதிகளோ கதவை திறக்கவே மாட்டார்கள். இருவரும் வேலைக்கு போகிறவர்கள் ஆதலால் எதிர்படும் நேரம் மட்டுமே ஒரு புன்னகை சிந்துவர்கள். மற்றபடி அவர்களை பார்க்கவே முடியாது.
அதனால் மகராவும் அவளின் மகனோடு மட்டுமே அங்கு உறவு கொண்டாடும் சூழல் இருந்தது. அந்த உறவை பஞ்சவனின் மகளும் யுவனும் தான் நீடித்தார்கள்.
அலுவலக மீட்டிங் முழுவதும் முடிந்து வேலை ஆரம்பம் ஆனது. அதனால் பெரும்பாலும் வீட்டிலிருந்தே பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்ல, அலுவகலம் போகும் தேவை ஏற்படவில்லை.
யுவன் பஞ்சவனின் மகளோடு இவளின் மகனையும் பார்த்துக் கொண்டான்.
அருகில் தான் வீடு என்றாலும் எந்த சந்தேகம் என்றாலும் மெயில் மூலமாகவே கேட்டுக் கொண்டாள் மகரா. அவள் வீட்டிலே இருப்பதால் மகளை தூக்கிக்கொண்டு போய் அவளிடம் கொடுத்து விட்டு வருவான் பஞ்சவன். அதிகம் பாட்டில் பயன் படுத்துவது இல்லை.
அவளும் அவளுக்கு பசியாற்றி விட்டு மீண்டும் கொண்டு வந்து கொடுத்து விடுவாள். இந்த வேலைக்கு மட்டும் யுவனை அனுப்ப மாட்டான். பஞ்சவனே முன் நின்று செய்வான்.
அது ஏன் என்று அவனுக்கும் தெரியவில்லை. அதை ஆராய எல்லாம் அவன் முற்படவில்லை.
இப்படியே நாட்கள் சென்றது... இவ்வளவு நாளும் பனி காலமாக இருந்ததால் பிள்ளைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வைக்காமல் இருந்தவள் அன்றைக்கு சனிக்கிழமை ஆதலால் மகனுக்கு மிதமான சூட்டில் எண்ணெய் வைத்து அழுத்தி மிக நிதானமாக தேய்த்து விட அந்த நேரம் பஞ்சவனின் பிள்ளை அழும் குரல் கேட்டது.
அவள் பசி வந்தால் மட்டும் தான் அழுவாள். மற்ற நேரம் எதற்கும் அளவே மாட்டாள். அவ்வளவு சமத்து. ஆனால் இவளின் பிள்ளை அவளது தலை தென்படவில்லை என்றாலே அழுது ஊரை கூட்டுவான்.
இரண்டு பேருக்கும் உள்ள வித்யாசத்தை எண்ணி சிரித்தவள் வாசலில் நிழல் ஆட நிமிர்ந்து பார்த்தாள். பஞ்சவன் தான் பிள்ளையை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
அவனது எதிரில் கால்கள் தெரியும்படி முட்டி வரை உடையை தூக்கி சுருட்டிக் கொண்டு காலில் பிள்ளையை போட்டு எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருந்தது சங்கடமாக போனது.
பிள்ளையை கீழே இறக்கி விடவும் முடியாது. அதோடு அந்த பிள்ளை வேறு அழுதுக் கொண்டு இருந்தது. மகனை கீழே போடப் போக
“இங்க குடு” என்று வாங்கிக் கொண்டான் பஞ்சவன் உள்ளே வந்து. அவன் உள்ளே வந்ததை கவனித்தும் ஒன்றும் சொல்லாமல் அவனிடம் பிள்ளையை கொடுத்தவள் வேகமாய் தன் எண்ணெயாய் இருந்த கைகளை கழுவிக்கொண்டு வெளிய வந்த அவனின் மகளை வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
“பாப்பா குட்டிக்கு பசி வந்திடுச்சா.. என்னை தேடுனியா தங்கம்” என்று பிள்ளையை கொஞ்சி கொண்டே அவளுக்கு பசியாற்றினாள். அதில் அந்த சின்ன குட்டிக்கு மகிழ்ச்சி வர வேகமாய் கையை காலை அசைத்து எட்டி எட்டி உடைத்தாள்.
“ஆ...” என்று பொய்யாக அலறியவள், முக மலர்ச்சியுடன் பால் குடித்துக் கொண்டு இருந்த பிஞ்சு முகத்தை பார்க்க பார்க்க அவளுக்கு அமுதம் இன்னும் சுரந்தது.
வெறுமென கடமையை ஆற்ற இது ஒன்னும் சேவை இல்லையே... மனம் ஒன்றிப் போய் குழந்தையோடு பேசி அவள் மீது அன்பு வைத்தால் மட்டுமே பால் சுரக்கும் இல்லை என்றால் அது அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்க்காது.
கடமைக்காக ஆரம்பித்தவளுக்கு அதன் பிறகு அந்த பிள்ளை மீது அவளையும் அறியாமல் இணக்கமும் பாசமும் அன்பும் வந்தது. குறிப்பாக தாய் இல்லாமல் இரு ஆண்களிடம் மட்டுமே வளரும் குழந்தை அவளிடம் மிக இணக்கமாக ஒன்றிப் போனது தான் வியப்பு.
