தள்ளாத வயது என்றாலும் கிண்ணென்று வந்த பாட்டியை பார்த்து கொஞ்சம் மிரட்ச்சி தான் தமிழுக்கு. ஏனெனில் ஆனானப்பட்ட பூவரசயையே ஆட்டி படைப்பவர் ஆயிற்றே இந்த வேலுநாச்சியார். அதனால் உள்ளுக்குள் உதறல் எடுத்தது அவளுக்கு.
தன்னை ஏற இறங்க பார்த்த பாட்டியை பார்த்து சிறிதாக புன்னகைத்தவள்,
“நல்லா இருக்கீங்களா பாட்டி?” நலம் விசாரித்தாள் தமிழ்.
“எனக்கென்ன கேடு... கல்லு குண்டாட்டாம் நான் நல்லா தான் இருக்கேன். ஆனா நல்லா இருக்க வேண்டியவங்க தான் இங்க நல்லா இல்லாம இருக்காங்க” என்றார் சுறுக்கென்று.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையை ஆட்டிக் கொண்டவளுக்கு அவரின் பேச்சு சற்று கடுமையாக வருவது போல பட, அதன் பிறகு அவரிடம் பேச்சு குடுக்கவில்லை.
“இந்தா பொண்ணே... அதை செய் இதை செய்” என பாட்டி அவளை நன்றாக வேலை வாங்கிக் கொண்டார். அவளும் சலிக்காமல் வேலை செய்தாள்.
“ம்கும் இந்த சுறுசுறுப்பு வேற ஒண்ணுத்துளையும் இல்ல” என்று அவர் வாய்க்குள் முணகிக்கொள்ள,
“எதுவும் சொன்னீங்களா பாட்டி?” புரியாமல் அவரிடமே கேட்டாள்.
“நான் சொன்னா நீ அப்படியே கேட்டுக்குவியா என்ன? சும்மா பாட்டி பாட்டின்னுட்டு” எரிந்து விழுந்தவர் இன்னும் வாய்க்குள்ளே ஏதேதோ பேச, இவளுக்கு உள்ளுக்குள் சுறுக்கென்று தைத்தது.
ஒரு வேலை இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தனக்கு தகுதி இல்லன்னு நினைச்சி இப்படி பேசுறாங்களோன்னு சந்தேகம் எழுந்தது. ஏனெனில் பூவரசி உறவென்றால் அவரின் மாமியாரும் இவர்களுக்கு உறவு தானே..
அதனால் தன் வாழ்க்கையில் நடந்ததை கேள்வி பட்டு இருப்பார். அதனால் தான் வெறுப்பு என்று புரிந்துக் கொண்டவள், அப்படியே ஒதுங்க ஆரம்பித்தாள்.
பின்னால் நகர்ந்து நகர்ந்து தோட்டத்து பக்கம் போக போனவளை
“இந்தா பொண்ணே” என்று கர்ஜனையான அழைப்பு கேட்க,
“இல்ல முடியை காயவக்கலாம்னு” என்று இழுத்தாள். அவளை ஒரு முறை முறைத்தவர்,
“முடியை அப்புறம் போய் காய வை.. முதல்ல என்கிட்டே வந்து நில்லு” என்று அவளை தன்னருகில் நிற்க வைத்துக் கொண்டார். தமிழும் அவருக்கு அருகில் நின்றுக் கொண்டாளே தவிர எதுவும் செய்யவில்லை.
“தள்ளாத கிழவி நானே கீழ குனிந்து நிமிந்து வேலை பார்க்கிறேன். நீ வயசு காரி தானே... பார்த்துட்டு சும்மா நிக்கிற. கூட மாட வந்து உதவி செய்தா என்னவாம்” என்று முறைத்தார்.
“இதென்னடா வம்பா போச்சு... வேலை பார்த்தா அதுக்கும் முணகவெண்டியது, வேலை பார்க்காம சும்மா இருந்தா அதுக்கும் திட்ட வேண்டியது.. எப்படி தான் இந்த பூவரசி ஆன்டி இந்த பாட்டியை சமாளிக்கிறாங்களோ” எண்ணிக்கொண்டவள் அவர் சொல்ல சொல்ல எல்லாவற்றையும் செய்தாள்.
அவள் செய்வதில் இருந்த நேர்த்தியை கண்டு உள்ளுக்குள் மெச்சிக் கொண்டார் வேலுநாச்சி.
“ம்ம்ம் பரவாயில்ல தான்” என்று பாராட்டு பத்திரம் வாசித்தவர்,
“உள்ள மேசை மேல கயிறு எடுத்து வச்சு இருக்கேன் பாரு. எடுத்துட்டு வா” என்று அனுப்பினார் அவளை. அங்கே தாத்தா ஒருவர் காபி குடித்தபடி புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டு இருந்தார்.
அவருக்கு அருகில் தன் கயிறு இருந்தது. இவள் அருகில் வந்தும், அவர் நிமிராமல் ஆழ்ந்து புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருப்பதை பார்த்து, தொந்தரவு செய்யாமல் அப்படியே போய் விடலாம் என்று கயிறை மட்டும் எடுத்துக் கொண்டு அவள் போக,
“இது தான் நீ பெரியவங்களுக்கு குடுக்குற மரியாதையா?” வெண்கல குரலில் அவர் கேட்க, திக்கென்று இருந்தது.
திரும்பி அவரை பார்த்தவள்,
“அப்படி இல்ல தாத்தா... நீங்க ஆழ்ந்து புத்தகம் படிக்கிறதை பார்த்து தான் தொந்தரவு பண்ண வேணான்னு நினைச்சேன். மத்தபடி வேற எதுவும் இல்லை” என்றவள்,
“நல்லா இருக்கீங்களா தாத்தா... பூவரசி ஆன்டி உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்காங்க” என்று அடித்து விட்டாள்.
“ம்ம்ம்” என்று மட்டும் சொன்னவர் மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்து விட இவளுக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது.
“என்னடா இது” என்று ஆகிப் போனது.
“இந்தா பொண்ணே” என்று அதற்குள் பாட்டி அழைக்கும் குரல் கேட்க,
“இதோ வரேன் பாட்டி” என்று வெளியே ஓடினாள்.
“இந்த வீட்டுல பூவரசி ஆன்டிய தவிர மத்த எல்லோரும் ஒரு மாதிரி இருப்பாங்க போல” என்று முணகிக்கொண்டவள், பாட்டி சொல்லும் எல்லா வேலையையும் மும்மரமாக பார்க்க ஆரம்பித்தாள்.
அந்த நேரம் வாசலில் வந்து ஒரு கார் நின்றது. அதிலிருந்து ஒரு குடும்பம் இறங்கியது.
“வாங்க அண்ணா.. வாங்க அண்ணி... வாங்க பசங்களா” என்று ஓடி வந்து வரவேற்றார் புன்னகையுடன் பூவரசி. அவரின் சத்தம் கேட்டு தலையை தூக்கி பார்த்தாள் தமிழ். பாட்டி கையை துடைத்துக் கொண்டு வேகமாய் முன்னாடி போய் அவர்களை வரவேற்றார்.
“வாங்க வாங்க மாப்பிள்ளை... வாடி மகளே... வாங்க பேர பிள்ளைகளா” என்று சொல்லி இரு பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டார்.
“காலையிலையே வருவன்னு பாத்தேன் வள்ளி” என்றார் மகளிடம்.
“நானும் அப்படி தான் ம்மா நினைச்சேன். ஆனா பெரியவன் தான் அடம் பண்ணி அவன் காலேஜ் விட்டதுக்கு பிறகு தான் போகணும்னு சொல்லிட்டான். அதனால எல்லோரும் சேர்ந்தே வந்துட்டோம்” என்றார் வள்ளி.
“அவனுக்கு என்ன வேலை... போன் இருந்தா போதும்.. ஆனா நமக்கு அப்படியா... எவ்வளவு வேலை இருக்கு..” என்று பெரிய பேரனை முறைத்தவர், வள்ளியின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு கலசம் வைக்கும் இடத்துக்கு அழைத்து சென்றார்.
அங்கே வேலை செய்துக் கொண்டு இருந்தாள் தமிழ்.
“வா வந்து ஏதாவது ஒத்தாசை பண்ணு. நான் போய் மருமகளுக்கு அடுப்படியில உதவி பண்றேன். வள்ளி உனக்கு காபியா ஜூஸா?” என்று கேட்டார்.
“அம்மாவுக்கு ஜூஸ் தான் வேணும்” என்று சின்னவன் வந்து சொல்ல,
“நான் உன் அம்மாக்கிட்ட கேட்டேன் டா” முறைத்தார்.
“அம்மாவுக்கு மவுத் பீஸ் நான் தான்” பாட்டியை பதிலுக்கு முறைத்தான் சக்தி.
“ம்கும்.. ரொம்ப தான்டா பண்ற... ஏன் உன் ஆத்தாக்காரி ஒரு வார்த்தை பேசினாலும் அப்படியே குறைஞ்சி போயிடுவளாக்கும்.. போடா படுவா” சிலுப்பிக் கொண்டு அவர் போக,
“இந்த கிழவிக்கு சீக்கிரமா ஒரு பாயாசத்தை போடணும் ம்மா” என்று முறைத்தான் சக்தி.
“டேய் என்னடா இது பழக்கம்” என்று உள்ளே நுழைந்த சிவன் தம்பியை முறைத்தான்.
“அட போண்ணா கிழவிக்கு வேற வேலையே இல்ல... உனக்கும் வேற வேலையே இல்லை” என்றவனை வள்ளி முறைத்தார்.
“பெரியவனுக்கு மரியாதை குடுன்னு எத்தனை முறைடா சொல்றது.. அவன் என்ன உன்ன மாதிரியா... எவ்வளோ பெரிய காலேஜ எடுத்து நடத்திட்டு இருக்கான். அது போக ப்ரபசரா வேற இருக்கான்.. அவனுக்கு நீ இப்படிதான் மரியாதை குடுப்பியா” வள்ளி சின்னவனை அதட்ட,
“ம்மா தம்பியை அதட்டாதீங்க. அதுவும் நான் இருக்கும் போது...” என்ற மூத்த மகனை இன்னும் முறைத்தார் வள்ளி.
“அவன செல்லம் குடுத்து குட்டி செவுராக்குவதே நீ தான்டா”
“பரவாயில்ல” என்று இருவரும் கோரஸ் பாட, வள்ளிக்கு சிரிப்பு தான் வந்தது.
“சேட்டை சேட்டை...” என்றவர்,
“சரி பின்னாடி சமையல் வேலை நடந்துட்டு இருக்கு... ஒரு எட்டு பாருங்க” என்று அவர்களை பணித்தார்.
“ஓகே மா” என்றவர்கள் இருவரும் வெளியே போக, அதுவரை விழி எடுக்காமல் அவர்களை பார்த்துக் கொண்டு இருந்த தமிழ் சட்டென்று வள்ளி அவள் புறம் திரும்பவும் விழிகளை தாழ்த்திக் கொண்டு வேலை செய்வது போல பாவனை காட்டினாள்.
சிரிப்புடன் அவளுக்கு அருகில் வந்து நின்ற வள்ளி,
“நீ யாரும்மா.. உன் பேரென்ன? புதுசா வந்து இருக்க?” தன்மையாக கேட்டார்.
அவரை பார்த்து மெலிதாக சிரித்தவள்,
“பூவரசி ஆன்டியோட ஒர்க் பண்றேன் மேடம்” என்றாள்.
“ஓ...!” என்றவர் தமிழை விழி எடுக்காது பார்த்தார். அவரது பார்வையை கட்னு நிமிர்ந்து அவரை பார்த்தாள் தமிழ்.
“என்னங்க மேடம்?” என்று கேட்க,
“ஒன்னும் இல்லம்மா... இ..து..” என்று ஏதோ சொல்ல வந்தவர்,
“இன்னும் என்னென்ன வேலை பெண்டிங்க் இருக்கு? சொன்னா செஞ்சிடுவேன்” என்றார். அவரின் தன்மை அவளுக்கு அதிகம் பிடித்துப் போக,
“அய்யோ மேடம்.. எனக்கு இது ரொம்ப புதுசு... இவ்வளவு நேரமும் பாட்டி சொல்ல சொல்லத்தான் செஞ்சேன். நீங்க சொல்லுங்க நான் அது படி செய்யிறேன்” என்றாள் பதறிப்போய்.
அவளது பதற்றத்தை பார்த்தவர்,
“ரிலாக்ஸ்டா... சும்மா தான் கேட்டேன்” என்று சிரித்தவர், “வா ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்” என்று அவளோடு இணைந்துக் கொண்டார் வள்ளி.
தமிழை பற்றி விசாரித்தார். மேம்போக்காக சொன்னாள் சிலதை. வள்ளி எதையும் பெரிது படுத்தவில்லை. ம்ம்ம் என்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்.
வேலுநாச்சியார் இருவருக்கும் ஜூசை குடுத்து விட்டு மற்றவர்களுக்கும் குடுக்க சென்றார்.
வள்ளியோடு தமிழுக்கு கொஞ்சம் ஒட்டுதல் வந்தது. “எனக்கு பெண் பிள்ளைன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு ரெண்டுமே ஆண் பிள்ளைகளா போயிட்டாங்க... உன்ன பார்க்கும் போது எனக்கு ஒரு பெண் பிள்ளை இருந்து இருக்கலாம்னு தோணுது” என்றார்.
“பேசாம உங்க பெரிய மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு உங்க பெண் பிள்ளை ஆசையை தீர்த்துக்கோங்க” என்றாள் புன்னகையுடன்.
“நானும் அந்த ஆசையில தான் இருக்கேன். எங்க சிவன் தான் ஒத்துழைக்கவே மாட்டேங்குறானே” என்று விசனப்பட்டார்.
“கவலை படாதீங்க மேடம்.. சீக்கிரமே நல்லது நடக்கும்” என்றாள்.
“உன் வாக்கு பழிக்கணும் கண்ணு” என்று சிரித்தவர் மனதார இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.
கலசத்தை இன்னும் அழகாக்கிக் கொண்டு இருந்தார்கள். ஓரளவு எல்லா வேலையும் முடிந்துப் போனது. அப்பொழுது தான் வள்ளி தமிழ் தலை வாராததை பார்த்தார்.
“ஆமா நீ ஏன் இன்னும் தலைவாராம இருக்க... வா இங்க வந்து உட்காரு. நான் வாரி விடுறேன்” என்று சொல்லி அவளை இருக்கையில் அமரவைத்து அவளின் கூந்தலுக்கு சிக்கெடுக்க ஆரம்பித்து விட்டார்.
இதை எதிர்பாராத தமிழ் திகைத்து போய் விட்டாள்.
“இல்ல மேடம் நானே” என்று அவள் தயங்க,
“மூச்... எவ்வளவு நீளமான முடி வச்சு இருக்க.. இதுல அழகா எவ்வளவு டிசைன் டிசைனா பின்னலாம் தெரியுமா? என் பசங்களுக்கு அஞ்சாவது படிக்கிறவை குடுமி போட்டு தான் அனுப்புவேன். அதுக்கு பிறகு அவனுங்க வெட்கமா இருக்குன்னு போய் கிராப் வெட்டிட்டு வந்துட்டானுங்க. ஒரே ப்லீங்ஸா போயிடுச்சு தமிழ். பொம்பளை பிள்ளை இருந்து இருந்தா அதுக்காச்சும் சடை பின்னி அழகு பார்த்து இருப்பேன். எனக்கு தான் அதுக்கு குடுப்பனை இல்லையே. மகளா நீ கிடைச்சு இருக்க... உன்னை எப்படி விட முடியும் சொல்லு. அதனால உனக்கு நானே சடை பின்னி விடுறேன்” என்றவர் அவளுக்கு நேர்த்தியாக சடை பின்னி நாலு முழம் பூவை வைத்து காதோரம் அவளின் புடவைக்கு ஏற்றவாறு சிவப்பு நிற ரோசாவையும் வைத்து விட்டார். அவர் செய்யும் அலங்காரங்களை பார்த்து,
சிவனும் சக்தியும் ஒரே கிண்டல் தான்.
“அழகி போட்டிக்கா தமிழை ரெடி பண்றீங்க? இப்படி பார்த்து பார்த்து சீவி விட்டுட்டு இருக்கீங்க” சிவன் கிண்டல் பண்ண,
சக்தியோ “அட போண்ணா தமிழ அழகி போட்டிக்கு எல்லாம் அனுப்ப முடியுமா... அவளை லாங்குவேஜ் போட்டுக்கு தான் அனுப்ப முடியும்” என்று வாரி விட்டான். தமிழை விட மூன்று வயது சின்னவன். ஆனாலும் அவளை பெயர் சொல்லி போ வா என்று அவன் அழைக்கும் அளவுக்கு நெருங்கி விட்டான்.
Very interesting....whatever u do to Tamizh pls make it justifying her honest...agathiyan must regret for her...Tamizh kobam and ethiparpu miga niyayamanathu
தேங்க்ஸ் மா 😍 😍 நிச்சயமாக அவளுக்கான நீதி கிடைக்கும். அகத்தியனும் தன் அவசர குடுக்கை குணத்தை மாற்றிக் கொள்வான். வருந்துவான் ❤️