காலையில் எழும் பொழுதே அந்த பெரிய வீட்டின் கூடத்தில் அமர்ந்து தன் வெண்கல தொண்டையை வைத்து கத்திக் கொண்டு இருந்தார் பொன்மாரி. அவரின் சத்தம் கேட்டு அவரவர் அறையில் இருந்த இருவரும் வெளியே வந்தார்கள்.
வெளியே வந்த தயாகரன் முறைத்துப் பார்த்தான் தயாழினியை. ஏனெனில் பொன்மாரி வந்ததற்கு காரணம் இவளை தவிற வேறு யார் இருக்ககூடும். அவனது ஆட்கள் அவனுக்கு அவ்வளவு விசுவாசம் நிறைந்தவர்கள். எள் என்று சொல்லும் முன்பே எண்ணையாக இருக்கக் கூடியவர்கள். அப்படி இருப்பவர்கள் இவன் கட்டளை போட்டு விட்டால் உயிர் போனாலும் வாயையே திறக்க மாட்டார்கள்.
எனவே இங்க இருந்து வெளியே விசயம் கசிகிறது என்றால் வேறு யார் மூலமாக இருக்கும் இவளை தவிர.. எனவே அவளை முறைத்துப் பார்த்தான்.
அவனது பார்வையில் பயம் வந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் பதுசாக வந்து நின்றாள். அவளை அப்படியே கொல்ல தோன்றிய எண்ணத்தை கட்டுப் படுத்திக் கொண்டு,
“இப்போ எதுக்கும்மா வந்தும் வராததுமா இப்படி கத்திட்டு இருக்க?” எரிச்சலுடன் கேட்டான் தயாகரன். ஆமாம் அவனின் தயார் தான் இந்த பொன்மாரி.
அவன் அடங்கும் ஒரே ஆள் இவர் மட்டும் தான். அதுவும் அவரின் வாய்க்கு தான் அடங்குவான். மத்தபடி அவரையே தூக்கி சாப்பிட்டு விடுவான் இந்த தயாகரன்.
“எது கத்துறனா? ஏன்டா பேசமாட்ட.. உங்களை எல்லாம் பெத்து என் உயிரை குடுத்து வளர்த்தேன் பத்தியா அதனால நீங்க எல்லாம் இதுவும் பேசுவீங்க... இதுக்கு மேலையும் பேசுவீங்க.. நாலு எழுத்து உங்களை படிக்க வைக்க நான் காடு மேடு எல்லாம் அலைஞ்சி திரிஞ்சி கல்லு முள்ளு பார்க்காம வேலை செஞ்சேன் பத்தியா அதனால நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலையும் பேசுவடா நீ பேசுவ” என்று அவர் தன் வரலாற்றை பிளந்து வைக்க, தயாகரன் தலையில் கை வைத்துக் கொள்ளாத குறையாக அமர்ந்து இருந்தான்.
“ம்மா” என்று அவன் தடுக்க பார்க்க,
“என்னடா அம்மா.. இன்னைக்கு நீங்க இப்படி பவுசா வட்டி தொழில் செய்யிறதுக்கு காரணமே என்னோட வியர்வை தான்டா எல்லாம் என்னோட உழைப்பு.. வட்டி தொழில் செய்ய முதலுக்கு அங்கும் இங்கும் அலைஞ்சப்ப நான் தான் குண்டுமணி தங்கம் கூட எனக்குக்குன்னு வச்சுக்காம அத்தனையும் துடைச்சு தூக்கி குடுத்தேன் பத்தியா அதனால என்னை கிள்ளு கீரையா கூட மதிக்க மாட்டிகிறீங்கடா” என்று முந்தானையில் மூக்கை சிந்தி அவர் அழ, தயாழினிக்கு பாவமாய் போனது.
“ச்ச இப்படி பட்ட தாயை எப்படி தான் இப்படி வேதனை படுத்த மனசு வாருதோ..” என்று முணகினாள் தயாழினி.
அவளது முணுமுணுப்பை கேட்ட தயாகரன் அவளை இன்னும் முறைத்துப் பார்த்தான். அவனது பார்வையில் அனல் வீச வேகமாய் அவனை விட்டு நகர்ந்து நின்றுக் கொண்டாள் அவள்.
“ம்மா” என்று மேலும் அவரிடம் பேச முனைந்தவனை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல்,
“உன் கையாலாகத அப்பனை வச்சுக்கிட்டு உங்க மூணு பேரையும் வளர்த்து ஆளாக்க நான் எவ்வளவு பாடு பட்டு இருப்பேன். அதை எல்லாம் கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்து இருக்கீங்களாடா.. அப்படி நினைச்சு பார்த்து இருந்து இருந்தா நீங்க என்னை இப்படி அசிங்கப்படுத்தி இருக்க மாட்டீங்கடா.. நாலு பேர் என்னை ஏறெடுத்து பார்க்க கூட பயப்படுவாளுங்க. ஆனா இன்னைக்கு நீங்க செஞ்சு வச்ச காரியத்துனால அந்த நாலு பேரும் என்னை நாக்கு மேல பல்லு போட்டு பேசுர அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டீங்களேடா..” என்று வராத கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டவரை அடிக்கண்ணால் முறைத்துப் பார்த்தான்.
“என்னடா முறைக்கிற? நான் உன்னை பெத்தவ...” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க,
அப்பாவுக்கு போன் போட்டு இருந்தான் தயாகரன்.
“அப்பா” என்று அவன் பேச ஆரம்பிக்கும் முன்பே,
“இப்ப எதுக்கு அந்த ஆளுக்கு போன் போடுற” வெடுக்கென்று அவன் கையில் இருந்த போனை பறிக்கப் பார்த்தார்.
அவரின் இரண்டு கையையும் தன் ஒரு கையால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு,
“இப்ப எதுக்கு உன் பொண்டாட்டியை இங்க அனுப்பி விட்ட இருக்க? நீ என்ன குட்டி கலாட்டா பண்ண நினைச்சாலும் நான் எதுக்கும் மசிய மாட்டேன்” என்று தகப்பனிடம் எகிறிக் கொண்டு இருந்தவனை முறைத்துப் பார்த்தாள் தயாழினி.
“அப்பாவுக்கு கொஞ்சமாச்சும் மரியாதை குடுக்கிறானா பாரு.. சரியான அரக்கனா இருப்பான் போல.. அது சரி அம்மாவையே மரியாதை இல்லாம நடத்துறான். பிறகு அப்பாவுக்கு மட்டும் இவன் எப்படி மரியாதை குடுப்பான்” என்று முணகியவளிடம்,
“ஏன் கண்ணு உன் பேரு தயாழினி தானே” என்று பொன்மாரி பேச்சை ஆரம்பிக்க,
“ஆமாம் ஆண்டி” அவள் சொல்ல,
“என்னது ஆண்டி தோண்டின்னுக்கிட்டு நல்லா அழகா அத்தைன்னு சொல்லு” என்றார்.
“அத்தையா?” என்று முழித்தாள்.
“ஆமாம் நீ சந்தானத்தோட மூத்த பொண்ணு தானே” என்று அவர் மேலும் துருவ,
“ஆமாம் உங்களுக்கு எப்படி அதெல்லாம் தெரியும்” என்று திகைத்துப் போனாள்.
“எனக்கு எல்லாமே தெரியும்.. ஆள் டீடைல்ஸ் ஐ நோ” என்று சொன்னவரின் இங்லீசில் அதிர்ந்துப் போனாள்.
ஏனெனில் அவர் இருந்த தோற்றம் என்னவோ நகை கடையே இறங்கி வந்தது போல இருந்தது. அவ்வளவு நகை போட்டு இருந்தார். போதாதற்கு கையளவு அகண்ட கரை வைத்த பட்டுப்புடவை. பார்க்கவே கொஞ்சம் கரடு முரடாக தெரிந்தார்.
ஆனால் அவர் குணத்துக்கும் தோற்றத்துக்கும் கொஞ்சமும் சம்மந்தமில்லை என்பது போல இருந்தார்.
“என்ன மருமவளே திகைச்சி போய் பார்க்கிற.. நான் அந்த காலத்து டிகிரி ஹோல்டர்” என்றார்.
“ஓ...” என்றவள், “ஏதே... மருமகளா?” அதிர்ந்து விட்டாள்.
“ஆமா மருமகளே.. நீ தான் என் மூத்த மருமக.. எனக்கு தெரியாம உன்னை கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்துனா தெரியாம போயிடுமா என்ன? அது தான் நேத்திக்கு நீயே போன் போட்டு சொல்லிட்டியே... இனி அடுத்து கல்யாணம் தான்” என்று அவர் வெடிகுண்டை வீச, நெஞ்சை பிடித்துக் கொண்டாள் தயாழினி.
‘இந்த நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்னு பார்த்தா இவர் என்ன எனக்கு ஒரேடியா இங்க சமாதி கட்ட பார்க்கிறாங்க’ இடி இறங்கிய மரம் போல ஆகி விட்டாள்.
“இப்போ சந்தோசம் தானே உனக்கு.. எங்க என் மகன் உன் கூட பழகி அப்படியே விட்டுடுவான்னு நினைச்சு தானே நேத்திக்கு உங்க மகன் ஒரு பெண்ணை கடத்தி கொண்டு வந்து வச்சு இருக்கன்னு நாசுக்கா உங்க காதலை எனக்கு தெரிவிக்க நினைச்ச.. நான் கற்பூர புத்தி மருமகளே.. எப்படி சரியா புடிச்சுட்டேன் பத்தியா?” என்று பெருமை பட்டுக் கொண்டவர்,
“இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லா ஏற்பாடும் பக்காவா நடந்திடும்..” என்று இவளிடம் பேசிக் கொண்டு இருந்த நேரம், தன் தகப்பனிடம் பேசிக் கொண்டு இருந்த தயாகரனுக்கு எங்காவது சுவரில் முட்டிக் கொள்ளலாம் என்று வந்தது.
“என்னப்பா சொல்ற?” பல்லைக் கடித்தான்.
“ஆமான்டா மகனே.. இன்னும் பத்து நிமிடத்துல வீட்டுக்கு வந்திடுவோம்.. நம்ம அங்காளி பங்காளியோட அங்க தான் வந்துட்டு இருக்கேன். பொண்ணு வீட்டை பத்தி கவலை படாத, அவங்களையும் அள்ளி போட்டுட்டு தான் வரேன்.. நீ குளிச்சு கிளிச்சு மாப்பிள்ளை மாதிரி தயாரா இரு.. வந்த உடனே நிச்சையம் வச்சுக்கலாம். உனக்கு மோதிரம், மருமகளுக்கு பத்து பவுனுல வைர ஆரமும், அஞ்சு பவுணுல அட்டிகையும் தோடு ஜிமிக்கி, வளையல் என எல்லாமே வாங்கிட்டேன்.. மொத்தம் இருபத்தி அஞ்சு பவுனுக்கு வாங்கி இருக்கேன் மகனே.. போதுமா இல்ல இன்னும் இருபத்தி அஞ்சு பவுனுக்கு வாங்கிட்டு வரட்டுமா?” என கேட்ட தகப்பனின் கேள்வியில் தலையிலே அடித்துக் கொண்டான் தயாகரன்.
“ப்பா” பல்லைக் கடித்தான்.
“என்னடா போதாதா?” தயக்கமாய் கேட்டவரை என்ன செய்வது என்று தெரியாமல்,
“எனக்கு கல்யாணம் வேணும்னு நான் சொன்னனா? நீயா ஏன் ப்பா இப்படி கண்டதையும் இழுத்து விடுற” எரிச்சலில் கத்தினான்.
“எனக்கு எதுவும் தெரியாதுடா தம்பி உன் ஆத்தாகாரி தான் இப்பவே கல்யாணம் வைக்கணும்னு நின்னா.. நான் தான் நல்ல நாள் பார்த்து அதை வச்சுக்கலாம். இப்போ நிச்சயம் மட்டும் செஞ்சுக்கலாம்னு சொன்னேன். அப்பா சரியாதானேடா சொல்லி இருக்கேன்” என்று வேறு கேட்க, வெறுத்துப் போனான் தயாகரன்.
“ப்பா” என்று கத்தியவன் போனை விட்டு எறிந்தான் ஏக கடுப்பில்.
“ஹலோ ஹலோ” என்று இந்த பக்கம் பொன்மாரியின் கணவன் சிவலிங்கம் கத்தி கத்தி பார்த்தவர், மகனின் குரல் கேட்காமல் போக, போனை வைத்து விட்டார்.
போனை விட்டு எறிந்தவனின் மனம் உளைக்கலாமாய் கொதித்துக் கொண்டு இருந்தது. அவனது உணர்வுகளை பற்றி கொஞ்சமும் கவலை படாமல்,
“எம்மாடி மருமவளே... உன் மாமியாருக்கு ஒரு டீ தண்ணி கூட வச்சு குடுக்க மாட்டியா?” பொன்மாரி கேட்டு முடிக்கும் முன்பே எதிரில் இருந்த கண்ணாடி டீபாயை எட்டி உதைத்தான் தயாகரன்.
அவனது கோவத்தை தாங்க முடியாமல் அது சுவரில் முட்டி சில்லு சில்லாய் உடைந்து சிதறிப்போனது...
அதே நேரம் பொன்மாரிக்கு போனை போட்ட சிவலிங்கம்,
“பொன்னு.. அவன் ரொம்ப கோவத்துல இருக்கான்.. நீ சொன்னது தான் சரி.. நிச்சயமே அவனுக்கு புடிக்கல.. நேரா கல்யாணத்தை வச்சுக்கலாம்.. நான் வரும் பொழுதே தாலி வாங்கிட்டு வந்துடுறேன்” என்று அவர் சொல்ல,
“நான் சொல்லல... இப்பவாவது என் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாம நான் சொன்னதை செய்ங்க” என்ற நேரம் அவற்றின் போனை வாங்கி உடைத்து இருந்தான் தயாகரன்.
“ம்மா உன் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? யாரை கேட்டு இந்த நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்க.. உன் விருப்பத்துக்கு...” என்று சொல்லும் முன்பே,
“அத்தையை ஏன் மாமா திட்டுறீங்க? அத்தை நமக்கு நல்லது தானே செய்ய நினைக்கிறாங்க.. அவங்களை போய் இப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்தது. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட நம்ம காதலை எப்படி உன் அத்தை மாமா ஏத்துக்குவாங்கன்னு புலம்பிட்டு இருந்தீங்களே.. இன்னைக்கு அவங்களே ஒத்துக்கிட்டாங்க.. ஆனா நீங்க இப்போ தான் முறுக்கிக்கிட்டு இருக்கீங்க.. ரொம்ப மோசம் மாமா நீங்க..” என்று தயாகரனை ஒட்டி உரசிக் கொண்டு சொன்னவள்,
“இந்தாங்க அத்தை நீங்க கேட்ட தேத்தண்ணி.. கூட மெதுவடையும் வச்சு இருக்கேன். உங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு இங்க இருந்த வேலைக்கார பெண் சொன்னா.. எப்படியும் நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு நான் செய்து வைக்க சொல்லி இருந்தேன். சாப்பிடுங்க அத்தை” விழுந்து விழுந்து அவரை கவனித்தவளை விழிகளால் சுட்டு பொசுக்கினான் தயாகரன்.
தொடரும்...
இது என்னடா தாயkku வந்த சோதனை🤣🤣🤣🤣🤣🤣
அவன் மம்மி அல்டி🤣🤣🤣🤣, அதை விட அவன் அப்பா😂😂😂😂😂
இவ என்ன இப்படி மாறிட்டா.....ஏதோ இருக்கு
இது என்னடா தாயkku வந்த சோதனை🤣🤣🤣🤣🤣🤣
அவன் மம்மி அல்டி🤣🤣🤣🤣, அதை விட அவன் அப்பா😂😂😂😂😂
இவ என்ன இப்படி மாறிட்டா.....ஏதோ இருக்கு
இவ்வளவு நாள் வச்சி செஞ்சவனை இவ வச்சு செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கு. விடுவாளா
பொன்மாரி இன்னும் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கவே இல்ல.. இனி தான் இருக்கு எல்லோருக்கும்.