முதல் முறை இவளிடம் டைரெக்டா பால் அருந்த அதன் பிறகு பாட்டிலில் கொடுத்தால் அவள் குடிக்கவே இல்லை. பசியில் கத்தினாலே தவிர ஒரு சொட்டு பாலை கூட வாயில் வைக்கவில்லை.
விடாமல் அவள் கத்தும் சத்தம் கேட்டு என்ன என்று எட்டிப் பார்த்தாள் மகரா.
பஞ்சவன் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு இருக்க யுவன் தான் “பாப்பா பாலை வாயில் வைக்க மாட்டிக்கிறா” என்று சொன்னான்.
“சரி இருங்க” என்றவள் தன் வீட்டுக்கு தூக்கிக் கொண்டு போய் விட்டாள். தன் உடையை விலக்கும் முன்பே அவளை மடியில் போட, போட்ட உடனே மகராவின் நெஞ்சில் வாய் வைத்து தேட ஆரம்பித்து விட பாவமாய் போனது அவளுக்கு. வேகமாய் தன் உடையை விலக்கி விட்டு பசியாற்ற அந்த சின்ன வாண்டு சமத்தாக இருந்தாள். கொஞ்சம் கூட அழவே இல்லை.
அதன் பிறகு அதுவே வழக்கமாகி விட்டது. அதனால் பிள்ளையிடம் அவள் கொஞ்சி கொஞ்சி பேசுவதும் விளையாடுவதுமாக அவள் மீது தானாகவே அன்பும் சுரந்தது மகராவுக்கு.
அதை எல்லாம் வெளியே நின்று கேட்டுக் கொண்டு இருந்த பஞ்சவனுக்கு மனம் சற்றே நெகிழ்வாக இருந்தது. ஒரு பெண்ணின் அருகாமை தன் பிள்ளைக்கு கிட்டாமலே போய் விடுமோ என்று கொஞ்சம் கலங்கி தான் போனான். ஆனால் மகரா வந்த பிறகு அவனது கலக்கத்துக்கு வேலை இல்லாமல் போய் விட்டது.
ப்ராஜெக்ட் வேலை அதிகமாக இருக்கும் சமயம் எல்லாம் யுவன் வந்து பிள்ளையை வாங்கிக் கொள்வான்.
“இல்ல இருக்கட்டும் ண்ணா” என்று சொன்னாலும் கேட்க மாட்டான். அவனே பிள்ளையை குளிக்க வைத்து உணவும் ஊட்டி விடுவான். இதெல்லாம் பஞ்சவன் சொல்லி தான் இவன் செய்கிறான் என்று அறியாமல் போனாள்.
அன்றைக்கு மாதந்திர கூட்டம் நடை பேர இருக்க அதற்காக காலையிலே கிளம்பிக் கொண்டு இருந்தாள். பஞ்சவனின் மகளுக்கு காலையிலே ஒரு முறை பீட் செய்தவள் அதற்கு பிறகு கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு மகனை தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.
“குழந்தையை நான் பார்த்துக்குறேன்” என்று சொன்ன யுவனுக்கு,
“ரெண்டு குழந்தையை பார்ப்பது கடினம். அதனால நான் க்ரச்சுலையே விட்டுக்குறேன் ண்ணா” என்று அவன மறுக்க மறுக்க பிள்ளையை தூக்கிக்கொண்டு வந்து விட்டாள். அதில் பஞ்சவனுக்கு கடுப்போ கடுப்பு. அதென்ன சொன்னா சொல் பேச்சே கேட்காத தனம் என்று முகத்தை சுழித்துக் கொண்டான்.
அன்றைக்கு விரைவாகவே அலுவலகம் வந்து சேர்ந்தாள். அதனால் பஞ்சவனின் வாயில் விழ வேண்டிய அவசியம் இல்லை. பொழுது நன்றாகவே போனது எந்த கசப்பும் இல்லாமல்.
உச்சி வேலைக்கு பிறகு வீட்டுக்கு கிளம்பியவளின் முன்பு வந்து நின்றான் ஒருவன். அவளுக்கு கீழ் வேலை பார்க்கும் அவளின் டீம் மெம்பர் அவன்.
“என்ன ஆகாஷ் ஏன் இப்படி வழியை மறச்சுக்கிட்டு நிக்கிற” என்று கேட்டவள் அவனை சுற்றி நகர்ந்து போக பார்க்க, மீண்டும் அவளின் பாதையை மறைத்துக் கொண்டு நின்றான்.
“ப்ச் என்ன வேணும்” என்று இவள் பொறுமை போய் லேசாக குரல் உயர்த்த அந்த நேரம் கான்பரென்ஸ் ஹாலை விட்டு வெளியே வந்தான் பஞ்சவன். அவனது கண்களில் இந்த கட்சி விழ புருவம் சுருக்கி இருவரையும் பார்த்தவன் அவர்களை கடந்து போய் விட்டான்.
“மேம் ப்ளீஸ் என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கோங்க” என்று ரோசை நீட்டினான்.
படித்து விட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே